கொவிட் 19 - சலனமற்று கொலைசெய்யும் தொற்றுநோய்


(நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் அவசரகால  வைத்திய  நிபுணர் ரிச்சாட் லெவித்தனால் வரையப்பட்ட கட்டுரை. தமிழில் பீட் சுஜாகரன்)

நான் கடந்த 30 வருடங்களாக அவசரகால மருத்துவம் பார்த்து வருகிறேன். 1994 ஆம் ஆண்டில் மனித உடலினுள் செயற்கை சுவாசக் குழாய்களை செலுத்தும் செயல்முறையை (Intubation) உருவாக்கி அதை கற்பித்துவருகிறேன். மனித சுவாச வழிமுறைகளைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு கடந்த இரு தசாப்தங்களாக கற்பித்தும் பயிற்சியளித்தும் வருகின்றேன்.

கடந்த பங்குனி மாதத்தின் இறுதிப்பகுதியில் நியூயோர்க் நகரில் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவே நான் பயிற்சி பெற்ற Bellevue வைத்தியசாலையில் தொண்டராக 10 நாட்கள் கடமையாற்றினேன். இந்த காலப்பகுதியில் தான் கொவிட் 19 வைரசால் உருவாக்கப்படும் கொடிய நிமோனியாவை நேரகாலத்துடன் கண்டுபிடிக்காமல் போவதை உணர்ந்தேன். இப்படி கண்டுபிடிக்கும் பட்சத்தில் நோயாளிகளை செயற்கை சுவாச இயந்திரம் பொருத்தாமலேயே உயிருடன் பாதுகாக்க முடியும் என்பதை கண்டுகொண்டேன்.

நியுகமிஸ்பியர் நகரத்திலிருந்து நியூயோர்க் நகரத்தினை நோக்கிய எனது நீண்ட பயணத்தின் போது Bronx நகரிலுள்ள எனது நண்பரான மருத்துவ நிபுணர் Nick Caputo வை தொடர்புகொண்டு,  அவர் எவ்வாறான சவால்களை எதிர் கொள்கிறார் என்பதையும் சுவாச வழி செயற்பாடுகள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துகொண்டேன். இந்த வைரசை இதுவரை நான் அனுபவித்ததில்லை என எனது நண்பர் என்னிடம் கூறினார்.


அவர் கூறியது மிகவும் சரியானதே.  கொரோனா வைரசால் உருவாக்கப்பட்ட நிமோனியா நோய் நகர வைத்தியசாலை முறையில் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தியது. வழமையாக அவசர மருத்துவ பிரிவில் பலதரப்பட்ட நோயுடைய மக்களும் அனுமதிக்கப்படுவார்கள். இருதய நோயிலிருந்து சாதாரன தலைவலி முதலான நோயாளிகள். ஆனால் Bellevue வைத்தியசாலையில் எனது பணியின் போது அனைத்து அவசரபிரிவு நோயாளிகளும் கொரோனா வைரசால் பாதிக்கபட்டிருந்தார்கள். எனது முதல் மணித்தியால பணியின் போதே இரண்டு நோயாளிகளுக்கு சுவாசக்  குழாய் பொருத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

சுவாசம் சம்பந்தப்படாத நோயாளிகள் கூட கொவிட் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். முதுகில்  வெட்டுக்காயமொன்றுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளியை கதிர்வீச்சு பரிசோதனை  செய்தபொழுது அவரும் கொவிட் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தவறுதலாக வழுக்கி விழுந்தவர்களை சோதனை செய்து பார்த்தபொழுது  அவர்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே மர்மமான முறையில் இறந்துபோன வயதானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட கொவிட் 19 தாக்கத்தினால் இறந்ததாக பின்பு அறியப்பட்டது.

உண்மையில் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால் இந்த நோயாளிகள் சுவாசம் சம்பந்தமான  எந்த பிரச்சினைகளையும் வெளிக்காட்டவில்லை. ஆனால்,  அவர்களின் கதிர்வீச்சு பரிசோதனையில் நிமோனியா அவர்கள் உடம்பில் பரவியிருந்ததையும் அவர்களின் ஒக்சிசனின் அளவு வெகுவாக குறைந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. எவ்வாறு இப்படி ஏற்பட முடியும்?

ஆம், கொவிட் நிமோனியா ஆரம்பத்தில் ஒக்சிசனை அழிக்கும் செயற்பாட்டில் முதலில் இறங்குகிறது என்பதை இப்போது தான் நாங்கள் கண்டுகொள்ள ஆரம்பித்துள்ளோம். இதை நாங்கள் "சலனமற்ற உயிர்வழிப்பற்றாக்குறை" (silent hypoxia) என அழைப்போம். இதை கண்டறிவதிலுள்ள கடினத்தன்மைகள் காரணமாக இதை சலனமற்ற என்று அழைக்கின்றோம்.

நிமோனியா என்பது (கபவாதம்) நுரையீரலில் ஏற்படும் ஒரு கிருமித்தொற்றாகும். இதனால் நுரையீரற் பைகள் திரவம் அல்லது சீழ்களினால் நிரப்பப்படும். வழமையாக நிமோனியாவினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மார்பு அசௌகரியங்களையும் நோவு மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினைகளையும் எதிர்கொள்வார்கள். ஆனால் கொவிட் நிமோனியாவினால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் மூச்சுத்திணறல் அல்லது சுவாசத்தில் பிரச்சினைகளையோ எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்களின் ஒக்சிசனின் அளவு குறைந்தாலும்,  அவர்களுக்கு சுவாசம் சம்பந்தமான அறிகுறிகள் தென்படும்போது அவர்களின் ஒக்சிசனின் அளவு வெகுவாக குறைந்திருப்பதுடன் நிமோனியா உடலில் பரவியிருக்கும்.

ஒரு மனிதனின் சாதாரண ஒக்சிசன் செறிவூட்டல் (oxygen saturation) 94 ல் இருந்து 100 ஆக இருக்கும். ஆனால்,  கொவிட் நிமோனியாவினால் இதன்  திறன் அளவு 50 வீதமாக குறைந்திருக்கும். நான் சிகிச்சை அளித்த நோயாளர்களின் கருத்துப்படி அவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக சாய்ச்சல், இருமல், வயிற்றுளைவு, உடல் பலவீனம் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைத்தியசாலைக்கு வருவதற்கு ஒரு நாளின் முன்னர்தான் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் ஏற்கனவே நிமோனியாவின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தாலும் வைத்தியசாலைக்கு போக வேண்டும் என அவர்கள் உணர்கின்ற போது அவர்களின் உடல்நிலை சடுதியாக மோசமாகி விடுகிறது.

வழமையாக அவசர மருந்துவப்பிரிவில் பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் செயற்கை மருந்துக்குழாயை பொருத்துவோம். எனது கடந்த 30 வருட அனுபவத்தில் அவசர சுவாசக் குழாய் சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலும் அதிர்ச்சிக்குள்ளானவர்கள்.  அல்லது சுவாசிப்பதற்காக சிரமப்படுகிறவர்களாக இருப்பார்கள். கடுமையான உயிர்வழிப்பற்றாக்குறையினால் சுவாச சிகிச்சை தேவைப்படுபவர்கள் சுயாதீனமற்றவர்களாகவோ அல்லது மூச்சுவிட சிரமப்படுபவர்களாகவோ இருப்பார்கள். அவர்கள் சுவாசமற்ற ஓர் இடத்தில் அடைக்கப்பட்டிருப்பது போல் உணருவார்கள். ஆனால் கொவிட் நிமோனியாவினால் அனைத்தும் முரண்பட்டுள்ளதாக காணப்படுகிறது.

நான் சந்தித்த அநேகமான கொவிட் நோயாளர்களின் ஒக்சிசன் செறிவு மிகக் குறைவாக,  அதாவது உயிர்வாழ ஏதுவற்றதாக இருந்த போதிலும் நோயாளர்கள் அழுத்தத்திற்கு உட்பட்டவர்களாகத்  தெரியவில்லை. அவர்களை மேற்பார்வை செய்யம் இயந்திரத்தில் பொருத்துகின்ற பொழுது தங்கள் கைத்தொலை பேசியை பாவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உடல் நிலை மிக மோசமாக இருந்த போதிலும் அவர்களால் அதை உணர முடியவில்லை.

இப்பொழுது தான் ஏன் இப்படியான தாக்கம் ஏற்படுகின்றது என்பதை கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளோம். கொரோனா எனப்படும் வைரசானது நுரையீரலின் மேற்பரப்பு செல்களை தாக்குகிறது. ஆனால்,   நுரையீரலின் சுவாசப்பைகளை தொடந்தும் திறந்து வைத்திருக்கும். இதனால் சுவாசம் வழமைபோல் இடம்பெறும்.

ஆனால் கொவிட் நிமோனியாவினால் ஏற்படுகின்ற வீக்கம் அதிகரிக்கின்றபோது சுவாசப் பைகளின் செயற்பாடு சடுதியாக வீழ்ச்சியடைவதுடன். ஒக்சிசனின் அளவு குறைவடையும். எனினும் நுரையீரல் வழமை போல் இயங்குவதுடன் காபனீரொக்சைட்டை வெளிவிட முடியும்.

இதனால் இன்னும் சுவாசப்பிரச்சினைகள் தோன்றாது. குருதியிலுள்ள ஒக்சிசனின் அளவை அதிகரிப்பதற்காக நோயாளர்கள் ஆழமாகவும் விரைவாகவும் சுவாசிக்க தொடங்குகிறார்கள். இது அவர்களை அறியாமலே இடம்பெறும் ஓர் செயற்பாடாகும்.

இந்த உயிர்வழிப் பற்றாக்குறை மற்றும் உடலிலிருந்து வெளிப்படும் செயற்பாடுகள் நுரையீரலில் மீண்டும் வீக்கத்தை அதிகரிப்பதுடன் சுவாசப் பைகளின் செயற்பாட்டு வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன. உண்மையில் ஆழமாகவும் கஸ்டப்பட்டும் சுவாசிக்கும் போது நோயாளர்கள் தங்களின் நுரையீரல்களை தாங்களே சேதப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதனால் 20 வீதம் அதிகமான கொவிட் நோயாளர்கள் மிகவும் கொடிய இரண்டாம் கட்டமான நுரையீரல் சிதைவுக்கு இட்டுச்செல்லப்படுகின்றனர். காபனீரொக்சைடின் அளவு அதிகரிக்கப்படுவதனாலும் நுரையீரல் கடினமாக மாறுவதாலும் நோயாளர்கள் கடினமாக மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் சுவாச செயற்பாடுகள் பலவீனமடைகின்றன.

இப்படியானதொரு நிலையில் நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற போது அதாவது குறைந்த ஒக்சிசனுடன், அவர்களில் நிச்சயமாக செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவி தேவைப்படும். இதனால்தான் இந்த சலனமற்ற உயிர்வழி பற்றாக்குறை விரைவாக சுவாச செயற்பாட்டு முறைகளை தேங்குநிலைக்கு கொண்டு செல்வதால் கொவிட் 19 நோயாளர்கள் சடுதியாக மரணத்தை தழுவுகின்றார்கள்.

நுரையீரலில் ஏற்படும் அபரீதமான தாக்கம்தான் எமது சுகாதார சேவைக்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளது. கொவிட் 19 நுரையீரலினூடாகவே மனிதர்களை கொலை செய்கிறது. அதிகமான நோயாளர்கள் இறுதி நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்வதால் செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவி தேவைப்படுவதோடு பலரும் இதன் உதவியால்தான் உயிர்வாழ முடிவதால் இவ்வியந்திரங்களின் தட்டுப்பாடு நிகழ்கின்றது. பலரும் இந்த இயந்திரத்தாலேயே உயிர் வாழ்கின்றனர்.

ஆகவே செயற்கை சுவாச இயந்திரத்தின் பாவனையை தவிர்ப்பதானது நோயாளிக்கும் வைத்திய சேவைக்கும் நன்மை பயக்கும். இந்த செயற்கை சுவாச இயந்திரத்தின் பாவனை பல்வேறுபட்ட சேவைகளையும் வேண்டிநிற்கிறது. குறிப்பாக இவ்வியந்திரப்பாவனையிலுள்ள ஓர் நோயாளியை மயக்க நிலையில் வைப்பதுடன் அதற்கான மருந்துகளும் சுவாசப்பையை நோக்கி செலுத்தப்படும் வேறுபட்ட குழாய்களும் அவசியமாகும்.

ஒவ்வொரு நோயாளியையும் நகர்த்துவதற்கு கவனிப்பதற்கு ஒரு மருத்துவ குழுவே தேவைப்படும். அவர்களை ஒரு நாளைக்கு இரண்டுமுறையேனும் மேலும் கீழுமாக முகம்குப்புற நகர்த்தி அவர்களின் நுரையீரலின் செயற்பாட்டை சரிப்படுத்த உதவி செய்ய வேண்டும்.

மிகவும் விரைவாகவும் வினைத்திறனுள்ள முறையிலும் கொவிட் நோயாளிகளை வைத்தியசாலைக்கு செல்லாமலே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க கூடிய முறையொன்றும் உள்ளது. அதாவது இந்த சலனமற்ற உயிர்வழிப் பற்றாக்குறையை ஆரம்பத்திலேயே மிகவும் எளிதாக பெறக்கூடிய துடிப்பை அறியக்கூடிய ஓக்சி மீட்டரின் (oximeter) உதவியுடன் கண்டறிவதன் மூலம் கொவிட் நோயை இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஓக்சி மீட்டரானது காய்சலை அளவிட பயன்படும் தேமோ மீட்டரின் பயன்பாட்டை விட இலகுவானது. விரல் நுனியில் பொருத்தி அதன் ஆளியை இயக்கும் போது இரு எண்பொறி முறைகள் தென்படும்: ஒன்று ஒக்சிசன் செறிவின் அளவு மற்றையது நாடித்துடிப்பு. மிகவும் நம்பகமான முறையில் சுவாசத்தை அளப்பதற்கு இது பயண்படுகிறது.

இப்படிப்பட்ட முறைகளின் மூலம் பலரும் காப்பாற்றப்பட்டார்கள்.  பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்படிப்பட்ட நேரகால சரிபார்த்தல் முறைகளின் கீழ் செயற்பட்டதாலயே காப்பாற்றப்பட்டார். இப்படி நேரகால எச்சரிக்கை முறைகளை ( Early warning system) பின்பற்றுவதன் ஊடாக விரைவாக கொவிட் 19 தொற்றை கணித்து சிகிச்சை அளிக்க முடியும்.

அத்துடன் உடனடியாகவே செயற்கை சுவாச இயந்திரத்தை பொருத்துவதை தவிர்த்து சுயமாகவே அவர்களை நிலைப்படுத்துவதன் ஊடாக நுரையீரலில் பரவும் தொற்றை குறைத்துக்  கொள்ள முடியும் வைத்தியர் Caputo மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி நான்கில் மூன்று நோயாளர்கள் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளினூடாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 பல ஆயிரம் உயிர்களை நியூயோர்க் நகரில் மட்டும் பலியெடுத்துள்ளது. ஓக்சி மீட்டர்கள் 100 வீதம் சரியானவை என்று கூறிவிட முடியாது. ஏன் கொவிட் சில நோயாளர்களில் வேகமாகவும் இன்னும் சிலரில் மெதுவாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என எளிதில் கூறிவிட முடியாது. எனினும் நேர காலத்துடன் ஒக்சி மீட்டரின் துணையுடன் இலகுவாகவும் எளிதாகவும் கொவிட் நோயை கண்டுபிடிப்பதன் ஊடாக எங்களால் சிறப்பாக செயற்பட முடியும் வைத்திய சாலைகளில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

இப்போது எமக்குள்ள தேவை கொரோனா வைரசை துரத்திப் பிடிப்பதல்ல மாறாக அதற்கு முன்னால் சென்று அதை கட்டுப்படுத்துவதே.

By Dr. Richard Levitan

தமிழில் பீட் சுஜாகரன்.

-


No comments: