அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 14 - முகவீணை


முகவீணை – காற்றுக்கருவி
பெயரை வைததுப் பார்த்தால் இது, வீணையைப் போன்ற தந்திக்  கருவியாக தோன்றலாம். ஆனால், இது துளைக்கருவி. இன்று புழக்கத்தில் இருக்கும் பாரி நாதஸ்வரத்தின் ஆதிவடிவம். பொதுவாக இசைக்கருவிகளின் நீளம் கூடக்கூட, சுருதி குறைந்து போகும். அவ்வாறு, முகவீணையின் சுருதியைக் குறுக்கி, நீளத்தைப் பெருக்கி உருவாக்கப்பட்டதே திமிரி மற்றும் பாரி நாதஸ்வரங்கள் என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள். 1.2 அடி நீளமே கொண்ட இந்த இசைக்கருவி வீணைக்கு இணையாக நாதம் பேசக்கூடியது. வீணையைப் போல நாதமுகம் கொண்டதால் இது முகவீணை.

முகவீணையின் பின்புறம் உள்ள அனசு மா, பலா, வேம்பு போன்ற மரங்களில் செய்யப்படுகிறது. நீளமான தண்டுப்பகுதி செய்ய ஆச்சா மரம் தேவை. ஆச்சா என்பது கருங்காலி மரத்தில் ஒருவகை. அம்மரத்தை வெட்டி, 50 ஆண்டுகள் கடந்த பிறகே பயன்படுத்த முடியும். நன்கு நீர்வற்றிப்போன மரங்களே முகவீணை செய்யத் தகுந்தவை. ஊதும் பகுதிக்கு சீவாளி என்று பெயர். இது காவிரிக்கரையில் விளையும் ஒருவித நாணல் மூலம் செய்யப்படுகிறது. பக்க சுரமற்ற இக்கருவிக்கு தண்டுப்பகுதியான உலவில் 8 துவாரங்கள் உண்டு.

பெருமாள் கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டின்போது, ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி போன்ற ராகங்களை முகவீணை மூலம் இசைப்பார்கள். இதமான இசை, நித்திரையில் சொக்கிக்கிடக்கும் மக்களை காற்றாக வருடித் தாலாட்டும். சில சிவத்தலங்களிலும், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் இந்த இசைக்கருவி வாசிக்கப்பட்டது. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களே இக்கருவியையும் வாசிப்பார்கள். உயர்ந்த சுருதியையும் லாவகமாக வளைக்க முடியும் என்பதால் முகவீணையை நாட்டிய நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள்.


திருக்குடந்தை ஆராவமுதன் கோவிலில் முகவீணை முக்கிய இடம்பெற்றுள்ளது. ஆண்டு பெருவிழாவில் திரும்பும்கால் – வாகன மண்டபதில் இருந்து ஆஸ்தானம் சேரும் நேரத்திலும், பகல் பத்து, இராப்பத்து விழாவின் திரும்பும்காலின் பொழுதும் நாதசுரம், தவில் நிறுத்தபட்டு முகவீணை இசைக்கப்படுகிறது என்கிறார் இத்தலத்தின் நாதசுர கலைஞர் திரு கலியமூர்த்தி அவர்களின் மகன் முனைவர் திரு ஸ்ரீனிவாசன் கலியமூர்த்தி அவர்கள். திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் மெல்பர்ன் அருள்மிகு வக்ரதுண்ட பிள்ளையார் கோவிலில் நாதசுர கலைஞராக உள்ளார். இவர் இளமையில் திருக்குடந்தை ஆராவமுதன் கோவிலில் இராப்பத்து ஒன்பதாம் நாளில் இசைத்த முகவீணை(தோடி ராகம்) காணொலியை நமக்காக பகிர்ந்துள்ளார்(காணொளி பகுதியில் உள்ளது). மிக்க நன்றி. இவர்கள் வைத்துள்ள பாரம்பரிய முகவீணை முழுவதும் வெங்கலத்தால் செய்தது என்று ஆச்சர்யம் ஊட்டுகிறார். இதன் மூலம் முகவீணை ஒரு காலத்தில் உலோகத்தாலும் செய்யப்பட்டது என்று அறிகிறோம். நாம் வாழும் இந்த ஆஸ்த்ரேலிய நாட்டிலும் ஒரு முகவீணை கலைஞர் இருப்பது நமக்கு பெருமை. இக்கருவியையும் கலையையும் நமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க ஒரு நல்ல வாய்ப்பு.
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் முகவீணை இசைக்கப்படுகிறது.   மேலும் கோடை உற்சவம், வசந்த உற்சவம் ஆகிய விழாக்களிலும் இசைக்கப்படுகிறதாம். ஸ்ரீபெரும்புதூர் போன்ற கோயில்களில் முகவீணையின் இடத்தை கிளாரிநெட் பிடித்துக் கொண்டது சென்னையின் பல பெருமாள் கோயில்களிலும் இதே நிலைதான்.

மயிலை கபாலீசுவரர் கோவிலில் கலியபெருமாள் என்ற இசைக் கலைஞர் முகவீணையை வாசித்து வருகிறார். திருமெய்ஞானம் சண்முகசுந்தரம் பிள்ளை என்பவரிடம் 10 ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற இவர், மயிலாப்பூரில் பங்குனிப் பெருவிழாவின் இறுதி நாளன்றும், சித்திரையில் நடக்கும் வசந்த விழாவிலும் முகவீணை வாசிக்கிறார். பங்குனிப் பெருவிழாவின் இறுதி நாளில் கொடியிறக்கத்திற்கு முன்பாக கைலாய(ராவண) வாகனத்தில் இறைவனும், அம்மனும் வீதியுலா நடக்கும். இது மவுனோற்சவம் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது இந்த விழாவில், நாகசுரம், தவில் என எந்த வாத்தியமும் இடம் பெறாது. இவற்றிற்குப் பதிலாக முகவீணை மட்டும் வாசிக்கப்படும். வசந்த விழாவில், கோவிலுக்குள் செயற்கையாக அமைக்கப்படும் சிறிய குளத்தை சுவாமியும், அம்மனும் வலம் வருவர். மொத்தம் 5 சுற்று வலங்களில் ஒரு சுற்றில் முகவீணை வாசிக்கப்படும்.

முகவீணை சுதி அதிகம் என்பதால் அதை வாசிப்பது மிகவும் கடினம். வட தமிழகத்தின் தொன்மையான நிகழ்த்துக்கலை வடிவமான தெருக்கூத்தில் முகவீணை முக்கிய பங்கு வகிக்கின்றது. பின்னிரவில் தொடங்கி விடிய விடிய நடைபெறும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பலமணிநேரம் முகவீணை கருவியை ஒரு கலைஞரே இசைத்து நிகழ்த்துவது வழக்கமாக உள்ளது. இக்கலைஞர்களின் உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கின்றதா என்றால் அது சந்தேகமே. தெருக்கூத்துகளில் முக்கிய கருப்பொருளாக இருப்பது மகாபாரதம், வள்ளிதிருமணம்கர்ணமோட்சம், மாரியம்மன் வரலாறு, உருத்திர வன்னியன் அவதாரம், காத்தவராயன் கதை, அரிச்சந்திரன் கதை, செல்லியம்மன் கதை, வல்லாளகண்டன் வதை ஆகியவை ஆகும். வடதமிழகத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில்களில் நடைபெறும் 18 நாள் பெருவிழாவில் தெருக்கூத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. மகாபாரதம் முழுமையும் 18 நாட்கள் நடித்துக் காட்டுகிறார்கள். தெருக்கூத்து கலைஞர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது திரௌபதி அம்மன் கோவில்களும் மற்ற கிராமிய  தெய்வங்களின் திருவிழாக்களாகும். மேலும்பாவைக்கூத்துபொம்மலாட்டம், கட்டைக்கூத்து நிகழ்ச்சிகளிலும் முகவீணையை பயன்படுத்தினார்கள். இன்று அக்கலைகளும் அழிவின் விளிம்பில் இருப்பதால், இதன் பயன்பாடு  அருகிப்போய் உள்ளது. சில இடங்களில், துக்க வீடுகளில் முகவீணை வாசிக்கப்படுகிறது.

தூசி திரு சொ.சந்திரன், தெள்ளார் திரு பச்சையப்பன் ஆகியோர் தற்காலத்தில் இருக்கும் மூத்த முகவீணை கலைஞர்கள். திரு சந்திரனின் தந்தை பிரபல முகவீணைக் கலைஞர் சொக்கன். அவரிடம் இசை பயின்ற சந்திரன், காஞ்சிபுரத்தை அடுத்துள்ள புஞ்சை அரசந்தங்கல் கட்டைக்கூத்து குருகுலத்தில் முகவீணை ஆசிரியராகப் பணியாற்றி ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சியளித்து எண்ணற்ற முகவீணைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார். இவரின் பிள்ளைகள் இருவரும் இக்கலையை கற்கவில்லை.

முகவீணை கருநாடக மாநிலத்தில் முகவீணா என்று அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட கோவில்களிலும் புழக்கத்தில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவில் நாள்தோறும் முகவீணையும் நகராவும் இசைக்கப்படுகிறது. இதற்கென்றே அங்கு நகரா மண்டபம் உள்ளது.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டைதான் முகவீணையின் உற்பத்தித்தலம். இங்கு ஐந்து குடும்பங்கள் பல தலைமுறைகளாக நாதஸ்வரம், முகவீணை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். இப்போது பலர் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். ‘‘நாலு தலைமுறையா முகவீணை செய்றதுதான் எங்க தொழில். எங்க தாத்தா காலத்தில வெளிமாநிலத்தில இருந்து எல்லாம் முகவீணை வாங்க வருவாங்க. இப்போ திருப்பதி மாதிரி சில பெரிய கோயில்கள்ல மட்டும்தான் வாசிக்கிறாங்க. ஷோகேஸ்ல வச்சுக்கிறதுக்காக அப்பப்ப யாராவது வந்து வாங்கிட்டுப் போறாங்க’’ என்று வருந்துகிறார் இந்தத் தொழிலில் இருக்கும் குணசேகரன் ஆசாரி.

முகவீணையை விட சற்று நீளமானது கட்டைக்குழல். தென் தமிழ்நாட்டில் குறிப்பாக திருச்செந்துர் வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ளது. கட்டைக்குழலின் அனசுப்பகுதி வெண்கலத்தால் ஆனது. சீவாளி பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும். பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா பெருவிழாவில் கட்டைக்குழலும் உருமியும் முக்கிய இசைக் கருவிகளாக முழங்குகின்றன. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கள்ளபிரான் கோவிலில் கட்டைக்குழல்  வழிபாட்டின்போது இசைக்கப்படுகிறது.  ‘கட்டைக்குழல்’ என இக்கருவியின் பெயரிலேயே ஒரு நாட்டுப்புற ஆடற்கலை உண்டு. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வட்டாரத்தில் அருந்ததியின சமூக மக்களால் இக்கலை நிகழ்த்தப்பட்டது. தவில், பம்பை, உருமி ஆகிய தோலிசைக் கருவிகளோடு கட்டைக்குழலும் இசைக்கப்படும். மக்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் ஆடற்கலை இது.  கோயில் திருவிழாக்கள், சடங்குகளில் இக்கலை நிகழ்த்தப்படும். இப்போது கருவியைப் போலவே கலையும் வழக்கொழிந்து விட்டது. கலைஞர்களும் அருகிப்போனார்கள். தென் தமிழகத்தின் அனைத்து நாட்டார் தெய்வ வழிபாடுகளிலும் கட்டைக்குழல் முக்கிய பங்கு வகித்துவந்தது. இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. சிறுநாடார்குடியிருப்பு(துத்துக்குடி மாவட்டம்) போன்ற சில கிராமங்களில் இக்கலையை நாம் காணலாம்.

கட்டைக்குழலுக்கு இணையான கருவி கேரளத்தில் குறுங்குழல் என்று அழைக்கப்படுகிறது.   கோவில்களில் பூசை வேளைகளிலும் பஞ்ச வாத்தியம் எனப்படும் செண்டை மேள கச்சேரியிலும் குறுங்குழல் தவறாமல் இடம்பெறுகிறது.

முகவீணையை விட அளவு சிறியதாக இருக்கும் கருவி சொர்ணாளி. இலங்கையில் தமிழர்களால் நாட்டர் தெய்வ வழிபாட்டில் இசைக்கப்படுகிறது. 2000 ஆண்டுகள் பழைமையுடையது சொர்ணாளி என்கிறார்கள் இலங்கை இன்னிய துறையினர். மட்டக்களப்பிலிருந்து வடக்கெ 25 கிமீ தொலைவிலுள்ள கிரானில் நடைபெறும் குமார கோவில் விழாவில் இக்கருவி இசைக்கப்படுகிறது. மட்டக்களப்பில் நடைபெறும் கூத்து, பெரும்பறையாட்டம் ஆகிய நிகழ்வுகளில் இக்கருவி கட்டாயம் ஒலிக்கின்றது. இலங்கையின் பவுத்த ஆலயங்களில் சொர்ணாளியை ஒத்த ஊதுகருவியான ஹொரானாவெ இசைக்கப்படுகிறது.

முகவீணையை ஒத்து இருக்கும் ஊதுகருவிகள் பழங்குடி மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. இருளர் பழங்குடி மக்களிடம் கொகாலு என்றும் உதகை படுகர்கள், சொளகர் மற்றும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களிடம் பீணாச்சி என்கிற பெயரிலும், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் பழங்குடிகளிடம் சீணம்/சீணி என்கிற பெயரிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இக்கருவி வழக்கில் உள்ளது. அவர்களின் விழாக்களிலும் சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.இதை பற்றி வேறு ஒரு முறை விரிவாக பார்ப்போம்.

முகவீணையை ஒத்து உருவாக்கப்பட்ட இந்துஸ்தானி இசைக்கருவியான ஷெனாய், இசையுலகில் இன்று தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பிஸ்மில்லாகான் போன்ற மேதைகள் அக்கருவிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தார்கள். முகவீணை மரபோ சீண்டுவார் இல்லாமல் சிதைந்து விட்டது. மேலும் இன்று இதனை இசைப்பவர்கள் குறைந்து வருவதால், இதுவும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுவிடுமோ என, இசை ஆர்வலர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. முகவீணை போன்று மறையத் துவங்கியுள்ள இசைக்கருவிகள் புத்துயிர் பெற வேண்டும் என்றால் இவற்றை இசைக்கும் கலைஞர்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். தமிழ் மக்களும் இக்கலையை ஆதரிக்க வேண்டும்.
 
புழக்கத்தில் உள்ள இடங்கள்
முகவீணை:
சுவாமிமலை முருகன் கோவில்
கும்பக்கோணம் ஆராவமுதன் (சாரங்கபாணி பெருமாள்) கோவில்
நாகப்பட்டினம் சௌந்தராச பெருமாள் கோவில்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
நாகப்பட்டினம் வேதாந்த தேசிகன் கோவில்
சிதம்பரம் நடராசர் கோவில்
நாகூர் தர்கா

கட்டைக்குழல்:
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோவில்
பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்கள்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்

சொர்ணாளி:
கிரான் குமாரர் கோவில், இலங்கை
மட்டகளப்பு சுற்றிய இடங்கள், இலங்கை

காணொளிகள்
முகவீணை:
https://youtu.be/pCY9AT6Ih4g
https://www.youtube.com/watch?v=Lrn6o6SIlFw
https://www.youtube.com/watch?v=BNwNI_tW_08&t=39s
https://www.youtube.com/watch?v=QqUr2k5RNT4
https://www.youtube.com/watch?v=wERFXIF2Ak0
https://www.youtube.com/watch?v=3UbRj7RdVcA&t=298s

தெருக்கூத்தில் முகவீணை:
https://www.youtube.com/watch?v=VjjxM6RB7hE 
https://www.youtube.com/watch?v=jgFQH2sMDvg
https://www.youtube.com/watch?v=gymSKEklSe4&list=RDjgFQH2sMDvg&index=6
https://www.youtube.com/watch?v=QqUr2k5RNT4

கட்டைக்குழல்:

சொர்ணாளி:
https://www.youtube.com/watch?v=_Lbwt2No8N8&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=JHVOpoesX2w
https://www.youtube.com/watch?v=G9aWHAlXe8o
https://www.youtube.com/watch?v=nvmipfw8s9w
https://www.youtube.com/watch?v=xMc3uoH09W0

குறுங்குழல்கேரளம்:
https://www.youtube.com/watch?v=I5aP9BEPbRQ
https://www.youtube.com/watch?v=mXNyxGIKimo
https://www.youtube.com/watch?v=s31nfJ_2jMg
https://www.youtube.com/watch?v=1kqLHFopvog
https://www.youtube.com/watch?v=9wt7UQ1LeKQ

முகவீணாகருநாடகம்:
https://www.youtube.com/watch?v=wjGQvr83fzA


No comments: