உலகெங்கும் உள்ள மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ந்து கொண்டாடும் நத்தார் பண்டிகை இன்றாகும். இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக் குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த குழந்தை இன்றும் உலக மக்களுக்கு அன்பையும் அமைதியையும் சமாதானத்தையும் நினைவுபடுத்துகின்றது.
'நாமெல்லாம் செல்வந்தர்கள்'. 'அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (2கொரி 8:9).
இறைவனின் பாதப் பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் இந்நாள். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேயத்திற்குள் நுழைந்த இரவு இன்றைய இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள்.
இந்தப் பாதச் சுவடுகள் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பதிய வேண்டும் என்று குடில் சோடித்து அழகு பார்க்கின்றோம் நாம். அவரது பிறப்பை அடையாளம் காட்டிய நட்சத்திரம் நமக்கும் நல்வழி காட்ட வேண்டும் என ஒளியால் அலங்கரித்துள்ளோம்.
கீழ்த்திசையில் உதித்த ஆதவனாய், பாவம் போக்க மனுவுரு எடுத்த நம் மன்னவனின் ஒளி அகஇருள் போக்கி நிறைஒளி தர வேண்டி நிற்கின்றோம். 'வார்த்தை மனிதரானார். நம் நடுவே தன் காலடிகளைப் பதித்தார்' (யோவா 1:18).
'நற்செய்தி அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை' (எசா 52:7) என்று எசாயா முன்னுரைத்தது இன்று நிறைவேறுகின்றது.
இந்த நற்செய்தி அறிவிப்பவர் இயேசுவே. அவர் கொண்டு வந்த நற்செய்தி அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை. 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரா?' (எசா 63:1) என்று வேட்கை கொண்ட எசாயா இஸ்ராயேல் மக்களின் எதிர்பார்ப்பை எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் பிறப்பு மட்டுமல்ல, அவரது பணிவாழ்வும் கூட அவர் இம்மண்ணுலகில் காலூன்றி நின்றதை நமக்குக் காட்டுகின்றது. பாவியான ஒரு பெண் அவரது காலடிகளில் கண்ணீர் வடிக்கின்றார் (லூக் 7:38). மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக் கூடத் தகுதியில்லை எனத் தம் வெறுமையை ஏற்றுக் கொள்கின்றார். தொழுகைக் கூடத் தலைவர் யாயீர் காலடிகளில் பணிகின்றார் (மாற் 5:33). சக்கரியாவும் தனது பாடலில் 'நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது' (லூக் 1:79) என்று பாடுகின்றார்.
தன் இறுதி இராவுணவில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதோடு மட்டுமல்லாமல் அதையே அவர்களும் செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகின்றார் இயேசு
(யோவா 13:14).
இயேசுவின் காலடிகளைப் பற்றி விவிலியம் பேசும் இடத்திலெல்லாம், மனுக்குலத்தில் அவர் வேரூன்றி நின்றதுதான் வெளிப்படுகின்றது.
கிறிஸ்து மனுக்குலத்தில் காலூன்றிய இந்த நிகழ்வு நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கின்றது: இறைவன் மனுக்குலத்தோடு உடனிருக்க இறங்கி வருகின்றார். பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து இறைவன் உடனிருக்கும் இறைவனாகவே மக்கள் நடுவே திகழ்கின்றார்.
இறைவன் நம்மோடு உடனிருக்கிறாரெனில் நாம் ஒருவர் மற்றவரோடு உடனிருக்கின்றோமா? நம் உடனிருப்பு மற்றவரின் வாழ்க்கை செயற்பாடுகளில் அழகு சேர்க்கின்றதா? அல்லது அழித்து விடுகின்றதா?
வாழ்வில் வேரூன்றல். இன்றைய பல தீமைகளில் மிகக் கொடுமையானது 'நம்பிக்கையிழப்பது.'
தோல்வியை விட, தோல்வியைக் குறித்த பயம்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகின்றது. கடவுள் மனிதவுரு ஏற்றார். மனிதம் மேன்மையானது. மனிதம் சார்ந்த அனைத்தும் வாழ்வு தருவது. ஆகையால், எதையும் துணிச்சலோடு எதிர்கொள்தல் அவசியம்.
நம் இறைவன் நாம் அழிவுற நினைக்கும் இறைவனல்லர். நம் வாழ்வு ஒரு கொடை. அந்தக் கொடையைப் பெறுதலே பெரிய பாக்கியம். அதில் மகிழ்வோம்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் பிரிவினைகள் அழிந்தன. இறைவன் - மனிதன், ஆண் - பெண், வளமை – வறுமை, நிறைவு – குறைவு என்று மனிதர் வைத்திருந்த அனைத்துப் பிரிவினைகளும் பாரபட்சங்களும் அழிந்தன.
வலுவற்றதை வல்லமை தழுவிக் கொண்டதால் அனைத்துமே வல்லமை பெற்றன. நம் நடுவில் அவர் காலடிகளைப் பதித்தார். அவர் பாதம் தொடர்ந்தால் விண்ணகத்தில் நாம் கால் பதிப்பதும் அரிதன்று.
இறைமை மனிதத்தோடும், மனிதம் இறைமையோடும் கைகோர்த்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வே கிறிஸ்மஸ். முதல் கிறிஸ்மஸ்! கலண்டரில் குறிக்கப்படவில்லை. பலூன்கள் ஊதப்படவில்லை. நட்சத்திரங்கள் கட்டப்படவில்லை. வாணவேடிக்கை இல்லை. விடுமுறை இல்லை. வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படவில்லை. இனிப்புகள் பரிமாறப்படவில்லை. கேரல்ஸ் இல்லை.
யாருமே எதிர்பார்க்கவில்லை. 'பழைய ஏற்பாட்டின் எல்லாப் பக்கங்களிலும் அவர் நிழல் தெரிந்தது. யாரும் அவர் வருவதைக் கண்டு கொள்ளவேயில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் இறைமை மனிதத்தைத் தழுவிக் கொண்டது.
மரியாள், வானதூதர், பெத்லகேம், அகஸ்டஸ் சீசரின் கணக்கெடுப்பு, ஏரோதின் பொறாமை, 'இடம் இல்லை' என்று சத்திரத்தில் தொங்கிய அறிவித்தல் அட்டைகள்,வானதூதர்கள், இடையர்கள், கீழ்த்திசை ஞானியர், நட்சத்திரம், ஒட்டகம், மாடு, கழுதை, குகை என எண்ணற்றவைகளை நாம் காண்கின்றோம்.
'துணிகளில் குழந்தையைச் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்.' (லூக் 2:12) இந்த வார்த்தைகளை மட்டும் இன்று சிந்திப்போம். 1) துணிகளில் சுற்றி, 2) தீவனத் தொட்டியில், 3) கிடத்தியிருப்பது என்ற இந்த மூன்று அடையாளங்களும் நமக்குச் சொல்வது இதுதான்:
கண்ணால் காண முடியாத இறைவன் கண்ணால் காணும், நாவால் ருசிக்கும், கையால் தொடும், மூக்கால் நுகரும், காதால் கேட்கும் வகையில் கைக்கெட்டும் துரரத்தில் கால் பதிக்கின்றார் கடவுள் என்பது மட்டும் உண்மை.
-எல்.எஸ் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment