மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 36 முருகபூபதி



ரு காலத்தில் அந்த சித்திவிநாயகர் கோயிலின் பரிபாலன சபையிலும் அங்கம் வகித்தவர்தான் சண்முகநாதன். இரண்டு வருட  இடைவெளிக்குப்பின்னர் இப்போது இங்கே தரிசனத்திற்கு வந்துள்ளார்.
சித்திவிநாயகரின்  தரிசனத்துக்காக இந்த சித்திரா பௌர்ணமியன்று   தான் இங்கே  வரவில்லை என்பது அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.
இடது பக்கமிருந்த கோயில் கணக்கப்பிள்ளையின் அலுவலக அறைக்குச்சென்று, எப்போதோ ஊரில் இறந்துபோன தாயாரின் பெயரில் அர்ச்சனை செய்வதற்கு பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றார்.
சண்முகநாதன் முன்னர் நிகும்பலையூரில் வாழ்ந்த காலத்தில் இந்த நடைமுறையிருக்கவில்லை. பக்தர்கள் நேரடியாக அய்யரிடம் பணம் கொடுத்தே பெயர்  - நட்சத்திரம் -  ராசி விபரம் சொல்லி  அர்ச்சனை செய்து பிரசாதம்  வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு போனார்கள்.
பரிபாலனசபைகளில் ஆலய நிருவாகத்தில் நவீன மாற்றுச்சிந்தனைகள் வந்தபின்னர், உலகெங்கும் இந்த பற்றுச்சீட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது.  அதனால் ஆலயங்களில் கணக்குப்பிள்ளை உத்தியோகமும் வரவாகியிருக்கிறது.
இடப்புறமாக கோயிலைச்சுற்றிக்கொண்டு சண்முகநாதன் சென்று வலது புறம் திரும்பி  வணங்கியவாறு வருகையில் எதிர்ப்பட்ட முருகன் - வள்ளி – தெய்வானை சமேதராக இருக்கும் சிறிய மண்டபத்தின் முன்னால் கற்பகம் ரீச்சர் வணங்கிக்கொண்டிருப்பதை கண்டார்.
மனதில் இனம்புரியாத பதற்றம் வந்து. உடலும் வியர்த்தது.
அருகில் சென்று “  ரீச்சர்… வணக்கம்.  “  என்றார்.
கற்பகம் திரும்பிப்பார்த்து,  “ வணக்கம்  “ என்று மாத்திரம் சொல்லிவிட்டு முகத்தை முருகனை நோக்கி திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.
இரண்டு பெண்டாட்டி முருகனிடம் இந்த மனுஷன் என்ன வேண்டுதலோடு வந்திருக்கிறது?  என்றும் மனதில் நினைத்தாள்.
முகத்தை திருப்பிக்கொண்டவளின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? அவளது   புறக்கணிப்பு சண்முகநாதனுக்கு ஏமாற்றமாகியது.
 “ என்ன ரீச்சர்… இன்னுமா கோபம் தணியவில்லை  “ என்று இறைஞ்சுமாப்போன்று கேட்டார்.

“  கோயிலுக்கு வந்தால் சாமியை கும்பிடுங்கோ… அதுக்குத்தான் இங்கே வாரது  “ என்று வெடுக்கென பதில் சொல்லிவிட்டு, எட்டி நடந்து கோயிலின் மூலஸ்தானத்தின் முன்பக்கம் வந்தாள் கற்பகம்.
அவளது கண்கள் தனக்குத் தெரிந்த வேறு யாராவது வந்திருக்கிறார்களா…?  எனத் தேடத்தொடங்கியது.  ஒரு மாணவி தென்பட்டாள். சண்முகநாதனைத் தவிர்ப்பதற்காக அவளிடம் சென்றாள்.
“  ஸ்கூல் இல்லை என்பதற்காக வீட்டில் படிக்காமல் இருக்கிறாயா..? ஓகஸ்டில் ஏ. எல். சோதனை வருது தெரியும்தானே..?  “ என்றாள்  கற்பகம்.
“  ஓம்… மிஸ் படிக்கிறன்.  இன்றைக்கு எனக்கு பிறந்த தினம். அதுதான் வந்தேன் மிஸ்.  நீங்கள் எப்படி இருக்கிறீங்க… இப்போது  நீங்கள்  மங்களேஸ்வரி  மிஸ் வீட்டிலா இருக்கிறீங்க..?  அம்மா சொன்னாங்க. “  என்றாள் கமலவேணி என்ற அந்த மாணவி.
 “ ஓம் வேணி.  கொஞ்சநாட்களுக்குத்தான்.  பிறகு முன்பிருந்த…. உமக்குத் தெரியும்தானே  அந்த முன்வீடு, அங்கே போய்விடுவேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  “ கற்பகம் அந்த மாணவியின் தலையில் வலது கரம் வைத்து ஆசீர்வதித்தாள்.
அம்மாணவி, சடாரென கற்பகத்தின் தாழ் பணிந்து வணங்கினாள்.  கற்பகம் அவளது  நெற்றியில் திருநீறு தடவி தலையில் உச்சிமோந்தாள்.
அந்தக்காட்சியைப் பார்த்ததும் சண்முகநாதனுக்கு  மேலும் பதற்றம் அதிகரித்தது.
இவ்வாறு வணங்கப்படவேண்டிய ஒரு ஆசிரியையிடமா தான் அன்று அவ்வாறு சில்மிஷம் செய்யநேர்ந்தது. கற்பகத்தின் முகத்தை ஏறிட்டுப்பார்க்கவே மனம் கூசியது.
 “ போயிட்டு வாரன் மிஸ்  “ என்று அந்த மாணவி விடைபெற்றபோது,   “ நல்லாப்படி.  ஏதும் தேவையென்றால் மங்களேஸ்வரி மிஸ் வீட்டை வா. சரியா..? அம்மாவை  கேட்டதாகச்சொல் என்ன…?  “  கற்பகம் விடைகொடுத்துவிட்டு அருகில் வந்துகொண்டிருந்த சண்முகநாதனை பார்த்தாள்.
 ‘ உனது தரிசனத்திற்குத்தானே இங்கே வந்தேன்  ‘ என்ற ஏக்கப்பார்வையுடன் நோக்கிய அவரைப்பார்த்ததும் கற்பகத்திற்கு அவர் மீது  அனுதாபம் தோன்றியது.
மென்மையாக முறுவலித்தாள். அவர் பற்கள் தெரிய சிரித்தார். தங்கப்பல் தெரிந்தது.
அருகே வந்து “  என்னை மன்னித்துக்கொள்ளும்.  அதையெல்லாம் மறந்திட்டு வீட்டுக்கு வாரும்.  எல்லோரும் வீட்டில் நிக்கினம்.  அபிதாவிடத்தில்  மத்தியானச்சாப்பாட்டை உமக்கும் சேர்த்துத்தான் சமைக்கச்சொல்லிவிட்டு வந்தனான்.  வாரும்… என்ன…. இன்றைக்கு சித்திரா பௌர்ணமி  “ என்றவரை பார்த்து ,   “ அபிதாவும் வரச்சொன்னாள்தான். வாரன். நீங்கள் போங்கோ… நான் அய்யர் அம்மாவுடன் பேசிவிட்டு வாரன்  “ என்று கற்பகம் திரும்பினாள். அந்த வார்த்தை அவருக்கு இதமாகியது.
கோயிலில் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள்தான் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.  அய்யர் பூசையை முடித்துக்கொண்டு வந்து சண்முகநாதனிடம் பேச்சுக்கொடுத்தார்.
 “ அய்யா வணக்கம்.  உங்களை இங்கே நான் முன்னர் பார்த்ததில்லையே  “ என்று  தொடங்கிய அய்யரிடத்தில் தனது லண்டன் வாழ்க்கையையும் முன்னாலிருக்கும் வீடு தன்னுடையதுதான் என்றும் ஊரில் இருக்கும் கோயில் கும்பாபிஷேகத்திற்கென புறப்பட்டு வந்து ஊரடங்கு உத்தரவினால் போகமுடியாதிருக்கும் ஏமாற்றத்தையும் சொல்லத் தொடங்கினார்.
அய்யர் கிரகங்களின் பார்வை பற்றி ஏதோ சொல்லி, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமைக்கு சோதிட ரீதியில் பேசத்தொடங்கினார்.
தான் கற்பகத்தின் பார்வைக்காக வந்திருக்கும் வேளையில், இந்த அய்யர் கிரகங்களின் பார்வை பற்றிச்சொல்லத் தொடங்கியதும் சண்முகநாதனுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
 “ என்னதான் ஊரடங்கு வந்தாலும்,  பிள்ளையாருக்கு ஆறுகாலப்பூசை செய்யாமல் விட ஏலுமா… சொல்லுங்கோ. இன்றைக்கு சித்திரா பௌர்ணமி. கொஞ்சம் சனம் வரும் என்றுதான் எதிர்பார்த்தோம்.  எல்லாம் வீட்டிலிருந்து ரீவியில்  பழைய சுப்பர் சிங்கர் பார்க்கலாம்.  பட்டிமன்றம் கேட்கலாம். இங்கே நானும் பிள்ளையாரும் அவர்ட குடும்பத்தினரும்தான். கொரோனோ போய்த் தொலையவேண்டும் என்று கூட யாரும் வந்து அர்ச்சனை செய்வதாக இல்லை சேர்… என்னைப்பாருங்கோ…. நானும் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப்  போலத்தான். நான் என்ன முகக்கவசம் போட்டுக்கொண்டா நிற்கிறன்.  அதனைப்போட்டால் நான் சொல்லும் மந்திரம் இறைவனுக்கு எப்படி கேட்கும் சொல்லுங்கோ..?   “  அய்யர் தொடர்ந்தார்.
  ‘ இத்தனை நாட்கள் பேசுவதற்கு ஆள் கிடைக்காமல் இருந்திருப்பார் போலும்  ‘ சண்முகநாதன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
அந்த உரையாடலை வெட்டுவதற்காக,  “ அய்யா,  மூலஸ்தான பூசை முடிந்ததுதானே…இனி அர்ச்சனை செய்யலாம்தானே.. என்ரை மனைவிபேரில் செய்யவேண்டும் “  எனச்சொல்லியவாறு கணக்கப்பிள்ளை தந்த பற்றுச்சீட்டை நீட்டினார்.
அய்யரும் தோளில் தவழ்ந்த சரிகை துப்பட்டாவை சரிசெய்துகொண்டு,  அந்தச்  சீட்டை வாங்கியவாறு ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு மூலஸ்தானத்தின் உள்ளே சென்றார்.
சண்முகநாதன், வலது புறம் சற்றுத்தள்ளி அய்யர் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் கற்பகத்தை கடைக்கண்ணால் பார்த்தவாறு அய்யரை பின்தொடர்ந்து சென்று, மூலஸ்தானத்திற்கு வெளியே நின்று,  தலைக்கு  மேல் கைகளைத்தூக்கி ஒன்றிணைத்து பக்தி சிரத்தையோடு  “ பிள்ளையாரே பெருமானே…  “ என்று வணங்கினார். தோப்புக்கரணம் போட்டு, நெற்றியின் இருபுறத்திலும் குட்டிக்கொண்டார்.
அனைத்தும் அந்த பிள்ளையாருக்காக அல்ல  என்பதும் அவருடைய மனச்சாட்சிக்குத் தெரியும்.  கோயில் சந்நிதியில் கற்பகத்துடன் பேசுவதற்கு கிடைத்த  சந்தர்ப்பத்திற்கு அபிதாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
அவருக்கு நெஞ்சிலிருந்த பெரிய பாரம் முற்றாக குறைந்து மனதின் இறுக்கம் இளகிய  உணர்வு வந்தது.
அபிதாவுக்கு சொன்னவாறு ஒரு மடிக்கணினி வாங்கிக்கொடுக்கத்தான் வேண்டும்.
சுபாஷினி,  வீட்டு  வாசலிலிருந்து சமையலறைக்கு ஓடிவந்தாள்.  அடுப்பிலிருந்த பருப்புக்கறியின் சுவையை பார்ப்பதற்காக ஒரு கரண்டியில் கிள்ளிக்கொண்டிருந்த அபிதாவிடம் வந்து,   “ வாங்கோ… வாங்கோ… ஆலாத்தி தட்டம் எடுங்கோ…. “ என்று வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள் சுபாஷினி.
அபிதாவுக்கு புரிந்துவிட்டது.  “  பிளீஸ் போதும் போதும் சும்மா இரும்  “ கண்களால் கெஞ்சிக்கண்டித்தாள்.
 “ எப்படி அபிதா… எப்படி சுபா… எங்கே மஞ்சுளா, ஜீவிகா… எப்படி பொழுது போகுது.  என்ன அபிதா உன்ர சமையல்  வாசம் வாசல் வரையில் தூக்குது  “ கற்பகத்தை தொடர்ந்து சண்முநாதன் வந்து, கோயிலில் கிடைத்த தேங்காய், பழம், பூ, பிரசாதம் அடங்கிய காளாஞ்சியை மனைவியின் படத்திற்கு முன்னால் வைத்து வணங்கினார்.
  ‘இனி இந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலை இல்லை  ‘ என்று அபிதா மனதிற்குள் சிரித்தாள்.
இதேபோன்று மஞ்சுளா –  தாயின் பிணக்குகளையும் தீர்த்துவிடவேண்டும். அது தீர்க்கக்கூடியதா..?
“  அபிதா… ரீச்சருக்கு ஏதும்  குடிக்கக் கொடு. சமையல் முடிஞ்சுதா…?   “ சண்முகநாதன் கேட்டதும்,   “ இன்னும் ஒரு கறிதான் பாக்கி அய்யா. பதினைந்து நிமிடம் பொறுங்க.. “ என்றாள் அபிதா.
குளியலறையிலிருந்து ஜீவிகாவும் மஞ்சுளா தனது அறையிலிருந்தும் வெளிப்பட்டு, கற்பகம் ரீச்சரை அணைத்துக்கொண்டனர்.  எங்கே தானும் அணைக்காதுவிட்டால் நாகரீகம் இல்லை எனக்கருதிய சுபாஷினியும் சம்பிரதாயத்திற்கு அருகில் வந்து கற்பகத்தின் தோளைத் தொட்டு,  “ என்ன ரீச்சர் எங்களை எல்லாம் மறந்திட்டீங்களா… உங்கட செமினார் என்னாச்சுது…? எனக்கேட்டாள்.
 ‘ இவள் தெரிந்துதான் கேட்கிறளா..? தெரியாமல்தான் கேட்கிறாளா..?  ‘ சுபாஷினியன் நையாண்டிக்குறும்பை அலட்சியம் செய்தவாறு,  “  உந்த ஊரடங்கில் என்ன கண்டறியாத செமினார். இந்த நீண்ட விடுமுறையில் யாழ்ப்பாணம் செல்ல முடியாமல் தவித்துப்போனேன். நீர் செமினார் பற்றிக்கேட்டு எரிச்சல் மூட்டுகிறீர்…சரி.. போகட்டும்.  எப்படிப்போகுது பொழுது….?  “ கற்பகம் ஒவ்வொருவர் முகங்களையும் பார்த்தவாறு கேட்டாள்.
நீண்ட நாட்களுக்குப்பின்னர் அனைவரும் ஒன்றுகூடியிருக்கும் இந்தப்பொழுதுக்காக காத்திருந்தவள் அபிதா. அவள் சமைத்து வைத்திருந்தவற்றை தனிதனிப்பாத்திரங்களில் எடுத்து மேசையில் பரிமாறுவதற்கு சுபாஷினி உதவினாள்.
“  என்ன மெடம்,  ஒரு மாதிரியா சமாதான நீதிவான் வேலை பார்த்திட்டீங்க… என்ன… இதுபோல், மஞ்சுளா – அவட அம்மாவின்ர பிரச்சினையையும் தீர்த்துவிடுங்கோ… உங்களுக்கு  சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறேன்  “ மெதுவான குரலில், அபிதாவின் இடையில் இடித்துச்சொன்னாள் சுபாஷினி.
 “ உமக்கு நக்கல் சுந்தரி என்று ஒரு பட்டம் சூட்டலாமா..?  “ அபிதாவும் சுபாஷினியின் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
 “ இனி என்ன ரீச்சர் இனி இங்கேதான் வந்துவிடுவாவோ… ஏதும் உங்களிடம் சொன்னாவா…?  “  சுபாஷினி மெதுவாகக் கேட்டாள்.
 “ நான் என்ன கொண்டோடி சுப்புலட்சுமியா..? இங்கத்தைய கதையை அங்கேயும், அங்கேத்தைய கதையை இங்கேயும் சொல்வதற்கு. சும்மா இரும் சுபா. எனக்கென்ன தெரியும்.   “
 “ அபிதா… எனக்கு ஒரு  பாட்டு நினைவுக்கு வருது.  கங்கைக்கரை ஓரம் கன்னியர்கள்  கூட்டம் கண்ணன்  நடுவினிலே…எப்படி இருக்கு..?  “
அபிதா, அவளை அடிக்குமாப்போல் கரண்டியை தூக்கினாள்.
ஜீவிகா எல்லோரையும் சாப்பாட்டு மேசைக்கு அழைத்தாள். 
அமர்ந்ததும் அபிதா பரிமாறினாள்.
 “ அபிதா..? உம்முடைய விசேட மிளகு ரசம் இருக்கிறதா..?  இருந்தால் ஒரு கப்பில் தாரும்.  “ கற்பகம் கேட்டாள்.
“  ஓம் ரீச்சர், உங்களுக்கில்லாமலா… நீங்கள் வருவீங்கள் என்று தெரிந்துதான் ரசமும் வைத்தேன் .   “
மஞ்சுளாவும் சுபாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்தப்பார்வையில்,  ‘ இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது..?  ‘ என்ற கேள்விக்கணை தொங்கிக்கொண்டிருந்தது.
கொரோனாவுடன்  சித்திரா பௌர்ணமியும் வந்து  அனைவரையும் ஒரு மேசையில் கூடவைத்திருக்கும் மாயத்தை அபிதா மனதிற்குள் வியந்தாள்.
 “ நாளைக்கும் ஊரடங்கு தளர்த்துவாங்கள்தானே ஜீவிகா. உன்னுடைய ஒஃபீஸிற்கு கோல் எடுத்து கேட்கிறாயா…?  “ சண்முகநாதன் கேட்டார்.
 “ ஏன்… பெரியப்பா… ஊருக்குப்புறப்படும் எண்ணம் வந்துவிட்டதா..? ரயில் ஓடும் என்றுதான் நினைக்கிறன்.  ஆனால், இன்னமும் நிச்சயம் இல்லை. “ 
 “ அதற்கில்லை.  நாளைக்கு வௌியில் கடைத்தெருப்பக்கம் ஒருக்கா போய்வரவேண்டும். நீயும் வரவேண்டும்… என்ன வருவாய்தானே..? “  
 “ ஏன் பெரியப்பா…? “ 
“ அபிதாவுக்கு ஒரு பொருள் வாங்கவேண்டும். நீ வந்தால், பார்த்து  தெரிவுசெய்வாய். அதுதான் கேட்டேன்.  “ அபிதா உட்பட அனைவரும் சண்முகநாதனின் முகத்தை பார்த்தனர்.
“  என்னய்யா… என்ன வாங்கப்போறீங்கள் அய்யா….? எனக்குத்தான் இங்கே எல்லாம் இருக்கிறதே….! ஏதும் தேவையென்டால், ஜீவிகா அம்மா வாங்கித்தருவாங்க…  “
 “ இல்லை… இல்லை… நான் உனக்கு வாங்கித்தரவேண்டும் என்று தீர்மானித்ததுதான்… ஒரு லப்டொப். மடிக்கணினி.  எனது அன்பளிப்பு.  “ 
அபிதா வாய் பிளந்தாள்.
( தொடரும் )




No comments: