ஈழ மண் தந்த கலைஞர் ஏ.ரகுநாதன் பேசுகிறார் - கானா பிரபா


"நிர்மலா படம் திரையிட முன்னால் ஒரு பத்திரிகைக் காட்சி பாமன்கடை தியேட்டரில் பண்ணியிருந்தோம். அதற்கு நாம் எம் அரசியல் தலைவர்களை அழைத்திருந்தோம். அப்போது யூஎன்பி ஆட்சியில் இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா, திருமதி பண்டாரநாயக்கா, கொம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அழைப்பு விடுத்திருந்த எம் தமிழ் எம்பிக்கள் யாரும் வரவில்லை. ராஜதுரை கடிதம் அனுப்பியிருந்தார், எனக்கு நேரமில்லை என்று. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு மனவேதனையாக இருக்கும் என்று.

திருமதி பண்டாரநாயக்கா என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் 
"நாங்கள் ஒரு தமிழ்ப்படத்தைத்தானே பார்க்கப் போகிறோம்?" என்று.


"ஓம்" என்றேன்


"தமிழ் எம்பிமாரைக் கூப்பிடவில்லையா?" என்று கேட்டார்.


நான் அப்போது அவகாசம் இருந்ததால், கொள்ளுப்பிட்டி சென்று செல்வநாயகம் அவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தேன். பின்னர் திருமதி பொன்னம்பலமும் வந்து சேர்ந்தார்.
எங்கள் தமிழ்த்திரைப்படக்கலையை யாருமே ஊக்குவிக்கவில்லை, அதுதான் உண்மை.
எல்லாப் பத்திரிகைகளும் நம்பிக்கையூட்டும் படம் என்று எழுதிவிட்டன. அப்போது திரைப்பட விநியோகஸ்தர்களாக இருந்த நம் தமிழர்கள் இந்தியாவில் இருந்து அரசகட்டளை, பணமா பாசமா, நான் என்று நான்கு பெரும் வெள்ளிவிழாப்படங்களை ஒரு நாள் அவகாசத்தில் இறக்குமதி செய்து திரையிட்டு எங்கள் படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எம் படத்தை ஓடச்செய்தவர்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களும் தான் காப்பாற்றினார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள், இது எங்களுடைய படம் என்று சொல்லி குழந்தைகளை அழைத்து வந்து தியேட்டர்களை நிரப்பினார்கள். ஆனாலும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் எனக்குத் தோல்வியே."

 “பாரிஸில் எடுத்த உங்கட படத்தை ஏன் இங்கே கொண்டு வந்து போடுகிறீர்கள் என்று ஒரு கோபமாகக் கேட்டார் ஒரு பெண்மணி.

அதற்கு நான் ஆறுதலாகச் சொன்னேன்
“இந்தியாவில் தயாராகும் படத்தை நீங்கள் லண்டனில் இருந்து பார்ப்பதில்லையா?
ஜேர்மனி, பிரான்ஸில் இருக்கும் உங்கட சகோதரங்களோட நீங்கள் சுகம் விசாரிப்பதில்லையா? அப்படித்தான்” என்று.

இப்படியான தன் மன ஆதங்கங்களைப் பகிர்ந்திருந்தார் 2006 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த, ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர் எம் பெருமைக்குரிய ஏ. ரகுநாதன் அவர்கள்.

அவரின் நினைவில் இந்தப் பேட்டியின் முழு வடிவத்தை இப்போது பகிர்கிறேன்.


No comments: