கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -10


வடபுலத்தின் கல்விப் பாரம்பரியத்தை  மேம்படுத்திய அமெரிக்க மிஷன்
1950 ஓகஸ்ட் மாசம் ஒரு நாள், அட்டமி, நவமி, ராகுகாலம் இல்லாதவேளை, சித்திரவேலாயுதர் கோயிலில் தேங்காய் சிதற உடைத்துக்கும்பிட்டபின், தெல்லிப்பழை நோக்கி என் பயணத்தை மேற்கொண்டேன். நாவற்குழியில் இருந்து தெல்லிப்பழைக்கு நேரே ரயிலிற் செல்லலாம். அதனால் பயணம் சௌகரியமாக அமைந்தது.
இடையிடையே மனசில் ஒரு சலனம் ஏற்பட்டபோதும் அதிபர் அருளானந்தம் தந்த கடிதம், சான்றிதழ் ஆண்டி மாஸ்டர் தந்த நம்பிக்கை எல்லாம் நெஞ்சிலே நம்பிக்கை சுடர் ஏற்றின. நெஞ்சச் சுரங்கப்பாதையின் மற்றைய நுனியில் தோன்றிய ஒளிக்கீற்றின் நம்பிக்கையுடன் நான் தெல்லிப்பழை ரயில் நிலையத்தில் இறங்கினேன்.
ரயில் நிலையத்துக்கும் யூனியன் கல்லூரிக்கும் இடையே ஐந்து நிமிட நடைத்தூரம்தான். அதிபர் துரைரத்தினத்தின் அலுவலகத்தில் அவரது செயலாளர் முருகேசு என்னை வரவேற்றார். அருளானந்தம் போதகர் தந்த கடிதத்தை அவர் மூலம் அதிபர் துரைரத்தினத்துக்கு அனுப்பினேன்.
அதைப்படித்தவுடனேயே  “ உள்ளே வருக  “  எனக்கிடைத்த அழைப்பு, என் மனசில் நம்பிக்கையைத் தந்தது. அடுத்த இரண்டு வாரங்களுள் நான் யூனியன் கல்லூரியில்  “ அம்பி மாஸ்டர்  “ஆனேன்.
யூனியன் கல்லூரி ஓரளவு கிராமியச்சூழலில் அமைந்த கல்லூரி. அதனால், நகரக் கல்லூரி யாழ்.  பரி. யோவான்  கல்லூரியிற் காணாத சில கோலங்களை அங்கு அவதானித்தேன். கட்டடத்திலும் சூழலிலும் மாணாக்கரிலும் மட்டுமல்ல, பாட நெறியிலுங்கூடச் சில வேறுபாடுகள் தெற்றெனப் புலனாயின.
மொழி, அறிவியல், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுடன் மரவேலை, காகிதம் தயாரித்தல், அச்சுக்கோர்த்தல், அச்சுப்பொறி இயக்குதல் போன்ற தொழில்சார் கல்வி நெறிகளும் அங்கு பாடவிதானத்தில் இருந்தன. மாணாக்கர் அவற்றைப்பயிலும் வசதிகள் இருந்தன. அச்சகமும் இருந்தது.
முதலில்  ‘ யூனியன் ‘ கல்லூரி என்ற பெயர் மட்டுமே எனக்கு வியப்பூட்டியது. பின்பு, தொழில்சார் கல்வி வசதிகளும் பாடவிதானமும் அந்தக்கல்லூரியின் பின்னணி பற்றி அறியும் ஆவலைத்தூண்டின. அதனால்,  ‘யூனியன் ‘  கல்லூரி உருவாகிய சுவையான வரலாற்றை அறியமுடிந்தது. எனவே, எனது கதையிலும் பார்க்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க மிஷனின் கதையை முதலில் தொட்டுக்காட்டுதல் மிகப்பொருத்தம் என நினக்கிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே, அமெரிக்க – இலங்கை மிஷன் இலங்கைக்கு வந்தது. பிரித்தானியரின் குடியேற்ற நாடாக இலங்கை இருந்த அக்காலத்தில், கத்தோலிக்க, சி.எம். எஸ். , மெதடிஸ்ற் போன்ற கிறிஸ்தவ மிஷனரிமார் ஏலவே செயற்படத் துவங்கிவிட்டனர். ஆயினும், அமெரிக்க மிஷனின் வருகையை பிரித்தானிய ஆட்சியாளர் உள்ளுர விரும்பவில்லை.
அமெரிக்க – பிரித்தானிய உறவு கசந்திருந்த காலம் அது. எனினும்,  அமெரிக்க மிஷனரிகளைத் தடைசெய்யாமல் வரண்ட பிரதேசமான வட இலங்கைக்குச் செல்லுமாறு அரசு வற்புறுத்தியது. அதனாலேதான் அமெரிக்க மிஷன் வட இலங்கையிலே மட்டும் வேரூன்றியது. அதுவும் பின்னாளில் யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு வரப்பிரசாதமாக  அமைந்தது எனலாம்.
எந்த மிஷனரி ஊழியரும் கிறிஸ்தவ மத போதனை செய்வதற்கே ஈழத்திற்கு வந்தனர். நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் பணியாற்றினர். ஆயினும் வட இலங்கையிலே சமூக முன்னேற்றத்துக்கு அமெரிக்க மிஷனரிகள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் பாரியது.
கல்வி நிலையங்கள் நிறுவியும், சுகாதார நல்வாழ்வு பற்றிய அறிவூட்டலை  வளர்த்தும், மருத்துவ நிலையங்கள் நிறுவியும் பெண்களை கல்வியில் அக்கறை காண்பிக்கத்தூண்டியும், அச்சகம் நிறுவியும், செய்தித்தாள் வெளியிட்டும், பரவலாகச் சமுதாய முன்னேற்றத்திற்கு உழைத்த பெருமை அமெரிக்க மிஷனுக்குண்டு.
மற்றைய மிஷன்களைவிடப் பல்வேறு பரிமாணங்களில் அமெரிக்க மிஷனின் சேவை விசாலித்திருந்தது. அதற்கெல்லாம் மையமாக முதலில் அமைந்த ஊர்களில் முக்கியமானது தெல்லிப்பழை.
அமெரிக்க மிஷனின் முதலாவது தமிழ்ப்பாடசாலை 1816 ஆம் ஆண்டு அங்கு நிறுவப்பட்டது. அது இலவசக்கல்வி அளித்த தமிழ்ப்பாடசாலை. நாளடைவில் தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருமொழிப்பாடசாலையும் அங்கு நிறுவி, மொழிகளும் பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. காலப்போக்கிலே, அவை இணைந்துதான்  ‘யூனியன்  ‘கல்லூரி எனப்பெயர் பெற்றது.
அமெரிக்க மிஷன் அச்சகம் 1820 இலே தெல்லிப்பழையில் நிறுவப்பட்டது. 1841 ஆம் ஆண்டிலே  உதயாரகை, Morning Star ஆகிய இரு செய்தித்தாள்களும் அங்கு பிரசுரமாயின.
பெண் கல்வி, தமிழ் – ஆங்கிலப்பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை போன்ற வசதிகளும் அங்குதான் முதலில் அமைந்தன. வட்டுக்கோட்டை , மானிப்பாய், பண்டத்தரிப்பு, உடுவில், வல்வெட்டி, அச்சுவேலி எனப் பல மிஷன் நிலையங்கள் உளவெனினும துவக்க வேலைகளுக்குத் தெல்லிப்பழையே மையமாக அமைந்தது.

எல்லா மிஷன்களும் கிறிஸ்தவ மத போதனையும் மனிதநேயச்சேவைகளும் மேற்கொள்வதை யாமறிவோம். அறியாமை அகற்றி, நோய் துன்பம் ஒழித்து, சுகாதார வாழ்வு பற்றிய அறிவூட்டுவதில் எல்லா மிஷன்களும் ஈடுபடுகின்றன. எனினும், அமெரிக்க மிஷனின் சேவை தனிச்சிறப்புடையது. வட்டுக்கோட்டை கல்வி நிலையமும் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையும் இணுவில் மகளிர்  வைத்தியசாலையும் இன்னமும் இயங்குகின்ற நினைவாலயங்கள் எனலாம்.
மருத்துவ சாலைகளுடன் மருத்துவக்கல்வியை யாழ்ப்பாணத்தில் துவங்கி, 1860 களில் மருத்துவக் கல்வியைத் தமிழில் போதித்த பெருமையும் அமெரிக்க மிஷனுக்கே உண்டு. மருத்துவக்கல்வியை முதன் முதலாகத் தமிழிற் கற்பித்த பெருமை டாக்டர் சாமுவேல் பிஸ்க் கிறீன் அவர்களுக்கே உரியது. அவை எல்லாவற்றையும் சீர்தூக்கித் தெளிந்துதான், அமெரிக்க மிஷனின் பல்துறைச்சேவை யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றேன்.
உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை. இதை அன்றைய குடியேற்ற நாட்டரசு உணர்ந்தது. இன்றைய சிங்கள அரசும் பொறாமைப்படுகிறது. இதற்குச்சான்றாக இரண்டு எடுத்துக்காட்டுகள்.
அன்று குடியேற்ற நாட்டரசு ஆங்கில அறிவுள்ளவர்களைத் தேடியகாலம். யாழ்ப்பாணத்திலே ஆங்கிலக்கல்வித்தரம் மிக உயர்ந்ததாக இருந்தது. கொழும்பிலும் மற்றைய அரச பாடசாலைகளிலும் ஆங்கில அறிவுத்தரம்  குறைவாகவே இருந்தது. அதனால், இலங்கை வந்த கோல்புறூக் கமிஷன் பின்வருமாறு சுட்டிக்காட்டியது.
“  யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மிஷன் பாடசாலைகள் மிக நன்றாக நடத்தப்படுகின்றன. அதனால், அரச பாடசாலைகள் அவற்றுடன் போட்டியிட முடியாத நிலையில் உள்ளன.  “
அன்றைய அக்கூற்றுடன்,  இந்த நூற்றாண்டில், இலங்கை வெளிநாட்டு  அமைச்சு அதிகாரி ஒருவர், 1997 ஜனவரியில், National Geographic   சஞ்சிகைக்கு அளித்த பேட்டியின் ஒருபகுதியை நோக்குவோம்:
 “ அமெரிக்க மிஷனரிகளிடமிருந்து ஆங்கில மொழியை விரைந்து கற்ற தமிழரை, பிரித்தானிய குடியேற்ற நாட்டரசு உயர் பதவிகளில் அமர்த்தியதின் மூலம், சிங்கள சக்தியை நீர்த்தது. நாட்டின் சனத்தொகையில் சிறுபான்மையினரான தமிழர், 1947 ஆம் ஆண்டிலே அரச பதவிகளில் அறுபது    (60%) வீதத்தை கைப்பற்றியிருந்தனர்.
சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றியதற்கு சிங்கள சக்தியின் இழந்த வீரியத்தை மீளப்பெறும் நோக்கமே காரணமென்று அந்த அதிகாரி கூறினார். அமெரிக்க மிஷனின் கல்வித்தரம் பற்றியும் யாழ்ப்பாணம் பெற்ற நன்மைகள் பற்றியும் தெளிவுபடுத்தவே இந்த இரு எடுத்துக்காட்டுகளைத் தந்தேன்.
இனி, யூனியன் கல்லூரி அனுபவங்கள் சிலவற்றை நினைவுபடுத்துவோம். அனுபவங்கள் எனதுதான். எனினும், வாசகர்களுக்கும் பயன்தரக்கூடியவை என நான் கருதுவன எவையோ, அவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
1950 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் தொடங்கி 1968 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் வரை என் வாழ்க்கை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியுடனேயே இணைந்திருந்தது. 1968 இல், அரசின் கொள்கைப்படி பெயர்க்கப்பட்டு, கிழக்கு மாகாணத்துக்கு பலவந்தமாக அனுப்பப்படாவிடின், யூனியன் கல்லூரியை விட்டு நான் விலகியிருக்கமாட்டேன்.
ஆசிரிய கலாசாலையில் இரண்டு ஆண்டுகளும் தமிழ்ப்பாட நூலாக்க குழுவில் நான்கு மாதங்களும் தவிர, அப்பதினெட்டு ஆண்டுகளில் மீதிக்காலம் யூனியன் கல்லூரி சேவைக்காலமாகும்.
என்னைப்பற்றி 1955 இல் எழுதிய கட்டுரை ஒன்றிலே, இரசிகமணி கனக செந்திநாதன் பின்வருமாறு அறிமுகஞ்செய்தார்:
 “ விஞ்ஞான விளக்கங்களும் அருமையான கதைகளும் அமைதியான கவிதைகளும் பாடும் அம்பிகைபாகன் பிரபல எழுத்தாளர்கள் பிறந்த ஊராகிய நாவற்குழியைச்சேர்ந்தவர்.பண்பாட்டிலும் ஒழுங்கிலும் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார்.  “
நான் யூனியன் கல்லூரியிற் சேரந்து ஐந்து ஆண்டுகளில் எழுத்தப்பட்ட குறிப்பு இது. சமுதாயத்தின் பார்வையில் யூனியன் கல்லூரி எத்தகைய விம்பத்தை ஏற்படுத்தியது என்பதையும், ஆசிரியத் தொழிலைவிட என் ஈடுபாடு என்ன துறையிலே முன்னேறியது என்பதையும் இக்குறிப்பு தெளிவுபடுத்துகிறது. அவ்வேளை, கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் மறைந்திருந்த கனக செந்திநாதனை யான் அறியேன்!
அதிபர் ஐசாக் பொன்னையா துரைரத்தினம் ஓர் ஒழுக்கசீலர். மாணாக்கருக்குக் கட்டாக்காலிக் கழுதையின் சுதந்திரத்தை என்றுமே அளிக்காதவர். கலவன் பாடசாலை, ஆகையால் மிக அவதானத்துடன் ஒழுக்க நெறிகளை நடைமுறைப்படுத்தியவர். பரி. யோவான் கல்லூரியில் சிரேஷ்ட மாணவ தலைவனாக இருந்து அங்கு ஒழுங்கு முறைகளைப்பேணிய அனுபவம் எனக்கிருந்ததை அறிந்த அவர், என்னைக்கல்லூரியின் ஒழுங்குபேணும் ஆசிரியனாக (Discipline Master  ) ஓராண்டு காலத்தில் நியமித்துவிட்டார்.
இவ்வாறுதான் அம்பி மாஸ்டர், Discipline Master ஆனார். இந்த மாஸ்டர் பின்னர் என்னவானார்? என்ற கதையை அடுத்தவாரம் சொல்வேன்.
( தொடரும் )

No comments: