இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும் - மயில்வாகனம் திலகராஜா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் )


( எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ஞாயிறு (17-05-2020 ) தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணல் )



 “ அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம் உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, தேர்தலைப் பிற்போடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்   “ என்றும் தெரிவித்து உள்ளார். 
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

( நேர்காணல் : யோ.தர்மராஜ்)


கேள்வி:  கொரொனா தொற்றுடன் உங்களைப் போன்ற அரசியல்              தலைவர்களை காண முடியாதுள்ளதே ஏன்?

பதில்:   இந்த கொரொனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் வெளியே செல்லாதீர்கள் எனும்போது எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை நீங்கள் எங்கே காணவேண்டும் என எண்ணுகிறீர்கள்?. சமூக சேவை செய்து களைத்துப் படுத்துறங்கும் ஓர் அரசியல்வாதியை நீங்கள் அவரது முகநூலில் பார்ப்பதில் திருப்தி அடையலாம். அந்தப்படம் யாரால் எடுக்கப்பட்டது? எப்படி அவரது முநூலிலேயே பதிவேற்றம்பெற்றது பொன்ற மறுபக்கங்களும் அதில் உண்டு.

என்னால் முடிந்த பணிகளை வீட்டில் இருந்தவாறு செய்துகொண்டு எழுத்து வேலைகளில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். அவை ஊடகங்களிலும் எனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால்தான் நீங்களும் இப்போது என்னைப் பேட்டி காணும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவசியம் என கருதப்பட்ட கூட்டங்களுக்குச் சென்று வந்து கொண்டு இருக்கிறேன் . தேவையானவர்களுடன் பேசி தீர்வுகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் .

கேள்வி: கொரொனா தொற்று அச்சுறுத்தலையடுத்து மலையக மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களிலும் மலையக தலைவர்கள்             அரசியல் இலாபம் தேடுவதா மக்களின் நகுற்றச்சாட்டை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? 

பதில் :  அவர்கள் அரசியல்தலைவர்களாக அல்லது மக்கள் 
பிரதிநிதிகளாக அந்த நிவாரணப் பணிகளை முன்னெடுக்கிறார்களா? அல்லது “வேட்பாளர்களாக” நிவாரணப் பணி செய்கிறார்களா என்ற கேள்விக்கு விடை தேடினால் உங்களுக்கு இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.என்னைப் பொறுத்தவரை தேர்தல் காலத்தில் இந்த கொரொனா இடர் வந்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் தமது சொந்த நிதியில் இந்தளவுக்கு நிவாரணம் வழங்கி இருப்பார்கள் என நான் எண்ணவில்லை. எனவே வேட்பாளராக தனது பெயரை முன்னிறுத்தி நிவாரணம் வழங்குவது அரசியல் லாபம் என நீங்கள் கருதினால் நானும் ஆம் என்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல்வாதிகளின் பணி அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது. அதனை எவ்வாறு செய்யலாம் எனும் ஆலோசனையை கொரொனா ஆரம்ப நாட்களிலேயே நான் சார்ந்த அரசியல் கூட்டணிக்கு நான் முன்வைத்தேன். இன்றுவரை அது பற்றி அக்கறைகொள்ளாமை தொடர்பாக உள்ளக ரீதியாகவும் பகிரங்கமாகவும் எனது அதிருப்பதியைப் பதிவு செய்துள்ளேன். பாராளுமன்றம் இயங்கி இருந்தால் கட்சி அல்லது கூட்டணி எல்லைகளைக் கடந்து அந்த அழுத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கி இருப்பேன். துரதிஸ்டவசமாக இப்போது அதுவும் இல்லை என்ற அடிப்படையில் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம் அவ்வாறான ஒன்று நடக்காதது கவலைக்குரிய விடயம் . அரசியல் இயக்கங்களும் நிவாரணம் பொதி வழங்குவதோடு திருப்தி அடையுமானால் அவை தர்மஸ்தாபனமாகவே இயங்கிவிட்டுப் போகலாம்.

கேள்வி:  இவ்வாறான அசாதாரண நிலைமைகளில் கூட மலையத்            தலைவர்களிடத்தில் ஒற்றுமையின்மை மக்களை பாதிக்காதா?
பதில் :  மலையக அரசியல் தலைவர்களிடம் மாத்திரமல்ல இலங்கையின் எந்த அரசியல் தலைவர்களிடத்திலும் அப்படியான ஒற்றுமையைக் காணக்கிடைக்கவில்லை. மாறாக உள் முரண்பாடுகள் கூட அதிகளவு வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்கலாம். இது இலங்கை அரசியல் கட்டமைப்புக்கு ஏற்பட்டு இருக்கும் சாபம்.

கேள்வி:  மலையக மக்களுக்கு எப்போதும் ஏமாற்றம் மட்டுமா                     கிட்டும்…?  1000 மற்றும் 50 ரூபா என
ஏமாற்றப்பட்ட மக்களுக்கு பின்னர் சம்பள உயர்விலும்                 ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசின் 5000            ரூபாவிலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு அரசின் அக்கறையின்மையா 
அல்லது மலையத் தலைவர்களின் பொறுப்பற்றத் தன்மை காரணமா?
பதில்:  இதன் பின்னணியைத் தேடி பார்க்க வேண்டியது ஊடகவியலாளர்களாக உங்களைப்
போன்றவர்களது கடமை. நான் இது தொடர்பாக 
தொடர்ந்து பேசி வந்துள்ளேன் . கொரொனா இடர்கால ஆரம்பத்தில் இதனை வலியுறுத்தி கூறி இருந்தேன் . 
இந்தப் பேட்டி வெளிவரும் இதே நாளில் உங்களது சகோதர ஊடகம் ஒன்றுக்கு விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதி உள்ளேன் . எனவே இங்கே சுருக்கமாக சொல்கிறேன்.
மலையக மக்கள் அரச பொது நிர்வாகத்தில் முழுமையாக உள்வாங்கப்படாமையே இதற்கான காரணம். அதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை ஓரளவுக்கு நிவர்த்திக்கும் வகையிலேயே மலையக அதிகார சபை உருவாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். அந்த சட்டத்தை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்க வில்லை. ஆனால் அந்தச் சட்டத்தின்படி அமையப்பெற்ற அதிகாரசபையின் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. எனவே இப்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் அந்த அதிகாரம் கொண்ட பதவியில் இருப்போர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என குறைந்த பட்சம் ஊடகங்கள் தானும் கேள்வி எழுப்பலாம்.

கேள்வி:  மார்ச் மாத சம்பளத்தில் 1000 ரூபா சம்பளம் உயர்வு                    கிடைக்குமென கூறியதை பெற்றுக் கொள்ள முடியாதமைக்கு   கொரோனா காரணமாகிற்றா? 
பதில்:  இல்லை. அது சாத்தியமில்லை என்பதை அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது என்ற அறிவிப்பு வந்த ஜனவரி மாதம் முதலே பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நான் பகிரங்கமாக தெரிவித்து வந்துள்ளேன். கொரொனா வருவதற்கு முன்னர் அரசாங்கம் - கம்பனி - தொழிற்சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது என்பதை மறந்துவிணக்கூடாது . மார்ச் 19 தான் கொரொனா ஊரடங்கு வந்தது. மார்ச் 1 முதல் கொடுப்பதாகவே சொன்னார்கள். பெருந்தோட்டத்துறை கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவராமல் 1000 ரூபா மட்டுமல்ல மலையகத்தின்  ஆயிரம் பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை.

கேள்வி:  பெருந்தோட்ட மக்களுக்கு விடிவு கிடைக்குமென ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கூறுகின்ற போதிலும் அரசுக்கு            அரசு ஏமாற்றமடைவது பெருந்தோட்ட மக்களின் விதியா அல்லது மலையக அரசியல்வாதிகளின் தந்திர அரசியலா?
பதில்:  ராஜதந்திரமற்ற அரசியல் எனலாம். மக்களுக்கான அரசியலை முன்வைக்கும் 
இதயசுத்தியும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சார்ந்த அரசியல் பணி அவசியம். பாராளுமன்றத்தை சரியாக பயன்படுத்தவும் தெரிய வேண்டும். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக சுதந்திரத்துக்குப் பின்வந்த அனைத்து மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளையும் ஆய்வுக்கு உட்படுத்தி குறைந்த பட்சம் ஒருவர் எத்தனை மலையக பிரச்சினைகளை பிரேரணையாக முன்வைத்த உள்ளார்கள் என்பதைத்தானும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமானால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

கேள்வி:  தேர்தல் ஆணைக்குழுவுடனான பேச்சுவார்த்தைகளில்            கலந்து கொள்ளும்
உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்றத் தேர்தல் கள      நிலவரங்கள் எவ்வாறுள்ளது?
பதில்:  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளர் என்ற வகையிலேயே நான் கலந்து கொள்கிறேன். எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எனப்படும் கூட்டணியின் அங்கத்துவ கட்சி என்றஙவகையில் மார்ச் 11 க்குப்பிறகு மே 13 மாத்திரமே ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் அடிப்படையில் ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் பிற்போடப்படவேண்டும் என்ற கருத்தும் வெளிப்பட்டது. பிற்போடுவது நல்லது எனும் எனது கருத்து கொரொனா பரவல் ஏதும் வந்துவிடும் எனும் அச்சந்தான். மற்றபடி தேர்தலைப் பிற்போடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது. அதனாலேயே தேர்தல். செலவுகள் குறித்து கேட்டிருந்தேன். இனி ஆறுமாதங்கள் கழித்துதான் தேர்தல் என்றாலும் அது இப்போதைய செலவுமதிப்பீட்டின் இரட்டிப்பைவிட அதிகரிக்கும் என ஆணையாளர் பதில் அளித்தார். இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்.

கேள்வி:  ஜூன் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா?  நடத்தாவிட்டால் அரசியலமைப்பின் படி அடுத்தக் கட்ட நகர்வுகள் எவ்வாறிருக்க வேண்டும்?
பதில்:  இன்றைய திகதியில் ஜூன் நடக்க வாய்ப்பில்லை. அது தொடர்பில் 9 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே நீதிமன்ற தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரும் வரை உறுதியான திகதியைக் குறிப்பிடமுடியாது. ஆனால் திகதி மாறியென்றாலும் தேர்தல் நடக்கும் சாத்தியமே உள்ளது. நடக்காவிட்டால் அதுநடைபெறும் வரை நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை தீர்மானிக்கும் அடுத்த வழக்குகள் இடம்பெற வாய்ப்புண்டு. எனவே நீதியையே மக்கள் எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது.

கேள்வி:  ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவதாக எதிர்க்                    கட்சியினர் குற்றச்சாட்டுவதில் உண்மையுள்ளதா? 
பதில்:  ஜூன் முதலாம் திகதிவரை அவருக்கு அரசியலமைப்பு ரீதியாக பாராளுமன்றம் இன்றி நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் ஐனாதிபதிக்கு உண்டு. மார்ச் 2 முதல் ஜூன் 1 வரையான அந்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்கும் நிபந்தனையுடனேயே தனது அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.எனவே தேர்தலை நடாத்த அவரது அணி முனைகிறது என கொள்ளலாம். ஆனால் கொரொனா இடர் இயல்பாக தேர்தல் திகதியை பின்கொண்டு சென்றதால் உருவாகியுள்ள புதிய சூழல் அரசியலமைப்பு திகில் நிலையைத் தோற்றுவித்துள்ளன.


கேள்வி:  அச்சத்துடன் தேர்தலுக்கான நகர்வுகளை அரசு முன்னெடுப்பது அரசின் சுயநலமா அல்லது அரசின் பலமா?

பதில்:  கொரொனா இல்லாவிட்டாலும்கூட எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கூட்டணி ஆட்சியமைக்கும் பலத்தை பெறும் அரசியல் சூழ்நிலையே நாட்டில் உள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றில் பெரும்பான்மைக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசிய கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும் இரு பிரிவுகளாக களம் இறங்குகின்றனர் என்பதே இதற்கான பிரதான காரணமாகும். இந்த நிலையில் அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது. கொரொனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார துறை அறிக்கை சாதகமான சமிக்ஞையை காட்டினால் தேர்தலை நடாத்திவிடுவது ஒட்டுமொத்த முடிவைத் தந்துவிடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் உங்னளைப் போன்ற படித்த               அரசியல்வாதிகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு                மறுக்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்:  படிப்பதற்கு பணத்தை செலவிட்டுவிட்டேன். அவை என்னுள் மனித மூலதனமாகவும் ( Human. Capital ) ஐந்தாண்டு பதவி காலத்தின் பின் சமூக மூலதனமாகவும் ( Social Capital ) ஆகவும் மாறி இருக்கிறது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனித மூலதனத்தையோ அவன்பால் சார்ந்திருக்கும் சமூக மூலதனத்தையோ உணர்ந்து கொள்ளும் அரசியல் கலாசாரம் நம் இடையே இன்னும் ஏற்படவில்லை என நினைக்கிறேன். எனது படிப்பு செலவுகளுக்கு தோட்டத் தொழிலாளிகளான எனது பெற்றோரின் உழைப்பும் சிறுவயது முதலான உழைப்பும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. “திலகர் நன்றாக பாராளுமன்றில் பேசுகிறார்” என்று யாராவது சொன்னால், அது அம்மா அப்பாவின் உழைப்பின் விளைச்சல் என அவர்களுக்கே அதனைக் காணிக்கையாக்குவேன். அந்த அம்மா அப்பா போல ஆயிரமாயிரம் அம்மா அப்பாவின் பிள்ளையாக அவர்களுக்கான குரலாக ஒலிப்பதே எனது இலக்கு. கடந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்ட போது அந்த ஆயிரமாயிரம் அம்மா அப்பாக்களும் சகோதரர்களும் சகோதரிகளும் எனக்கு அறுபத்தேழாயிரம் வாக்குகளை வழங்கி ஆசிர்வதித்திருந்தார்கள். அதற்கான நியாயத்தை ( justify ) நான் கடந்த நான்கரை வருடங்களில் வழங்கி உள்ளேன் என நம்புகிறேன். அந்த திருப்தியோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். இந்தமுறை யும் களமிறங்கியிருந்தால் எனக்கான ஆசீர்வாதம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

கேள்வி:  தேசியப் பட்டியலில் தெரிவு செய்வது குறித்து முன்னரே உங்களிடம் பேசப்பட்டதா அல்லது கட்சியே தீர்மானித்து உங்களிடம் அனுமதிக்கோரியதா?

பதில்:  இல்லை. கட்சி மட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஒரு கூட்டம் நடாத்தப்பட்டு அந்த முடிவு எடுக்கப்படவில்லை. மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் பின்னர் தீர்மானிக்கப்படும் என சொல்லப்பட்டபோதும் அவ்வாறு எந்த கூட்டமும் 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வரை நடாத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு தலைமையினால் அறிவிக்கப்பட்டது. அதன்போது கட்சி உயர்பீடத்தையோ நிர்வாக சபையையும் கூட்டுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் கூட்டணி யின் உயர்பீடம் மார்ச் 15 இல் கூடியது. அதிலும் எனக்கு அறிவிக்கப்பட்டதை நானே கூட்டணி உயர்பீடத்துக்கும் அறிவித்தேன். அப்போதைய சூழலில் நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான பெயர் பிரேரணையை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்தக்கூட்டத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் காரணமாக தேசிய பட்டியலிலும் எனது பெயர் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்து அதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பம் இடுவதில் இருந்தும் என்னைத் தவிர்த்துக் கொண்டேன். அப்போதும் தொடர்ந்து கட்சியில் இயங்கும் உடன்பாடு எனக்கு இருந்தது. எனினும் வேட்புமனுவுக்கு முதல்நாள் தலைமை தனிப்பட்ட ரீதியில் எனக்கு உத்தரவாதம் அளித்து எனது இல்லத்துக்கு வந்து அழைத்துச்சென்று மனுவில் கையொப்பம் இடக் கோரியதன் பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் எனது பெயரும் உள்ளது. அதனைப் பெற்றுக் கொடுப்பதை கட்சித்தலைமையும் கூட்டணி உயர்பீடமுமே இனித் தீர்மானிக்க வேண்டும்.எனது கையில் ஒன்றும் இல்லை. ஏனெனில் 2010 இல் நான் நடந்த நாடகத்தின் காட்சிகளில் நான் திரும்பவும் நடிக்கத் தயார் இல்லை.

கேள்வி: உங்களைப் போன்றவர்களை போட்டியிடுவதிலிருந்து            புறக்கணிப்பதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இளையத் தலைமுறையினரின் வருகைகான கதவுகள் மூத்த               அரசியல் தலைவர்களால் மூடப்படுகின்றதாக                          நினைக்கின்றீர்களா?
பதில்:  இளமைத்துடிப்புடைவராக இருக்கவேண்டும், படித்தவராக இருக்கவேண்டும்,
பாராளுமன்றத்தில் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது போலவே பணம்
படைத்தவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்த அரசியல் சூழலில் இருக்கிறது. நான் அதிஷ்டவசமாக அரசியலுக்கு வந்தவனல்ல. திட்டமிட்டே வந்தவன். யாரையும் நட்டப்படுத்தி நான் வரவில்லை. என்னோடு பயணித்தவர்களை இணைத்துக் கொண்டே எனது பயணம் செல்கிறது. என்னிடம் ஒரே கொள்கை. ஒரே கட்சி. எனது போராட்டங்களை அதற்குள்ளேயே நிகழ்த்துவேன். அஞ்சி ஓடமாட்டேன்.

சமூகத்திற்கான அரசியல் ஒன்றை முன்னெடுப்பதில் எதிர்கட்சியுடனான போராட்டத்தை விட உள்கட்சி கட்டமைப்பை கட்டி எழுப்புவதே கடினம் என்பது அரசியல் யதார்த்தம். ஊருக்குள் ஒரு மரணாதார சங்ககம், கலை, இலக்கிய மன்றம், விளையாட்டு கழகம் போன்றவற்றில் கூட இந்த உள் அரசியல் பிரச்சினைகளை பார்க்கலாம்.

இப்போது மலையக அரசியலை கட்சி பேதமின்றி விமர்சிக்கும் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்சியை தொடங்கினால் மலையக மக்களுக்கான தூய்மையான அரசியல் அமைப்பு உதயமாகிவிடும். ஏனெனில் இன்றைக்கு மலையக அரசியலை விமர்சிப்பவர்களே அதிகம் . அதற்கான காரணம் கூட எல்லோரிடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அத்தகைய கட்சி ஒன்றை அவர்களால் ஏன் ஒன்றிணைந்து உருவாக்கிவிட முடியாதுள்ளது. இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை என்பது புரியும். 
எனவே தொழிலாளர் தேசிய சங்க மீள எழுச்சிக்கு வித்திட்டவன் என்ற தகுதியும் தொழிலாளர் தேசிய முன்னணி யின் ஸ்தாபக செயலாளர் என்ற பலமும் என் இடத்தில் உண்டு. அதனடிப்படையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடரும். கதவுகளை மூட நான் அறை அரசில்காரன் அல்ல!  களஅரசியல்காரன்.

( நன்றி : ஞாயிறு தினக்குரல் )



No comments: