இலங்கைச் செய்திகள்

கொரோனா மரணம்: உடலை எரிப்பதற்கு காலி மேலதிக நீதவான் தடை உத்தரவு 

டிசம்பர் 26 முதல் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடைமுறையில் மாற்றம்

நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே

பிரித்தானிய விமானங்களுக்கு அதிகாலை முதல் தடை

கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறப்பு

ஜனாஸா எரிப்பு: தனது செயற்பாடுகளை விளக்குகிறது ஜம்இய்யத்துல் உலமா


கொரோனா மரணம்: உடலை எரிப்பதற்கு காலி மேலதிக நீதவான் தடை உத்தரவு 

காலி, தெத்துகொட பகுதியில், கொரோனா காரணமாக உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸாவை தகனம் செய்யாது, அதி குளிரூட்டியில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா மரணம் என சட்ட வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸா தொடர்பில், தகனம் செய்யுமாறு, காலி மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்ட பின்னர், அதற்கு எதிராக உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரண இந்த உத்தரவை பிறப்பித்தார்.

காலி, கராபிட்டியைச் சேர்ந்த 84 வயது நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு அவரது ஜனாஸாவை எரிக்க வேண்டும் என, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவோ பொறுப்பேற்கவோ முடியாது என தெரிவித்திருந்த நிலையில், விடயம் நீதிமன்றிற்கு சென்றது.

இதன் போது, சட்டத்தரணிகள் கஸ்ஸாலி ஹுசைன், பிரசாந்த டி சில்வா, எஸ்.எம்.எம். நிலாம், பைரூஸ் மரிக்கார், இல்ஹாம் சமாஷ், துஷார வராபிட்டிய ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது தமது வாதத்தை முன்வைத்த சட்டத்தரணிகள், உடலங்களை எரிப்பதா - புதைக்க அனுமதிப்பதா என்ற சந்தேக நிலையில் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன, தற்காலிகமாக ஜனாஸாக்களை வைத்துப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் ஐந்தைத் தருமாறு நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அதனை மீறி எரிப்பது அவசியமற்றது என வாதாடிய சட்டத்தரணிகள், சுகாதார பணிப்பாளர் காத்திருக்கும் அந்த 'இறுதி' முடிவு வரும் வரை இந்த ஜனாஸாவையும் எரிக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்த காலி மேலதிக நீதவான், உடலை கராபிட்டிய வைத்தியசாலையில் குளிரூட்டிப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 


டிசம்பர் 26 முதல் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடைமுறையில் மாற்றம்

டிசம்பர் 26 முதல் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடைமுறையில் மாற்றம்-Notice on Revision of Procedure for Inbound Travelers to Sri Lanka

2020 மார்ச்‌ மாதம்‌ முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம்‌ செய்யும்‌ பயணிகளுக்கான நடைமுறைகள்‌, 2020 டிசம்பர்‌ 26 முதல்‌ மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சு மற்றும் குடிவரவு திணைக்களம் மற்றும்‌ சிவில்‌ விமானப்‌ போக்குவரத்து சபை ஆகியவற்றுடன்‌ இணைந்து‌ எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்‌, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும்‌ வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின்‌ உடன்பாட்டின்‌ கீழ்‌ பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, பின்வரும்‌ நடைமுறைகள்‌ 2020 டிசம்பர்‌ 26 முதல்‌ நடைமுறைக்கு வரும்‌:

  1. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்‌, மாணவர்கள்‌, நோயாளிகள்‌, குறுகிய கால வீசாக்களையுடையவர்கள்‌, அரசாங்க மற்றும்‌ இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனிமைப்படுத்தல்‌ வசதிகளுக்கான விஷேடமான மீளழைத்துவரும்‌ விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்‌ தூதரகங்களுடன்‌ ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம்‌ (வெளிநாட்டு அமைச்சு மற்றும்‌ கொவிட்‌-19 தொற்றுநோயைத்‌ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்‌) ஏற்பாடு செய்யும்‌.
  2. i. எவ்வாறாயினும்‌. கொவிட்‌-19 தொற்றுநோயைத்‌ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின்‌ அங்கீகாரம்‌ / ஆலோசனையின்‌ அடிப்படையில்‌ சிவில்‌ விமானப்‌ போக்குவரத்து ஆணைக்குழுவினால்‌ நிர்ணயிக்கப்பட்ட விமானமொன்றில்‌ பயணிகள்‌ நியமிக்கப்பட்ட ஹோட்டலொன்றில்‌ கட்டணம்‌ செலுத்திய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான இணக்கப்பாட்டின்‌ அடிப்படையில்‌, இலங்கையர்கள்‌ அல்லது இலங்கை வம்சாவளியைச்‌ சேர்ந்த வெளிநாட்டினர்‌ (இரட்டைக்‌ குடியுரிமையுடையவர்கள்‌; இலங்கைக்கு எந்தவொரு வணிக மீளழைத்து வராத விமானங்களிலும்‌ வெளியுறவுச்‌ செயலாளர்‌ (அல்லது) சிவில்‌ விமானப்‌ போக்குவரத்து ஆணைக்குழுவின்‌ அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்‌.

ii‌. மேற்கண்ட ஏற்பாட்டின்‌ கீழ்‌ விமானத்தில்‌ அனுமதிக்கப்பட்ட பயணிகள்‌ கட்டணம்‌ செலுத்தும்‌ தனிமைப்படுத்தலை கட்டாயமகாக்‌ கடைபிடிப்பதனை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட விமானத்தின்‌ முழுமையான பொறுப்பாகும்‌.

புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைவான மேலதிக மதிப்பீடுகளின்‌ அடிப்படையில்‌, விஜயம்‌ செய்யும்‌ பயணிகளுக்கான நடைமுறைகளின்‌ திருத்தம்‌ மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்‌.   நன்றி தினகரன் 


நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே

நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே-Government to Re-Introduce Conditional Repatriation in the Wake of New Strain of COVID19

- முன் அனுமதி அவசியம்

வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன்அனுமதி பெறும் தற்போதைய நடைமுறையின் கீழ், இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வர அராசங்கம் முடிவு செய்துள்ளது.

சில நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸின் வேகமான பரவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், நிலைமைகளை மீளாய்வு செய்த பின்னர், மீளழைத்து வரும் செயற்பாடுகள் தொடர்பிலான மீளமைக்கப்பட்ட ஆலோசனைகள் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2020 மார்ச்‌ மாதம்‌ முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம்‌ செய்யும்‌ பயணிகளுக்கான நடைமுறைகள்‌, 2020 டிசம்பர்‌ 26 முதல்‌ மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

அதற்கமைய, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன் அனுமதி இன்றி ஏனைய நடைமுறைகளை பின்பற்றி நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய விமானங்களுக்கு அதிகாலை முதல் தடை

பிரித்தானிய விமானங்களுக்கு அதிகாலை முதல் தடை-Sri Lanka Bans Flights from UK-From Dec 23

- இன்று வருவோர் கடுமையான கண்காணிப்பில் தனிமைப்படுத்தலில்
- கொவிட் தடுப்பூசியை கொண்டு வரவும் ஆலோசனை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் நாளை (23) முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை COVID-19 வைரஸ் தொற்று பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்தார்.

குறித்த காரணத்தினால், தற்போதுவரை இந்தியா உள்ளிட்ட சுமார் 40 நாடுகளால், பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, நாளை அதிகாலை 2.00 மணி முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வரும் எந்தவொரு விமானமும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கொவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போது கொவிட் புதிய வைரஸ் மற்றும் அதன் பரவலை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22) குறித்த முடிவை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இங்கிலாந்திலிருந்து இன்று (22) இலங்கை வரவுள்ள பயணிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு சுகாதாரத் துறையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலண்டனில் இருந்து வரும் சரக்கு விமானங்களின் பணிக் குழுவினரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுவர்.

இன்றைய கலந்துரையாடலின் போது, ​​கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கொவிட் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரிகள் மற்றும் கொவிட் குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.    நன்றி தினகரன் 


கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறப்பு

ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் குழு முதலாவதாக இன்று வருகை

கொரோனா வைரஸ் காரணமாக உள் வருகைக்காக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது.

ரஷ்யாவின் மொஸ்கோவ் நகரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் குழுவினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருகின்றனர்.

எனினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதென கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விமான சேவை யான ஏரோப்லொட் விமான சேவையின் விமானம் ஒன்றில் அந்த நாட்டைச் சேர்ந்த 200 சுற்றுலா பயணிகளே இலங்கை வருகின்றனர்.

எனினும் ஐரோ ப்பா முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபினால் விமான பயணங்களை இரத்து செய்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும் 200 ரஷ்ய பயணிகளும் மேலும் சில நாட்களின் பின்னர் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் ஜனாஸா எரிப்பு: தனது செயற்பாடுகளை விளக்குகிறது ஜம்இய்யத்துல் உலமா

ஜனாஸா எரிப்பு: தனது செயற்பாடுகளை விளக்குகிறது ஜம்இய்யத்துல் உலமா-COVID19 Related Death-Action and Steps Taken By ACJU

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது தொடரான செயற்பாடுகள் மற்றும் முயற்சிகளை தெளிபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் உலமா சபை விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து முன்வைப்பதில் முன்னின்று உழைத்ததை அனைவரும் அறிவர். அந்தவகையில் எமது வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்பட்டு, தகனமும் அடக்கமும் என்ற, இருவிதமான அனுமதிகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் பின்னர், மீண்டும் அது தகனம் மட்டும் என்ற அடிப்படையில் அரச வர்த்தமானியில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, துறைசார்ந்தோர், சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் தொடர்ந்து உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இது வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:

1. 24.03.2020 ஜனாதிபதி, பிரதமர், கெரோனா பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்பினருக்கு உலக சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலை அமுல் படுத்த வேண்டி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
https://acju.lk/en/news/acju-news/item/2049-letter-to-hep-pm-let-gen
2. 31.03.2020 ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், கொரோனா பாதுகாப்புப் பிரிவின் தலைமையகம் மற்றும் டாக்டர் அனில் ஜயசிங்க முதலானோருக்கு மற்றுமொரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
https://acju.lk/en/news/acju-news/item/2050-a-letter-sent-from-acju
3. 31.03.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு, இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன், கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை இராணுவத் தலைமையகத்தில் நடத்தியது.
4. 31.03.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு, சுகாதார அமைச்சர் திரு பவித்ரா வன்னிஆரச்சி அவர்களுடன், கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை சுகாதார அமைச்சில் நடத்தியது.
5. 01.04.2020 அன்று தகனம் தொடர்பிலான அதிருப்தியைத் தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.
English:  https://acju.lk/en/news/acju-news/item/1887-acju-expresses-its-disappointment-with-regard-to-revising-the-method-of-disposal-of-the-covid-19-bodies
தமிழ் : https://acju.lk/news-ta/acju-news-ta/item/1889-19
6. 02.04.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் ஜனாசா தொடர்பான சமகால பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு விஞ்ஞான பூர்வமாக அறிவிப்பது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுதல் வழங்குவது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
7. 22.04.2020 ஆம் திகதி தகனம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயம் என்பதை உறுதிப்படுத்தி ஒரு பத்வா ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டது.
https://acju.lk/en/fatwa-bank/recent-fatwa/item/1958-religious-clarification-with-regard-to-cremating-the-body-of-a-muslim-covid-19-victim
8. 07.05.2020 சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
English : https://acju.lk/en/news/acju-news/item/1935-clarification-on-the-ambiguity-on-burying-the-ashes-of-a-muslim-who-succumbed-to-covid-19-and-request-to-reverse-the-stance-by-permitting-burial
தமிழ் : https://acju.lk/news-ta/acju-news-ta/item/1936-19
9. 10.05.2020 சுகாதார அமைச்சருக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டி ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.
https://acju.lk/en/news/acju-news/item/2051-a-letter-to-hon-min-pavithra-wanniarachchi-minister-of-health
10. 05.06.2020 மரணித்தவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தகனம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பதும் அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதும் பல ஆவணங்களை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டது.
https://acju.lk/en/news/acju-news/item/1963-opinion-regarding-disposal-of-covid-19-affected-human-remains
11. 10.11.2020 கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தை கண்டறிய அதிகாரிகளுடன் சேர்ந்து மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்யப்பட்டது.
12. 24.11.2020 தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜிதில் ஜனாசா சம்பந்தமாக முஸ்லிம் அமைப்புக்களுடனான விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது.
13. 10.12.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முஸ்லிம்களது ஜனாஸாக்களை தகனம் செய்ய மார்க்க ரீதியான எந்த அனுமதியும் கிடையாது என்பதை கூறி முஸ்லிம்களது ஜனாஸாக்களை அடக்கும் உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
https://www.youtube.com/watch?v=ZCebVqobrZ8&t=1s
https://www.youtube.com/watch?v=KBAOFhrYH38&t=4s

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து, இவ்விவகாரமாக சிவில் அமைப்பினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பினரும் தம்மாலான முயற்சிகளில் இன்று வரை தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எமது இந்த முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கப்போவதில்லை என நாம் உறுதியாக நம்புகிறோம். “இன்ஷா அல்லாஹ்” இம்முயற்சிகள் வெற்றி பெற முஸ்லிம்கள் பொறுமையை கடைபிடித்து துஆக்களில், சுன்னத்தான நோன்புகளில், ஸதகா தானதர்மங்களில் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு ஜம்இய்யா பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறது. வல்ல அல்லாஹ் இந்நோயை விட்டும் சகலரையும் பாதுகாத்து நம் அனைவர்களுக்கும் நல்லருள்பாளிப்பானாக!

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நன்றி தினகரன் 
No comments: