ஒரு போரின் முன்ணனி நிலையில் Matina Jewell - செ .பாஸ்கரன்

.
Caught in the Crossfire - An Australian peacekeeper beyond the front-line.இரண்டு மாதங்களுக்கு முன்பு குயின்ஸ்லாந்து சென்றபோது ஒரு பெண் எழுத்தாளரை சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. Caught in the crossfire என்ற புத்தகத்தை எழுதிய Matina Jewell. இவர் ஐக்கிய நாடுகள் சமாதனப் படையில் இருந்த ஒருவர். ஒரு பெண்ணாக நீண்டகாலம் இந்த சமாதனப் படையில் வேலை செய்துள்ளார் .ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இராணுவத்தில் பணிபுரிவதென்பது எப்படி இருக்கும் என்பது தெரியும் . அவருடைய இந்தப் புத்தகத்தில் அவர் கூறிய கதைகளை எல்லாம் கேட்கின்ற போது உண்மையிலேயே சில விடயங்கள் ஆச்சரியமாகவும் இவர்களைப் பற்றி பெருமை படக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஆஸ்திரேலிய நாட்டு இராணுவத்தில் இருந்து சமாதான படையோடு சேர்ந்து வேலை செய்வதற்காக மிகவும் முயற்சிகள் எடுக்கிறார், மிகவும் கஷ்டப்படுகிறார் இவருடைய வாழ்க்கை ஒரு பக்கம், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ராணுவத்தில் எப்படி செயல்படுவது என்பது இன்னுமொரு பக்கம் , அவருடைய இளமைக் காதல் வாழ்க்கை போராட்டம் இப்படி எல்லாவற்றையும் இந்த புத்தகத்தில் தந்திருக்கின்றார். அதுமட்டுமல்ல இந்த புத்தகத்தில் இல்லாத பல விடயங்களைக் கூட அவர் என்னோடு பேசும்போது பகிர்ந்துகொண்டார்.

சாதாரணமாக இந்த சமாதான படைகள் ஒரு நாட்டுக்கு போகின்ற போது அங்கே என்ன நடக்கின்றது என்பதை எல்லாம் கண்கூடாக பிறநாடுகளில் பார்த்தவர்கள் நாங்கள், ஒரு பக்கச் சார்பாக இருக்கின்ற அதிகமான விடயங்களை கண்கூடாக கண்டு இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூட சில நேரங்களில் நாங்கள் எண்ணி இருக்கின்றோம், ஆனால் சில அதிகாரிகள் மிக நேர்மையாகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதையும் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். சமாதான இராணுவமாக இருந்தால்கூட அவர்களுக்கு ஒரு பக்கம் இருக்கும் அல்லது அவர்களுடைய அதிகாரிகள் உடைய கட்டளை அல்லது அதிகாரிகளை திருப்திப்படுத்தல் என்பது போன்ற விஷயங்களுக்காக சில விடயங்களை அவர்கள் செய்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவருடன் பேசியபோதும் இந்த புத்தகத்தில் அவர் பதிந்துள்ளதைப் பார்க்கின்ற போதும் மிக மகிழ்ச்சி யாகத் கத்தான் இருக்கிறது.
ஈரான் , சிரியா இஸ்ரேல் இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த கண்காணிப்பில் இவர் பங்காற்றி இருக்கின்றார், பல நாட்டு ராணுவம் கொண்ட ஒரு குழுவில் இவர் அங்கே சென்றால் முதலில் குறிப்பிட்டது போல ஒரு ஒரு பெண் போராளியாக ஆண்களுக்கு மத்தியில் , பல நாட்டு ராணுவ வீரர்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்கள் பெண்களை பார்க்கும் விதம் இவற்றையெல்லாம் தாண்டி ஆஸ்திரேலியப் பெண் போராளியாக அங்கே இருக்கக்கூடிய ஆண்களுக்கு போட்டியாக எல்லாவற்றையும் செய்யக் கூடிய திறமை படைத்தவராக இருக்கிறார். ஆண்களே மேலானவர்கள் எல்லாவற்றையுமே செய்யக்கூடியவர்கள் இவள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் செய்ய முடியுமா என்ற ஒரு ஏளனப் பார்வை அதனால் ஏற்படுகின்ற சிக்கல்கள், இவருக்கு கொடுக்கப்படும் துன்பங்கள், எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டும் , தாங்கிக் கொண்டும் தொடர்ந்து வேலை செய்கின்றார்.

அரபு நாட்டு மொழி நன்றாக கற்றுக் கொண்டு பேசக்கூடிய வல்லமையோடு அவர் நடந்து கொண்டதால் அவருக்கு பல சம்பவங்களை சமாளிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவற்றை எல்லாம் நேர்மையாக பதிவு செய்கின்றார்.பலருடைய பதிவுகளை பார்த்தால் ஒரு பக்கத்துக்கு சாதகமான விடயங்கள் அதிகமாக இருக்கும் ஆனால் இவர் சிரியா செய்கின்ற தவறுகள் இஸ்ரேல் ராணுவம் செய்கின்ற தவறுகள் எல்லாவற்றையுமே சரியாக பதிவு செய்திருக்கின்றார். இவற்றை உங்கள் மேலிடத்திற்கு தகவலாக கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியை கேட்ட போது தாங்கள் கொடுத்த சரியான படங்களும் தகவல்களும் தொலைக்காட்சிகளில் வராமல் ஒரு பக்கச் சார்பான விடயங்கள் வந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது என்றது மட்டுமல்ல இந்த புத்தகத்தில் பதிந்தும் இருக்கின்றார். ஒருசில மனிதர்களில் மனித நேயம் மிக்க நல்ல ஒரு பெண் போராளியைக் காணக்கூடியதாக இருந்தது இவருடைய சரியான பார்வையும் இவருடைய முயற்சியும், திறமையும் இவரை மேலும் மேலும் மிக உயரத்துக்கு கொண்டு சென்று ஐக்கிய நாட்டு சமாதனப் படைக்கு ஒரு ஆலோசகராக போகக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
அவர் தொட்டுச் சென்ற விடயங்களில் சிரியா நாட்டுப் பெண்களின் சில செயட்பாடுகள் பற்றியது. இஸ்லாமிய உடை அணிந்து முகம் மட்டும் தெரிய செல்கின்ற பெண்கள் அங்கே இருக்கின்ற steam bath எடுக்கும் இடத்தில் என்ன செய்கின்றார்கள் என்று மிக நகைச் சுவையாக பதிந்திருந்தாலும் அந்தப் பெண்களின் உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும் வலிகளையும் அழகாக காட்டியிருக்கின்றார் .

ஒரு போரின் முன்ணனி நிலையில் நின்று இப்படியான நல்ல பதிவுகள், உண்மையான பதிவுகள் வரும்போது அதை படிக்கின்ற போது மன நிறைவாக இருக்கின்றது.

அவருடன் ஒரே குழுவில் இருந்தவர்களில் மூவர் இறக்க இவர் காயப்பட்டு வந்து மீண்டும் போய் வேலை செய்யும் போது அவர்கள் இறந்த இடத்தில் நின்று அவர்களோடு பேசியது மனதை தொட்டு விடுகின்றது .

Caught in the Crossfire - An Autralian peacekeeper beyond the front-line.

No comments: