இலங்கைச் செய்திகள்

தனது விருப்பத்தையே பிரதமர் முன்வைத்தார் 

சுகாதார அமைச்சால் வடக்கிற்கு 50 மருத்துவர்கள் புதிதாக நியமனம்


தனது விருப்பத்தையே பிரதமர் முன்வைத்தார் 

- நடைமுறை விதியில் எவ்வித மாற்றமுமில்லை

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவேண்டுமென்ற தனது விருப்பத்தையே பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்குவதாக புதைப்பதா என்பது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு 2020 மார்ச் மாதம் வௌியிடப்பட்டது. அதனை மாற்றுவதாக இருந்தால் தொழில்நுட்ப குழுவினால் சுகாதார சேவை பணிப்பாளருக்கு பரிந்துரை முன்வைக்க வேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தனது விருப்பத்தினையே பிரதமர் வெளிப்படுத்தினார் என தெரிவித்த அவர், எனினும் இது ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் மாற்றம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவில் மூன்றாம் நபர்கள் அல்லது அரசியல்வாதிகள் தலையிடமுடியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை தற்போது காணப்படும் நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷம்ஸ் பாஹிம் -  நன்றி தினகரன் 





சுகாதார அமைச்சால் வடக்கிற்கு 50 மருத்துவர்கள் புதிதாக நியமனம்

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்று முன்தினம் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 13 பேரும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 9 பேரும் வவுனியா மாவட்டத்திற்கு 11 பேரும் மன்னார் மாவட்டத்திற்கு 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினமம் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர். இந் நியமனத்தில் வடமாகாணத்தின் கஸ்ட பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கும் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் சிலாவத்துறை, வங்காலை வைத்தியசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, அலம்பில், சம்பத்நுவர ஆகிய வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர், ஐ.சிவசாந்தன் - நன்றி தினகரன் 







No comments: