துலாக்கோலின் சூட்சுமமா..?

கிட்டடியில் நானிவனைக் காணக்
கிடைக்கலையே!
மட்டுப் பிடிப்பதற்கும் மனதிற் பதியலையே!
யாராய் இருக்குமிவன்? பேரேதாய் இருக்குமிவன்?
ஜோராய் இறைக்கிறானே! என்றேநான் அதிசயித்து
“யாரப்பாநீ? ஏனெனக்கு உதவுகிறாய்?
கூறப்பா!” என்று குனிந்தவனைக் கேட்டுவிட,
“யாரெல்லாம் இருக்கட்டும்;
நாளும் வந்திங்கே நல்லதண்ணி பாய்ச்சுகிறாய்
நீளும் உண்மையொன்றை நீயறிந்து கொள்ளு!இந்தத்
துலாக்கோலின் சூட்சுமங்கள் துலங்கிடுதோ
உனக்”கென்றான்
“துலாக்கோலில் சூட்சுமமா…?
தண்ணி இறைப்பதற்கும் தளிர்,கொடிகள்
வளர்ப்பதற்கும்
பண்ணி வைத்ததொரு பொறிமுறையே;
இதனைவிட
எண்ணி விடுவதற்கு இதிலேது?” என்றுரைத்தேன்.
“நீர்நிலையை…,
எட்டிஎட்டிப் பார்த்துவிட்டு அப்பாலே போகாமல்
கெட்டியாய் பிடித்தேறி மிதித்தாய்பார்;
அதுமுயற்சி!
நீர்நிலையுள்…
கொட்டிக் கிடக்கும்நீர் வரமாகும்; ஆங்கதனை
வெட்டி எடுத்ததுபோல் எடுத்தாலே பயனாகும்
சும்மா இருப்பவர்க்கு சுகங்கள் கிடைக்காது
அம்மாவின் பால்கூட அழுதால்தான் ஊட்டுகிறாள்
முயற்சியினால்,
காற்றே இல்லாத கட்டாந் தரையுள்ள
வேற்றுக் கோளுக்கே விண்ஓடம் அனுப்புகிறார்.


அதைவிடவும்,
ஏற்றம் இறக்கமெலாம் உன்வாழ்வில் சகஜமென்ற
தேற்றம் உரைப்பதற்கே தேடியுனை வந்தடைந்தேன்
ஏற்றமதில்,
ஏறி இறங்குகிறாய் ஒருநிலையில் நின்றாயோ?
ஒருநிலையில் நின்றிருந்தால் ஏதும் நடக்காதே
மறுநிலைக்குப் போனாலே மாற்றங்கள் உண்டாகும்
மாற்றத்துக் காக மனங்கொண்டால் வெற்றியென்ற
சாற்றும் உண்மைக்குச் சான்றே இது”வென்று
ஏற்றத்தின் கீழே…, ஏமாளி நின்றதொரு
தோற்றத்தில் நின்றஅவன், “நானிப்போ யாரென்ற
உண்மை உரைப்பேன்! உடனிருந்து உள்ளியக்கும்
கடவுள் தானெ”ன்றான்…
கண்விழித்து விட்டேன்நான்.
nantri sooddram

No comments: