தமிழ் சினிமா - தர்பார் திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே சினிமா ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
கடந்த சில வருடங்களாக அவர் படம் பெரியளவில் வசூல் செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருக்க, பேட்ட படத்தில் பழைய எனர்ஜியுடன் ரஜினி களத்தில் இறங்கி கலக்கினார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் டபுள் எனர்ஜியுடன் களத்தில் இறங்கிய ரஜினிக்கு இது பெரிய வெற்றியை கொடுத்ததா, என்பதை பார்ப்போம்?

கதைக்களம்

டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது.
மும்பையில் போலிஸ் பயமின்றி அனைவரும் இருக்க, சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் ட்ரக் விற்பவர்களை, பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து சிட்டியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.
அந்த ரெய்டில் பெரிய தொழிலதிபர் மகனும் மாட்ட, அவனை வெளியே விடாமல் ரஜினி பிடிவாதம் பிடிக்க, தனது பவரை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.
அதை தொடர்ந்து ரஜினி தன் தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொல்கிறார், பிறகு தான் தெரிகிறது, இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, மிகப்பெரும் டான் சுனில்ஷெட்டி மகன் என்று, பிறகு என்ன இருவருக்குமிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே இந்த தர்பார்.

படத்தை பற்றிய அலசல்

ரஜினி ரஜினி என்றும் ரஜினி தான், சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட இவருக்கு 70 வயது என்று நம்ப முடியாது, அந்த அளவிற்கு அதகளம் செய்துள்ளார்.
வெறப்பான போலிஸ், நயன்தாராவுடன் காதல் என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். அதுவும் இரண்டாம் பாதியில் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் காட்சி இதற்காக ரஜினி ரசிகர்கள் கண்களை மூடிக்கொண்டு டிக்கெட் புக் செய்யலாம்.
படத்தில் முதல் பாதி துப்பாக்கி போல் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதி பல எதிர்ப்பார்ப்புடன் தொடங்க படத்தின் மெயின் வில்லன் யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது, ரஜினிக்கு தெரியவில்லை அதனால் அவருக்கு சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால், நமக்கு பெரிய சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை.
ஒரு கட்டத்தில் அட சீக்கிரம் பைட்டுக்கு வாங்கப்பா என்ற மனநிலைக்கு சென்று விடுகிறது. ஆனால், சமீபத்திய ரஜினி படங்களில் இல்லாத செண்டிமெண்ட் காட்சிகள் இதில் கொஞ்சம் தூக்கல் தான், நிவேதா தாமஸும் அழகாக நடித்துள்ளார்.
யோகிபாபு காமெடி கூட பல இடங்களில் க்ளிக் ஆகிறது, நயன்தாரா வழக்கம் போல் செட் ப்ராபர்டி போல் வந்து செல்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவம் ஒளிப்பதிவு, மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம், அனிருத் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், பின்னணி சற்றே இறைச்சல்.

க்ளாப்ஸ்

ரஜினி ரஜினி ரஜினி தான், மொத்த படத்தையும் தோலில் தாங்கி செல்கிறார்.
படத்தின் முதல் பாதி, விறுவிறுவென செல்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் எமோஷ்னல் காட்சிகள், அதைவிட அந்த ரெயில்வே சண்டைக்காட்சி மிரட்டல்.
படத்தின் ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
வில்லன் கதாபாத்திரம் இன்னும் மிரட்டலாக அமைந்திருக்கலாம்.
மொத்தத்தில் தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா, ஆனால் முருகதாஸ் சர்காரை தாண்டி ஜெஸ்ட் பாஸ் ஆகியுள்ளார்.



நன்றி  CineUlagam







No comments: