மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 34 முருகபூபதி


ன்றைய பொழுதும் வழக்கம்போல் விடிந்தது. எல்லோருக்கும் முன்னர்  துயிலைக்கலைத்துவிடும் அபிதா, படுக்கையிலிருந்து எழாமலேயே யோசித்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த வைரஸ் தொற்று இன்னமும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கப்போகிறது….?  அடிக்கடி நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு எப்போது முற்றாக நிறுத்தப்படும்..?
போர் உக்கிரமடைந்திருந்தபோது  பங்கருக்குள் முடங்கியிருந்த காலம் நினைவுக்கு வந்து  வருத்தியது. அதுபோன்று இன்றைய காலமும் எதிர்காலத்தில் நினைவுகளாக தொடரலாம்.
பதுங்கு குழியிலிருந்து  வெளியே சென்று குழந்தைக்கு பால்மா எடுத்துவரவும் முடியாமல், பாலிடப்பட வேண்டிய போத்தலில் தண்ணீரை வார்த்துக் கொடுத்து அதன் பசிபோக்குவதற்கு எத்தனித்த கொடுமை இன்று எவருக்கும் இல்லை. இவர்கள் இருப்பது பதுங்கு குழியல்ல. சட்டம்தான் முடங்கவைத்திருக்கிறது.
ஊரடங்கு தளர்த்தப்படும்போது, வெளியே வந்து தேவையானதை வாங்கிக்கொள்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வீடு வீடாகச்சென்று உலர் உணவுப்பொருட்ளை விநியோகிக்கிறார்கள்.
நிகும்பலையில் கேஸ் சிலிண்டர்கள், மரக்கறிகள், அரிசி, மாவு, சீனி,  கோப்பி, தேயிலை, மீன்ரின், சோப்புகள் என்று ஏற்றிவரும் லொறிகள்  வந்து  வீதிகளில் நிற்கின்றன.
வீட்டுக்குள்ளிருந்து தொலைக்காட்சி பார்க்கிறார்கள். வாட்ஸ் அப்பில் மீம்ஸ் அனுப்புகிறார்கள். கைத்தொலைபேசியிலும் ஸ்கைப்பிலும் ஊர் வம்பு பேசுகிறார்கள். முகநூலில் நோண்டி நுங்கெடுக்கிறார்கள்.  புத்தகம் – பத்திரிகை படிக்கிறார்கள்.  நன்றாக உறங்கி சோம்பல் முறிக்கிறார்கள். நேற்று என்ன படம் பார்த்தீர்கள்..? என்று பரஸ்பரம் கேட்டவாறு அதன் கதை, முடிவு பற்றி விவாதிக்கிறார்கள்.
கொரோனா,  வௌவாலிலிருந்து வந்ததா..? வாயிலிருந்து வந்ததா..?  திட்டமிட்டு பரப்பப்பட்டதா..? இல்லை, தற்செயலாக தோன்றியதா..?  என்று அறிவியல் விளக்கம் தருகிறார்கள்.
முன்னோர்களின் மருத்துவம் பற்றி சிலாகித்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நோய் எதிர்ப்பு பற்றி பேசுகிறார்கள்.
இந்த நெருக்கடி காலத்தில் மைத்திரியும் ரணிலும் பதவியிலிருந்திருந்தால், நாடு எப்படி இருந்திருக்கும் என்று கருத்துச்சொல்கிறார்கள்.
இராணுவமே வெளியேறு என்று உரத்துக்கத்திய தமிழ்பிரதேசங்கள் எங்கும் தென்னிலங்கையில் சந்தேகப்படும்  தொற்றாளர்களை அழைத்தோ, இழுத்தோ கொண்டு சென்று முகாம்களில் தள்ளுகிறார்கள். மூன்று வேளையும் சோறும் கோழி இறைச்சிக்கறியும் பருப்பும் கொடுக்கிறார்கள்.
ஆனால், அன்று நிலத்தின் கீழ்  பதுங்கு குழிகளுக்குள் முடங்கியிருந்தவர்கள், சிறுநீர் கழிக்கவும் வெளியே செல்லப்பயந்து உபாதையை சகித்துக்கொண்டிருந்தார்களே…!?
பாம்பும் பூராணும் ஊர்கிறதா என்று  ஒருசொட்டு கண்ணுறக்கமும் இல்லாமல் விழித்திருந்தார்களே..!?
எறிகணை வீச்சில் சிதிலமாகிப்போன வீட்டுக்குள்ளிருந்து  மற்றுடை தேடி எடுத்து,  பதுங்கு குழிகளை நாடி  ஓடினார்களே…!
கடந்துவிட்ட  பத்தாண்டு காலத்துக்குள் உள்நாட்டிலும் அனைத்துலகத்திலும் நேர்ந்துவிட்ட மாற்றங்களை அபிதா மனதிற்குள் அசைபோட்டவாறு படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்குச்சென்றாள்.
திரும்பி வரும்போது, சமையலறையில் சண்முகநாதன் கேத்தலில் தண்ணீர் சுடவைத்துவிட்டு, தேயிலைத்தூள் இருக்கும்  பிளாஸ்ரிக் போத்தலைத் தேடிக்கொண்டிருந்தார்.
 “  குட்மோர்ணிங் அய்யா. என்ன நேரத்துடன் எழுந்துவிட்டீங்க ? இருங்க,  நான்  ரீ போட்டுத்தாரன்.  “  அபிதா முகத்தை துடைத்துக்கொண்டு வந்தாள்.
 “ நித்திரை  குழம்பிவிட்டுது.  தூங்கும் பொழுது , சாப்பிடும் நேரம் எல்லாம் நேர்மாறாகிவிட்டுது. போதாக்குறைக்கு இந்த கொரோனா பயமும் ஊரடங்கும் மனஉளைச்சலைத் தருது. பிழையான  காலத்தில் இங்கே வந்து சிக்கிக்கொண்டேன்.  “
“  அதிகம் யோசிக்காதீங்க அய்யா.  லண்டனிலிருந்தாலும் இதுதான் நிலை அய்யா. எல்லாம் கடந்துபோகும்.  இந்தாங்க ரீ. சீனி குறைத்துத்தான் போட்டேன்  “
 “ தேங்ஸ்  “ அவர் அபிதா நீட்டிய கப்பை வாங்கிக்கொண்டார்.
சுவர்க்கடிகாரம்  ஆறு முறை அடித்து ஓய்ந்தது.   கூடத்தில் சோபாவில் உறங்கும் ஜீவிகா புரண்டு படுத்தாள்.
அபிதா வெளிமுற்றத்திற்குச்சென்று நந்தியாவட்டையும் செவ்வரத்தையும் பறித்துவந்து பூச்சரம் கட்டி, சுவரிலிருக்கும் சண்முகநாதனின் மனைவி ராஜேஸ்வரியின் படத்திற்குச்சூட்டினாள்.
அதனை அவதானித்த சண்முகநாதனுக்கு மனைவியுடன் வந்து,  இந்த வீட்டைப்பார்த்து விலைபேசிய காலங்கள் நினைவுக்கு வந்தன. இங்கு வந்து குடியேறும் வரையில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தில் பணியாற்றியவர்களுக்காக தரப்பட்ட குடியிருப்பில்தான் அவரது  குடும்பம் வசித்தது.
இரண்டு பிள்ளைகளும் அங்கிருந்த காலத்தில்தான் பிறந்தன.  அங்கிருந்துதான் இந்த வீட்டுக்கு அருகிலிருக்கும் தமிழ்ப்பாடசாலைக்கு படிக்க வந்தன. பிள்ளைகளை தினமும் கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும் ஒரு வாகனத்தில்தான்  ஏனைய தமிழ் ஊழியர்களின் குடும்பத்துப்பிள்ளைகளுடன் அனுப்பிவைத்தார்.
ஊரில் தனக்கு கிடைத்த சீதன வீட்டை விற்றுவிட்டு வாங்கிய இந்தவீட்டுக்கு உண்மையிலேயே உரித்துக்காரி மனைவிதான். ஆனால், அவள் இங்கே வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதி அவளைப்பீடித்த புற்றுநோய் உபாதையிலேயே கழிந்துவிட்டது.
இப்போது சுவரில் படமாகி காட்சி தருகிறாள்.  எங்கிருந்தோ வந்திருக்கும் ஒரு வேலைக்காரி, அக்கறையுடன் அதற்கு பூச்சரம் அணிவித்து வணங்குகிறாள். லண்டனிலிருக்கும் மனைவியின் படத்திற்குக் கூட இவ்வளவு மரியாதை கிடைக்கவில்லை. மனைவி இறந்த நாளையும் அவர் மறந்திருக்கிறார். பிள்ளைகளும் நினைவூட்டுவதில்லை. அவர்களும் லண்டன் வேகத்தில் தாயை மறந்துவிடுவார்கள்.
லண்டனில் மகள், மகன் வீடுகளில் கூடத்தில் அந்தப்படம் வெறும் காட்சிப்பொருள்தான்.  ஆனால், இங்கே அது வணங்கும் படமாகியிருக்கிறது. அதனையும் ஒழுங்காக செய்கிறாள்  இந்த அபிதா.
கதிரையில் ஏறிநின்று தனது மனைவியின் படத்திற்கு பூச்சரம் சூட்டுகின்ற அபிதாவை, சண்முகநாதன் கனிவோடு   பார்த்தார். இவளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அவள் கேட்டது ஒரு மடிக்கணினி.  வாங்கித்தரவேண்டும். வெறும் வேலைக்காரி என்ற ஸ்தானத்திலிருந்து வேறு ஏதோ இனம்புரியாத உறவுக்காரியாக தோற்றமளிக்கும் இந்த அபிதா,  இழந்துவிட்டு வந்துள்ள சொந்தங்கள் பற்றி விரிவாக கேட்டுத்தெரிந்துகொள்ளவில்லையே என்ற குற்றவுணர்வும் சண்முநாதனுக்கு வந்தது.
 “  அய்யா, இன்றைக்கு காலையில் என்ன சாப்பிட விருப்பம்..?  சொல்லுங்க.  “ அவள் கேட்டபோதுதான், அவர் அவளைத் திரும்பிப்பார்த்தார்.
அவளது கரத்தில் அவள் அருந்தும் தேநீர் கப். காலை எழுந்து முகம் கழுவி, தனக்கென தேநீர் தயாரிக்காமல், எனது மனைவியின் படத்திற்கு பூச்சரம் சூட்டி வணங்கிவிட்டுத்தான் தேநீர் அருந்துகிறாள்.
ஆனால், நான்…?  துயில் எழுந்தவுடன் நேரே சமையலறைக்கு வந்து கேத்தலில் தண்ணீர் சுடவைக்கிறேன். தேயிலைத்தூளைத்  தேடுகிறேன்!
அந்தச்சின்ன வேலைக்கும் இடம் தராமல், அவளே தயாரித்து தருகிறாள்.
 “ இடியப்பம்.  “
 “ என்ன கறி வேண்டும் அய்யா..? “ 
“  ஏதாவது செய். நீ… இடியப்பத்திற்கு மாவு குழைத்துவிடு, நான் காய்கறி , வெங்காயம் நறுக்கித்தருவேன்.  “
 “ சும்மா இருங்கய்யா… அது என்ன பெரிய வேலையா…? நானே செய்துவிடுவேன்.  உங்கள் வீட்டுத்  தோட்டத்தில் பிடுங்கிய  முருங்கைக்காய் இருக்கிறது. உருளைக்கிழங்கும் போட்டு ருசியா  காய்ச்சித்தாரன். சம்பலும் இடிச்சிடுவன்.  “
 “ போதும்….போதும்…. எனக்கும் போரடிக்குது.  நானும் ஏதும் செய்து தருவேன்.  எங்கே காய்கறிகள்…?   “
சண்முகநாதன் சமையலறை மேசைக்கருகில் வந்தமர்ந்தார்.
அபிதா தேவையானதை எடுத்துக்கொடுத்துவிட்டு, வறுத்த சிவப்பு அரிசி மாவில் இடியப்பத்திற்கு குழைக்கத்தொடங்கினாள்.
 “ லண்டனில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் பேசினீங்களா அய்யா..? “ 
“  ஓமோம்.நேற்று இராத்திரியும் பேசினேன்.   பேரனும் பேத்தியும்  என்னை மிகவும் மிஸ்பண்ணுகிறார்கள்.   நான் அங்கேயிருந்து புறப்பட்டபோது   மகள் என்ன சொன்னால் தெரியுமா..?  நிகும்பலையூர் வீட்டை ஏன் இன்னமும் விற்காமல் வைத்திருக்கிறீங்க.  அது ஊரில் அம்மாவுக்காக தரப்பட்ட சீதன  வீட்டை விற்றுப்போட்டு வாங்கியதுதானே…! எல்லோரும் லண்டனுக்கு வந்துவிட்டோம்.  இனி எதற்கு அந்த வீடு.  உங்கட தம்பி மகள் ஜீவிகாவுக்கு விற்றுப்போட்டு வாங்க.  என்றாள். ஆனால், இப்போது பேச்சை மாற்றுகிறாள்.” 
 “ ஏன்… ? என்னவாம்..? “ 
“  எல்லாம் இந்தக்கொரொனா செய்த மாற்றம்தான். வீட்டை விற்கும் எண்ணத்தை கைவிடட்டுமாம். பிற்காலத்தில், தானும் புருஷனும் இங்கே வந்து நிரந்தரமாகப்போகிறார்களாம். அவ்வாறு வந்தால், வசிக்க வீடுவேண்டும்தானே என்கிறாள். “ 
“  அப்படியா..? லண்டனுக்குப்போன ஆட்கள், ஏனைய நாடுகளுக்குப் போனவையல்  எல்லாம் திரும்பி வருவினம் என்று நம்புறீங்களா அய்யா. ..? “ 
 “ காலம்தானே மனுஷரை மாற்றுது.  முன்னர் அடுத்தடுத்து இங்கே கலவரம் வந்தமையால்,  நாட்டைவிட்டு எங்காவது ஓடிவிடவேண்டும் என்ற எண்ணம் வந்தது.  லண்டனுக்கெல்லாம் அப்போது ஓபன் விசா இருந்தது. போனோம்.  இப்போது வந்திருக்கும் வைரஸை விட அன்றைக்கிருந்த அச்சுறுத்தல் பரவாயில்லை என்று நினைக்கிறாள் போலும்.    உயிர்ப்பலி எண்ணிக்கை புள்ளிவிபரம் பார்க்கிறாள். அய்ரோப்பிய வாழ்க்கையை இந்தக்கண் தெரியாத வைரஸ் வெறுக்கவைத்திருக்கலாம் “ 
“ சரி அய்யா.  இப்போது என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க..? “
“  ஒரு முடிவும் தெரியவில்லை.  யோசித்தால் மூளைதான்  களைக்குது.  அதுதான் நேற்று ராத்திரி நல்ல நித்திரையும் இல்லை.  “
“  காலைச்சாப்பாட்டுக்கு மேலே ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழும்புங்க.  பிறகு யோசித்துப்பாருங்க.  அது சரி  அய்யா, வந்ததே வந்தீங்க. இந்தப்பயணத்தில் உங்கள் தம்பி மகள் ஜீவிகாவுக்கு ஏதும் வரன் பார்த்து பேசிச்செய்யும் எண்ணம் வரவில்லையா ..?  “  கூடத்தில் ஷோபாவில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஜீவிகாவை ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டே அபிதா அவ்வாறு கேட்டாள். அதற்கிடையில் சண்முகநாதன், முருங்கைக்காய் தோல் சீவி நறுக்கி, வெங்காயமும் உரித்துவிட்டிருந்தார். உருளைக்கிழங்குகளின் தோலை சீவினார்.
 “ அபிதா, நானும் உன்னிட்ட கேட்கத்தான் இருந்தன். அவளுக்கு ஏதும் காதல் கீதல்  இருக்கிறதா..? உனக்கு ஏதும் தெரியுமா..?  யாரும் பெடியல் இந்தப்பக்கம் அவளைப்பார்க்க வருவான்களா…?  “
“  நான் இங்கே வந்து கொஞ்சக் காலம்தான் அய்யா.  இங்கிருப்பவர்களுடன் பேசுவதற்கே நேரம் கிடைப்பது அபூர்வம்.  ஜீவிகா , காலையில் போனால் இரவு திரும்புவதற்கு சில நாட்களில் எட்டுமணியும் கடந்துவிடும்.  அவுங்க செய்யும் வேலை அப்படி.  மஞ்சுளா, சுபாஷினி வருவதற்கும் ஆறுமணியாகிவிடும்.  இந்த வீட்டில்  கற்பகம் ரீச்சர்தான் பிந்திச்சென்று முந்தி வருவாங்க. அதற்கு அவங்கட ரீச்சர் வேலைதான் காரணம்.  எல்லாத்துக்கும் காரணம் இருக்கிறது அய்யா.  ரீச்சரும் வேலையால் திரும்பியதும் சாப்பிட்டுவிட்டு தூங்கப்போய்விடுவாங்க.  யாருடன்தான் பேசக்கிடைக்கிறது.  சனி, ஞாயிறு வரவேண்டும்.  இந்த ஊரடங்கினால், இங்கே கலகலப்புத் தெரியுது. எனக்கிருக்கும் வீட்டு வேலைகளிலேயோ பொழுது போய்விடுகிறது.   “
அபிதாவிடமிருந்து பெருமூச்சு உதிர்ந்தது. 
 “ உனக்கு இங்கே… வேலை…வேலையே வாழ்க்கையாகியிருக்கிறது என்று சொல். ஜீவிகாவிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப்பார்.  ஏதும் இருந்தால் பேசி முடித்துவைத்துவிட்டுப்போகிறேன்…என்ன பேசுவாயா..?  “
அபிதாவுக்கு உரத்துச்சிரிக்கவேண்டும்போல் தோன்றியது.
 “ ஒவ்வொருத்தரும் எனக்கு இங்கே வீட்டிலிருக்கும் வேலை போதாதென்று மேலும்  மேலும் ஏதாவது ஒரு வேலை தாரங்க அய்யா. நீங்களும் ஓல் ரெடி ஒரு வேலை தந்திருக்கிறீங்க.  அதுதான் ரீச்சருடன் பேசும் வேலை. இப்போது, ஜீவிகாவுக்கு கலியாணமும் பேசச் சொல்றீங்களா…?  “
அதனைக்கேட்டதும் சண்முகநாதனுக்கு குபீரென சிரிப்பு வந்தது. அந்தச்சிரிப்பொலி கூடத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஜீவிகாவின் துயிலையும் கலைத்துவிட்டது.
“  என்ன பெரியப்பா… உங்கட சிரிப்பு அமர்க்களமாக இருக்கிறது.  அபிதா அப்படி என்னதான் சொல்லிவிட்டா…?” 
“  ஜீவிகா  அம்மா, உங்களுக்கு கலியாணம் பேசட்டுமாம். அய்யா சொல்கிறார். எங்கேயும் பார்த்து வைத்திருந்தால் சொல்லுங்கள். இந்தக் கொரோனா போய்த் தொலைந்ததும் செய்துவைப்போம். ஏதும் போய் ஃபிரண்ட்  இருக்கிறதா..? என்று அய்யா என்னைக் கேட்கச்சொல்லுகிறார். “  என்று அபிதா உரத்துச்சொன்னாள்.
                                                                                                                                          “   நீ என்னைப் போட்டுக்கொடுத்துவிட்டாய் என்ன… ?  இந்தா பிடி… எல்லாம் வெட்டித்துப்பரவாக்கிவிட்டேன். “  சண்முகநாதன் மேசையை விட்டு அகன்றார்.
மஞ்சுளா உரத்த குரலில் யாரையோ திட்டிப்பேசும் சத்தம் அவளது அறையிலிருந்து கேட்கிறது. மறுமுனையில் யார்..?
சண்முகநாதன் அபிதாவை ஏறிட்டு நோக்கியவாறு, அந்த அறைப்பக்கம் கையால் சைகை காண்பித்தார்.
அபிதா, மஞ்சுளாவின் அறைக்கதவின் பக்கம் வந்தாள்.
மஞ்சுளாவிடமிருந்து தமிழும் ஆங்கிலமும் கலந்து வந்த வசைகள் நெருப்பாக சுட்டன.
மறுமுனையில் யாராக இருக்கும் என்பதை அபிதா ஊகித்துக்கொண்டாள்.
(தொடரும் )








No comments: