அந்தஸ்து ஆடம்பரம் அவருக்குச் சுவைக்கவில்லை
ஆதியந்தம் இல்லாத அரும்பொருளே இனித்ததுவே
மண்ணகத்து பிறந்திறந்து வாழ்வதனை விரும்பாமல்
கண்ணிறைந்த கடவுளது கழல்பற்ற விழைந்தனரே
ஏகனாய் கண்டார் அநேகனாய் கண்டார்
பாசமாய் கண்டார் பரஞ்சோதியாய் கண்டார்
வேதமாய் கண்டார் வித்தகனாய் கண்டார்
ஆதியே என்றார் அவனடியினைப் பற்றினார்
நமச்சிவாய வென்று நாதனைப் பணிந்தார்
இமைப்பொழுதும் என்னை நீங்காதான் நீயென்றார்
கோகழியாண்ட குருவென்றார் ஆகமும் நீயெயென்றார்
அவனதுதாழ் பணிந்தார் அடைக்கல மவர்புகுந்தார்
மாசற்ற சோதியே மயக்கமிலாப் பேரறிவே
மாசுடைய மனமதனை மாற்றிவிடு எனப்புகன்றார்
பாசமெனும் வலையினிலே கட்டுண்ட நாயேனை
பரம்பொருளே காத்துவிடு பதம்பணிந்தேன் எனவுரைத்தார்
விலங்குடை மனத்தோனை வினையகற்றி காத்திடுவாய்
கறங்குடை குணத்தோனை காத்திட வழிசமைப்பாய்
நலந்திகழும் உன்நாமம் நானுரைக்க அருள்புரிவாய்
நமச்சிவாய மந்திரத்தை நாமறக்கா செய்திடுவாய்
நோக்கரியே நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
காக்கின்ற காவலனே காண்கின்ற பேரொளியே
பார்க்குமிட மெல்லாமே பரந்துநிற்கும் பரம்பொருளே
பாதமலர் காட்டிவிடு பற்றினான் பற்றறுக்க
அல்லல் பிறவியினை அறுத்தொழிக்கும் ஆளுமையே
தொல்லைதரும் வல்வினையை தோன்றாமல் செய்துவிடு
எல்லையில்லாக் கருணையினை எல்லோர்க்கும் அளிப்பவனே
இணையில்லாத் திருவடியை எளியேனைப் பற்றவிடு
No comments:
Post a Comment