சுவீடசிக்ஸ்டி - பார்த்திபன் கனவு - சுந்தரதாஸ்

.


தமிழ் எழுத்தாளர்களுக்குள் சாகாவரம் பெற்ற எழுத்தாளராக திகழ்பவர் அமரர் கல்கி. 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரின் நாவல்கள் பல பதிப்புகளைக் கண்டு வாசகர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அவர் எழுதிய நாவலான பார்த்திபன் கனவு 1960இல் தயாரிக்கப்பட்டது.

கல்கியின் மறைவுக்குப் பிறகு உருவான இந்த படத்திற்கு வசனங்களை எழுதியவர் மற்றும் ஒரு பிரபல நாவலாசிரியர் விந்தன் ஆவார் கல்கி வார இதழில் சில காலம் பணியாற்றிய விந்தன் கதையினை உள்வாங்கிக்கொண்டு சிறந்த முறையில் வசனங்களை எழுதியிருந்தார். அதேபோல் பார்த்திபன் கனவு தொடராக வந்தபோது அதற்கு ஓவியங்களை வரைந்த மணியன் திரைப்படத்தின் ஓவிய வடிவமைப்பையும் அடிமையாக கையாண்டு இருந்தார்.

சோழ அரசனான பார்த்திபன் பல்லவ அரசனான மாமல்லருக்கு கப்பம் கட்ட மறுத்து போரிட்டு மடிகிறான் . மரணத்தருவாயில் தன் மகன் வீரனாக வளர்ந்து சுதந்திர சோழ அரசை நிலைநாட்ட வேண்டும் என்ற தன் கனவை சிவனடியார் ஒருவரிடம் கூற அவரும் அதற்கு உதவுவதாக வாக்களிக்கிறார். பார்த்திபன் மகன் விக்கிரமன் வளர்ந்து வீரனாகிறான் , அதேசமயம் இளவரசி குந்தவை மீது அவருக்கு காதல் மலர்கிறது. கடமையா காதலா என்ற நிலைக்கு உள்ளாகிறான் அவன் .

கல்கியின் இந்த கதை தொடராக வந்தபோது அதில் ஒரு மர்மத்தையும் வைத்திருந்தார் அவர் . பார்த்திபனுக்கு உதவுவதாக சொன்ன அந்த சிவனடியார் யார் என்பதுதான் அது, ஆனால் திரைப்படத்தில் அந்த மர்மத்தை பேண முடியவில்லை , இது படத்தின் விறுவிறுப்பை சற்றுக் குறைந்தது எனலாம்.


படத்தில் கதாநாயகனாக ஜெமினி வருகிறார் இவருக்கு ஜோடியாக நடித்தவர் வையந்திமாலா . அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் படத்தில் தோன்றினார் வையந்திமாலா , மாமல்லராக எஸ் வி ரங்காராவ் நடித்து படம் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தார். இவர்களுடன் சுப்பையா வீரப்பா ராகினி ஆகியோரும் நடித்தார்கள்.
படத்தில் சிறப்பாக அமைந்தது வேதாவின் இசையாகும் பிற்காலத்தில் மேற்கத்திய இசையை வாரி வழங்கிய வேதா சரித்திரப் படமான இதில் கர்நாடக பின்னணியில் இசையை பொருத்தி இருந்தார் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் அற்புதமாக கொடுக்கப்பட்டிருந்தது. பழகும் தமிழே பார்த்திபன் மகனே, இதய வானின் உதய நிலவே, கண்ணால் நான் கண்ட கணமே ஆகிய பாடல்கள் இன்றும் இனிக்கின்றன குமாரி கமலாவின் நடனம் மேலதிக போனஸ் . பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பார்த்திபன் கனவை யோகானந்த் டைரக்ட் செய்திருந்தார் மூன்றரை மணி நேரம் ஓடும் சரித்திரப் படம் பார்த்திபன் கனவுNo comments: