எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 21 நந்திவாக்கியம்: சொல்லச்சொல்ல சோதிடம் எழுதி கிடைத்த சன்மானம் ! அரசியல் அதிகாரம் படைத்தவர்களும் மந்திரித்த நூலுக்குள்ளே அடக்கம் !! முருகபூபதி


னது  எழுத்துலகப்பிரவேசத்தின்   தொடக்க காலப்பகுதியிலிருந்து  1977 ஆம் ஆண்டு  நடந்த கலவரம் வரையில்  இலங்கையில் பல அரசியல், பொருளாதார மாற்றங்களும்  நிகழ்ந்தன.

1965 இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு  தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரஸும்  வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதும், 1970 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில்  லங்கா சமசமாஜக்கட்சி, மற்றும் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும்  இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தது.

அதனையடுத்து நிதியமைச்சரான கலாநிதி என். எம். பெரேரா இரவோடு இரவாக புழக்கத்திலிருந்த ஐம்பது ரூபா, நூறுரூபா நாணயத்தாள்களை இரத்துச்செய்துவிட்டு, புதிய நாணயத்தாள்களை


அறிமுகப்படுத்தினார்.

நானும் அப்பாவுடன் சென்று அவர் கைவசம் இருந்த பழைய தாள்களை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்னால் அதிகாலையே வரிசையிலும் நின்றிருக்கின்றேன்.  அப்பாவிடம் இருந்ததோ இருநூறு ரூபாதான்.  ஒருவரால் அந்தத் தொகையை மாற்றமுடியாதுபோகலாம் என்பதற்காக  ஒரு தாளை நானும் மற்றும் ஒரு தாளை  அவரும்  மாற்றுவதற்காக  என்னையும் அழைத்துச்சென்றார்.

இவ்வாறு  நீண்ட  வரிசையில் நின்று மக்கள்  தமது தேவைகளை மேற்கொள்ளவேண்டிய நடைமுறையை அன்றைய அம்மையாரின் கூட்டரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

பின்னாளில் அதே அரசில்தான் மக்கள் பேக்கரி வாசல்களில்  பாண் வாங்குவதற்கும்  நீண்ட  வரிசையில் நின்றனர்.

1970 முதல்  1977 வரையான காலப்பகுதியில்தான்  அதுவரையில்  பிரித்தானியாவின் ஆளுகைக்குள்ளிருந்த  இலங்கைக்கு   புதிய அரசியலமைப்பு வந்தது.  அத்துடன் செனட் சபை ஒழிக்கப்பட்டது.  இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் வந்தன.


அதுவரையில் சிலோன் என அழைக்கப்பட்டுவந்த இலங்கை ஶ்ரீலங்கா என்ற பெயரில் மாற்றமடைந்தது.

1971 இல் மக்கள் விடுதலை முன்னணியினரால் ஏப்ரில் மாதம் கிளர்ச்சி நடந்தது.

அதற்குச்சில வருடங்களுக்கு  முன்னர்  வாகனங்களின் இலக்கத்தகடுகளில் சிங்கள ஶ்ரீ எழுத்துக்கு தார்பூசும் இயக்கத்தினை முன்னெடுத்த தமிழரசுக்கட்சியினர்,  அந்த புதிய அரசியலமைப்பினையும் எதிர்த்து  அறப்போராட்டங்களை ஆரம்பித்தனர். வட்டுக்கோட்டையில் தனித்தமிழ் ஈழம்தான் தீர்வு என்று முன்மொழிந்தனர்.

தந்தை செல்வா, தனது காங்கேசன்துறை ஆசனத்தை துறந்தார்.  அதனால்  அங்கு இடைத்தேர்தல் நடந்தது.  மீண்டும் அவர் அந்தத் தேர்தலில் நின்று மக்களின் ஆணையை கோரினார்.  கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் தோழர் வி. பொன்னம்பலம் அங்கே அவருக்கு எதிராக  நிறுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில்  தமிழாராய்ச்சி மாநாடும் நடந்தது. அங்கு தோன்றிய


அசாதாரண சூழ்நிலைகளினால், ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர்.

அனைத்து செய்திகளையும் எமது வீட்டுக்குப்பக்கத்தில் பலசரக்கு கடை நடத்திக்கொண்டிருந்த  புங்குடுதீவைச்சேர்ந்த வர்த்தகர் நடராஜா தினமும் வாங்கும் வீரகேசரி பத்திரிகையில்  படித்துக்கொண்டிருந்தேன். அவர் என்மீது பாசம் கொண்டிருந்தவர்.  நீர்கொழும்பு  பிரதான வீதியில் அவரது தம்பி செல்லத்துரை என்பவரும்  கடை வைத்திருந்தார்.

வர்த்தகர் நடராஜா, தனது சைக்கிளை தந்து, கடைக்குத் தேவையானதையும்  என்மூலம் தருவிப்பார்.  அதற்கு பிரதியுபகாரமாக அவர் எனக்கு பத்திரிகை படிக்கத்தந்தார்.

ஒருநாள் வீரகேசரியில்  ஒப்புநோக்காளர்  பணிக்கு ஒரு சிறுவிளம்பரம் வந்திருந்தது.  அக்காலப்பகுதியில் நீர்கொழும்பில் சாந்தி அச்சகத்திலும், கொழும்பில் புதுக்கடை கலா அச்சகத்திலும் மலேவீதியில் ஒரு சிங்கள அன்பர் நடத்திய அச்சகத்திலும் அவ்வப்போது,  அச்சுப்பிரதிகளை ஒப்புநோக்கிய அனுபவம் எனக்கிருந்தமையால்,  வீரகேசரியில் ஒப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்தேன்.  எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அந்த விண்ணப்பத்தை தமது அலுவலக தட்டச்சில் பதிவுசெய்து தந்தார்.


கைவசம் இருந்த நற்சான்றிதழ்களின் பிரதிகளையும் இணைத்து அந்த விண்ணப்பத்தை தபாலில் அனுப்பியிருந்தேன்.

அதற்கு முன்னர் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக இருந்துவிட்டு,  அதன்பின்னர் காலிமுகத்திடலில் வீதி அகலமாக்கும்  வேலையில் தொழிலாளர்களை மேற்பார்வைசெய்யும்  ஓவர்ஸீயர் வேலையும் பார்த்துவிட்டு, அதனையும் இழந்து, அதன்பிறகு எழுத்தாளர் சங்கம், கூட்டுறவுப்பதிப்பகம், இலங்கை ஆசிரியர் சங்கம் என்பனவற்றிலும் ஒரே சமயத்தில் வேலை செய்துகொண்டு,  எங்கள் ஊரின் இந்து இளைஞர் மன்றம், விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மன்றம் , பொதுப்பணி மன்றம் ,  இலக்கிய வட்டம்  முதலானவற்றிலும்  இணைந்து தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தபோது,   மற்றும் ஒரு திருப்பம் நேர்ந்தது.

வித்தியாலயத்தின் அபிவிருத்தியில் தீவிர அக்கறை காண்பித்த அதிபர் வ. சண்முகராசா எனது நல்ல நண்பராகவும் திகழ்ந்தவர். எனது முதல் நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர்தான் தலைமை தாங்கினார்.

வித்தியாலயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,  பழையமாணவர் மன்றம் இருக்கத்தக்கதாக அவர்,  மற்றும் ஒரு அமைப்பினையும் உருவாக்கினார். அதன்பெயர் வித்தியாலய அபிவிருத்திச்சங்கம்.

அதில் பெற்றோர்கள் தவிர்ந்து நல்லெண்ணம் படைத்த ஊர் பிரமுகர்களை இணைத்துக்கொண்டு முதலாவது அங்குரார்ப்பணக்கூட்டத்திற்கு என்னையும் அழைத்தார்.  அந்தக்கூட்டம் தொடர்பான செய்தியை வீரகேசரியில் வெளிவரச்செய்யும் நோக்கத்துடன்தான் அவர் என்னை அழைக்கிறார் என நம்பிக்கொண்டு சென்றேன்.

பாடசாலையின் முதல் மாணவன் என்ற அடிப்படையில் அன்று அவர் என்னையும் அந்தச்சங்கத்தின் முதலாவது செயற்குழுவில் இணைத்துக்கொண்டார்.

எழுத்தோடு நெருக்கமாக இருந்த  எனது ஆதரவு அவருக்கு மட்டுமல்ல,   எங்கள் ஊர் பிரமுகர்களுக்கும்  தேவைப்பட்டது. 

மூன்றாம் வட்டாரத்திற்கான மாநகர சபை பிரதிநிதி ஜெயம் விஜயரத்தினம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் ஒரு செல்லப்பிள்ளை.  அவரது தந்தையார் எஸ்.கே. விஜயரத்தினம் எங்கள் ஊரின் நகரபிதாவாக இருந்தவர். அத்துடன் அவரது தலைமையில் வித்தியாலயம் 1954 இல் தொடங்கப்பட்டபோது  முதலாவது மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமையால்  அன்று  முதல் என்மீதும் எனது எதிர்காலம் தொடர்பாகவும் ஜெயம் அய்யா  அக்கறை கொண்டிருந்தவர்.

திடீரென்று ஒரு நாள் மாலை யாரையோ அழைத்துக்கொண்டு தமது காரில் என்னைப்பார்க்கவந்தார். உடன்  வந்தவரை அறிமுகப்படுத்தினார்.   வந்தவரும் வர்த்தகப்பிரமுகர்.  கொழும்பு வீதியில்  எரிபொருள் நிரப்பு நிலையமும்  கட்டானை பிரதேசத்தில் தென்னந்தோட்டங்களும் வைத்திருப்பவர். அத்துடன் கட்டானை தொகுதி எம்.பி.யும் புடவைக்கைத் தொழில் அமைச்சருமான விஜயபால மெண்டிஸின் தங்கையை திருமணம் செய்திருப்பவர். 

அந்தக்குடும்பம் ஐக்கிய தேசியக்கட்சியில் செல்வாக்கு மிக்கது.  அமைச்சரின் தந்தை முதலியார் மெண்டிஸ் நகர பிதாவாகவும் இருந்தவர்.

என்னைத்தேடி வந்ததன் நோக்கத்தை ஜெயம் விஜயரத்தினம் சொன்னார்.   “  கொழும்பு வீதியில் வத்தளையில் மகாலிங்கம் என்ற சோதிடர் இருப்பதாகவும், தெலுங்குமொழியை தாய்மொழியாகக்கொண்டிருந்தாலும் தமிழில் நந்திவாக்கியம் என்ற ஏடு பார்த்து சோதிடம் சொல்லும் சாத்திரியார் என்றும்,   வந்திருக்கும் அமைச்சரின் மைத்துனருடன் நான் அங்கே சென்று அந்த சாத்திரியார் சொல்லும் குறிப்புகளை தமிழில் எழுதி,  அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்துச்சொல்லவேண்டும்.  அதற்கு ஒரு முழுநாள் பகல்பொழுது விரையமாகும்.  “  என்றார்.

புறப்படும்போது,  ஜெயம் அய்யா, என்னை தனியே அழைத்து,   “ அங்கே சென்று  அவர்கள் சொல்வதை செய்து கொடு.  அரசாங்கத்துடன் நெருக்கமான செல்வாக்குள்ள குடும்பம்.  உனக்கு ஏதும்  நல்ல தொழிலையும் இந்தத் தொடர்புகளினால் தேடிக்கொள்ளலாம்.  இப்போது நீ அவர்களுடன் சென்று செய்யும் எழுத்து மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு  சன்மானமாக நூறோ, இருநூறோ தருவார்கள். வாங்கிக்கொள்”  என்று காதுக்குள் சொல்லிவிட்டு காரில் ஏறிப்புறப்பட்டார்.

இந்த அரசியல் குடும்பங்கள்  தங்கள் வேலையை கச்சிதமாக முடித்துக்கொள்ளும்.  ஆனால், இவர்களின் தயவால் எனக்கு எந்தவொரு நிரந்தரமான வேலையும் கிடைக்கப்போவதில்லை என்பது  எனக்கு தீர்க்கதரிசனமாகத் தெரிந்திருந்தது.

எப்பொழுதும் புதிய புதிய அனுபவங்களை நோக்கி நடைபயிலும் இயல்பு எனக்கிருந்தமையால்,  அந்தக்கூட்டத்துடனும்  சில நாட்கள்  அலைந்திருக்கின்றேன்.

அந்த அலைச்சலினால்  பல செல்வந்தர்கள், அரசியல் பிரமுகர்களினதும் தொடர்புகள் கிட்டியதே தவிர அரச பணி கிடைக்கவேயில்லை.  அந்தத் தொடர்பு நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும்  நீடித்தது.

எனக்கு பணியிடத்தில் திங்கட் கிழமைதான் ஓய்வு நாள்.  வீரகேசரி,  நாளிதழையும்  ஞாயிற்றுக்கிழமைகளில்  வாரவெளியீட்டையும்  அச்சிட்டு விநியோகித்தமையால்,  அங்கு பணியாற்றியவர்களுக்கு  வேலை நேர அட்டவணை தரப்பட்டது. அதன் பிரகாரம் எனக்கு திங்கட் கிழமைதான் ஓய்வு நாள்.

அந்த நாளை இந்த நந்திவாக்கியம் சோதிடம் பார்க்கச்செல்பவர்களுக்கு ஒதுக்கியிருந்தேன்.  அனில் முதலிகே என்ற செல்வந்தர் குடும்பம்,  இலங்கை போக்கு வரத்துச்சபையின் இயக்குர் நாயகத்தின் குடும்பம்,  மற்றும் சில அரசியல் பிரமுகர்களின்  குடும்பங்களுக்காகவும்  அடிக்கடி குறிப்பிட்ட திங்கட் கிழமைகளில் அந்த சோதிடரிடம் சென்று வந்தேன்.

செய்யுள் வடிவில் தமிழில் எழுதப்படும் அந்த சோதிடத்தை கேட்பதற்கு பென்ஸ் கார்களில்  பௌத்த பிக்குகளும் வருவார்கள்.

“  முற்றும் துறந்த காவிச்சந்நியாசிகள் ஏன் அய்யா , தங்கள் சோதிடம் பார்க்கவருகிறார்கள்..?  “ என்று ஒரு நாள் அந்த மகாலிங்கத்திடம் கேட்டேன்.

அவர் தனது தாடியை வருடிக்கொண்டு,   “   இவங்கள்,  தங்கள் முற்பிறவி, மறுபிறவியை தெரிந்துகொள்ள வருகிறார்கள்  “ என்றார்.

அவரது தோற்றம் ஜெயகாந்தனின்  விழுதுகள் நாவலில் வரும் ஓங்கூர் சாமியாரைப்போன்றிருக்கும்.

அவரது இல்லத்தில் ஒரு நாள் அல்ல சில நாட்கள் மற்றும் ஒரு முக்கியஸ்தரையும் சந்தித்திருக்கின்றேன். அவர்தான் அச்சமயம் இறைவரித்திணைக்களத்தின் ஆணையாளராக இருந்த சிற்றம்பலம். இவர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய நண்பர்.

மற்றும் ஒருநாள் அநுரா பண்டாரநாயக்கா வந்தார்.  அவர் குறித்து  சோதிடர் மகாலிங்கத்திற்கு உயர்வான அபிப்பிராயம் இருக்கவில்லை.  ஆனால்,  அச்சமயம் பாரிஸில் படித்துக்கொண்டிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவுக்குத்தான் அரசியலில்  சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அன்றே சொன்னார் அந்த சோதிடர்.

அவரது தீர்க்கதரிசனம்தான் பலித்தது.

1971 ஏப்ரில் கிளர்ச்சியின்போது  ஶ்ரீமாவின் உயிருக்கும் ஆபத்து நேரலாம்  என்றும்  அவர் சோதிடம் கணித்தமையால் முழு ஊரடங்கு அமுல்வேளையில் ஶ்ரீமாவை அவரது பரிவாரங்களுடன் முன்னேஸ்வரம் அழைத்து பெரிய யாகமும் நடத்தி,   விலையுயர்ந்த காஞ்சிபுரம் பட்டுச்சேலையையும்  அந்த யாகத்தில் ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.  அத்துடன் ஒரு பசுமாட்டையும் தானம் கொடுத்துள்ளார்கள்.

மற்றும் ஒருநாள்  வந்தவர் என்னை பேராச்சரியத்தில் ஆழ்த்தினார்.  அக்காலப்பகுதியில்  ஜே.ஆர். ஜெயவர்தனா நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தார்.

நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக இருந்தேன்.

மகாலிங்கம் இல்லத்திலிருந்து வர்த்தகப்பிரமுகர் அனில் முதலிகேயின்  மகளுடைய குறிப்பினை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான்  அச்சம்பவம் நடந்தது.

ஒரு காரில் வந்த மெலிந்த தோற்றம்கொண்டவர்,  தன்கைவசம் வைத்திருந்து  அப்பியாசக்கொப்பியின்  முதல் இரண்டு பக்கங்களை மடித்துக்கொண்டு,   ஒரு செய்யுளில்  சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்ட வரிகளை  காண்பித்து  சிங்களத்தில் மொழிபெயர்த்து தரச்சொன்னார். அந்த நந்திவாக்கியம் வேறு யாராலோ எழுதப்பட்டிருந்தது.

அதனை சோதிடர் மகாலிங்கத்துக்கு வாசித்துக்காண்பித்தேன்.  அவர் அதற்கு பொருள் விளக்கம் சொன்னார்.

குறிப்பிட்ட சாதகத்துக்குரியவர் தனது மனைவியுடன்  கர்னாடக மாநிலத்தில் ஒரு கோயிலுக்குச்சென்று அதன் முன்னாலிருக்கும் குளத்தில் நீராடிவிட்டு, ஈர உடையுடன் அந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், தோஷங்கள் நீங்கும். 

நான் சொல்லச்சொல்ல, வந்தவர் தனது டயறியில் குறித்துக்கொண்டார்.  அந்த அப்பியாசக்கொப்பியை மடித்து திருப்பிக்கொடுக்கும்போதுதான்   அதற்குரிய நபரின் பெயரைப் பார்த்தேன்.  அது…!!!!!!!!!

அது  ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தனாவுக்குரிய சோதிடக்குறிப்பு !!!!

சில தினங்களுக்குப்பின்னர், ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமாக பெங்ளுர் சென்றார் என்ற செய்தியை நான் வீரகேசரி பத்திரிகையில் ஒப்புநோக்கினேன்.

என்னதான் நிறைவேற்று அதிகாரத்தை தமது கையில் வைத்திருந்தாலும், இந்த அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும்  சோதிடத்திற்குள்ளும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்குள்ளும்தான் அடங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவில் திருப்பதிக்கு அவர்கள்  அடிக்கடி செல்வதிலும்,  கைகளில் மந்திரிக்கப்பட்ட நூல்களை கட்டிக்கொண்டிருப்பதிலும்  அவர்களின் நம்பிக்கைகளை நாம் அவதானிக்கமுடியும்.

நான் நீர்கொழும்பு விஜயரத்தினம் வித்தியாலய அபிவிருத்திச்சங்கத்தில் அங்கம் வகித்திருந்தவேளையில்,   கல்வி அமைச்சர் பதியுதீன்  மஃமூத்  ஜெர்மனிக்குப்புறப்பட்டார்.  அவரை வழியனுப்புவதற்கு மாத்தறை எம்.பி. யும் துணை கல்வி அமைச்சருமான துடாவையும்  வந்திருந்தார்.

எங்கள் பாடசாலை அதிபர் வ. சண்முகராசா ஒரு பெரிய  மாலை சகிதம் என்னையும் விமானநிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.

கல்வி அமைச்சருக்கு பூமாலைகள் புகழாரங்களில் பிரியம் அதிகம். அமைச்சர்கள்,  வி.ஐ.பி.க்களுக்கான பிரத்தியேக அறையில் அவருக்கு நாம் பிரியாவிடை வழங்கும்போது இரண்டு பௌத்த பிக்குகள் மந்திரம் ஓதி அமைச்சரின் கையில் நூல் கட்டினார்கள்.

மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில்  மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் ரோகண விஜேவீர  கியூபாவில் நடந்த உலக இளைஞர் மாணவர் விழாவுக்கு சென்றபோது அவரை வழியனுப்பவும் விமான நிலையம் சென்றிருந்தேன்.

அவருக்கு அவ்வாறு மந்திரித்த நூல் கட்டுவதற்கு எவரும் வந்திருக்கவில்லை.  வந்திருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார் !

இவற்றில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அந்த நூல்கள் காப்பாற்றட்டும்.  நம்பிக்கையற்றவர்களை பகுத்தறிவு காப்பாற்றட்டும்.

ஜே.ஆர். ஜெயவர்தனாவின் நம்பிக்கை குறித்து, எனது சொல்ல மறந்த கதைகள் நூலிலும் எழுதியிருக்கின்றேன்.

எத்தனை அரசியல்வாதிகளுக்குப்பின்னால் அலையநேரிட்டபோதிலும்,   எனக்கு கிடைத்தது அரச உத்தியோகம் அல்ல!

எழுத்தே வாழ்க்கை ! எழுத்தே மூச்சு என்பதே எனக்கு விதிக்கப்பட்டது.  நான் எனது எதிர்காலத்தை அந்த மகாலிங்கம் சோதிடரிடம் கேட்டு எழுதவேயில்லை.

( தொடரும் )

 

 

 

  

No comments: