தாக சாந்தி - கன்பரா யோகன்


நடைபாதையின் அருகே நின்ற கம் மரத்தினருகே ஒரு வட்ட வடிவிலான பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டிருந்ததை கடந்த கோடை நாட்களில் கண்டேன். அதில் அரைவாசிக்குத்  தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. மரத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கடதாசியில் எழுதப்பட்டிருந்த குறிப்பொன்று   இது நடை போகும் நாய்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது, இதை அகற்ற வேண்டாமென்று நாகரீகமாக சொல்லியது.
கார்களில் இருந்து பயணம் செய்தும், நாற்காலிகளில் நீண்ட நேரம் இருந்து வேலை செய்தும் வருபவர்கள்  உடற்பயிற்சிக்காக நடை போக அவர்களுடன் கூட நடக்க  வழித்துணையாக நாய்களும் வருகின்றன. அவைக்கும் நடை ஒரு தேவையான  உடற் பயிற்சிதான். வேடிக்கையாக மரத்தினடியில் வைக்கப்பட்டிருந்த நான் கண்ட தண்ணீர்த் தொட்டி நாய்களுக்கானதென்பது கால ஒட்டத்திலேற்பட்ட ஒரு புதுக் கோலம்தான்.
கோடை காலங்களில் கால் நடையாக நெடுந்தூரம் செல்லும் வழிப்போக்கர்களுக்காக தண்ணீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தை கண்டு வந்திருக்கிறோம். தண்ணீர்த் தொட்டிகள் மட்டுமல்ல , நடை பயணிகள் இளைப்பாறுவதற்காக , தங்கு மடங்களும், சத்திரங்களும் இருந்தன. கால ஒட்டத்தில் வாகனப் போக்குவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளினால் நடைப் பயணங்கள் அருகிப் போய் இந்த மடங்களும், சத்திரங்களும் பாவனைக்கு உதவாமற் போய் விட்டன.
அன்ன சத்திரங்களில் புலவர்களும் தங்கி உணவுண்டு ஆறிச் செல்லும் வழக்கம் தமிழ்  இலக்கியங்களிலும் வந்திருக்கிறது. விகடமாகக் கவி புனைந்த காளமேகப் புலவர் உணவுக்காக சத்திரத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததை இப்படி நையாண்டியாகப் பாடினார்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசி வரும்- குத்தி
உலையிலிட ஊரடங்கும்

ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும். 
                                                                       (காளமேகப் புலவர்)
கடலின் இரைச்சல் சூழ்ந்த நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான்

சத்திரத்தில் அஸ்தமிக்கும் வேளையில்தான் அரிசியே வரும். அதை குத்தி உலையில்
போடும் போது நள்ளிரவாகி விடும். அதை வடித்து ஓர் அகப்பை சோறை இலையில்
பரிமாறுவதற்குள் வெள்ளி முளைத்து பொழுது விடிந்து விடும் என்பது இப்பாடலின் பொருள்.

இப்பாடலின் பொருளறிந்து சத்திரக்காரன் காளமேகத்திடம் வந்து இப்படி வசை பாடி என் சத்திரத்தின் பெயருக்கு இழுக்கு உண்டாக்கி விட்டீரே என்று குறைபட்டானாம்.
இதனால் காளமேகம் மனம் நொந்து போய் இல்லை இல்லை  இதன் பொருள் இப்படியாகத்தான் எண்ணிப் பாடினேன் என்று பின்வருமாறு சொன்னாராம்.
உலகமெங்கும் பஞ்சம் வந்து அஸ்தமித்தாலும் நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் அரிசி வரும். உலை ஏற்றிய உடனேயே ஊராரின் பசி அடங்கும். இலையில் பரிமாறிய அன்னத்தின் வெண்ணிறத்தைப் பார்க்கையில் வெள்ளி உதயமாவது போல் இருக்கும்
சத்திரக்காரனிடம் தப்பித்து கொள்ள அவர் தமிழ் கை கொடுத்தது.  
அன்ன சத்திரங்களை விட ஆடு மாடுகள் தாக சாந்தி செய்வதற்காக கட்டப்பட்ட தண்ணீர்த் தொட்டிகளும் இருந்தன.
தொட்டியடி, தண்ணீர்த் தொட்டிலடி என்ற பெயர்களெல்லாம் இந்த கால் நடைகளுக்கான தாக  சாந்தி மையங்களை குறிக்கும் வண்ணம் இடப்பட்ட பெயர்கள்.
இன்னொரு நினைவு  தண்ணீர்ப் பந்தல். கோயில்களில் தேர்த் திருவிழா நடை பெறும்போது  பக்கதர்களுக்கு  தாக  சாந்தி செய்யும் வண்ணம் தற்காலிகமாக அமைக்கப்படுபவை.
எனது பள்ளி பருவத்தில் வாழ்ந்த நவாலிக் கிராமத்திற்கு   அடுத்த ஊரான மானிப்பாயில் மருதடிப் பிள்ளையார் கோயில் உற்சவ காலம்  ஊரையே  உற்சாகத்தில்  ஆழ்த்திவிடும்.  மருதடி கொடியேறி விட்டால்  இரவில் காற்றில் மிதந்து வரும் தவில், நாதஸ்வர  கச்சேரிகளுக்கும் , வில்லுப்பாட்டு, பாட்டுக்  கச்சேரிகளுக்கும் குறைவில்லை.
தேர்த் திருவிழாவன்று தண்ணீர்ப் பந்தலில் மோர்த் தண்ணீர் , ஊறுகாய்த்  தண்ணீர், சக்கரைத் தண்ணீர் என்று வெயிலில்   நடந்து களைத்து வரும் பக்தர்களுக்கு பரிமாறப்படும். இன்மூன்றில் ஊறுகாய்த் தண்ணீரின் சுவையே எனக்குப் பிடித்தது.
இப்போது கொரோனா வைரசு பாதுகாப்புக்காக அவ்வப்போது சுடு தண்ணீரில்  எலுமிச்சை பழத்தை வெட்டிப் போட்டுக் குடிக்கிறேன். வாசனையில் ஊறுகாய்த் தண்ணீரை அது நினைவூட்டத் தவறுவதில்லை.













No comments: