உலகச் செய்திகள்


வைரஸுக்கு எதிராக உலகெங்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி சுகாதார அமைப்பு நம்பிக்கை

சொந்த போர்க் கப்பல் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல்

கொவிட்-19: 7 அல்லது 8 சாத்தியமான தடுப்பு மருந்துகள் பற்றி அவதானம்

உலகில் 2ஆவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யாவில் ‘கொவிட்-19’ தீவிரம்

கொவிட்-19: குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் பாதிப்பு

லண்டனில் மிக வேகமாக தணிகிறது கொரோனா!

“சீனாவுடனான உறவை துண்டிப்பேன்” டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை


வைரஸுக்கு எதிராக உலகெங்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி சுகாதார அமைப்பு நம்பிக்கை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 900 க்கும் குறைவாகக் காணப்படும் நிலையில் வைரஸுக்கு எதிரான உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. எனினும் இரண்டாம் அலை தாக்கம் குறித்து கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த உலகளாவிய தொற்றினால் வர்த்தகங்கள் ஸ்தம்பித்து வேலைவாய்ப்புகள் இழந்திருக்கும் சூழலில் அமெரிக்காவின் பிரதான விமானசேவை நெருக்கடிக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக போயிங் தலைமை நிறைவேற்று அதிகாரி எச்சரித்திருப்பது மோசமான பொருளாதார நிலை பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது. 
கொவிட்-19 வைரஸினால் உலகெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 287,000 ஐ தாண்டியுள்ளது. நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை 4.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பல வாரங்களாக இடம்பெறும் முடக்க நிலையுடன் நோய்த் தொற்று வீதம் பல நாடுகளிலும் குறைய ஆரம்பித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
“வைரஸ் தொற்றின் வேகத்தை குறைப்பதில் வெற்றி கண்டிருப்பது நல்ல செய்தியாகும் அது இறுதியில் உயிர்களை காத்துள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில அரசுகள் வைரஸ் பரிசோதனை மற்றும் தடயங்களை கண்டுபிடிப்பதை தீவிரப்படுத்தாமல் குருட்டுத்தனமாக செயற்படும் நிலையில் நோய்ப் பரவலில் இரண்டாம் அலை ஒன்று பற்றியும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சில நாடுகளில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதை உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி நிலைத் திட்டப் பிரிவுத் தலைவர் டொக்டர் மைக் ரயன் சுட்டிக்காட்டினார்.
ஜெர்மனி, சீனாவின் வூஹான் நகர், தென் கொரியா போன்ற இடங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய நாடான அமெரிக்காவில் இந்த வைரஸ் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் எச்சரிக்கைகளை மீறி அண்மைய நாட்களில் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
எனினும் கடந்த திங்கட்கிழமை முடிவின்போது 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் 830 உயிரிழப்புகளே பதிவாகி இருந்தது ஒரு சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவே அந்நாட்டில் 900க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் நோய்த் தொற்றினால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நியூயோர்க்கில் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விடவும் சுமார் 30 வீதம் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.  
வெள்ளை மாளிகையில் முகக் கவசம் கட்டாயம்
இந்நிலையில் கடந்த வார இறுதியில் வெள்ளை மாளிகையில் வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  வெள்ளை மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் பணியின்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் உதவியாளர் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியாகி இருக்கும் நிலையில் அவரை சந்திப்பதை மட்டுப்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“எமக்கு தொலைபேசி மூலம் உரையாட முடியும்” என்று பென்ஸிடம் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். “அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது சோதனையில் தெரிகிறது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர் நிறையப் பேருடன் தொடர்புகொள்கிறார்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் தேர்தலுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதற்கு டிரம்ப் முயன்று வருகிறார். சோதனையை வேகப்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதோடு வைரஸ் தொற்றும் எண்ணிக்கையும் வேகமாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  நாட்டை மீண்டும் திறப்பது அவசியமானதாக இருப்பதாகவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். “எமது நாட்டை மீண்டும் திறப்பதையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலையில் உள்ளூர் கட்டுப்பாடுகளை மீற தமது தொழில்சாலையின் செயற்பாட்டை ஆரம்பிக்கவிருப்பதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மாஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
“உள்ளூர் விதிகளை மீறி டெஸ்லா உற்பத்திகள் இன்று (திங்கள்) ஆரம்பிக்கப்படும். நான் எல்லோருடனும் இருக்கிறேன். யாராவது கைதி செய்யப்படுவதாயின் அது நானாக இருக்க வேண்டும் என்று கேட்கிறேன்” என்று அவர் அறிவித்துள்ளார்.
முடக்க நிலையால் உலகெங்கும் மில்லியன் கணக்கானவர்கள் தொழிலை இழந்துள்ளனர். இதன் பொருளாதாரத் தாக்கம் படுமோசமாக இருக்கும் என்று தொழில் நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்தெழும் ஐரோப்பா
ஐரோப்பாவில் நோய்த் தொற்று வேகம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டு வருகிறது. முடக்க நிலையில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த எட்டு வாரங்களில் முதல் முறையாக பிரான்ஸ் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரிஸின் சம்ப்ஸ்-எலிஸ் பகுதி மீண்டும் உயிர்பெற ஆரம்பித்துள்ளது. மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொறுமையுடன் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.
உலகில் மிகக் கடுமையான லொக்டௌன் செயற்பாட்டை கடைப்பிடித்து வந்த ஸ்பெயினில் மதங்களுக்குப் பின் மக்களுக்கு வெளிப்புற தளங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல முடிந்துள்ளது. எனினும் வைரஸ் அதிகம் பரவி வரும் தலைநகர் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
கிரேக்கத்தில் கடைத்தெருக்கள் மீண்டும் மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக மாறியிருப்பதோடு நெதர்லாந்து தொடக்கம் சுவிட்சர்லாந்து மற்றும் குரோசியா வரை ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் பல வாரங்களின் பின் சிறுவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.  ஆசிய பிராந்தியங்களிலும் வழமையான நிலை திரும்பி வருவதோடு இந்தியாவில் நேற்று ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.  சீனாவின் சங்காய் டிஸ்னிலாண்ட் கேளிக்கை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டிருப்பதோடு ஹொங்கொங்கில் பெரும்பாலான ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சீனா மற்றும் தென் கொரியாவில் மீண்டும் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் சீனாவில் நேற்று புதிதாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்பதோடு தொடர்ச்சியாக 27 நாட்களில் அங்கு எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.  நன்றி தினகரன் சொந்த போர்க் கப்பல் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல்


ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படை மேற்கொண்ட போர் பயிற்சியின்போது தவறுதலாக தமது சொந்த போர் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அந்தக் கப்பல் மூழ்கியுள்ளது.
இந்த கடற்பாதையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈரானின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் கடந்த ஞாயிறு மதியம் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் மற்றொரு போர் கப்பலில் இருந்தே குறித்த போர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
“பயிற்சி இலக்கிற்காக கப்பல் நிறுத்தப்பட்ட வேளை இலக்கிற்கும் கப்பலுக்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் அரச தொலைக்காட்சி அதன் இணைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 

கொவிட்-19: 7 அல்லது 8 சாத்தியமான தடுப்பு மருந்துகள் பற்றி அவதானம்


கொரோனா வைரஸுக்கு எதிரான சுமார் ஏழு அல்லது எட்டு சாத்தியமான தடுப்பு மருந்துகள் முன்னணியில் இருப்பதாகவும் அவற்றின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் முன் கடந்த திங்கட்கிழமை வீடியோ மூலம் விளக்கம் அளிக்கும்போதே உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கெப்ரியேசுஸ் இதனைத் தெரிவித்தார். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு 40 நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் வங்கிகள் ஒரு வாரத்திற்கு முன் 8 பில்லியன் டொலர் நிதி அளிக்க உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இதற்கு மேலும் நிதி தேவைப்படுவதாக கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
“எம்மிடம் சாத்தியமான தடுப்பு மருந்துகள் தற்போது உள்ளன. இவைகளில் சுமார் ஏழு, எட்டு முன்னணியில் உள்ளன. ஆனால் எம்மிடம் நூற்றுக்கும் அதிகமான சாத்தியமாக தடுப்பு மருந்துகள் உள்ளன.
அவைகளில் சிலது பற்றியே அவதானம் செலுத்தியுள்ளோம். அவை சிறந்த பெறுபேறு தரும் என்று நாம் எதிர்பார்ப்பதோடு அந்த சாத்தியமான தடுப்பு மருந்துகளின் பணிகளை சிறந்த திறனுடன் துரிதப்படுத்தியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.  எனினும் அந்த மருந்துகள் பற்றிய விபரங்களை அவர் குறிப்பிடவில்லை. கடந்த ஜனவரி தொடக்கம் “உலக சுகாதார அமைப்பு விலங்கு மாதிரி வடிவம் தொடக்கம் மருத்துவ சோதனை வடிவம் வரை இடையில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து வளர்ச்சியை விரிபடுத்தவும் கண்காணிக்கவும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது” என்றும் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 


உலகில் 2ஆவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யாவில் ‘கொவிட்-19’ தீவிரம்

பிரதமரை அடுத்து புட்டினின் பேச்சாளருக்கும் நோய்த் தொற்று
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 242,000ஐ தாண்டி இருக்கும் நிலையில் அந்நாடு அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் ரஷ்யாவில் மேலும் 10,899 நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்நாட்டில் தொடர்ச்சியாக பத்தாவது நாளாகவும் 10,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் ட்மிட்ரி பெஸ்கொவ்வும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மிகைல் மிசுஸ்டினுக்கு கொவிட்-19 ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் மற்றொரு உயர் அதிகாரி இவர் ஆவார்.
நாட்டின் முடக்க நிலையை தளர்த்தும் அறிவிப்பை ஜனாதிபதி புட்டின் வெளியிட்டு ஒரு நாளிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தொழிற்சாலை மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்கு திரும்பியதோடு, கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு சூழலுக்கு ஏற்ப பிராந்திய நிர்வாகங்களுக்கு புட்டின் சுதந்திரம் அளித்துள்ளார்.
ரஷ்யாவில் உறுதி செய்யப்பட்ட நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2,212 ஆகவே பதிவாகியுள்ளது. நேற்று அந்நாட்டில் மேலும் 96 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசின் பாரிய மருத்துவ சோதனைத் திட்டமே குறைவான உயிரிழப்புக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதியின் பேச்சாளராக இருந்து வரும் பெஸ்கொவ்வுக்கு நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
“ஆம், எனக்கு நோய் தொற்றியுள்ளது. நான் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று அவர் செய்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய பிரதமர் மிசுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது இரண்டு வாரங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. அது தொடக்கம் கலாசார அமைச்சர் ஒல்கா லியுபிமோவா, நிர்மாணத்துறை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது.
எனினும் ஜனாதிபதி புட்டினை ஒரு மாதத்திற்கு முன்னரே தாம் சந்தித்ததாக பெஸ்கொவ் தெரிவித்துள்ளார். தலைநகருக்கு வெளியில் இருக்கும் தமது வாசஸ்தலத்தில் இருந்து புட்டின் தனிமையில் பணியாற்றி வருவதோடு அவரது ஆரோக்கியம் சிறந்த முறையில் பேணப்பட்டு வருவதாக ரஷ்ய அரசு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் ஆறு வாரங்கள் நீடித்த “பணியற்ற நாட்களை’ முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி புட்டி கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் பலரும் பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
நோய்த் தொற்று பெருதும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்த ஜனதிபதி, ஆபத்து தொடர்ந்து நீடிப்பதாக எச்சரித்தார். எனினும் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும் வைரஸ் பரவலை தடுக்க தேவையெனில் உள்ளூர் நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றும் அவர் அனுமதி அளித்திருந்தார்.
ரஷ்யாவில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தலைநகர் மொஸ்கோ இருப்பதோடு, அங்கு நாட்டின் மொத்த நோய்த் தொற்றாளர்கள் மற்றும் மொத்த உயிரிழப்பில் பாதிக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தலைநகர் மீதான முடக்க நிலையை மேயர் செர்கெய் சொபியானின் மே 31 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார். எனினும் நகரின் நிர்மாண மற்றும் தொழிற்துறை பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தின்போது அனைவரும் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடைக்கு, வேலைக்கு அல்லது நாய்களை எடுத்துச் செல்வது தவிர்த்து குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்பதோடு பயணத்திற்கான டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் ஒன்றை பெறுவது கட்டாயமாகும்.
தலைநகர் மொகோவில் 300,000க்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நகர மேயர் முன்னர் கணித்திருந்தார். இது தற்போது உறுதி செய்யப்பட்ட நோய்த் தொற்று சம்பவங்களின் மூன்று மடங்காகும்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை 4.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் மாத்திரம் தற்போது நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.3ஐ விஞ்சியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு காட்டுகிறது. இது வேறு எந்த நாட்டை விடவும் சுமார் ஆறு மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆயிரத்தை விஞ்சியுள்ளது. ஐரோப்பாவில் அதிக உயிரிழப்புக் கொண்ட நாடாக பிரிட்டன் மாறியுள்ளது. பிரிட்டனில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸின் உயிரிழப்பு எண்ணிக்கை ஸ்பெயினை விஞ்சி இருப்பதோடு அது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு மாத்திரமே பின்தங்கியுள்ளது. பிரான்ஸில் புதிதாக 348 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை விடவும் அதிகமாகும்.
எனினும் ஒப்பீட்டளவில் ஐரோப்பாவில் நோய்த் தொற்று வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்த பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
மறுபுறம் முடக்க நிலையை தளர்த்தியதை அடுத்து வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததால் லெபனானில் முழு அளவிலான முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா போன்றே பிரேசிலும் கொவிட்-19 தீவிரம் அடைந்துள்ளது. அந்நாட்டில் 178 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஆறாவது இடத்திற்கு உயிர்ந்துள்ளது.
அதேபோன்று பிரேசிலில் நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை சாதனை அளவுக்கு அதிகரித்து 881 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,400 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இதனை குறைத்து மதிப்பிடும் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ உடற்பயிற்சி மையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்களை மீண்டும் திறக்க முயன்று வருகிறார்.
மற்றொரு தென் அமெரிக்க நாடான கொலொம்பியாவின் லெடசியா நகரில் உள்ள சிறைச்சாலையில் மேற்கொண்ட கொரோன வைரஸ் சோதனையில் 180 கைதிகள் மற்றும் சிறை பணியாளர் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைத் தாக்கம் பற்றி அஞ்சிவரும் சீனா மற்றும் தென் கொரிய நாடுகளிலும் புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக ஏழு வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகின. முந்தைய தினத்தில் அங்கு ஒருவருக்கே நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.
நாட்டின் வட கிழக்கு நகரான ஜிலின் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்து மிக்க பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நகர் மீண்டும் முடக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தென் கொரிய தலைநகர் சோலின் இரவு விடுதிகள் மற்றும் மதுபானக் கடைகளுடன் தொடர்புபட்ட புதிய வைரஸ் தொற்று சம்பவங்களில் மேலும் 26 தொற்றாளர்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் நடுப்பகுதி தொடக்கம் நாள்தோறும் பதிவாகும் நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை 15ஐ விடவும் குறைவாகவே இருந்ததோடு அது ஒரு கட்டத்தில் பூஜ்யத்திற்கு குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


கொவிட்-19: குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் பாதிப்பு
கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் ஒன்று ஏற்படுவதாக கவலை எழுந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் உள்ள பல குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நச்சு அதிர்ச்சி நோய்க்குரிய அறிகுறிகளை இது ஏற்படுவதாக தெரிகிறது.
இந்த நோயினால் குறைந்த எண்ணிக்கையான சிறுவர்கள் மோசமான நிலைக்கு முகம்கொடுப்பதாகவும் சில குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு முகம்கொடுக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டனில் இதனால் சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் இதனை காண முடிவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களிடம் கொரோனா தொற்று சம்பவங்கள் 1-2 வீதம் மாத்திரமே காணப்படுவதோடு மிகக் குறைவான சிறுவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
லண்டனில் மிக வேகமாக தணிகிறது கொரோனா!சீனாவில் ஒரு மாதமாக உயிரிழப்புகள் கிடையாது
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாள் ஒன்றுக்கு 24 பேருக்கும் குறைவானவர்களே தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 2 இலட்சத்து 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்த ஆய்வினை  இங்கிலாந்து பொது சுகாதாரம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இணைந்து  நடத்தின.
 லண்டனில் தினமும் 24 பேருக்கும் குறைவானவர்களே புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு 3.5 நாட்களுக்கும் பாதியாகக் குறைகிறது. ஆரம்ப கட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட லண்டன் இப்போது பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ளது.
 லண்டனில் உள்ள சுமார் 15 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததால்  அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.
இதனால் அவர்களுக்கு மீண்டும் வைரஸ் பரவுவது கடினம்.மேலும் பலர் வீடுகளில் இருந்தே பணி புரிவதால்  வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்கின்றனர்.
இதுவும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இப்படியாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும் பட்சத்தில் ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை அழிக்க முடியும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.
 சீனாவில் கொரோனா தொற்றுக்கு 82,933 பேர் பாதிக்கப்பட்டு, 4,633 பேர் பலியாகினர். தேசிய சுகாதார ஆணையகம் வெளியிட்ட தகவலின்படி சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஜிலினில் உள்ளூர் பரவல் காரணமாக கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக ஏப்ரல் 14ம் திகதி கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக கொரோனா இறப்பு பதிவாகவில்லை.  நன்றி தினகரன் 

“சீனாவுடனான உறவை துண்டிப்பேன்” டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
வைரஸ் பரவல் விவகாரத்தால் சீனாவுடனான உறவு மேலும் பாதிக்கப்படக் கூடுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி சின்பிங்குடன் பேசுவதில் இப்போதைக்குத் தமக்கு ஆர்வமில்லை என்று அவர் குறிப்பிட்டார். சீனாவுடன் தாம் உறவைத் துண்டித்துக்கொள்ளக் கூடுமென்றும் பொக்ஸ் தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் டிரம்ப் கூறினார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தத் தவறிய சீனாவின் செயலால், தாம் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறு நேர்வதற்கு சீனா ஒருபோதும் அனுமதித்திருக்கக்கூடாது என்றார் அவர்.
ஜனவரி மாதத்தில் சீனாவோடு செய்துகொண்ட வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்ட “மை” உலரும்முன், இந்தப் பிரச்சினை தலையெடுத்ததாகவும் டிரம்ப் கூறினார்.
“சீன ஜனாதிபதியுடன் நல்லுறவு உள்ளது, ஆனால் அவருடன் இப்போதைக்கு பேச விரும்பவில்லை. சீனாவுடன் முழுக்க முழுக்க உறவுகளையே துண்டிக்கலாம், நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மொத்தமாக வர்த்தகத்தையே துண்டித்தால் 500 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும்” என்று அந்த நேர்காணலில் கூறியிருந்தார். எனினும் அமெரிக்கா ஒரே அடியாக சீனா உடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது.
காரணம், இன்னமும் அமெரிக்காவின் வர்த்தகத்தில் கணிசமான அளவு சீனாவை நம்பியே உள்ளது. சீனா உடனான உறவு முறிவு அமெரிக்க பொருளாதாரத்தை பயங்கரமாக பாதிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 

No comments: