உலகச் செய்திகள்


நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

 'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'

‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்

 கொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

70 இலட்சம் எதிர்பாரா கர்ப்பங்கள் உருவாகும் சாத்தியம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்- கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு ஆண் குழந்தை

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்

கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை



நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Wednesday, April 29, 2020 - 11:02am

நியூசிலாந்து முழுவதும் இதுவரை 1,500க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில்  80 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (27ம் திகதி) ‘நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்’ என  நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார்.
கொரோனா வைரசை ‘முற்றிலும் ஒழிக்கும் இலக்கை’ அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று (28) காலை முதல் நியூசிலாந்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாக  அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால்  4 இலட்சம் பேர் தங்கள் பணிகளுக்கு நேற்று சென்றுள்ளனர். சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.  நன்றி தினகரன்  










 'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'









லெபனானில் இறங்கி மக்கள் போராட்டம்
வருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும்  தெற்கே இஸ்ரேலையும்  மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பொருளாதார நிலைத்தன்மையின்மை  வேலைவாய்ப்பின்மை  வறுமை போன்ற காரணங்களால் லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இலட்சக்கணக்கானோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போரடத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில்  உலகையே உலுக்கி வரும் கொரோனா லெபனானிலும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.
வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும்  வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில்  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் லெபனானின் பல்வேறு பகுதிகளில் குவிந்த மக்கள் அரசுக்கு எதிராக  வீதிகளிலும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மக்கள் வீதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆனால்  வீடுகளை விட்டு வெளியே வந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்  முகமூடியை அணியாமலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி குற்றச்சாட்டி வருகிறார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களில் ஒருவர் கூறுகையில்  ‘’ சாப்பிட உணவே இல்லாதபோது நாட்டில் வைரஸ் பரவுவது குறித்து நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும். நானும் என் குடும்பமும் எப்படியும் உணவின்றி பட்டினியால் சாகத்தான் போகிறாம்’’ என்றார்.
அதேபோல் மற்றொரு போராட்டக்காரர் கூறுகையில்  தனது 11 வயது மகனுக்கு உணவளிக்க போதிய பணம் இல்லை என்றார்.
இதற்கிடையில்  வீதிகளில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது தங்கள் கண்ணில்பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் அவற்றை தீவைத்தும் கொளுத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கூடுதல் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பான சூழல்நிலவி வருகிறது.
கொரோனா வைரசும்  ஊரடங்கும் வறுமைக்கு வழி வகுத்து பட்டினியால் மக்கள் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகி வருவதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.  நன்றி தினகரன் 











‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்









சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால்  30 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில்  10 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
கொரோனா பரவத் துவங்கியதிலிருந்தே  சீனாவின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணம் சீனாவின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (27ம் திகதி) செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது:
ஆரம்பத்திலேயே இந்த வைரசை சீனாவில் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்போதே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால்  உலகம் முழுவதும் பரவி இருக்காது. இதனால் சீனாவிலிருந்து வைரஸ் பரவியது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.
வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜேர்மனி 165 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் கேட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் உலகிற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் இது. அதனால்  ஜேர்மனி கேட்கும் தொகையைவிட அதிகமான தொகையை நாங்கள் கேட்க உள்ளோம். இறுதித் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அமெரிக்கா  ஜேர்மனி உட்பட பல நாடுகள்  கொரோனா விவகாரத்தில் சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருவதோடு  இழப்பீடு கேட்க தயாராகி வருகின்றன.  இந்நிலையில்  சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூவா சுனியிங் கூறுகையில்  'கொரோனா தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள். வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உங்களது சக்தியைச் சேமிப்பது நல்லது' எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 











கொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்









கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில்  ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவி வருவதால்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  போக்குவரத்தை தடைப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சூழ்நிலைக்கு ஏற்ப  வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்துள்ளது.
அவ்வகையில் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ரஷ்யா  பெரு  சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 14 நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்  அங்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய தடை விதித்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.   நன்றி தினகரன் 












70 இலட்சம் எதிர்பாரா கர்ப்பங்கள் உருவாகும் சாத்தியம்








ஊரடங்குச் சட்டக் கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனாவின் தாக்கமும், அதன் எதிர்வினையும் உலகம் முழுவதும் எப்படி விரிவடையும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே சமயத்தில், பெண்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த இந்த ஆய்வை வெளியிட்டுள்ளோம். கொரோனா பாதிப்பு காரணமாக வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. பெண்களும், வைரஸ் தாக்கும் அச்சத்தில், வழக்கமான பரிசோதனைகளுக்கு கூட வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லை.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பொருட்கள் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
உலகம் முழுவதும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 114 நாடுகளில் சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 இலட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.
இதனால், எதிர்வரும் மாதங்களில், 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்.
மேலும், ஆண்களும் பெண்களும் வீட்டிலேயே இருப்பதால், மோதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. 6 மாதங்களில், 3 கோடியே 10 இலட்சம் மோதல்கள் இடம்பெறக்கூடும் என்று கணித்துள்ளோம். 3 மாதங்கள் ஊரடங்கு நீடித்தால், மேலும் ஒரு கோடியே 50 இலட்சம் மோதல் சம்பவங்கள் இடம்பெறும்.
அத்துடன், குழந்தை திருமணங்கள் இலட்சக்கணக்கில் அதிகரிக்கவும் இந்த ஊரடங்கு வழிவகுக்கும். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 










இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்- கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு ஆண் குழந்தை







இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு  லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜோன்சன் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் திங்களன்று பணிக்குத் திரும்பினார்.
ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜோன்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.   நன்றி தினகரன் 











கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்






அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில்  கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்  ‘கொரோனா நோயாளிகளுக்கு வைரசுக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது. முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஏஐடி) மதிப்பீடு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்  மற்ற மருந்துகளை விட கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து 31 சதவீதம் கூடுதல் பலனை அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
மற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும்போது சராசரியாக 15 நாட்களில் நோயாளிகள் குணமடைகின்றனர். ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் 11 நாட்களில் நோயாளி குணமடைந்துள்ளார் என்றும் என்ஐஏஐடி கூறியுள்ளது.
என்ஐஏஐடி தலைவர் அந்தோனி பாயுசி கூறுகையில் “நோயாளிகளை மீட்பதற்கான நேரத்தைக் குறைப்பதில் ரெம்டெசிவிர் ஒரு தெளிவான  குறிப்பிடத்தக்க  நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. 31 சதவிகித முன்னேற்றம் என்பது  100 சதவிகிதம் நொக் அவுட் போல் தெரியவில்லை என்றாலும்  தற்போதைய முன்னேற்றம் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த மருந்தால் வைரசை தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கும் சோதனை முயற்சி பெப்ரவரி 21ம்திகதி தொடங்கியது.
அமெரிக்கா  ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1 063 பேருக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறிது.
கொரோனாவை குணப்படுத்துவதற்கு இந்த மருந்தை உட்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்த முடியும்.    நன்றி தினகரன் 











கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை






கொரோனாவுக்கு எதிரான போரில்  சீனா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்று சீன ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  சீனாவில் முதலில் தோன்றினாலும்  சீனா எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது.
சீன நாடாளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தொடர்  கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால்  கொரோனாவின் கோரத்தாண்டவத்தால்  அப்போது ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் 22-ம் திகதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடர் குறுகிய காலம் நடைபெறக்கூடும். காணொளி காட்சி மூலம் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி  ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில்  ஜனாதிபதி ஜின்பிங் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போரில்  சீனா மிகப்பெரிய போர்த்திற சாதனை படைத்துள்ளது. சீனாவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இருப்பினும்  உகான் நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்தில் சமுதாய பரவல் நிலையை எட்டிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ரஷ்யாவை ஒட்டிய ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில்  ரஷ்யாவில் இருந்து திரும்பிய சீனர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிறு  குறு தொழில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். வாகன உற்பத்தி தொழில்கள்  மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.
வேளாண்மை உற்பத்தியை ஊக்குவித்து  விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும்.
கஷ்டப்பட்டு படைத்த சாதனைகளை பாதுகாக்கும்வகையில்  நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது.   நன்றி தினகரன் 






No comments: