ஓரே ஒரு மழை - கவிதை - பாமதி சோமசேகரம்

.

லட்சம் மழைத்துளிகள்
பறக்கும் பந்து போல அசுரக்காற்று
பெருத்த கண்களையொத்த 
நீர்த்துளிகள் 
யன்னல்கள் பூத்தகண்கள்
வாஞ்சையாய் அழைக்கின்றன . 
வேர்த்து கிடக்கும் கண்கள் அவை.
அழ மறுக்கும் கண்கள் அவை.
மழைககுள் கோபம்.
காடுகள் தீப்பற்றி எரிந்த கோபம்.
காற்று மரங்களின் தலையை
பிடித்து கோரமாய் ஆட்டியது.
எங்கே பிஞ்சுப் பறவைகள்என்றழுதது..
பற்களை நற நறவென்று நெரித்து
வீடுகளை முட்டிமோதியது.
இறுதியாக அது எதையோ 
பேச விரும்புகிறது.

மனிதர்கள் எல்லோரும் ஒளிந்து 
கொண்டார்கள் கோழைகள்..
வீட்டின் கூரைகள் 
மூடப்பட்ட சவப்பெட்டிகள் போல 
மழையில் மெளனமாக நனைந்தன.
நான் மட்டும் எப்படி 
வெளியே வந்தேன்.
இப்போது மழையானேன்.
ஏரிகளின் எல்லைகளை உடைத்து 
ஓடினேன்.
மண்ணை தன்னில் 
சுமந்துகொண்டோடிய
வெள்ளத்திடம் மறக்காமல் கேட்டேன்
இப்போது இது யார் தேசமென்று..
வாகனங்கள் வரும் தெருக்களில் 
நின்று கைகளை அசைத்து 
நர்த்தனமாடினேன்.


அடர் காட்டின் நிலங்களை 
மூடியிருந்தவேர்களை 
விரல்களால்தொட்டு பரிசித்தேன். 
பறக்கும் மழைத்துளிகளின் 
இறகுகளை முத்தமிட்டேன்
மழை பாடியது காற்றின் பாடலை 
அலைகளின் பாடும் அதே ஓசை .
வெள்ளைக் கடலொன்று
அலைகளை எறிந்துவிட்டு காற்றில் 
ஏறி மிதக்கின்றது
மழையென்றே.
எங்கு ஒளிந்து கொண்டாய் 
என் நூற்றாண்டு காதலனே
வெளியே வா..
காற்றில் மிதக்கின்ற கடல் போல 
நாமும் மழையில் நனைவோம் .
மழை பாடும்
பிரபஞ்ச ஆத்மாவின் பாடலை
சேர்ந்தே இசைப்போம்.
மழைத்துளிகளால் நனைந்த
நம் உடல்களை பூமியின் நிலத்தில் 
விதைப்போம்
நாளை
நானும் நீயும் 
ஒரு பச்சை வனமாவோம்
பறவைகளைச் சுமப்போம்
காட்டுத் தீயை விழுங்குவோம்
செந்தீயில் மறுபடியும் மறுபடியும்
பல நிலங்களாக 
வானத்தைப் பார்க்க உயிர்ப்போம்
பூமியின் மண்ணை எம் மூச்சில்சுமப்போம்...
இப்போதே பறந்து வா என்னுடன்..

No comments: