மக்களின் துன்பங்கள் நீங்குவதற்கு உலக இரட்சகரைப் பிரார்த்திப்போம்

கிறிஸ்தவ மக்கள் உலக இரட்சகரான இயேசு நாதரின் பிறப்பின் திருநாளான 'நத்தார் பெருநாளை' இன்று அமைதியுடன் கொண்டாடுகின்றனர். வழமையாக இந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியின் மாதமாகும். ஆனால் இன்று உலகெங்கிலும் மகிழ்ச்சி, மனஅமைதி இல்லை. கொரோனா காரணமாக மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ பழைய ஏற்பாடு வரலாற்றின்படி உலகைப் படைத்த இறைவன் ஆறு நாட்களில் நிலம்,நீர், புல் பூண்டு, செடிகொடி, பிராணிகள், நிலத்தில் ஊர்வன வகைகளை படைத்து ஆறாம் நாளன்று இவற்றை அனுபவிக்க ஆதாம்-ஏவாள் என்ற ஆண்-பெண் இருவரையும் படைத்து ஏழாவது நாளான ஞாயிறு ஓய்வாக இருந்தார்.

ஏவாளை சோதித்த சாத்தான் ஆதாமிற்கும் ஆசை காட்டி பாவத்தை தனதாக்கிக் கொண்டதையும் பழைய ஏற்பாடு சான்று பகிர்கின்றது. மத்தேயு-மார்க்-லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் சுவிசேசத்தின்படி இயேசுவின் பிறப்பு பற்றி அதிதூதரான கபிரேயல் சம்மனசு மூலமாக அறிவித்தமையும், ஆண்டவர் மனிதனாக பிறப்பதற்கு தேவமாதாவையும்-புனித சூசையப்பரையும் தேர்ந்தெடுத்தமையம் தூய ஆவியானவரின் வழிகாட்டலில் இயேசுவின் பிறப்பு பற்றி மிக தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.

பாவிகளையும் பாவ உலகையும் இரட்சிப்பதற்காக கிறிஸ்து இயேசு தனது வாழ்நாளில் போதித்த போதனைகள், செய்த புதுமைகள், ஆட்சியாளர்களின் அராஜகத்தினை கண்டித்தமை, இயேசுவின் போதனைகளை விசுவாசித்த மக்கள் அவர் பின்னால் சென்றமை, இதனால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்பதை அறிந்த ஏரோது அவரை பல சதிகளின்மூலம் கைது செய்து மரண தண்டனை வரையும் இட்டுச் சென்றதை குறிப்பிட்ட நான்கு நற்செய்தியாளர்களும் எழுதிய தத்தமது நற்செய்தியில் விரிவாக(பைபிளில்) குறிப்பிட்டுள்ளனர்.

உலகம் எங்குமுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நாளாந்தம் நடைபெறும் திருப்பலி பூசைகளில் வாசிக்கப்படும் அனைத்து வாசகங்களும் ஒரே வாசகங்களாகவும் இவை அனைத்தும் உலகம் எங்கிலும் உள்ள நாடுகளில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் அனைத்து மக்களது தாய் மொழிகளில் அடங்கி உள்ளதும், திருப்பலிப் பூசையின் போது அருட்தந்தையர்கள் குறிப்பிட்ட வாசகங்களை கருவாகக் கொண்டதாகவே அமைந்திருப்பதும் திருச்சபையில் உட்கட்மைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள விசேட அம்சமாகவும் சட்டவாக்கிற்கு உட்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் முக்கியமானதாகும்.

இதனை இங்கு கோடிட்டு காட்டுவதற்கு காரணம் கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி ஞாயிறுக் கிழமைமுதல் திருச்சபையானது உலகெங்கும் 'திருவருகைக் காலத்தை அனுஷ்டித்து வருவதுடன் இந்த காலங்களில் வாசிக்கப்படும் வாசகங்களில் கிறிஸ்து இயேசு தனது வாழ்நாளில் செய்த புதுமைகளான நோயாளிகளை குணமாக்கியது, இறந்த இளைஞரான லாசரை நான்கு நாள் கழிந்த பின்னர் உயிர் பெற செய்தமை, அவர் உயிர் பெற்று அறுபது வருடம் ஆண்டவரின் ஊழியராக செற்பட்டு தனது அறுவதாவது வயதில் மரணமடைந்தது, திருஅவை இவரை புனிதராக்கியது மற்றும் டிசம்பர் மாதம் 17ம் திகதி புனித லாசரசரின் தினமாக நினைவு கூரப்படுவதும் சாட்சிமிக்க சம்பவங்களாகும்.

இயேசு கிறிஸ்து செவிப்புலன் அற்றோரை கேட்க செய்யவும், கண் பார்வை அற்றோரை பார்க்க செய்தமையும், குஷ்டநோயாளர்களை குணமாக்கியமையும், விசுவாசிகளை இரட்சித்தமையும், பல்வேறு சந்தர்பங்களில் சாத்தானின் சோதனைகளில் வீழ்ந்துவிடாது வென்றமையும் குறிப்பிட வேண்டியவை.

தம்மை பின் தொடர்ந்தவர்களை இரட்சிக்க செய்து மீட்பின் ஒளியை காணச் செய்தார்.

இந்த உலகம் இன்று கொவிட்19 வைரஸ் கொடுமையால் நிம்மதி இழந்து கொண்டிருக்கின்றது. இரட்சகர் இயேசு அவதரித்த இன்றைய நாளில் இந்த அவல நிலை நீங்கிட அனைவரும் பிரார்த்திப்போம்.

 -எஸ்.பி.அந்தோனிமுத்து (சர்வமத சமாதான நிதியம்- ஊடக இயக்குனர்) - நன்றி தினகரன் 

 

No comments: