அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 46 – கின்னரம்/கின்னாரம் – சரவண பிரபு ராமமூர்த்தி கின்னரம்/கின்னாரம் – நரம்புக்கருவி

கின்னாரம் ஒரு பழந்தமிழர் இசைக்கருவி. திருமுறைகளில்


கின்னாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. கின்னாரம் முற்றிலும் தமிழ்நாட்டில் இருந்து அழிந்து விட்டது என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் கின்னாரம் இன்னும் அழியவில்லை என்று இன்ப அதிர்சி கொடுத்தார் வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு க. பொன்னுசாமி அவர்கள். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனப்பகுதியில் வசிக்கும் திரு அருணாச்சலம் அவர்களிடம் இந்த கின்னாரம் இசைக்கருவி இருப்பதாகச் சொன்னார். அதைப் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்தார்.

 

திரு அருணாச்சலம் அவர்கள் கூறுகையில் ”இந்த கின்னாரம் செய்ய கின்னார சுரைக்காயத்தான் பயன்படுத்துவோம். கூட ஓடை மூங்கிலு. தலமுறை


தலமுறையா எங்க குடிசை ஓரத்துல கின்னார சுரையைப் பயிரிடுவோம். அந்த சுரையை வச்சுதான் புதுசா கின்னாரம் செய்வோம்." கின்னாரம் ஒரு நரம்பிசைக்கருவி. ஒற்றை நரம்பு இருக்கும். கின்னார சுரைக்காயின் உட்புற சோற்றை நீக்கி நன்கு உலர்த்தி, ஒடை மூங்கில் எனப்படும் மூங்கில் கட்டையுடன் பொறுத்தி, நரம்பு சேர்த்து கட்ட கின்னாரம் இசைக்கருவி தயார். இது அமைப்பில் துந்தினா என்கிற வட இந்திய இசைக்கருவியை ஒத்து இருக்கும்.

 

முதலில் நாட்டுப்புற மக்களால் எளிய வடிவில் பாடப் பட்டு வரும் பல கதைப்பாடல் வடிவங்கள் பின்பு இலக்கியமாக மாறும் என்கிறது ஒரு கருத்து. அந்த வகையில் இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரமும் இலக்கிய வடிவில் காப்பியமாய் மாறுவதற்கு முன் எளிய மக்களால் பாடப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் நாட்டுபுறவியல் ஆய்வாளர்கள்.


தமிழ்நாடு, கேரளம் மற்றும் இலங்கையில் கண்ணகியின் பல நாட்டுபுற வரலாற்றுப் பாடல்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். அப்படி ஒரு வடிவம் தான் கின்னாரத்தின் துணையுடன் பாடப்படும் கண்ணகி-கோவலன் கதைப்பாடல். இதை பாடுபவர் திரு அருணாசலம் அவர்கள் தான்.

 

இவர் கதைப்பாடல்களில் இருந்து சில வரிகள்:

 

'பத்தினியா வீடு தேடி........

பார்வனத்தில் வழி நடந்து.....

கண்ணகியா வீடு தேடி......

கட்டழகா வழி நடந்து....

..................

தங்க தலை வாசலுக்கு........

தயவுடனே ஓடி வந்து......

வெள்ளி தலை வாசலுக்கு.......

வெகு சுடியா ஓடி வந்து......

.................

ஆயிரம் தான் நானு கப்பலுக்கு தானு.......

அதிகாரம் நாங்க ஏவாரி நானு........

முன்னூறு நானு கப்பலுக்கு சாமி......

முதலாளி நானு ஏவாரி நாங்க......

..................

தாய்பேரு வர்ணமாலை தகப்பன் பேரு மாசாட்டன் செட்டி

மணிவரசன் கோவிலன் செட்டியம்மா.....''

 

 

'தான் கின்னாரம் வாசித்து கோவலன் கதை பாடலைப் பாடி பல ஊர்களுக்குச் சென்று கொடை பெறுபவன் என்றும் எங்களின் பாரம்பரிய தொழிலே இதுதான்" என்கிறார் அருணாசலம். 'சின்ன வயசுல எங்க அப்பா என்ன அழைச்சிட்டு பக்கத்தூர்களுக்கு போயி கின்னாரம் வாசித்து கோவலன் கதை பாடுவார். அப்படி இதை நான் கத்துக்கிட்டேன். எங்க அப்பா உட்கார்ந்து இரண்டு பாதத்துல கஞ்சிராவை மெட்டி பிடித்து ஒரு கையில கஞ்சிராவை வாசிச்சு இன்னொரு கையில கின்னாரத்தை மீட்டி பாடுனாருனா.... அவ்வளவு நல்லாயிருக்கும் நான் கின்னார மட்டுந்தான் மீட்டுவேன். இது கூட சிறு தொண்டன் பக்தன் கதையைப் பாடுவேன். இப்ப வயசாயிச்சு போதிய வரவேற்பு இல்லை பக்கத்து ஊர்களுக்கு போவேன் வீடு வீடா பாடும் போது அரிசி பருப்பு கொடுப்பாங்க அதை வச்சு வாழ்க்கை ஓடுது நான் ஒத்தை ஆளு தானே." என்கிறார். அவர் சொன்ன '' நான் ஒத்தை ஆளு தானே " பல அர்த்தங்களை சொல்கிறது. ஆம் இந்த இரண்டு கதைப்பாடல்களும் கின்னார இசையையும் இசைக்கும் ஒற்றை ஆள் இவர் மட்டும் தான். இவருக்கு பிறகு இக்கலை இருக்குமா? உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். அரிய இந்த கலை வடிவத்தை ஆவணம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள நண்பர் திரு பல்லடம் க பொன்னுசாமி அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழ் அமைப்புகள் அவருக்கு உதவ முன்வர வேண்டும்.

 

கின்னாரத்தில் மற்றொரு வகை சிரட்டைக் கின்னரி. பழங்காலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்தது. தேங்காய் சிரட்டையில் மூங்கிலுடன் இணைத்து நரம்பு கட்டி தற்காலத்தில் அரிதாக சில இரவலர்கள் இதை இசைக்கிறார்கள். முன்பு தேங்காய் சிரட்டைக்கு பதிலாக வேறு காய்கள் பயன்பட்டு இருக்கலாம். வில் போன்ற பகுதியைக்கொண்டு வயலின் போல் மீட்டுவர். தமிழகத்தில் உள்ள பழைய கோயில்களில் உள்ள சிற்பத் தொகுதிகளிலும் இன்னும் சில குடவரைக் கோயில்களிலும் பூதகணங்கள் சில கின்னரி இசைக்கும் சிற்பங்களை நாம் காணலாம். அவ்வகையில் நடராச மூர்த்தியின் கீழே கின்னரம் வாசிக்கும் சிவகணம்  திருமலைப்புரம் குடைவரையில் உள்ளது. இது 7-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் காலக் குடைவரை. 8-ஆம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்தில் கைலாயநாதர் கோவிலில் கின்னரம் வாசிக்கும் பூத கணங்கள் இரண்டு இடங்களில் இருக்கின்றன. மேலும் திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கோயில், திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் கோயில், திருவெண்காடு திருவெண்காட்டீசர், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், திருவையாறு அய்யாறப்பர் கோவில் வளாகத்திலுள்ள வடகைலாசம், கீழப்பழுவூர் ஆலந்துறையர் கோயில், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் எனப் பல கோயில்களில் கின்னரிக் கலைஞர்களாய் சிவகணங்கள் இடம்பெற்றுள்ளன.

 

பாடல்:


மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி 
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து 
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன 
கின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே. திருமுறை 4.28.10 

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார் 
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார் 
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் 
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே. திருமுறை 4.38.9 

 

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

  1. கின்னாரம் பற்றிய முழு தகவல் தந்தவர் - பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்
  2. அர. அகிலா, சிரட்டைக் கின்னரி

  


1 comment:

Unknown said...

Hatsoff for ur wonderful work.... நன்றிகள் பல... ❤❤✨