அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரஜைகளின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி மாலை 4. 00 மணி முதல் 5.00 மணிவரையில் காணொளி கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது.
அண்மைக்காலத்தில் தோன்றியிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை உருவாக்கி ஆரோக்கியத்தை பேணவேண்டிய சூழ்நிலை தோன்றியிருப்பதனால், வழக்கமாக மண்டபத்தில் நடைபெற்றுவந்த முதியோர் சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்தே, இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக இத்தகைய சந்திப்புகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.
வீடுகளுக்குள் முடங்கியிருப்பதனால், தனிமை ஏற்படுத்தும் மனஅழுத்தங்களையும் இத்தகைய காணோளி சந்திப்புகள் தவிர்ப்பதற்கு வழிசமைக்கும் என்பதை கவனத்தில் கொண்டிருக்கும் கேசி தமிழ் மன்றத்தின் முதியோர் அமைப்பு இந்த புதிய நடைமுறையை அண்மைக்காலமாக ஆரம்பித்துள்ளது.
அண்மையில் பாரிஸ் மாநகரில் இந்த வைரஸின் தாக்கத்தினால் மரணித்த ஈழத்தின் மூத்த கலைஞர் ஏ. ரகுநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த காணோளி நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திருமதி மதுரா ராஜலிங்கம் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில், திரு. நவரட்ணம் வைத்திலிங்கம் அனைவரையும் வரவேற்று சுகநலம் விசாரித்தார்.
அதனையடுத்து ரகுநாதன் சம்பந்தப்பட்ட நேர்காணல் பதிவும் இக்காணோளியூடாக காண்பிக்கப்பட்டது.
முதியோர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து, எழுத்தாளர் முருகபூபதி, இந்தச்சந்திப்பில் இணைந்து ரகுநாதனின் கலை உலகவாழ்வும் பணிகளும் பற்றி உரையாற்றினார்.
“ மாணவப்பருவத்தில் 1947 ஆம் ஆண்டளவில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் மேடையேறிய ரகுநாதன், கலை இலக்கிய ஆர்வத்தினால், கல்லூரியை விட்டு அகன்ற பின்னரும் கலைத்தாகம் கொண்டிருந்தார். “ எனத் தெரிவித்த முருகபூபதி, தொடர்ந்தும் பேசுகையில், ரகுநாதனின் அந்த கலைத்தாகம் பாரிஸ் மாநகரில் அவர் மறையும் வரையில் நீடித்திருந்தது. மறையும் போது அவருக்கு 84 வயது எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“ ரகுநாதனின் கல்லூரி வாழ்க்கையில் தொடங்கிய கலை, இலக்கிய ஆர்வம், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியதன்மூலம் தங்கு தடையின்றி தொடர்ந்தது.
ஈழத்தின் மூத்த பெருங்கலைஞர் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் நாடகப்பாசறையில் வளர்ந்திருக்கும் ரகுநாதன், அவரையே தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பவர்.
தனது தெய்வம் தந்த வீடு திரைப்படத்திலும் கலையரசு அவர்களை தோன்றவைத்தவர். அதற்கு முன்னர் தாம் தயாரித்து வெளியிட்ட நிர்மலா திரைப்படத்தில் ஈழத்தின் புகழ்பெற்ற கலைஞர் நடிகமணி வைரமுத்து அவர்களின் மயானகாண்டம் இசைநாடகத்தையும் இணைத்திருந்தார்.
கவிஞர் அம்பி எழுதிய வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகத்திலும் ரகுநாதன் நடித்துள்ளார்.
வேதநாயகம் என்ற ஆசிரிய பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் தயாரித்த கடமையின் எல்லை என்ற முழு நீளத்திரைப்படத்திலிருந்துதான் ரகுநாதனின் திரையுலக வாழ்க்கை ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, ரகுநாதனே தயாரித்து வெளியிட்ட நிர்மலா திரைப்படத்தில் ஈழத்தின் பலபாகங்களையும் சேர்ந்த கவிஞர்கள், நடிகர்கள், ஒளி, ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்களையெல்லாம் இனம், மதம், மொழி வேறுபாடின்றி இணைத்து இயங்கியவர்.
இந்த முன்மாதிரியான பண்பு அவரிடத்தில் குடியிருந்த விசேட குணாதிசயமாகும். இலங்கையில் தலைநகரத்தை வாழ்விடமாகக்கொண்டிருந்த சினிமாஸ் குணரட்னம், சிலோன் தியேட்டர்ஸ் செல்லமுத்து , எஸ்.பி. எம் சவுண்ட்ஸ் ஸ்ரூடியோ முத்தையா ஆகியோர் தமிழராக இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து தயாரித்து வெளியிட்ட அனைத்தும் சிங்களப்படங்களே. அத்துடன் இந்தியாவிலிருந்து தமிழ், இந்தி, உட்பட அனைத்துமொழிப்படங்களையும் தருவித்து தங்கள் தியேட்டர்களில் காண்பித்து வந்தார்கள். ஆனால், அவர்கள் உள்நாட்டில் எமது கலைஞர்களின் தமிழ்த்திரைப்பட ஆர்வத்திற்கு ஆதரவாக செயற்படவில்லை.
ரகுநாதன் பங்கேற்ற கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்கள் வெளியான சமயங்களிலெல்லாம் இந்தியாவிலிருந்து வசூலை அள்ளிக்குவிக்கும் படங்களை இறக்குமதி செய்து காண்பித்தனர்.
இதனால் ரகுநாதன் பங்கேற்ற ஈழத்து திரைப்படங்கள் மட்டுமல்ல, இதர கலைஞர்கள் எடுத்த பல தரமான தமிழ்த்திரைப்படங்களும் வசூலில் தோல்விகளைத்தான் தழுவின.
இந்த விடயங்களை நாம் ரகுநாதனின் நினைவுப்பகிர்வில் தெரிவிக்கவேண்டியிருக்கிறது.
1980 இற்குப்பின்னர் எமது தாயகத்தில் தோன்றிய அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, ரகுநாதனும் புலம்பெயர்ந்து, இந்தியாவுக்கும் பின்னர் அய்ரோப்பிய நாடுகளுக்கும் சென்றார். எனினும் அவரிடமிருந்த உள்ளார்ந்த கலை ஆர்வம் என்றைக்கும் அவரை விட்டு நீங்கவில்லை.
ரகுநாதனும், எம்.ஜி.ஆர், சிவாஜி, எம். ஆர். ராதா, மனோகர், எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்று நாடகமேடையிலிருந்து உருவான கலைஞர்தான். அத்துடன் கூத்து மரபிலிருந்தும் வளர்ந்தவர். அவர் இந்தத்துறைக்குள் பிரவேசித்த காலப்பகுதியில் திரைப்பட பயிற்சிக்கல்லூரிகள் இருக்கவில்லை.
அவரது நடிப்பு பாணி நாடகத்திலிருந்தே வளர்ந்தது என்பதையும் கவனித்தவாறுதான், அவர் நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் வழங்கிய பங்களிப்புகளை நாம் அவதானிக்வேண்டும்.
“ ரகுநாதன் அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உட்பட அவரது கலையுலக நண்பர்கள் ரசிகர்களுக்கு இந்த காணொளி சந்திப்பின் மூலம் இரங்கலை தெரிவித்துள்ள கே.சி தமிழ்மன்றத்தின் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினருக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். “ என்றும் முருகபூபதி குறிப்பிட்டார்.
இந்த இரங்கல் நிகழ்ச்சியையடுத்து திருமதி சாந்தி சந்திரக்குமார் நடத்திய பொது அறிவுப்போட்டியில் உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சரியான பதில்களை தருவதற்கு முன்வந்தனர்.
அனைத்துலகம் சம்பந்தப்பட்டதாக சாந்தி முன்வைத்த கேள்விக்கொத்து அமைந்திருந்தது. இந்த நிகழ்வின் மூலம் பல புதிய செய்திகளையும் அறியக்கூடியதாக இருந்தது.
முக்கியமாக முதலில் மகாத்மா காந்திக்காக தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா என்பது முதல், கடன் தொல்லையில்லாத நாடு நோர்வே என்பது வரையில் பல செய்திகள் பதிலாகத் தெரிந்தன.
இதனையடுத்து. திரு. நவரட்ணம் வைத்திலிங்கம் அவர்கள் அடுத்த காணோளி சந்திப்பு பற்றிய நிகழ்ச்சிகளைப்பற்றி அறிவித்தார்.
எதிர் வரும் மேமாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் அடுத்த காணொளி ஒன்று கூடல் நிகழ்வின்போது திருமதி மீனாட்சி அவர்களினால் யோகா பயிற்சி வழங்கப்பட்டு, அதன் பின்னர் அங்கத்தவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வூட்டும் புதிர்ப் போட்டி நடைபெறும்.
மறுநாள் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் சந்திப்புத்தொடரில் சித்தவைத்திய மாணவி செல்வி அபர்ணா ரஐனிகாந்த், சித்த வைத்தியம் சம்பந்தமாக உரையாற்றுவார். அதைத்தொடர்ந்து அங்கத்தவர்களிடையே அவர்கள் விரும்பும் நிகழ்வுகள் இடம்பெறும்.
மிகவும் புரிந்துணர்வோடும் ஆரோக்கியமாகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஒருவரையொருவர் முகம் பார்த்து சுகநலன் விசாரிப்பதற்கும் அவர்களின் உறவுகள் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதற்கும் இத்தகைய காணோளி ஒன்றுடல்கள் எதிர்காலத்தில் சமூகப்பயன்பாடு மிக்கதாக அமையும்.
No comments:
Post a Comment