கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர்பெயர்தலின் வலி சுமந்த வாழ்க்கையின் தரிசனம் !


மார்கழி மாத குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. குடலைகள் முதிர்ந்த நிலையில், பச்சைப்பசேலென்ற நெற்பயிர்கள் காற்றிலே சலசலத்தன. மாலைக்கதிரவன் மேற்குத்திசையில் நின்ற தென்னை மர ஓலைக் கீற்றுகளினூடாக எட்டிப்பார்த்தவாறு ஆழியில் மூழ்கத் தயாராகினான்.  சித்திரவேலாயுதர் கோயிற் குளத்தின் படிக்கட்டிலே நான் உட்கார்ந்து அந்தச் சூழல் பற்றி ஏதேதோ எண்ணி எண்ணி, நினைவு மீட்டுக்கொண்டிருந்தேன்.
மாரிக்குளம். நீர் நிறைந்த குளம். குளக்கரை வரையும் நீந்திவந்த மீனினம் திடீரெனத்தாவித் திரும்பிச்சென்றன. அதனால், என் சிந்தனை இடையிடையே தடைப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். நிறைகுளத்திலே செந்தாமரையும் வெண்டாமரையுமாகப் பூக்கள்.  பரந்து கிடந்த  பச்சை இலைகளிடையே எழுந்து நின்ற பூக்களும், இலைகளின் மீது உருண்டோடிய நீர்த்துளிகளும் என் கண்ணிற் தெளிவாகத் தெரிந்தன. தாமரை இலையில உருண்டோடிய துளிகள் போல என் நினைவுகளும் நிலை இழந்து நின்றன.
குளத்தின் அருகே, மூன்று கரைகளையும் பார்த்தேன். சாயல்  அலரிகள். செந்நிறப் பூக்கள் குலுங்கக் குலுங்க வீசும் காற்றிலே நடனமாடின. அவை,  “போய்வருக போய்வருக  “ என்று பிரியவிடை தருவது போன்ற ஓர் உணர்ச்சி என் மனசில் ஓடியது.
“  ஊரைவிட்டு நான் சென்றபின், இந்தக்கவினுறு காட்சிகளும் இனிய சூழலும்….. “

அதற்கு மேல் என்னாற் சிந்திக்க முடியவில்லை. பிறந்து வளர்ந்த ஊரைவிட்டுப் பெயர்தல் என்றால் எத்துணை உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அப்பொழுதுதான் நான்உணர்ந்தேன்.  கிணற்றடிக்குச் செல்லும் வேளை, வழியிற் கிடந்த காகக்கூடு பற்றிப் பெத்தாச்சி சொன்ன கதையும் நினைவுக்கு வந்தது.
“  தடிச்சுள்ளிகள் பொறுக்கி, காகம் கூடுகட்டும். முட்டையிடும். குஞ்சு பொரித்து, குஞ்சுகள் வளர்ந்ததும் எல்லாமே கூட்டைவிட்டுப்பறந்து எங்கெங்கோ செல்லும். சிலவேளை சில, கூட்டுக்கு வரும். பல  கூட்டைவிட்டுச்சென்றுவிடும். கூட்டைவிட்டு காகம் சென்றபின், காற்றும் மழையும் காலநிலையும் காகக்கூட்டை பெயர்த்து அழித்துவிடும். வெறுங்கூடு விழுந்து சீர்குலையும்.  “
 “ அப்படியானால், நாங்கள் பிறந்து வளர்ந்த குடிசையின் கதியும் வெறுங் காகக்கூண்டின் கதிதானா..?  “
இருந்த இடத்தைவிட்டு நான் மெல்ல எழுந்து சென்றேன். நாங்கள் ஊர் பெயர்ந்து வேறு ஊரிலே வசிக்கச் செல்லப்போகிறோம் என்றவுடன் பெத்தாச்சியின் உணர்ச்சி ஓட்டம் எந்த அளவுக்கு அவரை வேதனைப்பட வைத்திருக்கும் எனக் கற்பனை செய்தேன்.
பிறந்து வளர்ந்த ஊரையும் வீட்டையும் விட்டு வேறு எங்காவது சென்று வாழ்ந்த அனுபவம் இல்லாத எண்பது வயசுப்பெத்தாச்சி, நாங்கள் ஊரைவிட்டுச் செல்லப்போகிறோம் என்று கூறியபோது, கலங்கிய கண்களுடன் கூறியவை என் நெஞ்சில் உதைத்தன.
 “ ஐயோ ராசா, இது நீ பிறந்த மண். நீ வளர்ந்த மண். இது நீ பிறந்த குடிசை. நீ வளர்ந்த குடிசை. இதையெல்லாம் விட்டுப்பிரிந்து செல்வதை என்னாலே பொறுக்கமுடியாது.
 “ நீயும் தம்பிமாரும், வாளியிலே தண்ணீர் காவிச் சின்னக் கைகளால் ஊற்றி வளர்த்த தென்னம்பிள்ளைகளைப் பார். பெற்று வளர்த்த பிள்ளைகள் போல, அவை வளர்ந்து வருகின்றன. இளம் பருவத்திலே,  “தென்னம் பிள்ளை “ என்று நாம் கூறுகிறோம். ஒருவித பாசத்துடன் வளர்க்கும் தாவரம் அது.
 “ இன்றோ, நாளையோ… பாழை வந்து, குரும்பை பிடிக்கும். அதுகள் வளர்ந்து தரும் இளநீரைக் கூட குடிக்கக்கொடுத்து வைக்கமாட்டியள். நில புலனைவிட்டு, வளவு, வயல் ஆகியவற்றைவிட்டு, மாடு, கன்றை  விட்டு சொந்த பந்தங்களை அறுத்து, பரதேசிகள் போல நீங்கள் போறதை நான் எப்படிச் சகிப்பன்…? நீங்கள் போய் வாருங்கள். என்று எப்படி சொல்வன்…? அன்னிய ஊருக்குப்போய், வந்தான் வரத்தான் என்ற வசையோடு சீவிக்கப்போறியல் ராசா!  “
என் பெத்தாச்சி நெஞ்சுருகி இவ்வாறு பேசியது என் மனசை ஏதோ செய்தது. அவர் கூறிய காகக் கூண்டின் கதையும் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. கண்ணெதிரே கிடந்த இராசாங்கத்தின் அழிந்த வீடும் வெறும் வளவும் பெத்தாச்சியின் கருத்துக்களை தெளிந்துகொள்ள, கட்புல சாதனங்கள் போல அமைந்தன.  “ இராசாங்கமும் இப்படித்தான்…. விரைவிலே வருவேன். என்றுதான் சொல்லிச்சென்றவன்…. எத்தனை வருடமாச்சுது….?  “
ஆயினும், அன்றைய ஊர்ப்பெயர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. தொழில் காரணமாக, நான் தினமும் தெல்லிப்பழைக்குச் சென்று வரவேண்டும். என் தம்பிமாரும் தங்கையரும் தினமும்  படிப்பதற்கு யாழ்ப்பாணம் சென்று வரவேண்டும். எங்கள் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஒரு மைல் தூரத்தில்  இருந்தது. காலை ஏழு மணிக்கே வீட்டைவிட்டு நடந்து சென்று ரயில் பிராயணம் செய்தல்வேண்டும். அதனால், சிறிது காலம் கல்லூரி விடுதியிலும் பின்பு நண்பர் ஒருவருடனும் வாழ்ந்தேன். அதற்கான செலவு..? நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. ஏது செய்யலாம்..? என்று எண்ணிப்பார்த்து எடுத்த முடிவுதான்  “ ஊர்ப்பெயர்வு “
பெயர்ந்து செல்வது எங்கே..? தெல்லிப்பழைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே உள்ள ஊர் கோண்டாவில். அங்கு ரயில் நிலையம் உண்டு. அப்புவுக்கு அறிமுகமான வியாபாரத் தொடர்புகளும் இருந்தன. ஆதலால், அது யாவருக்கும் சௌகரியமாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையால்தான் ஊரை விட்டுப்பெயரும் எண்ணம் கருக்கொண்டது.
அன்றைய பெயர்வு எனது தேவை. அத்தேவையை நிறைவு செய்வதற்கு பெயர்வு தவிர வேறு வழி எனக்கு இருக்கவில்லை. நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச்சென்று, தொழில் பார்த்து ஊர் திரும்பி, கல்வீடுகள் கட்டி வாழ்ந்த சிங்கப்பூர் பென்ஷனியர், மலாயன் பென்ஷனியர் சிலர் பற்றியும் பெத்தாச்சிக்குச் சொன்னேன்.
  “ அவர்கள் தாய் தகப்பன் தம்பி தங்கை எல்லோரையும் அழைத்துச்செல்லவில்லை. சொந்த வீட்டை அழியவிட்டுச்செல்லவில்லை. தனியாகச்சென்று திரும்பினார்கள். வேர் அறுத்துச் செல்லவில்லை.  “
இது பெத்தாச்சியின் பதில்.  “ தற்காலிக பெயர்வுதானே…!! “ என்பது எனது எண்ணம். கிடைத்த சொற்ப சம்பளத்துடன் எல்லோரும்  வாழ்வதற்கு அந்தப்பெயர்வு தவிர வேறு வழி எனக்கு இருக்கவில்லை.
 “நான் தனியாக என்றாலும் இந்த வீட்டில் இருந்து, அது அழியாமல் பாதுகாத்து தருவேன்.  “ இவ்வாறு பெத்தாச்சி  கலங்கிய கண்களுடன் சொன்னார்.
அக்கூற்று எல்லோர் நெஞ்சையும் தொட்டுவிட்டது. எனது தம்பி பாலாவும் தம்பி தியாகராசாவும் தாங்கள் பெத்தாச்சியுடன் நாவற்குழியில் இருந்து படிப்பதாகச் சொன்னார்கள். முடிவில் தியாகராசா சில காலம் அங்கு பெத்தாச்சியுடன் வாழ, மற்றோர் எல்லோரும் கோண்டாவில் சென்றோம்.
செல்லும்போது, மனசை நெருடிய பல சங்கதிகளுள் நாவற்குழியிலே நாம் அமைத்த சைவமாணவர் சங்கம் பற்றிய எண்ணமும் கவலை தந்தது. ஏனென்றால், மறைசாராக் கற்றல் அனுபவங்கள் பல பெறுதற்குக் களம் அமைத்த சங்கம் அது. ஒரு சங்கம் அமைத்துப் பயன் பெறுதற்கு  வழிகாட்டியவர் தபால் நிலையா அதிபர் சடாட்சரம்.
 “தம்பி, பள்ளிப்படிப்பு மூலம் பெறுகின்ற அறிவு அவசியம். ஆனால், அது முழுமைபெறுதற்கு சில செயல் அனுபவங்களுந் தேவை. புத்தகப் படிப்பு  அந்த அனுபவங்களைத் தருவதில்லை. அந்த அனுபவம் பெறுதற்குப் பொருத்தமான சந்தர்ப்பம் வேண்டும். கிடைக்காத சந்தர்ப்பத்தை நாமாக ஏற்படுத்துதல் வேண்டும். இளம் வயசிலே, ஊர் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஒத்துழைத்து, பரஸ்பரம் புரிந்துணர்வு பெறவேண்டும்.
நாவற்குழி ரயில் நிலையத்தில் இருந்து வீடு நோக்கிப் பிற்பகலிலே நடந்து செல்லும்போது, ஊர்ப்புதினமும் நாட்டு நடப்புப்பற்றியும் பேசிச்செல்வது வழக்கம். அவ்வேளையில் உதித்த ஞானங்களும் பல. அவற்றுள்                    ஒன்றுதான்  “சங்கம்  அமைத்துப் பயன் பெறும் அந்த எண்ணம். பல நாள்கள் பேசியதன் பெறுபேறாக, எமது ஊரில்  “சைவ மாணவர் சங்கம்  “ ஒன்று உருவாகியது. சடாட்சரம் அவர்களே போஷகராகவும் ஆலோசகராகவும் வழிகாட்டினார்.
தலைவர், செயலாளர், பொருளாளர் எனப் பல பதவிகளையும் பொறுப்பேற்று நடத்தும் அனுபவம் தந்தும், பேச்சு, நாடகம் போன்ற கலைத்துறைகளில் பயிற்சி பெற வாய்ப்பளித்தும், விவாத அரங்கு ஈற்றெழுத்துக் கவிப்போட்டி, போன்ற முயற்சிகளில் ஈடுபட வழிசெய்தும் அச்சங்கம் அமைத்த களம் மிக ஆக்கபூர்வமானது. சுருக்கமாக, பள்ளிப்படிப்பிலே பெறாத பல  “கற்றல் “அனுபவங்களை அச்சங்கம் ஏற்படுத்தித் தந்தது.
ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி, ஆக்க முயற்சியில் ஈடுபட்டு, குழு முயற்சி அனுபவம் பெறவும், சாதகமான மனப்பாங்கு விருத்தியுறவும் முறைசாராக்கல்வி மூலம் அனுபவம் பெறுதற்கு வழிவகுத்தது அச்சங்கம். ஞாயிறு  மாலையில் கைலாம்புடன் சென்று பங்குபற்றிய கூட்ட அனுபவ நினைவுகள், அந்த லாம்பின் சுடர்போல இன்னும் ஒளிர்கின்றன.
எமது கூட்டங்களுக்கு  வருகைதந்து உற்சாகமூட்டி தாமும் பயன்பெற்ற ஊரவர்கள் பலர்.  “ அடுத்த கூட்டம் எப்போது…? அடுத்த நாடக  மேடையேற்றம் எப்போது…?  “ இவ்வாறு ஊரவர் கேட்கத் தூண்டப்பட்ட காலத்திலேதான் நான் ஊர்பெயர்ந்தேன். அதனால் என் மனசு சற்றுச் சலனம் அடைந்தது.
ஊர் பெயர்ந்து சில மாதங்களுக்குள்ளேயே  பெத்தாச்சி கூறிய ஓர் உண்மையை உணரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னை வேறு ஒருவருக்கும் அறிமுகஞ்செய்த அப்புத்துரையர்,   “ இவர் தம்பி, நாவற்குழியின் மகன்  “ என்றார். எனது அப்புவை  “நாவற்குழி  “ என்று  குறிப்பிடுகிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
அளவெட்டிப் பரியாரி, உரும்பராய் மணியம், அச்சுவேலிச் சாத்திரி என்று ஊர்ப்பெயரால் ஆட்களைக் குறிப்பது அன்றைய வழக்கம். அந்த வகையில் நான்  “ நாவற்குழியின் மகனானேன்  “ வீட்டுக்கு வேலியும் வயலும் வரம்பும் ஊருக்கு எல்லையும் வகுத்து உரிமை பாராட்டியவர்கள் நாங்கள். அது யாழ்ப்பாணக் கலாசாரத்தின் ஒரு கூறு. “ யாதும் ஊரே , யாவரும் கேளீர்  “ என்று பேச்சிலே பேசினும் எம் மூச்சிலே அந்த உணர்வு  உயிர்க்கவில்லை.
காலம் அந்த நிலையைத் தகர்த்துவிட்டது. தகர்வதற்கு விடாப்பிடியாக வைராக்கியத்துடன் இருந்தவர்கள் 1995 ஆம் ஆண்டு என்ன ஆனார்கள்..?
           “ சுட்ட வெடியூரைச் சுடுகாடாய் மாற்றுகையில்….
   விட்டகலோம் என்றவரின் வேரறுத்த வேளையிலே
                  நட்ட பயிரைவிட்டு நாற்றிட்ட மேடைவிட்டு
  பட்டிப் பசுவைவிட்டு பால் கறந்த செம்புவிட்டு
          முட்டையிட்ட கோழிவிட்டு மூட்டை முடிச்சுடனே…. “
நட்ட நடுத்தெருவில் நாள்பலவாய் அலைந்தார்கள்! கொட்டும் மழையினிலே கூதலித்துச் சென்றார்கள் ! பட்டினியால் வாடிப் பாதையிலே சாய்ந்தார்கள்.! சொட்டும் குடை நீரைக் குடித்துத் தம் தாகத்தைத் தீர்த்த கதைகேட்டு திகில் அடைந்தோம்.
கண்ணீரில் வார்த்தை சொரிந்துவர வாயடைத்து நின்றோம்!
எந்த நிலையிலும், ஊர்ப்பெயர மாட்டோம் என்று துணிவுடன் ஊரில் வாழ்ந்தவர்கள், பலாத்காரமாக ஊர் பெயர்க்கப்பட்டார்கள். தான் கண்மூடி முப்பது ஆண்டுகளுள் தன்போன்ற கிழங்கள் உட்பட ஏறக்குறைய ஆறு லட்சம் பேர்வரையிலே இப்படிப்  “பரதேசி “  கள் ஆவர்  என்று என் பெத்தாச்சி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்.
காலத்தின் கோலத்தால் ஏற்பட்ட அச்சோகக் கதைகள்  பற்றியும் வேரறுத்து  வீதியில் வீசப்பட்ட எமது இனத்தவர் பற்றியும் என் ஆத்மாவில் உயிர்த்து உணர்வோடும் வேளையிலே, மெளன ராகங்கள் பல என் இதய வீணையின் நரம்புகளை மீட்டு வருகின்றன.
( தொடரும் )







No comments: