அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 12 - கெத்து வாத்தியம் அல்லது ஜல்லரி­


கெத்து வாத்தியம் அல்லது ஜல்லரி­ தாளகருவி

அமைப்பு
வீணையைப் போலவே தோற்றம் கொண்டது கெத்து வாத்தியம். குடத்தின் அடிப்பகுதி, யாழின் அடிப்பகுதி இரண்டும் தரையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு தட்டையாக அமைந்துள்ளன. சுருதியை மாற்றுவதற்கான குதிரை, இடப்புறத் தண்டியில் இடம்பெற்றுள்ளது. தண்டியில் மேளங்கள் இருக்காது. மேலே 4 வெள்ளி தந்திகள் (வேறு வேறு கன அளவுள்ளதாக) இழுத்து 4 பிரடைகளில் கட்டப்பட்டிருக்கும்.  மணிக்காய்களின் மூலம் துல்லியமாக இதில் சுருதி சேர்க்க முடியும். 25 மற்றும் 32 செ.மீ நீளமுள்ள இரண்டு மூங்கில் குச்சிகளால் இந்தத் தந்திகளைத் தட்டி இசைக்க வேண்டும். வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும். இதில் மத்திய ஸ்தாயி சட்ஜம், அனுமந்திர ஸ்தாயி சட்ஜம், மத்திய ஸ்தாயி பஞ்சமம், தாரஸ்தாயி சட்ஜம் (அல்லது அனுமந்திர பஞ்சமம்) ஆகிய சுரங்கள் ஒலிக்கும்.
இடதுகைக் குச்சி சிறிது தட்டையாகவும், வலதுகைக் குச்சி சிறியதாகவும் இருக்கும். இக்குச்சிகளின் கைப்பிடிப் பகுதிகளில் பரல்களும் சலங்கைகளும் பொருத்தப்பட்ட வளையமைப்பு உண்டு. இவை சலங்கை மற்றும் வெண்கல நாதத்தை உருவாக்கும். வலதுகைக் குச்சியை குதிரைப்பகுதிக்கு அருகில் தட்டினால் விதம்விதமான ஜதிக்கோர்வைகள் உருவாகும். இதை வாசிக்க மிகுந்த சாமர்த்தியமும் புலமையும் தேவை.

குறிப்பு
பார்க்க நரம்புக்கருவியாகத் தோன்றினாலும், உண்மையில் இது தாளகருவி. மிருதங்கத்தில் வாசிக்கப்படும் அத்தனை சொற்கட்டுகளையும் இவ்வாத்தியத்தில் பிசிறின்றி வாசிக்க முடியும்.  இசையரங்கங்களிலும் பக்கவாத்தியமாக இசைக்கப்பட்டது. ஜல்லரி, ஜல்லி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.
தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் ஒருமுறை பயண இடைவெளியில் ஆவுடையார்கோவிலில் தங்க நேர்ந்தது. அம்மன்னரை மரியாதை நிமித்தமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ஒருவர் சந்தித்தார். அந்நிகழ்வில், தஞ்சை மன்னரோடு வந்திருந்த சேஷய்யா, குப்பையா, சுப்பையா சகோதரர்கள் இந்த வாத்தியத்தை இசைத்து மகிழ்வூட்டினார்கள். இதன் நாதத்திலும் வடிவத்திலும் வாசிக்கும் முறையிலும் மயங்கிப்போன சமஸ்தான மன்னர், ‘இக்கலைஞர்களையும், இந்த இசைக்கருவியையும் திருப்பெருந்துறை கோயிலுக்குக் கொடையாகத் தரவேண்டும்’ என்று தஞ்சை மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். தஞ்சை மன்னர் அக்கோரிக்கையை ஏற்று கொடையளித்தார். இன்று வரையிலும் சேஷய்யா சகோதரர்களின் பரம்பரையினரே கெத்துவாத்தியத்தை ஆவுடையார்கோவில் சிவயோக நாயகி சன்னிதியில் வாசிக்கிறார்கள். இவர்களுக்கு இறையிலி நில மானியமும் அளிக்கப்பட்டுள்ளது.
அன்மை காலம் வரை திரு சீத்தாராம பாகவதர் என்கிற பெரியவர் இசைத்து வந்தார்அவரின் முதுமை காரணமாக தற்பொழுது இசைப்பவர் எவரும் இல்லை. சில சமயங்களில் அவரது சகோதரர் இசைக்கிறார். இத்தனை காலம் தொடர்ந்த ஒரு மரபு அழிவின் விளிம்பில் உள்ளது. சிவயோகாம்பாள் அருள் செய்தால் எதாவது நடக்கலாம். இவரது சகோதரர் திரு சுப்ரமணிய பாகவதர் அவர்கள் சில கலைஞர்களை பயிற்றுவித்துள்ளார்கள். அதில் ஒருவர் கும்பகோணத்தில் வசிக்கும் திரு சுப்ரமணியம் சோமசுந்தரம்(+919500417099) அவர்கள். இந்திய அரசின் சங்கித் நாடக் அகாடமி ஒரு தொகையை ஒதுக்கி இந்த கலையை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றது. ஆனால் கடினமான இந்த கலையை கற்க எவரும் முன் வரவில்லை என்கிறார்கள்.
திருமுறைகளில் சல்லரி என்கிற இசைக்கருவி பற்றிய குறிப்புகள் உள்ளன.ஆனால் சல்லரியும் ஜல்லரியும் ஒன்று தானா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. இசை வல்லுனர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

புழக்கத்தில் இருந்த இடங்கள்
திருப்பெருந்துறை என்று போற்றப்படும் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் ஆலயத்தின் சிவயோக நாயகியின் சந்நிதியில் மட்டும் ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் இந்த இசைக்கருவியின் லயம் ஒலித்துக் கொண்டிருந்தது. திருச்சங்கமும் கெத்து வாத்தியமும் மட்டுமே கோயிலுக்குள் ஒலிக்கும்.
பாடல்:
சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழ றாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை யண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே - திருமுறை 3, சம்பந்தர்

காணொளி
https://youtu.be/5Mi100Rvimk
https://www.youtube.com/watch?v=rKjyteD_GLI 
https://www.youtube.com/watch?v=2BVdDW3OFJA
-சரவண பிரபு ராமமூர்த்தி
1.     P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai 
 வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்


No comments: