புகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருக்கொள்கின்றது. முனைவர் ப. சரவணன் ஆசிரியர், லட்சுமி பள்ளி மதுரை


இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளரின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது.  மக்கள், ஏதேனும் ஒரு காரணம் குறித்து தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க - வழக்கங்

களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டிற்குக் குடி பெயர்வதே 'புலம்பெயர்வு'.


அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களை 'புலம்பெயர்ந்தோர்' என்று அழைக்கின்றனர். 'புலம்பெயர்ந்தோர்' என்பது நாட்டு எல்லையைவிட்டு நீங்கி முற்றிலும் வேறுபட்ட நிலச்சூழலில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு வாழமுற்பட்டவர்களால் படைக்கப்படும் இலக்கியம் 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்'


இலங்கை படைப்புகள் : இலங்கையிலிருந்து 1960  களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கியது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் முதன்மையாகக் கருதப்படுகின்றன.


புலம்பெயர்ந்தோர் படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகள் முதன்மையாகக் கருதப்பட்ட

போதிலும், கலைகள் சார்ந்த வெளிப்பாடுகள், சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம் அனைத்தும் புலம்பெயர்ந்தோரின் செயல்பாட்டு அடையாளமாகத் திகழ்வதால் அவையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். மொழி, நிறம், பண்பாட்டுச் சிக்கல் பற்றியதாக இப்படைப்புகள் அமைகின்றன.


 படைப்புகளை இதழ்கள், இணையதளம், வலைப்பூக்கள், நுால்கள் வழியாக உடனுக்குடன் வெளிப்படுத்துகின்றனர். புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர்களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர்களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளையும் விளக்கமாகக் கூறுபவையாக அமைந்துள்ளன.

இப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் பயணம்,

புகலிட அனுபவம், புகலிட மனிதனின் வாழ்வு குறித்த தேடலை முன் வைப்பதாகவும் உள்ளன.



சில உதாரணங்கள் பொ. கருணாமூர்த்தியின் 'போதிமரம்' என்ற கதை புலம்பெயர் வாழ்வு தமிழர் மீது திணித்துள்ள பண்பாட்டுச் சிதைவினைக் குறிப்பிட்டுள்ளது. கதையில் சில வரிகள்...
“ஒருமுறை சில நண்பர்களுடன் ஹம்பேர்க்கில் வெளிநாட்டவர் குடியிருப்பு ஒன்றிற்கு இலங்கைத் தமிழர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போனோம். எதேச்சையாக அவர்கள் குசினிக்குள் நுழைந்த எனக்குப் பேரதிர்ச்சி. எங்க ஊர் பள்ளிக்கூடத்தில் என்னைவிட 2 வகுப்புகள் ஜூனியராகப் படித்த பொடியன் ஒருவன் பெரிய கோழியொன்றை மல்லாக்கப் போட்டு வகிர்ந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அசடு வழிந்து கொண்டே சொன்னான் 'என்ன செய்யிறது இங்கவந்து எல்லாத்தையும் மாத்த வேண்டியதாய்ப் போச்சு” என்ற பகுதி சைவ பையன் கோழி சமைப்பது, முட்டை சாப்பிடுவது எனப் புலம்பெயர்வு அவனை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறது.


 புகல்சூழலில் யாசித்துப் பிழைக்கும் தமிழரை சை. பீர்முகம்மது 'சிவப்பு விளக்கு' என்ற சிறுகதையில் “காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில்  ஏதாவதொரு கடையின் பின்

புறமாக இருக்கும் குப்பைத் தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொறுக்கி கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு சவுக்கிட்ரோட் வெள்ளை மாளிகையில் சரக்கு அடிக்க வந்துவிடுவான். பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் துாங்க வந்துவிடுவான். மீண்டும் மறுநாள் காலையில் பெரிய மார்க்கெட், குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை” என்று அடையாளப் படுத்தியுள்ளார்.


புலம்பெயர்ந்த மக்களுள் உடல் வலிமையோடு இருக்கும் ஒருவன் உழைத்து முன்னேற விருப்பமில்லாமல் சோம்பேறியாய், பிச்சையெடுத்து உண்பதைப்
பெரிதாக எண்ணி வாழ்ந்து அழியும் விதத்தினைக் காட்டியுள்ளார்.


சுய நேர்மை :   லெ. முருகபூபதி 'மழை' என்ற சிறுகதையில் மனைவி,  பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒருவர் அந்நியநாட்டுப் பெண்ணுடன் நட்புக்கொண்டு பாலியல் உறவுவரை செல்வதனைக் குறிப்பிட்டுள்ளார்.


“நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல்அடிகளுக்கும் பயந்துகொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் நியாயமாகப்

பட்டால் என் மனைவியும் அங்கே சுகத்திற்காக உன்னைப் போல் ஒருவனைத் தேடி போயிருக்கலாம்” என்ற குறிப்பு, புலம்பெயர்ந்த மண்ணில் வாய்க்கும் பாலியல் தவறுகளைச் சுயநேர்மையுடன் வெளிப்படுத்தியுள்ளது.


'அன்னையும் பிதாவும்' என்ற கதையில், தம் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றை மறந்து அயல்நாட்டவர்களாக வாழத்துடிக்கும் தமிழ்ப்பெண்ணின் மன
நிலையை மாத்தாளை சோமு காட்டியுள்ளார். ரோகிணி என்ற கதாபாத்திரத்தின் தோற்ற வர்ணனையை கூறும் போது “தோள்பட்டை வரை தொங்குகிற முடியைக் குலுக்கிக் கொண்டு போனாள். அவள் இங்கு வருவதற்கு முன் இடுப்புவரை முடி தொங்கியும் குறுகிவிட்டது.
வெள்ளைக்காரர்களைப் போல் முடி வெட்டியதற்குச் சொன்ன காரணம் விண்டரில் குளித்து
விட்டுத் தலைமுடி காய டைம் எடுக்குது. அடிக்கடி தலைவலி வருது என்பதுதான். ஆனால்,
வெள்ளைக்காரிகளின் ஹெர்ஸ்டைலில் அவள் மயங்கியதே உண்மையான காரணம்” என்று உண்மையோடு குறிப்பிடப்பட்டுள்ளது.


அ. முத்துலிங்கம் 'கடன்' என்ற கதையில் தன் தந்தையின் வயோதிக காலத்தில் அவரை முறையாகப் பராமரிக்காமல், மரணமடைய விட்டுவிடும் ஒரு மகனின் மனிதநேயமற்ற, சுயநலப்போக்கினைப்  காட்டியுள்ளார். மகனும் மருமகளும் பணிக்குச்செல்வதால் பெரியவரைச் சரிவர கவனித்துக்கொள்ள இயலவில்லை. அவருக்கு அன்றாடம் உணவு பரிமாற நேரமில்லாத காரணத்தால் தனித்தனிப் பாத்திரத்தில் உணவினை வைத்து                                                              அப்பாத்திரத்தின் மேல்பகுதியில் கிழமைகளின் பெயர்களை எழுதிக் குளிர்சாதனப்
பெட்டியில் வைத்துவிடுகின்றனர்.


அப்பெரியவர் கிழமைகளின் அடிப்படையில் உணவுப் பாத்திரத்தைத் தானே தனக்குப் பரிமாறிக்கொண்டு உண்கிறார். அவசர உலகத்தில் முதியவர்கள் தனிமைப் படுத்தப்படுவதனை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது. அது மட்டும் இக்கதையின் மையம் அல்ல. அப்பெரியவரின் மகன், கிழமையின் பெயர் குறித்து வைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்கள் இரண்டு பயன்படுத்தாமையைக் கண்டு குழப்பமடைகிறார். தனிமையிலேயே வசித்த தன் தந்தையைப் பார்க்க அவரது நிலவறைக்குச் செல்கிறார். இரண்டுநாட்களாக உடல் விறைத்த
நிலையில் உள்ள தன் தந்தையின் சடலத்தை மகன் காண்கிறார். பெற்றோரைக் கூடப் பேணிக்காக்க இயலாத அளவுக்கு நேரமின்மையும் பணிச்சுமையும் புலம்பெயர்ந்த மக்களின் தலைமுறைக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை அ.முத்துலிங்கம் அழகாக காட்டியுள்ளார்.


புலம்பெயந்தோர் இலக்கியத்தை  'புலம்பல் இலக்கியம்' என்று எள்ளிநகையாடும் போக்கு தமிழ்ச்சூழலில் உள்ளது. புலம்பல் அற்ற வாழ்க்கை எத்தத்மிழனுக்கு வாய்த்தது? சங்கத்தமிழனின் வறுமை குறித்ததும் புலம்பல்தானே பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் மையமாக உள்ளன!


புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருக்கொள்கின்றது. துயருராத மனிதனுக்கு இவை 'புலம்பல் இலக்கியம்'. சராசரி மனிதனுக்கு இவை தீவிர இலக்கியம்தான். தன்வாழ்விலிருந்து இலக்கியம் படைக்கும் எப்படைப்பாளரும் வணங்கத்தக்கவரே.

( நன்றி: தினமலர் -  தமிழ்நாடு )






No comments: