கிறிஸ்மஸ் குடில் விடுக்கும் அழைப்பு

கிறிஸ்மஸ் குடில் அமைக்கும்போது பெத்லெகேமில் நடந்தவை நம் முன்னே வருகின்றன. உணர்ச்சிகளைக் கிளருகின்றன. நம் மனதைத் தொடுகின்றன. என்னே எளிமை, என்னே ஏழ்மை! தாழ்ச்சியை, ஏழ்மையை, தன்னல மறுப்பை ஏற்க இது நம்மைத் தூண்டுகிறது.

பெத்லெகேமில் இருந்து சிலுவை வரை. நம் சகோதரர்களில் துன்புறுவோர்க்கு இரக்கம் காட்டி இயேசுவைப் பார்க்கவும் அவருக்குப் பணிவிடை செய்யவும் இக்குடில் அழைப்பு விடுக்கிறது. ( மத். 25:31-46 இச்சிறியோரில் ஒருவருக்கு நீங்கள் பணிவிடைச் செய்தபோதெல்லாம் எனக்கே பணிவிடை செய்தீர்கள்.)

கிறிஸ்மஸ் குடிலிலிருக்கும் ஒவ்வொன்றையும் உற்றுநோக்கினால், அவற்றின் உட்பொருளை ஆழமாக அறிய முடியும். இக்காட்சிக்குப் பின்புலமாக விண்மீன்கள் நிறைந்த வானம் இருளும் நிசப்தமும் ஒரு சேரப் போர்த்தியவாறு.

நம் மனதிலே எத்தனை முறை இரவின் இருளை உணர்ந்திருக்கிறோம்! எனினும் கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. நான் யார், எங்கிருந்து வருகிறேன், ஏன் பிறந்தேன், அதுவும் ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில், யார்மீதுப் பாசம் வைத்துள்ளேன், ஏன் துன்புறுகிறேன், ஏன் இறக்கவேண்டும் – எனும் நம்மை உலுக்கும் இக்கேள்விகளுக்கு விடை தருவதற்கே கடவுள் மனிதனானார்.

அவர் நெருங்கிவர, இருள் விரட்டப்பட்டு ஒளி வந்துவிடும், “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளி” (லூக் 1:79)

வழக்கமாக, குடிலின் பின்னே இடிந்த வீடுகள் அல்லது இடிந்த பெருங்கட்டடங்கள் காணப்படும். ரோம் நகரில் சமாதானத்தின் கோயில் ஒன்று இருந்ததாம், ஒரு கன்னி ஒரு மகவைப் பெற்றேடுத்தால் அது இடிந்து விழும் என்று 13ஆம் நூற்றாண்டின் வராஜினே ஊரைச்சேர்ந்த சாமிநாதர் சபையின் யக்கொபுஸ் என்பவர் என்றோ இருந்துவந்த நம்பிக்கையை எழுதிவைத்துள்ளார்.

இதுதான் இடிந்த வீடுகளின் கதையோ! ஆனால், வீழ்ந்துள்ள மனிதக் குலத்தை அழிவு என்பது தப்பாமல் தாக்கிவிடும் என்பதை இது சுட்டிக்காட்டிக் கிழட்டுப் பருவத்திலிருக்கும் உலகுக்கு ஓர் ஆரோக்கியத்தைக் கொடுத்து மீண்டும் கட்டி எழுப்பி அது பிறந்தகாலத் துள்ளல் இளமைக்கே கொண்டு செல்கிறார் இப்போது பிறந்துள்ள பாலன் இயேசு என்று நமக்கு உரக்கக்கூறுகிறது!

குடிலின் பின்புலமாக மலைகள், அருவிகள், ஆட்டுமந்தை, இடையர்கள் இவர்களைப் பார்க்கிறோம். இறைவாக்கினர் சொன்னவாறே மெசியாவின் வருகையால் அனைத்துப்படைப்புகளும் மகிழ்கின்றன என்பதை இவை காட்டும். வானதூதர்கள் வழிநடத்தும் விண்மீன் இவை எல்லாம் நாமும் குகைநோக்கிப் புறப்பட்டுப்போய் ஆண்டவரைத் துதிக்கவேண்டுமெனக் கட்டியம் கூறுகின்றன.

“வாருங்கள் நாம் பெத்லெகேமுக்குப்போய் ஆண்டவர் நமக்கு அறிவித்துள்ள இந்நிகழ்ச்சியைப் பார்ப்போம்’ என இடையர்கள் வானவர் தூதுரைத்ததும் (லூக் 2:15) தங்களுக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். எத்தனையோ காரியங்களில் மூழ்கியிருக்கும் பிறமனிதரைப் போலல்லாமல், இவ்விடையர்கள் செல்கிறார்கள்.

வாழ்வில் அதிமிக முக்கியமான ஒன்றை மீட்பு, இரட்சணியம் எனும் பரிசை முதன் முதலாகக் காணப்போகிறார்கள். இறைவன் மனிதனானதை வரவேற்போர் தாழ்ச்சியும் ஏழ்மையும் கொண்டோர்தான். குழந்தை இயேசு வடிவில் நம்மைத்தேடிவரும் கடவுளைச் சந்திப்பது, அன்பு, நன்றியுணர்வு, வியப்பு, இவற்றோடு பார்க்கச்செல்லும் இவ்விடையர்கள்தான். இயேசுவால்தான் கடவுள் தன் பிள்ளைகளை நேருக்குநேர் சந்திப்பது நடக்கிறது; நம் வேதம் பிறக்கின்றது; அதன் அழகும் மிளிர்கின்றது கிறிஸ்து பிறப்புக் காட்சியில் இவை எல்லாம் பிரமிப்பூட்டும் வகையில் தெரிகின்றன.

இங்கே பிச்சைஎடுப்போரையும் உள்ளத்தின் சொத்துமதிப்பை உணர்ந்தோரையும் காட்சியில் வைப்பார்கள். அவர்களுக்கு எப்படி இடமில்லாமற் போகும், அவர் தேடிவந்ததே சிறப்பாக அவர்களைத்தானே! நம் மத்தியில் கடவுள் இருப்பதை முதலில் கண்டுபிடிப்போர் அவர்கள்தான்.

யார் அவரின் அன்பைப்பெறத் துடிக்கிறார்களோ தம்மை நெருங்கிவர அவரை அழைக்கிறார்களோ அவர்களுக்காகத்தான் இயேசு மனித உரு எடுத்தார் என்பதை இக்குடில் நமக்கு நினைவுறுத்துகிறது.

“கனிவும் மனத்தாழ்மையும் உடைய” (மத்11:29) இயேசு ஏழ்மையில் பிறந்தார், மிக எளிமையான வாழ்வு நடத்தினார். நம் வாழ்வில் முக்கியமானவை எவை என்பதை உணர்த்துவதற்காக. இயேசு பிறப்புகாட்சியைப் புரிந்தோரைப் பணம் அது வாக்களிக்கும் சந்தோஷம், மனநிறைவு என்பவை ஏமாற்றமுடியாது.

என்னிடம் ஒன்றுமே இல்லையே என ஏங்கி இருப்போருக்கு இயேசுவின் குடில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும். நம்பிக்கை, தன்மானம் என்பதைக் கொடுக்கும் கனிவின் புரட்சியை.(மிகுதி அடுத்த வாரம்)  நன்றி தினகரன் 


No comments: