இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் அங்கம் -03 முருகபூபதி

பேராசிரியர்  கைலாசபதியின்  அன்றைய   தினகரன் பத்திரிகை பணி குறித்து வெளியான ஒரு பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

 

  


இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம்,  பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

 

தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சினைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்களாயின. அந்தவகையில் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரிகையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு முக்கிய பங்குண்டு.

 

பேராசிரியர் தினகரன் வாரப் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக


பதவியேற்ற காலத்தில்

பலதரப்பட்டோரை தன்னோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன் மாத்திரமின்றி  மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தார். 

 

செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா, சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி சரவணபவன்,  தேவன், அ. முத்துலிங்கம், , என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்ற்பாலன், நீர்வை பென்னையன்,                   ஏ. இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

சி.வி. வேலுப்பிள்ளையின்  வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலியன தொடர்கதையாக வெளிவந்தன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.

 

 “ பல புதிய அம்சங்களும் பரிசோதனைகளும் தினகரனில் இடம்


பெற்றன. வாசகர்கள் பங்கெடுக்க கூடிய வகையில் திங்கட் கிழமைகளில் திங்கள் விருந்தும் புதன் கிழமைகளில் புதன் மலர் , வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம் மஞ்சரி, சனிக்கிழமைகளில் மாணவர் உலகம் என்பன இடம் பெற்றன.  “

 

 

இச்சந்தர்ப்பத்தில் இந்த அரங்கில் ஒன்றுகூடியிருக்கும் இலங்கையை குறிப்பாக இலங்கையின் வடபுலத்தை சேர்ந்தவர்களின்  நினைவுக்கு ஒரு விடயத்தை சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.

 

 

ஈழத்தின் மூத்த தலைமுறை வாசகர்கள்  சவாரித்தம்பர்,  சின்னக்குட்டி


முதலான பாத்திரங்களை மறந்திருக்கமாட்டார்கள்.  இவர்கள் கூத்துக்கலைஞர்களோ, மேடை நாடக நடிகர்களோ அல்லர். கற்பனைப்பாத்திரங்கள்.

 

அந்த கேலிச்சித்திரங்களில் நடமாடிய அவர்கள்  வடபுலத்தின்  ஆத்மாவை பிரதிபலித்த  சமூகப்பாத்திரங்கள்.

 

அந்தப்பாத்திரங்களை படைத்தவர்தான் பின்னாளில் சிரித்திரன் என்ற மாசிகையை வெளியிட்ட சிவஞானசுந்தரம். அவர் இந்தியா சென்று கட்டிடக்கலை பயின்று திரும்பியிருந்த ஓவியர்,  அவரது ஆற்றலை இனம்கண்டு  தினகரன் அலுவலத்திற்கு அழைத்து,  தினமும் குறிப்பிட்ட பாத்திரங்களை வைத்து  சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டிய  கேலிச்சித்திரக்கதைகளை எழுத வைத்தவர் கைலாசபதி.

 


அக்காலத்தில் காலையில் தினகரனில் கண்விழிக்கும் இலங்கை, தமிழ் முஸ்லிம் வாசகர்கள், முதலில் பார்க்கும் பகுதி  குறிப்பிட்ட  சவாரித்தம்பர், சின்னக்குட்டி பாத்திரங்கள் என்ன சொல்கின்றன..?  என்பதை சித்திரிக்கும் பக்கம்தான்.

 

காவலூர் இராசதுரை, சுபைர் இளங்கீரன், பேராசிரியர்  கா.சிவத்தம்பி, எச். எம். பி. மொஹிதீன், பி. ராமநாதன், சில்லையூர் செல்வராசன்,  இ.முருகையன், கே. கணேஷ், பிரேம்ஜி ,  அகஸ்தியார் ஆகியோர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள். அத்துடன் அவர்கள் அனைவரும் எனதும் நல்ல நண்பர்கள்.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நானும் இணைந்த 1973 ஆம் ஆண்டு காலத்திலிருந்து அவர்கள் மறையும் வரையில் அவர்களுடன் தொடர்பிலிருந்திருக்கின்றேன். அவர்கள் பற்றியெல்லாம்  பத்திரிகை ஊடகங்கள் இதழ்களிலெல்லாம் காலமும் கணங்களும் என்ற தொடரில் எழுதியிருக்கின்றேன். அதில் இலங்கை தமிழக எழுத்தாளர்கள் பலர்-  நூறுக்கும் மேற்பட்டவர்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன.

 

இங்கே நான் பெயர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் என்னிடம் சொல்லியருக்கும் பொதுவான ஒரு கூற்று:  

கைலாசபதி வாரம் ஒரு தடவையாதல் அவர்களையெல்லாம் வரவழைத்து கலந்துரையாடுவாராம்.

 

அவர்களின் வாசிப்பு அனுபவங்களை கேட்டுத் தெரிந்துகொள்வதுடன்,


அவர்களிடம் வேலையும் வாங்குவாராம்.  இவ்வாறு Team Work இல் ஈடுபட்டவர்தான் கைலாசபதி.

அவரது அந்த  அப்பழுக்கற்ற Team Work தான் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தோன்றியபோதும் அவரிடத்தில் குடியிருந்ததை நீங்கள் அனைவரும் நனகறிவீர்கள்.

 

1970 இற்குப்பின்னர்,  தோன்றிய இடதுசாரிகளும் அங்கம் வகித்த கூட்டரசாங்கத்தின் காலத்தில் 1972 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் ஒன்றியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதியான தரமற்ற பல வணிக இதழ்களை கட்டுப்படுத்தவேண்டும் என்றிருந்தது.

 

கட்டுப்பாடும் வந்தது. அதனால், இலங்கையில் பல புதிய இலக்கிய சிற்றேடுகள் வெளிவந்தன. திரைபடக்கூட்டுத்தாபனம் தோன்றியது.  பல ஈழத்து திரைப்படங்களின் உருவாக்கத்திற்கு அரச மானியம் கிடைத்தது. தமிழ்த்  திரைப்படச் சுவடிகளுக்கான  தேர்வுகள் நடந்தன.  இந்த அரங்கில் இருக்கும் நண்பர் மௌனகுரு, அவரது மனைவி சித்திரலேகா, பேராசிரியர் கைலசாபதியின் அன்புத்துணைவியார் திருமதி சர்வமங்களம் கைலாசபதி, கமலா தம்பிராஜா,  பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம்  உட்பட பலர்   நடித்த காவலூர் இராசதுரையின் பொன்மணி, தர்மசேன பத்திராஜாவின் இயக்கத்திலும் வெளியானது.

 

வீரகேசரி நிறுவனம் மாதம் ஒரு நாவல் என்ற ரீதியில் அறுபதிற்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிட்டது.

 

அந்த நாவல்களும் கைலாஸ் அவர்கள் ஒருங்கிணைத்த நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கில் பேசுபொருளாகின.

 

அதேசமயம் கைலாபதி,  தினகரனை விட்டு வெளியேறிய பின்னர் ஈழத்தில் 1972 இற்குப்பின்னர் எத்தனையே சிற்றிதழ்கள் வெளியானபோதிலும் அவற்றில் சிலவற்றிலேயே  தொடர்ந்தும்  எழுதி அந்த இதழ்களின் உள்ளடக்கத்தின் தரத்தையும் அவர்  உயர்த்தினார்.

 

எனவே அவரது இதழியல் பங்களிப்பு என்பது தினகரனுடன் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அதற்கும் அப்பால், ஈழத்து தமிழ் சிற்றிதழிலும் அவருடை கருத்தாக்கம் வேரூன்றியிருந்தது.

 

மரகதம், மல்லிகை, புதுவசந்தம், புதுமை இலக்கியம்,  சமர், தாயகம் மற்றும் இடதுசாரி பத்திரிகைகளான தொழிலாளி, தேசாபிமானி செம்பதாகை முதலனாவற்றிலும் தொடர்ந்து எழுதினார்.  அவருக்கு இப்படியும்  புனைபெயர்கள் இருந்தன.

 

  ஜனமகன், அபேதன், அம்பலத்தான், உதயணன், அம்பலத்தாடி முதலான  புனைபெயர்களில் கட்டுரைகளையும்  பத்தி எழுத்துக்களையும்  வரவாக்கியவர். 

 

1973 ஆம் ஆண்டு மேமாதம் முதல்  சில மாதங்கள் மல்லிகையில் அவர் எழுதிய தொடர்தான்:  நவீன இலக்கியத்திறனாய்வில் க.நா. சு. வின் பாத்திரம்.

 

சுவாமி ஞானப்பிரகாசர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இளங்கீரன் உட்பட பலரைப்பற்றிய ஆக்கங்களையும் மல்லிகையில் எழுதியிருப்பவர்.

 

1974 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மல்லிகை இதழில் அவர் எழுதிய முழுமைபெறும் இலக்கிய இயக்கம் என்ற கட்டுரை,  ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் செல்நெறியை துலக்கமாக பதிவுசெய்திருந்தது.

 

இவ்வாறு அவர் இதழ்களில் எழுதிய கனதியான ஆக்கங்களினாலும்  குறிப்பிட்ட சிற்றிதழ்கள் தரத்தில் சிறந்திருந்தன.  கைலாசபதியின் கருத்துக்களிலிருந்து முரண்பட்டவர்கள்கூட, அவர் தம்மைப்பற்றி எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருக்கிறார் என்பதை அறிவதில், ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

 

1972 இல் கொழும்பிலிருந்து வெளியாகத் தொடங்கிய பூரணி இதழுக்கும் அவர் மு. தளையசிங்கம் சிறப்பிதழுக்காக ஒரு கட்டுரை எழுதினார்.

 அவர் மட்டுமல்ல அவருக்கு எதிரும் புதிருமாக இருந்த எஸ். பொன்னுத்துரையும் குறிப்பிட்ட பூரணி இதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பினார்.  பூரணி ஆசிரிய பீடத்தினர், இரண்டு கட்டுரைகளையும்  நிராகரித்தனர்.

 

பேராசிரியர் கைலாசபதி எழுதி 1968 இல் வெளியான “தமிழ் நாவல் இலக்கியம்” நூல் குறித்து வெங்கட் சாமிநாதன் 1970 ‘நடை’ இதழில் “ மார்க்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்” என்ற தலைப்பில் விமர்சனம் செய்துள்ளார்.

 

இதனை பூரணி குழுவினர் தமது இதழில் மறுபிரசுரம் செய்தனர்.  அதற்கு எதிர்வினையாக கைலாசின் மாணவர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் மல்லிகையில் நீண்ட தொடர் எழுதினார்.

 

அதற்கு எதிர்வினையாக மு. தளையசிங்கத்தின் தம்பி மு. பொன்னம்பலம் அதே மல்லிகை இதழில் எழுதினார். 

 

பாரதி நூற்றாண்டு காலத்தில்தான் பேராசிரியர் கைலாசபதி கொழும்பு அரசினர் மருத்துவமனையில் 1982 டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி காலமானார்.

அவர் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மறைவதற்கு முதல்நாள் டிசம்பர் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் வாரமஞ்சரியில் கைலாசபதி எழுதியிருந்த 'பாரதியின் புரட்சி' என்ற கட்டுரையை தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் வெளிவரச் செய்திருந்தார். கைலாசபதி மருத்துவமனைக் கட்டிலிலிருந்து அதனையும் பார்த்து விட்டுத்தான் நிரந்தரமாக கண்களை மூடிக் கொண்டார்.  

சமகாலத்தில்  இலங்கையில் பாடசாலைகள் அனைத்திலும் ஊடகக்கல்வி பாட நெறி வந்துவிட்டது.

மாணவர்கள் இதழியல் பற்றி கற்கின்றனர்.

இன்றைய நவீன தொழில் நுட்ப மற்றும் கணினி, மின்னஞ்சல், முகநூல், டுவிட்டர் யுகத்தில் இலங்கையில் பல ஊடகங்கள் வெளியாகின்றன.

டவுன்லோட் ஜார்னலிஸம் பெருகியிருக்கிறது.  கட் அன்ட் பேஸ்ட் மரபு உருவாகியிருக்கிறது.  நபரின் உருவத்தை மாற்றி பதிவேற்றி போட்டோ ஷொப்பாக - வைரலாக பரவவிடும் கலாசாரம் வளர்ந்திருக்கிறது.  இந்த திருக்கூத்துக்களையெல்லாம் பார்க்காமல் எங்கள் கைலாஸ் மறைந்துவிட்டார்.

இறுதியாக ஒரு முக்கிய விடயத்தை மாத்திரம் சொல்லிவிட்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன். எனது  இந்த அரங்கின் உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட எனது பாட்டனார் தொ. மு. சி. ரகுநாதன் பற்றிய கட்டுரை மல்லிகையில் 1982 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் வெளியானது.

அதனை எழுதியவர் அவருடை நீண்டகால நண்பர் பேராசிரியர் கைலாசபதி. அதன் இறுதியில்,  “ பாரதி நூற்றாண்டு  விழாக்கள் நடைபெறும்  இவ்வாண்டில்  சிறந்த பாரதி ஆய்வாளர் ஒருவரின்  வருகை வரவேற்கத்தக்கது  “ என எழுதியிருந்தார்.   எனது பாட்டனார்  ரகுநாதன் அந்தக்கட்டுரையை பார்த்தார். 

அது வெளிவந்து,  ஐந்து மாதத்தில் கைலாஸ் விடைபெற்றார்.  எனது  பாட்டனார், 1983 தொடக்கத்தில்  தமிழகப்பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுடன் கொழும்பு வந்து,  வெள்ளவத்தை 42 ஆம் ஒழுங்கையில் 29 ஆம் இலக்கத்தில் அமைந்த  கைலாசபதியின் இல்லத்திற்கு வந்து அவரது துணைவியார் சர்வமங்களம் மற்றும் குழந்தைகள் சுமங்களா, பவித்ராவிடம் தனது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்துகொண்டார்.  இந்த அரங்கில் உரையாற்ற எனக்கு வாய்ப்பளித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.  கைலாஸ் என்றும் எம்முடன் வாழ்கிறார்.

-----0----

letchumananm@gmail.com

 

  


No comments: