இலங்கைச் செய்திகள்


பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்; இராணுவத்துக்கு வழங்குவதை அரசு உடன் நிறுத்தவேண்டும்

கொரோனா விழிப்புணர்வும் பொருளாதார அபிவிருத்தியும்

16 நாட்களின் பின் மெனிங் சந்தை திறந்துவைப்பு

 "கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது"

கலைந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு

வடமராட்சி பொலிஸ் தாக்குதல்; காயமுற்றோருக்கு உணவு கொண்டு சென்ற பெண்கள் கைது

அரசியலமைப்பு பிரச்சினைக்கு அலரி மாளிகையில் கூடி பலன் இல்லை

மேல் மாகாணம், புத்தளத்தில் ஊரடங்கு மே 11 வரை நீடிப்பு

ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரைபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்; இராணுவத்துக்கு வழங்குவதை அரசு உடன் நிறுத்தவேண்டும்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்
கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்காக பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தெற்கிலுள்ள சில பாடசாலைகள் சிலவற்றை  இராணுவத்தினர் சில தேவைகளுக்கு  இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும் கூட தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களை சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
எனவே இந்த அச்சமான சூழ்நிலையில்  தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே  மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் 43 இலட்சம் மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில்  பாடசாலைகளை சூழ உள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் செறிவு நிறைந்த இடங்களிலமைந்த பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில்  இத்தகைய தனிமைப்படுத்தல் நிலைகளை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில்  பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது. அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில்  பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் எனவும்  ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நன்றி தினகரன் 
கொரோனா விழிப்புணர்வும் பொருளாதார அபிவிருத்தியும்

Monday, April 27, 2020 - 6:00am

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆனாலும் தினந்தோறும் நோய்த் தொற்றுக்கு இலக்காகும் புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்போரும், 'சீல்' வைக்கப்பட்டுள்ள குறித்த சில பிரதேசங்களில் வசிப்போருமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக புதிதாக இனங்காணப்படுகின்றனர்.

இவை தவிர, சமூகங்களுக்குள் கலந்துள்ள கொரொனா தொற்றாளர்களாக எவருமே இனங்காணப்பட்டதைக் காண முடியாதிருக்கிறது. இந்த வகையில் எம்மால் நிம்மதி அடைய முடியும்.
மக்களோடு மக்களாக கலந்திருக்கும் எவராவது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோரென கண்டுபிடிக்கப்பட்டால் மாத்திரமே நிலைமையை நாம் ஆபத்தானதாகக் கொள்ள முடியும்.
கொழும்பு, பண்டாநாயக்க மாவத்தை பிரதேசத்திலும் மற்றும் 'சீல்' வைக்கப்பட்டிருந்த சில பகுதிகளிலும் இருந்தே கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த காரணத்தினால் அங்கிருந்து வேறு பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் காவிச் செல்லப்படுவது தவிர்க்கப்பட்டு விட்டது. எனவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைதான் ஆபத்தைக் குறைத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு இல்லையேல் நிலைமை இதனை விட விபரீதமாகிப் போயிருக்கக் கூடும்.
இலங்கையில் தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினாலும் அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளாலும் இங்கு கொரோனா பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளே முதன்மையானதாக விளங்குகின்றன. நாளாந்தம் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையின்படி நோக்கும் போது இந்த உண்மை புரிகின்றது.
ஆனாலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாம் இன்னும் தொடர வேண்டிய நிலைமையே இருக்கப் போகின்றது. ஊரடங்கு உத்தரவு படிப்படியாக நீக்கிக் கொள்ளப்பட்டாலும் கூட கட்டுப்பாடுகளை உடனடியாகத் தளர்த்தி விட முடியாது. எதிர்காலத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தினுள் ஆங்காங்கே குறைந்த அளவிலாவது இருந்து கொண்டேயிருக்கும் என்பதுதான் மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கின்றது.

உலகம் ஆபத்து நிலைமையைக் கடந்து விடுமென்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை உலகெங்கும் குறைந்தளவு அச்சுறுத்தலுடன் கொரோனா தொற்று நீடிக்கவே போகின்றது. எனவே மக்கள் அனைவரும் அவதானத்தை தொடர்ந்து பேணியபபடியே வாழ வேண்டிய அவசியம் உள்ளது.
சுமார் ஒரு மாத காலத்துக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இலங்கையில் இன்னுமே முற்றாக நீக்கிக் கொள்ளப்படவில்லை. கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் கண்டுபிடிக்கப்படுகின்ற பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுல் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனாலும் மறுபுறத்தில் நாட்டில் மீண்டும் வழமை நிலைமையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஊரடங்கு உத்தரவை எந்நாளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியவாறு மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க முடியாது என்பதே உண்மை.
மக்கள் மீண்டும் தங்களது தொழில் துறைகளில் ஈடுபடத் தொடங்கினாலேயே குடும்ப வருமானத்தை அவர்களால் ஈட்டிக் கொள்ள முடியும். அன்றாட வருமானம் இல்லாமல் போனதால் ஏராளமான குடும்பங்கள் வறுமை நிலைமைக்குச் சென்று விட்டன. மறுபுறத்தில் வியாபாரிகளில் பலர் ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன்படுத்தியபடி கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றனர். அவ்வாறான வியாபாரிகளைக் கண்டுபிடித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தவில்லையென்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
அரசாங்க திணைக்கள இயந்திரங்கள் வழமை போல இயங்கத் தொடங்க வேண்டும். தனியார் தொழில்துறைகளும் மீண்டும் இயங்கத் தொடங்குவது அவசியம். தேசிய உற்பத்தி பெருக்கப்பட வேண்டும். அப்போதுதான் தனியார்துறை ஊழியர்களின் தொழில் பாதுகாக்கப்படும்.
இங்கு முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டியது நாட்டின் உணவு உற்பத்தி மீது ஆகும். நாட்டில் உணவு உற்பத்தி குறையுமானால் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
பயிர்ச் செய்கையாளர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் போதிய அக்கறை செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. உணவுப் பயிர்ச் செய்கையாளர்கள் சொற்ப வருமானம் பெற்று வறுமையில் வாடும் போது அவர்களிடமிருந்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்ற வியாபாரிகள் பெரும் பணம் ஈட்டுகின்ற அநீதிக்கு முடிவு கட்டப்படுவது அவசியமாகும்.
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், நாடு துரித அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டிய சவால் எம்முன்னே உள்ளது. கொரோனா விழிப்புணர்வும் பொருளாதார அபிவிருத்தியும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியவையாகும்.   நன்றி தினகரன்    


16 நாட்களின் பின் மெனிங் சந்தை திறந்துவைப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு, மெனிங் பொதுச் சந்தையானது, 16 நாட்களின் பின்னர் இன்று (29) அதிகாலை 04 மணிக்கு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொருட்களை ஏற்றிவரும்  லொறிகள் வந்த வண்ணமுள்ளதாக, மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கத்தின் தலைவர்  லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 
 "கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது"

"கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது"-Dissolved Parliament Cannot Reconvened-President Respond to Opposition's Letter
ஜனாதிபதி எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கைக்கு பதில்
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை திரும்ப கூட்ட முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பங்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, தனது செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மூலம் பதில் வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர், தேர்தலை நடத்துவது அவசியம் இல்லை என கருதுகின்றமை அதில் புலனவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு அரசு எந்திரம் அர்ப்பணிப்புடன் காணப்படும் இந்நேரத்தில், எதிர்க்கட்சியானது ஒரு குறுகிய அரசியல் நோக்கில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு
பீ.பி. ஜயசுந்தர எழுதியுள்ள குறித்த கடிதம் வருமாறு:


29 ஏப்ரல் 2020
கௌரவ சஜித் பிரேமதாச
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்


எதிர்க்கட்சியின் கூட்டு அறிக்கை
உங்களால் 26.04.2020 அன்று முன்வைக்கப்பட்ட எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துகள் தொடர்பானது.

அந்த அறிக்கையின்படி, அதில் கையெழுத்திட்ட கட்சிகள் தேர்தலை நடத்த தேவையில்லை எனவும், கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்து தொடர்பில் சுகாதார மற்றும் ஏனைய அரச சேவையாளரக்ள, முப்படையினர், பொலிஸார் மற்றும் தனியார் பிரிவினரின் அர்ப்பணிப்பை கௌரவிக்காமல் இருப்பதுமாகும் என அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நான் தெரிவிக்கிறேன்.
பாராளுமன்றம் அதன் ஐந்தாண்டு காலத்தின் முடிவில் அல்லது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்கும் சந்தர்ப்பத்தில் கலைக்கப்படும் என்று அதிமேதகு ஜனாதிபதி மேலும் வலியுறுத்துவதோடு, அதற்கமைய 2020, மார்ச் 02 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.
மேற்கூறிய கலைப்பு தொடர்பில் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் கையெழுத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம், மேற்குறித்த கலைப்பு அறிவிப்பின் செல்லுபடியாகும் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உங்களுக்குத் தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது எனவும், 2020-03-02 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்ட கலைப்பு அறிவிப்பின் படி, 25-04-2020 அன்று தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 20.06.2020 ஆம் திகதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்பின் 70 (7) பிரிவுக்கு இணங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதை உங்களுக்குத் தெரிவிக்குமாறு அதி மேதகு ஜனாதிபதி எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இப்படிக்கு
உண்மையுள்ள


பீ.பி. ஜயசுந்தர

ஜனாதிபதி செயலாளர்
நன்றி தினகரன் .கலைந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு

கலைந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு-Mahinda Rajapaksa Invite All 225 MPs to Temple Trees
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும்  திங்கட்கிழமை (04) முற்பகல் 10.00 மணிக்கு பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடும் பொருட்டு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

வடமராட்சி பொலிஸ் தாக்குதல்; காயமுற்றோருக்கு உணவு கொண்டு சென்ற பெண்கள் கைது
வடமராட்சி பொலிஸ் தாக்குதல்; காயமுற்றோருக்கு உணவு கொண்டு சென்ற பெண்கள் கைது-Vadamarachchi Police Beaten Women-3 Injured
- வடமராட்சி பொலிஸாரின் தாக்குதலில் 3 பெண்கள் வைத்தியசாலையில்
- பெட்டன் பொல்லினாலும், துப்பாக்கியாலும் தாக்கியதோடு, காலாலும் உதைத்தாக சிறுமி தெரிவிப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீ றியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குடத்தனை, மாளிகைகாடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று (01) வெள்ளிக்கிழமை காலை அத்துமீறி நுழைந்த பருத்தித்துறை  பொலிசார்  பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.
வடமராட்சி பொலிஸ் தாக்குதல்; காயமுற்றோருக்கு உணவு கொண்டு சென்ற பெண்கள் கைது-Vadamarachchi Police Beaten Women-3 Injured
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான மூன்று பெண்கள் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து பொலிசார் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் மூவர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை , மாளிகைத்திடல் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் புகுந்தே பொலிசார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வடமராட்சி பொலிஸ் தாக்குதல்; காயமுற்றோருக்கு உணவு கொண்டு சென்ற பெண்கள் கைது-Vadamarachchi Police Beaten Women-3 Injured
குறித்த வீட்டிற்கு நேற்றைய தினம் (30) வியாழக்கிழமை சென்ற பொலிசார் வீட்டு வளவினுள் நின்ற "கென்ரர்" ரக வாகனத்தை அத்துமீறி எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். வாகனத்தை பொலிசார் எடுத்து செல்ல முற்பட்ட வேளை வீட்டில் இருந்தோர் அது தொடர்பில் கேட்ட போது , இந்த வாகனத்தில் கள்ள மணல் ஏற்றுவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்று உள்ளன. அதனால் வாகனத்தை எடுத்து செல்கின்றோம் என கூறியுள்ளனர்.
அதற்கு வீட்டில் இருந்தோர் வாகனம் நீண்ட நாளாக இந்த இடத்திலையே தரித்து நிற்கிறது. வாகனத்தின் என்ஜனை தொட்டு பாருங்கள் அதில் சூடு இருக்கிறதா என பாருங்கள் , வீட்டு வளவினுள் தரித்து நிற்கும் வாகனத்தை எவ்வாறு எடுத்து செல்ல முடியும் என பொலிசாரிடம் கேள்வி எழுப்பினர்.
அதனையும் மீறி பொலிசார் வாகனத்தை எடுத்து செல்ல முற்பட்ட போது , வீட்டாருக்கும் பொலிசாருக்கும், இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை வீட்டில் இருந்த சிறுவன் கைத்தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். அதனை அவதானித்த பொலிசார் , சிறுவனிடமிருந்து கைத்தொலைபேசியை பறித்து , காணொளியை அழித்ததுடன் சிறுவனை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.
அதனால் வீட்டில் இருந்தோர் அபய குரல் எழுப்ப அயலவர்கள் கூடியதனால் பொலிசார் காணொளி வெளியில் போக கூடாது எனவும் , இங்கு நடந்த சம்பவம் தொடர்பில் எங்கேயும் முறைப்பாடு செய்ய கூடாது என மிரட்டியதுடன், அவ்வாறு ஏதாவது தமக்கு எதிராக முறைப்பாடு செய்தால் கஞ்சா கடத்தல், கசிப்பு வழக்குகள் தொடருவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து வாகனத்தை எடுத்து செல்லாமல் திரும்பி சென்று இருந்தனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பொலிசார் ,  குறித்த வீட்டுக்கு சென்று, வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்கள், வயோதிபர்கள் , சிறுவர்கள் என வேறுபாடு இன்றி மூர்க்கத்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொலிசாரின் தாக்குதலில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
வீட்டினுள் பொலிசார் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியமையால் வீட்டில் இருந்தோர் அவலக்குரல் எழுப்பியபோது அயல் வீட்டார்கள் குறித்த வீட்டில் இருந்தோரை மீட்க சென்ற போது அவர்கள் மீதும் பெண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இன்றி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.
தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமடைந்த பெண் உட்பட மூன்று பெண்களும் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, பெட்டன் பொல்லினாலும், துப்பாக்கியினாலும் தனது அம்மாவை தாக்கியதாக, சிறுமி ஒருவர் தெரிவித்ததோடு, வயிற்றில் காலால் உதைத்தாகவும் தெரிவித்தார்.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)  நன்றி தினகரன் அரசியலமைப்பு பிரச்சினைக்கு அலரி மாளிகையில் கூடி பலன் இல்லை
அரசியலமைப்பு பிரச்சினைக்கு அலரி மாளிகையில் கூடி பலன் இல்லை-JVP Reject PM Mahinda Request to Summon Temple Trees
- பிரதமரின் கூட்டத்தில் நாம் பங்கேற்கமாட்டோம்
- பாராளுமன்றத்தை கூட்டி முடிவு காண்பதே சரி

அரசியலமைப்பு ரீதியாக பலம் பொருந்திய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக 225 முன்னாள் எம்.பி.க்களையும் பிரதமரின் இல்லத்திற்கு அழைத்து மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் பலனளிக்கும் என தாம் கருதவில்லை என, அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் ஆராய எதிர்வரும் திங்கட்கிழமை (04) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அலரி மாளிகைக்கு வருமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பு தொடர்பில் பதில் வழங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அவர், அதன்பிரதியை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் எழுதியுள்ள குறித்த கடிதம் வருமாறு,

பிரதமர்,
பிரதமர் அலுவலகம்,
கொழும்பு 02.

கௌரவ பிரதமர்,
பிரதமரால் அழைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தொடர்பானது
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று, பிரதமர் தலைமையில் 2020 மே 04 மு.ப. 10.00 மணிக்கு, அலரி மாளிகையில் இடம்பெறுவதால், அதில் பங்கேற்கும்படி என்னையும் எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில், படிக்க கிடைத்தது.

கொரோனா பேரழிவைத் தோற்கடிப்பதற்கும் அது தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும்,
ஒரு கட்சி எனும் வகையில், நாங்கள் எப்போதும் எமது தலையீடு மற்றும் ஆதரவை வழங்கி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனை மேற்கொள்வோம்.

கொரோனா வைரஸை தோற்கடிக்கவும், தற்போதைய நிலவுகின்ற நிலைமை தொடர்பில் கருத்துக்களை கேட்டறிவதற்கும் அரசியலமைப்பு ரீதியாக பலம் பொருந்திய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக, முன்னாள் எம்.பி.க்கள் 225 பேரையும் பிரதமரின் இல்லத்திற்கு அழைத்து மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் பலனளிக்கும் விடயமாக நாம் கருதவில்லை. குறிப்பாக இந்த பேரழிவைச் சமாளிக்க ஒரு பொதுவான பொறிமுறையை உருவாக்குமாறு எமது கட்சி உள்ளிட்ட பெரும்பாலானோர் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இவ்வாறு அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பது பலனளிக்காது என்பது எமது கருத்தாகும்.
மறுபுறம், கொரோனா பேரழிவைச் சமாளிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் மிகச் சிறந்த விடயம் யாதெனில், கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையின் கீழ் அழைத்து, அந்நடவடிக்கைக்கு அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என நாம் கருதுகின்றோம். பிரதமராகிய உங்கள் தலைமையில் இதற்கு முன்னர் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்றது என்பதோடு, அதில் எமது கட்சியின் கருத்துகள் மற்றும் யோசனைகளை நாம் முன்வைத்தோம் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மறுபுறம், ஏப்ரல் 30 இற்குப் பிறகு அரச நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் இல்லை என்ற கருத்தும், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படாத நிலை காரணமாக ஏற்படும் அரசியலமைப்பு சிக்கல் குறித்தும் சமூகத்தில் தற்போது கருத்துகள் எழுந்துள்ளது. இவ்விடயம் குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அலரி மாளிகைக்கு வரவழைத்து கலந்துரையாடப்படுமாயின் அவ்வாறான கலந்துரையாடலில், அரசியலமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வாய்ப்பில்லை.

எனவே, மேற்கண்ட பிரச்சினைக்கு இந்த கூட்டம் அழைக்கப்பட்டால், அது தொடர்பான சரியான நடவடிக்கையானது,
01. அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதியினால் பாராளுமன்றம் மீள கூட்டப்பட வேண்டும் அவ்வாறில்லையாயின்,
02. இந்த சூழ்நிலையில் எடுக்கக்கூடிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டறிதல் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அவ்வாறின்றி, அரசியலமைப்பின் படி செயற்படாததன் மூலம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது பயனற்றது என்று நாங்கள் நம்புவதால், மே 04ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள கூட்டத்தில் நான் உள்ளிட்ட எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றமாட்டார்கள் என, இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.

இப்படிக்கு,
உண்மையுள்ள


அநுர குமார திஸாநாயக்க (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கட்சித் தலைவர் - மக்கள் விடுதலை முன்னணி
2020.05.01

பிரதிகள்:  அனைத்து ஊடகங்களுக்கும்மேல் மாகாணம், புத்தளத்தில் ஊரடங்கு மே 11 வரை நீடிப்பு
மேல் மாகாணம், புத்தளத்தில் ஊரடங்கு மே 11 வரை நீடிப்பு-CURFEW-Colombo-Gampaha-Kalutara-Puttalam Till May 11
- ஏனைய மாவட்டங்களில் மே 04 முதல் மே 06 வரை: பி.ப. 8.00 முதல் மு.ப. 5 வரை அமுல்; மே 06, பி.ப. 8.00 முதல் மே 11, மு.ப. 5.00 வரை தொடர்ந்து அமுல்
- நாளாந்த இயல்புவாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 ஆம் திகதி ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே 04ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மே 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 06, புதன் வரை அமுல்படுத்தப்படுவது முன்னர் போன்று இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையாகும். இம்மாவட்டங்களில் மே 06, புதன் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் ஆரம்பமாகும்.
இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகளின் தேவையை கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.
திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10.00 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
ஹட்டன்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோஸ்லி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்றிரவு (02) 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 09 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. மேலும் 05 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
குறித்த தோட்டத்தில் கோவிலுக்கு அருகிலுள்ள நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.  இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த அட்டன், டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரை-Fire at Hatton Abosley Estate-14 Houses Damaged-9 Fully Damaged
(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன், நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் - எம். கிருஸ்ணா) - நன்றி தினகரன் 

No comments: