மரணபீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு…. “ மரவள்ளிக்கிழங்கு “ காலம்தான் இனி ஒரே வழி ! தேசத்தின் தன்னிறைவும் அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனமும் !! முருகபூபதி


டந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்   தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.
சின்னஞ்சிறிய நாடாக கரிபியன் கடலை அண்மித்திருக்கும் கியூபாவை முன்னுதாரணமாகக்கொண்டுதான் எங்கள் தேசத்தின் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் எடைபோடவேண்டியிருக்கிறது.
உலகின் முதல் பெண்பிரதமர் என்று விதந்துரைக்கப்படும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா ( 1916 – 2000) பல்கலைக்கழகம்  சென்று பட்டம் பெற்றவர் அல்ல. அவரது கல்வித்தரம் ஒன்பதாம் வகுப்பிற்கும் கீழ்தான்.

அவரது கணவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவர்
1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது அமைச்சரவையிலிருந்த கலாநிதி தகநாயக்கா காபந்து அரசின் பிரதமரானார்.
எனினும்,  அவரால் உருவாக்கப்பட்ட கட்சி அடுத்துவந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தனது கணவருக்குப்பின்னர் பாதுகாத்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா  தேர்தலில் வென்று பிரதமரானார்.
அதற்குப்பிறகு மூன்று தடவைகள் பிரதமர் பதவியை அலங்கரித்துவிட்டு, 2000 ஆம் ஆண்டில் மறைந்தார்.  இவரது மகள் ஜனாதிபதியானபோது, அவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பிரதமர் பதவி ஏற்ற அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

ஶ்ரீமாவோ,  பதவியிலிருந்த காலத்திலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்தது என்னவோ உண்மைதான்.   தமிழ் மொழி இரண்டாம் பட்சமாகிய புதிய அரசியல் அமைப்பு -  பல்கலைக்கழக அனுமதியில்  தரப்படுத்தல் என்பனவும் நிகழ்ந்தன.  மறுக்கவோ மறைக்கவோ முடியாது !ஆனால், அவரது காலப்பகுதியில் இனக்கலவரங்கள் நடைபெறவில்லை.

அனைத்து கலவரங்களும் அவரது கணவர் பிரதமராக பதவியிலிருந்த  ( 1958 ) காலத்திலும் 1977 இற்குப்பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின்  யூ.என்.பி. கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்தவைதான் 1977 – 1981 – 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த கலவர காலங்களில் ஜே.ஆர். தான் தேசத்தின் அதிபராக இருந்தார்.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, பலாங்கொடையிலிருந்து ரத்வத்தை குடும்பத்தின் பரம்பரையில் வந்தவர்.  இலங்கை தேசியத்தில் தனது கணவருக்குப்பின்னர் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர்.
லண்டனில் படித்து பரிஸ்டரான பண்டாரநாயக்கா,  சிங்கள தேசிய உடையணிந்தவாறுதான் இலங்கை அரசியல் அரங்கில் ஏறினார். தூய வெள்ளை வேட்டி, நெஷனல்தான் அவரது உடை. முதலில் அவர் யூ.என். பி. யில்தான் இருந்தார்.   அதன் தலைவர் டி. எஸ். சேனாநாயக்காவின் மறைவுக்குப்பின்னர், தனக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால், சேர். ஜோன். கொத்தலாவலைக்கு அது கிடைத்தது.   அவரும், டி.எஸ். சேனாநாயக்காவும் , இவரது மகன் டட்லி சேனாநாயக்காவும்  பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு துதிபாடியவர்கள். அத்துடன்,  ஆங்கிலேயர் பாணியில் கோர்ட் சூட் அணிந்துதான் மக்கள் மத்தியில் தோன்றினர்.
பௌத்த சிங்கள தேசியத்தை முன்னெடுக்கவேண்டுமானால், அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டுமானால், அந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடையைதான் முதலில் அணிந்து பெரும்பான்மையினத்தவரின் நாடித்துடிப்பினை காணவேண்டும் என்ற தீர்க்கதரிசனம் பண்டாரநாயக்காவுக்கு வந்தது.
அதனால் குறிப்பிட் சிங்கள தேசிய உடையை அணிந்தவாறு ஐம்பெரும் சக்திகளை ( சிங்களத்தில்: பஞ்சமா பலவேகய ) திரட்டிக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்து வெற்றி பெற்றார்.
அந்த சக்திகள் : விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் – பெளத்த பிக்குகள் – வைத்தியர்கள்.
இத்தனைக்கும் அவர் பிறப்பால், அங்கிலிக்கன் கிறிஸ்தவர். அவரது மூதாதையர்கள் கண்டியை ஆட்சிபுரிந்த தெலுங்கு நாயக்கர்கள் ஆவர்.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியம் தேவையானவர்கள் விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் –வைத்தியர்கள்.
ஆனால், பௌத்த பிக்குகளையும் அவர் இணைத்துக்கொண்டமைக்கு அன்றிருந்த காரணம், பௌத்த மக்களின் வாக்கு வங்கியையும் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்வதற்குத்தான்.
ஆனால், அவரது அந்தக்கணிப்பு,  பெருந்தவறு என்பது ஒரு பௌத்த பிக்குவால்  ( சோமராம தேரோ )  அவர் சுடப்பட்டபோதுதான்  அவருக்குத்  தெரியவந்தது.  முதல்நாள் சுடப்பட்டு மறுநாள் அவர்  இறந்தார்.
எனினும்,  கணவர்  பண்டாரநாயக்காவிற்குப்பின்னர் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ, 1961 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும் புகழுடன் பதவி ஏற்கச்செல்லவிருந்த வேளையில்,  இவருக்கு வந்த ஆசை விசித்திரமாக அக்காலப்பகுதியில் பேசப்பட்டது.
இந்தியா – தமிழ்நாட்டிலிருந்தெல்லாம் காஞ்சிபுரம் சேலைகள் இலங்கையில் கோலோச்சிக்கொண்டிருந்த அக்காலத்திலேயே அவர், உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்துதான் நாடாளுமன்றம் செல்ல விரும்பினார்.
அதற்கான ஓவியவடிவமைப்பினை செய்து தருமாறு அவர் கேட்டதையடுத்து, அச்சமயத்தில் சிறுகைத்தொழில் அமைச்சில் பணியாற்றியவரான  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியரும் ஒளிப்படக்கலைஞருமான ( அமரர் ) கே.ரீ. செல்வத்துரை அவர்கள் ஶ்ரீமாவின் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொடுத்தார்.
தேசத்தின் தலைவியே உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்து பதவிப்பிரமாணம் எடுத்ததைப்பார்த்த இலங்கையின் கிராமப்புற மற்றும் நகரப்புற சிங்கள பெண்களுக்கும் அத்தகைய கைத்தறிச்சேலைகளை விரும்பும் ஆர்வம் அதிகரித்தது.
அதனால் உள்நாட்டில் பல ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் பெருகின.
ஶ்ரீமாவோ முதல் முதலில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த போது, உலகில் எந்தவொரு நாட்டிலும் அவ்வாறு ஒரு பெண் பிரதமராகும் அதிசயம் நிகழவில்லை.
பல வளர்முக நாடுகளில் பெண்களுக்கான வாக்குரிமைகூட இல்லாதிருந்த பின்னணியில்,  அவர் அந்தப்பதவிக்கு வந்ததை ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்தவர்களினால் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது.
அதனால், அவரை மிகவும் தரக்குறைவாகவும் மேடைகளில் அன்றைய எதிரணியினர் பேசினர்.
ஶ்ரீமாவோ முதலில் பதவியிலிருந்த 1961 – 1965 காலப்பகுதியில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கினார்.  உள்நாட்டில் புடவைக்கைத்தொழிலை வளர்ப்பதற்காக அதற்கென தனி அமைச்சும் உருவானது.
1970 இற்குப்பின்னர் இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டரசாங்கம் அமைத்தவேளையில், பல முற்போக்கான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதுவரையில் மகாதேசாதிபதி முறையிருந்த இலங்கை,  சோஷலிஸ ஜனநாய குடியரசாக மாறியது.  அணிசேரா நாடுகளின் உச்சிமகா நாட்டையும் நடத்தி, அந்த அமைப்பின் தலைவியாகவும் ஶ்ரீமாவோ தெரிவுசெய்யப்பட்டார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலைநகரம் வரையில்  கட்டுநாயக்கா  -  கொழும்பு வீதி அகலமாக்கப்பட்டது.  அதற்காக முன்னைய  ஒடுக்கமான வீதிக்கு அருகிலிருந்த வீடுகள் – கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோதும், கடும் விமர்சனங்களையும் அவரது அரசு சந்தித்தது.
அந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள்,  இராஜதந்திரிகள் ஆகியோரின் போக்குவரத்து வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவ்வாறு அந்த வீதி அகலப்படுத்தப்பட்டது.
இச்செயலும் ஶ்ரீமாவோவின் தீர்க்க தரிசனம் மிக்க செயல். பின்னாளில்தான்  அதன் தேவை  உணரப்பட்டது. அந்த மாநாட்டுக்கு இந்திராகாந்தி,  கியூபா ஃபிடல் காஷ்ரோ, லிபியா கேர்ணல் கடாபி,  யூகோஸ்லாவியா  டிட்டோ  உட்பட பல உலகத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அவ்வேளையிலும் யூ. என்.பி. யின் பச்சைக்கட்சியினர்,  அந்த மாநாட்டை  ஶ்ரீமாவின்  அணிசேரா கலியாணம் என்றும் கேலிசெய்தனர்.
இந்நாடுகளின் ஆதரவுடன் இலங்கையில் பல முற்போக்கான வேலைத்திட்டங்களை ஶ்ரீமாவோ முன்னெடுத்தார்.
 1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனாநாயக்காவும் இலங்கையில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நெற்செய்கையில் ஈடுபட்ட ஏழை விவசாயிகளுக்கு விவசாய மன்னர் பட்டம் வழங்கியும் பாராட்டி கௌரவித்தார். இத்தனைக்கும்  அவர் அரிசிச்சோறு உண்ணாதவர். அவரைப்போன்று மற்றும் ஒருவர் அரிசி உணவு உண்ணாதவர்.  அவர்தான் ஶ்ரீமாவோவின் மருமகன் பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா.
1970 இல்  மீண்டும் ஶ்ரீமாவோ இடது சாரிகளுடன்  இணைந்து பதவிக்கு வந்தபோது,  அரசின் திறைசேரியில் (  Treasury  ) நிதிவளம் முற்றாக குறைந்திருந்தது. 
எதற்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்து கையேந்தாமலிருப்பதற்கு,  உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கியே தீரவேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டார்.
அரிசி, சீனி, மற்றும் அமெரிக்க கோதுமை மாவு முதலானவற்றுக்கு நேர்ந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, இலங்கை மக்களுக்கு  சீனியில்லாமல் தேநீர் அருந்தும் கலசாரத்தை அறிமுகப்படுத்தினார்.
அக்காலப்பகுதியில் ஏழை முதல் செல்வந்தர்கள் வரையில் அவர்களின் வீடுகளில்  அதுவரையில் இருந்த சீனி போத்தல்களில் பனங்கருப்பட்டியும் கித்துல் கருப்பட்டியும்  இடம்பெறத்தொடங்கின.
பனங்கருப்பட்டி வடக்கிலிருந்தும் கித்துல் கருப்பட்டி  தெற்கிலிருந்தும் உற்பத்தியாகின.
அத்துடன் சீனியை குறைவாகப்பாவிப்பதற்காக, உள்ளங்கையில் சொற்ப அளவில் சீனியை எடுத்து அதனை நக்கியவாறும் மக்கள்  தேநீர் அருந்தினார்கள்.
அதனையும் அன்றைய  யூ.என்.பி. எதிரணியினர் எள்ளி நகையாடினர். உள்ளங்கையை நக்கி நக்கி  கைரேகைகள் அழிந்துவிட்டதாகவும், முதல் பெண்பிரதமரின் படம் தாங்கிய அஞ்சல் முத்திரைகளின் பின்புறத்தை  நாவால் நக்கித்தான் ஒட்டவேண்டியிருக்கிறது என்றும் ஏளனம் செய்தார்கள்.
கோதுமை மாவின் தட்டுப்பாட்டினால், மக்கள் தத்தம் வீட்டுக்காணிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபட்டனர்.  அந்தச்செய்கையை வீட்டு முற்றத்திலும் மேற்கொள்ள முடியும்.
இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மூன்று வேளையும் சோறு சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள்.  அரிசியை பதுக்கும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட்டனர்.   ஒரு குடும்பத்தின்  தேவைக்கு அதிகமாக அரிசி எடுத்துச்செல்லப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாண் பேக்கரிகளுக்கும் கோதுமை மாவு கொள்வனவு செய்யும் வீதத்திலும் கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், அதிகாலையே பொதுமக்கள் பேக்கரிகளின் வாசல்களில் பாண் வாங்குவதற்கு வரிசையில் நிற்கநேர்ந்தது.
அதே சமயத்தில்,  வடக்கில் கிளிநொச்சி, விசுவமடு, முல்லத்தீவு, முதலான விவசாய பிரதேசங்களில் வெங்காயம், மிளகாய் பயிர்ச் செய்கை அபரிமிதமாக வளர்ச்சி கண்டது. வவுனியா  முதலான பிரதேசங்களில் உழுந்து பயிர்ச்செய்கை வளம் கண்டது.
ஶ்ரீமாவோவின் அன்றைய தீர்க்கதரிசனம் மக்களுக்கு சில அசெளகரியங்களை தந்தபோதிலும் வடக்கினதும் தெற்கினதும் விவசாயிகளின் பொற்காலமாக கருதப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து தோன்றி இன்று உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து முழுஉலகமும் படிப்படியாக நீங்கினாலும்,  பொருளாதார ரீதியில் சந்தித்துக்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்ட காலம் செல்லும்.
முக்கியமாக இலங்கை போன்ற வளர்முக நாடுகள், மீண்டும் அரிசி, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்,   கருப்பட்டி  முதலானவற்றின் உற்பத்தியை  நோக்கி தனது பொருளாதார அபிவிருத்தியை  திசைதிருப்பவேண்டியும் வரலாம்.
தற்போது,  கொழும்பு துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் உருளைக்கிழங்கு – வெங்காயம் சகிதம் அழுகிய நிலையில் தேங்கிக்கிடக்கின்றன. அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அழுகிக்கொண்டிருக்கின்றன.
இலங்கையை சுற்றி இந்து சமுத்திரம் இருந்தபோதிலும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்   ( Tin Fish ) இன்றும் இறக்குமதியாகிறது.
தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவினால், அவையும் கொள்கலன்களில் தனிமைப்படுத்தப்பட்டு எவருக்கும் பயனற்றதாகிவிட்டன.
ஶ்ரீமாவோ, அரிசித்தட்டுப்பாடு வந்த வேளையில் ,                                          “ சந்திரனிலிருந்தாவது அரிசி தருவிப்போம்   “ என்று பேச்சுக்குச்சொன்னாலும், உள்நாட்டில் விவசாய செய்கையை ஊக்குவித்தார்.
கிழங்கு நட்டு பயிர் செய்யுமாறு அவர் சொன்போது,  யூ.என்.பி.யை சேர்ந்த பௌத்த பிக்கு, தேவமொட்டாவ அமரவண்ஸ தேரோ,  “ அம்மையார் கிழங்கு நடு… கிழங்கு நடு…  என்கிறாரே,  எங்கே நடுவது..?   “  என்று இரட்டை அர்த்தத்தில் மேடைகள் தோறும்  கேவலப்படுத்திப் பேசித்திரிந்தார்.
எழுத்தில் பதியமுடியாத மிக மோசமான மேலும் பல வார்த்தைப் பிரயோகங்களை அந்த பிக்கு  உச்சரித்தார்.
ஶ்ரீமாவின் காலத்தில்தான், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தோன்றியது. 
அதே காலப்பகுதியில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வந்தது, இந்திய   தரமற்ற வணிக சஞ்சிகைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  அதனால்  பல நன்மைகள் உள்நாட்டில் மலர்ந்தன.
ஆனால், அதன் தற்காலிக சுமைகளை தேசத்தின் நலன் கருதாமல்,   தமது  அரசியல் நலன்  கருதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஆர்.பிரேமதாசம் விஷமப்பிரசாரம் செய்து அந்த ஆட்சியை தோற்கடித்து, 1977 இல் பதவிக்கு வந்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினர்.
மீண்டும் எங்கள தேசம் வெளிநாடுகளை கையேந்தத் தொடங்கியது.
இன்று தோன்றியிருக்கும் வைரஸ் அனைத்து நாடுகளையும் பரஸ்பரம் கையேந்த வைத்துள்ளது.
ஒரு காலத்தில் கொடிய வைரஸினால் கியூபா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பலியாகிக்கொண்டிருந்தபோது,  அமெரிக்கா அந்த சின்னஞ்சிறிய நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடையை ஏனைய சில அய்ரோப்பிய நாடுகளும் ஆமோதித்தன. அமெரிக்க வல்லரசை மீறமுடியாமல் கியூபாவை புறக்கணித்தன.
நோயினால் பாதிப்புற்ற தனது மக்களை மீட்டெடுக்கவேண்டுமாயின், முதலில் மருத்துவத்துறையை வளர்த்து மேம்படுத்தவேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டார் கியூபா அதிபர் ஃ பிடல் காஷ்ரோ.  அந்த கர்மவீரனின் தீர்க்கதரிசனம்தான் சமகாலத்தில், இத்தாலி உட்பட பல நாடுகளுக்கும்  மக்களின் உயிர்காக்க கியூபா மருத்துவர்களும் தாதியரும் விரைந்து எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்!
அணுவாயுதங்களுக்கும் ஆயுத உற்பத்திக்கும் வல்லரசுகள் செலவிட்ட    காலம் மறைந்து மருத்துவ மனைகளுக்கும் வெண்டிலேட்டர்களின்  உற்பத்திகளுக்கும் அதிகம் செலவிடவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் சில உலக நாடுகள் யுத்தத்திற்காக  செலவிட்ட பணத்தின் தொகை  383,400,000,000,000 என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது.
தேசத்தின் தலைவர்களுக்கு தீர்க்கதரிசினம் அவசியம் தேவை என்பதை வலியுறுத்தியவர்களாக கியூபாவின் ஃபிடல் காஷ்ரோவையும் இலங்கையின் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவையும் நாம் அவதானிக்கமுடியும்.
( நன்றி:  மெல்பன் எதிரொலி -  2020 மே இதழ்)
---000----















No comments: