மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 18 - முருகபூபதி



டெங்கு காய்ச்சல் குறைந்தாலும்,  இப்போது கற்பகம் ரீச்சரின் மனதில் கருக்கட்டியிருக்கும் காய்ச்சலின் வெக்கை உடனடியாகத்தீராது போலிருக்கிறதே – அபிதா யோசிக்கத் தொடங்கினாள்.
அந்த இரண்டு மாணவர்களும் ஏன்தான் இந்தநேரத்தில் வந்து சங்கடத்தை தந்துவிட்டார்கள்.  அவர்கள்தான் என்ன செய்வார்கள். அதிபரும் இதர ஆசிரியர்களும் தந்த உற்சாகமேலீட்டால், ஓடிவந்துவிட்டார்கள்.
பாவம். வந்து நற்செய்தி சொன்ன அந்த பிஞ்சுகளை உபசரிக்கவும் முடியாமல்போய்விட்டதே. ஆசையோடு எடுத்து வந்துதந்த கேக்கையும் சுவைக்கமுடியாமலிருக்கிறது. 
கற்பகம் ரீச்சருக்கு அபிதா மீது அர்த்தமேயற்ற எரிச்சலை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு  காரணம் கிடைத்துவிட்டது.
இன்று மாலையோ ,  இரவோ ஜீவிகா, சுபாஷினி, மஞ்சுளா வேலையால் திரும்பியதும் கற்பகம் ரீச்சரின் மனதில் கனன்றுகொண்டிருக்கும் எரிமலை வெடிக்கலாம்.  அதனை முதலில் தணிப்பதற்கு வழிதேடவேண்டும்.
கற்பகம்,  ஜெர்மனி சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதன் பின்னர்தான் குணஇயல்புகள் மாறியிருக்கவேண்டும் எனவும் தனக்குள் அபிதா கற்பனை செய்தாள்.
அந்த மாணவர்களை அனுப்பி கேட்டை பூட்டிவிட்டு உள்ளே திரும்பிய அபிதாவை, தொலைக்காட்சியில்  கல்யாணவீடு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் அருகில் அழைத்தாள்.
 “ எத்தனை நாட்களாக உனக்கு அந்தப்பெடியன்களைத் தெரியும். உனக்கு பேர்த்டே கேக் கொண்டு வந்து தருமளவுக்கு இந்த ஊரில் புதிய உறவுகளைத்தேடிக்கொண்டாயோ…? ஜீவிகா இங்கே உன்னை அழைத்தது, வீட்டு வேலைகள் செய்வதற்கும் சொன்னதைக்கேட்டு நடப்பதற்கும்தானே…?! அது என்ன நீயும் ரீச்சர் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாய்.  “ தொலைக்காட்சியை அணைத்து, ரிமோட்டை அருகிலிருந்த குஷனில் வீசி எறிந்தவாறு  கற்பகம் கேட்டாள்.
அபிதா தலைகுனிந்து மௌனமாக நின்றாள்.
அந்த ரீமோட்டை தூக்கி எறிந்த தோரணையிலும் கற்பகத்தின் வெஞ்சினத்தின் உக்கிரம்  அபிதாவுக்கு புலப்பட்டது.
 “ இல்லை ரீச்சர்…  “ என்று இழுத்தாள்.
 “ என்ன இல்ல ரீச்சர்… நொல்லை ரீச்சர்…? கேட்டதற்கு பதில் சொல்லு.. “
 ‘ நீங்கள் நொல்லை ரீச்சர் இல்லை. தொல்லை ரீச்சர்  என்று மனதில் பட்டதை சொல்லாமல்,  “ எனக்கு அந்த மாணவர்களை முன்பின் தெரியாது.  ஒருநாள் உங்களைத்தேடி வந்தார்கள்.  நீங்கள் ஊருக்குப்போயிருப்பதாகவும் அங்கு போன இடத்தில் உங்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றும் திரும்பிவருவதற்கு ஒருவாரம் ஆகலாம் என்றுதான் சொன்னேன். அதற்குப்பிறகுதான், தமிழ்த்தினப்போட்டிக்கு நீங்கள் பேச்சு எழுதித்தரவிருந்த விடயத்தை சொன்னார்கள். அவர்கள் இருவரும் பாவம் ரீச்சர்.  உங்களை நம்பி, எதிர்பார்த்து வந்தவர்கள். ஏமாற்றத்துடன் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் எழுதிக்கொடுத்தேன் நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ரீச்சர். அந்த மாணவர்கள்தான் நன்றாகப்பேசி பாராட்டு பெற்றிருக்கிறார்களே.. அதனால் உங்களுக்கும் பெருமைதானே! போட்டிக்குச்சென்று தங்கப்பதக்கம் பெற்றால், அது உங்கள் பாடசாலைக்கும் பெருமைதானே.!  “ என்று சொல்லிவிட்டு,  குஷனில் கற்பகம் வீசி எறிந்த தொலைக்காட்சி ரிமோட்டை எடுத்து கையில் கொடுத்தாள்.
கற்பகத்திற்கு கோபம் சற்று தணிந்தது.   ‘ இவள் பெரிய சாகசக்காரியாகத்தான் இருக்கவேண்டும். யாரிடம் -  எந்த வேளையில்  -  எவ்வாறு பேசவேண்டும் என்ற கலையை நன்றாகத்தான் கற்றிருக்கிறாள்.  ‘ மனதிற்குள் கனன்றுகொண்டிருந்த எரிச்சல் தணிந்ததும், மீண்டும் ரிமோட்டினால் தொலைக்காட்சியை இயக்கி, கல்யாணவீடு சீரியலை விட்ட இடத்திலிருந்து பார்க்கத்தொடங்கினாள்.
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,  “ ரீச்சர், குடிக்க ஏதும் கொண்டு வரட்டுமா..? ஸ்கூலுக்கு எடுத்துச்சென்ற லெமன் ரைஸைக்கூட நீங்க சரியாக சாப்பிடவில்லை போலத்தெரியுது. எஞ்சியிருந்ததை காகத்திற்கு வைத்தேன்.  “ என்றாள் அபிதா.
 “ சாப்பிட என்ன இருக்கிறது..? 
 “ உங்களுக்காக உறைப்பு குறைத்து பால்கறியாக கத்தரிக்காய் கூட்டும்,  போஞ்சியில் ஒரு கறியும், ரசமும் செய்தேன் “
 “ எதற்கும் ரசத்தை கொஞ்சம் சூடாக்கி, எனது கப்பில் எடுத்துவா. உன்ர கைப்பக்குவத்தை பார்ப்போம் “
தனது கைப்பக்குவம் நன்றாக இல்லையென்றும் ரீச்சர் சொல்லிவிடக்கூடாது. மனதில் நினைப்பதையெல்லாம் வெளியில் சொல்லத்தான் முடிகிறதா…?
கற்பகம் கேட்டவாறு, ரசம் எடுத்துவந்து கொடுத்துவிட்டு அகன்று, வீட்டின் பின்புறம் சென்று காய்கறித்தோட்டத்திற்கு வந்தாள்.
அபிதா, அந்த வீட்டுக்கு வந்த பின்னர் கத்தரி, வெண்டை, பாவற்காய், வல்லாரை எல்லாம் வளர்க்கத் தொடங்கியிருந்தாள்.  ஏற்கனவே அங்கிருந்த வாழைமரம் குலை தள்ளியிருந்தது.
முல்லைத்தீவில் வாழ்ந்த காலத்தில், அவள் வீட்டு வாழைமரங்களில் குலை போட்டால், பழுத்ததும் முதல் சீப்பை வற்றாப்பளை அம்மன் கோயிலுக்கு எடுத்துச்செல்லும் அம்மா நினைவுக்கு வந்தாள்.
அம்மா, அப்பா, கணவன் பார்த்திபன் இன்று இருந்திருந்தால், இன்றைய எனது கோலம் அறிந்து இதயம் வெடித்தே செத்திருப்பார்கள். அந்தவகையில் இந்த வேலைக்காரி – சமையல்காரி கோலத்தை பார்க்காமல் போய்ச்சேர்ந்துவிட்டன அந்த ஆத்மாக்கள் என்ற ஆறுதலும் வந்தது.
முல்லைத்தீவிலும், போருக்குப்பின்னர், வாழநேர்ந்த வவுனியாவிலும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வயிற்றுப்பாட்டை அவள் பார்த்திருக்கலாம்.
ஆதரவற்று நிர்க்கதியாகி நிற்கும் இளம் விதவையை சமூகமும் -  தேவைக்காக நெருங்க நினைக்கும் மிருகங்களும் பார்த்த பார்வையிலிருந்து ஒதுக்கிடம் தேடி வந்த இடத்தில், ஏதோ வாழ்க்கை பூராகவும் வேலைக்காரி என்ற அடையாளத்துடன் வாழ்ந்திருக்கிறேன் என்ற எண்ணம்தானே இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு. அதிலும், படித்த பெண்ணாகவும் மாணவர் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கவேண்டிய கற்பகம் ரீச்சருக்கு பணிவிடையில் என்ன குறைவைத்தேன்…?
அணிந்திருந்த பழைய சோர்டியின் கீழ்முனையால் கண்களை துடைத்துக்கொண்டாள். அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாட்களாகிவிட்டன என மனக்கணக்கில் பார்த்தால்.
ஒருமாதமும் இரண்டு நாட்களும் கடந்துவிட்டன. இன்னமும் ஜீவிகா முதல் சம்பளம் தரவில்லை. அதனை வாங்கிக்கொண்டு, மீண்டும் வவுனியாவுக்குப்போய் பிள்ளைகளுக்கு ரியூஷன் நடத்தி வயிற்றைக்கழுவிக்கொள்வோமா..? என்ற யோசனையும் அபிதாவுக்கு வந்தது.
போருக்குப்பின்னர்,  அகதிமுகாமிலிருந்து வெளியேறி,  புதுக்குடியிருப்பில் உறவினர் வீடொன்றில் வாழ்ந்தபோது,  வற்றாப்பளை அம்மன் கோயிலடியில்  தன்மீது கூர்ந்த பார்வை வைத்தவாறு  “ நங்கி… நங்கி ..   என அழைக்கும் அந்த சீருடைக்காரனின் முகம் மனக்கண்ணில் தோன்றியது.
ஒருநாள் துணிச்சலுடன்  “ நங்கி  “ என்றால் என்ன..?  என அவள் ஆங்கிலத்தில் கேட்டதும், அவன்  “ சிஸ்டர்  “ என பதில் தந்திருந்தாலும், அவனது பார்வையில் ஒரு சிஸ்டரை பார்க்கும் தோரணை இருக்கவில்லை.
எதிர்பாராதவகையில் மனக்காயங்கள், அவமானங்கள் நேரும்போதுதானே, கடந்த கால வசந்தங்கள் நினைவுக்கு வருகின்றன.  “ நேற்றிருந்தோம் அந்த வீட்டிலே    என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
அபிதாவுக்கு திடீரென மனதில் வைராக்கியம் தோன்றியது. எடுத்தெறிந்து பேசும் ஒரு கற்பகம் ரீச்சருக்காக இங்கிருந்து போய்விடமுடியுமா..? வீட்டுக்காரி ஜீவிகாவும் வாடகைக்கு குடியிருக்கும், ஏற்கனவே வாழ்வில் வஞ்சிக்கப்பட்டிருந்தாலும், தன்னிடத்தில் பாசமாக இருக்கும் சுபாஷினி, மஞ்சுளாவை விட்டுப்போய்விடக்கூடாது என்ற தீர்மானத்திற்கு அபிதா வந்தாள்.
பின்வளவு வாழை குலை தள்ளியிருக்கும் செய்தியை கற்பகம் ரீச்சர், தொலைக்காட்சி நாடம் பார்த்ததும் சொல்லவேண்டும். வெட்ட வெட்ட தழைக்கும் வாழையாகத்தான் வாழப்பழகவேண்டும்.  சமூகம் என்பது நான்குபேர்தானே..!
தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வீட்டினுள்ளே திரும்பினாள் அபிதா. தொலைக்காட்சி அணைக்கப்பட்டிருந்தது.
கற்பகம் ஷோபாவிலேயே சரிந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள்.   ரசம் அருந்தி மிச்சம் வைத்திருந்த கப்பின் மீது இரண்டு இலையான்கள் நின்றன. அவற்றை களைத்துவிட்டு, எடுத்துச்சென்று கழுவிவைத்தாள்.
மாலையில் மஞ்சுளாவும், சுபாஷினியும் அடுத்தடுத்து திரும்பியிருந்தனர்.  கற்பகம் தனது அறையிலிருந்து பாடசாலை வகுப்பு பதிவேட்டை பார்த்து எழுதிக்கொண்டிருக்கிறாள்.
அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது, இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தாள் அபிதா.
அந்த மாணவர்கள் எடுத்து வந்த கேக்கை மஞ்சுளாவுக்கும் சுபாஷினிக்கும் பங்கிட்டு கொடுத்து தானும் சாப்பிட்டாள். கேக் சுவையாக இருந்தது. அதன் பின்னணி கதையையும் அது வீட்டுக்குள் வரநேர்ந்தமையால் கற்பகம் கொண்ட கோலம் பற்றியும் மெதுவாக அவர்களிடம் சொன்னாள்.
 “ இடியட்  “ என்றாள் மஞ்சுளா.  “ அவ சொல்வதையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்  “ என்றாள் சுபாஷினி.
எனினும்,    எதற்காக  ஒருவர் பற்றி மற்றவர்களிடம் சொல்லவேண்டும்.   அதுவும் கூடாத பழக்கம்தானே  ‘ என்றும் அபிதாவின் மனதில் தோன்றியது.
இரவு  வேலையால் திரும்பியதும், அபிதாவையும் மற்ற மூவரையும் கூடத்திற்கு அழைத்தாள் ஜீவிகா. அவளது கையில் ஒரு புதிய எக்ஸஸைஸ் கொப்பியும் ஒரு மஞ்சள் நிற கடித உறையும் இருந்தன.
 “ அபிதா. நீங்க வந்து ஓருமாதமாகிவிட்டது. இந்தாங்க உங்கட முதல் மாதச்  சம்பளம்.  “ என்று கடித உறையை நீட்டினாள் ஜீவிகா.
அபிதாவின் முகம் மலர்ந்தாலும், வாங்குவதற்கு சற்று தயங்கினாள்.  “ இந்தாங்க… இதைப்பிடியுங்க… இந்தக்கொப்பியிலும் உங்கட கையொப்பத்தை வையுங்க.   “ ஜீவிகா நீட்டிய கொப்பியில் கையொப்பம் வைத்த பின்னர் முதல் மாத சம்பளத்தை வாங்கினாள்.
 “ அபிதா… ஒரு முக்கிய விடயம் சொல்கிறேன். முதலில் அவசரப்பட்டு எதிலும் கையொப்பம் வைக்கக்கூடாது. முதலில் தரப்படும் சம்பளப்பணத்தை எண்ணிப்பார்த்துவிட்டுத்தான் கையொப்பம் வைக்கவேண்டும்… சரியா…. “
அபிதா தலையாட்டினாள். அவர்கள் அனைவரின் முன்னிலையிலும் பணத்தை  எண்ணிப்பார்த்தாள். புதிய ஆயிரம் ரூபா தாள்கள் இருபத்தியைந்து அதில் இருந்தன.
மூன்றுவேளையும் உணவு தந்து, செய்யும் வேலைகளுக்கு தரப்படும் இச்சம்பளம் தனக்கு அதிகம்தானோ… என்றும் அபிதா யோசித்தாள். நீண்டநாட்களுக்குப்பின்னர் அவ்வாறு நாணயத்தாள்களைப்பார்க்கும் அபிதா, தனது உழைப்பிற்கு கிடைத்த சன்மானத்தையும் பார்க்கமுடியாமல் போய்விட்ட குடும்ப உறவுகளை நினைத்ததும் விம்மல் வரப்பார்த்தது. அடக்கிக்கொண்டு தனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைக்குச்சென்று தனது சிறிய பேக்கில் அந்த கடித உறையை வைத்தாள்.
                                       திரும்பியபோது,   “ மெடம்… முதல் மாத சம்பளம் வாங்கிவிட்டீர்கள்… எங்களுக்கு ஏதும் ட்ரீட் இல்லையா…மெடம்  “ என்று கிண்டலாகக்கேட்டாள் மஞ்சுளா.
 “ பிச்சை எடுக்குமாம் பெருமாள்.. அதை பிடுங்கித்தின்னுமாம் அனுமார்… என்ற கதையாகத்தான் இருக்கிறது  “ எனச்சொல்லிவிட்டு கற்பகம் தனது அறைக்குள் சென்றாள்.
அபிதாவுக்கு அந்த வார்த்தைகளும் இதயத்தை தைத்தன.  ‘பிச்சை எடுக்கவா வந்திருக்கின்றேன்.  ‘ அவளது முகத்தில் தோன்றிய வாட்டத்தை அவதானித்த சுபாஷினி,  “ ரீச்சர் கிடக்கிறாங்க… பெயருக்குத்தான் ரீச்சர்… என்ன மஞ்சுளா அபிதாவிடம் ட்ரீட்  கேட்கிறீங்க. அதுதான், ஜீவிகா சம்பளம் கொடுப்பதற்கு முன்பே அபிதா கேக் தந்து அசத்திவிட்டாதானே…? !  “ என்றாள்.
 “ என்ன… கேக்கா..? எங்கேயிருந்து…?  அபிதா… இன்று கேக் ஏதும் செய்தீங்களா..? என்ர பங்கு எங்கே..?
அந்த வீட்டுக்கு அன்று மாலை கேக் வந்த கதையை அபிதா சொல்லும்போது, கற்பகம் ரீச்சர், தனது அறைக்கதவை சாத்தினாள்.
                   ஜீவிகா, அபிதா  தந்த தேநீருடன் தனது பங்கு கேக்கை வாங்கிச்சாப்பிட்டவாறு    ரீச்சர், சாப்பிட்டாங்களா..?  “ எனக்கேட்டாள்.
 “ இல்லை. கொடுக்கவில்லை. இன்று வெள்ளிக்கிழமை. கேக்கில் முட்டை போட்டிருப்பாங்க. ரீச்சர் சாப்பிடமாட்டாங்க “ என்றாள் அபிதா.
சுபாஷினிக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு, அபிதாவின் தலையில்  செல்லமாகததட்டினாள். 
( தொடரும் )





-->













No comments: