ஆனந்தம் அகநிறைவு அமைய பொங்கல் அமையட்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா


  பொங்கலென்று சொன்னாலே
      பூரிப்பும் கூடவரும்
  மங்கலங்கள் நிறையுமென்று
      மனமதிலே தோன்றிவிடும்
 சங்கடங்கள் போவதற்கும்
       சந்தோசம் வருவதற்கும்
 பொங்கலை நாம்வரவேற்று
        புதுத்தெம்பு பெற்றிடுவோம்  ! 

  தைபிறந்தால் வழிபிறக்கும் 
      எனவெண்ணி மகிழுகிறோம்
  கைகட்டி நின்றுவிடின்
         வழியெமக்கு வந்திடுமா
   தைபிறக்க முன்னாலே
          தளர்வின்றி  உழையுங்கள்
   தைபிறக்கும் வேளையிலே
          கைகொடுக்கும் தைமாதம்  ! 


  எதிர்காலம் மகிழ்வாக
       அமையுமென எண்ணிடுவோம்
  இறந்தகாலம் தனையெண்ணி
        எமையிழக்கா திருந்திடுவோம்
  நிகழ்கால நிலையினிலே
          நிம்மதியை நாடிடுவோம்
  வரும்பொங்கல் எங்களுக்கு
         வளமாகும் எனநினைப்போம் ! 

 புத்தரிசி வாங்கிடுவோம்
       புதுப்பானை எடுத்துவைப்போம்
  மொத்தமுள்ள உறவுகளை
        முழுமனதாய் வாழ்த்திடுவோம்
  பால்பொங்கி வருவதுபோல்
         வாழ்வுவளம் பெருகவென
  சர்க்கரையை சேர்த்தபடி
       பொங்கியே மகிழ்ந்திடுவோம் ! 

  பெற்றாரின் ஆசியினை
      பெரும்பேறாய் எண்ணிடுவோம்
  கற்பித்த ஆசானை
       கால்தொட்டு  வணங்கிடுவோம்
  புத்தாடை  எனுமெண்ணம்
         புத்துணர்வை வழங்கட்டும்
  பொங்கலென்றும் வாழ்வினிலே
        புத்தொளியாய் மிளிரட்டும் ! 

  சாந்தியொடு சமாதானம் 
     வரப்பொங்கல் அமையட்டும்
 சன்மார்க்கம் மனமெல்லாம்
      நிறையப் பொங்கலமையட்டும்
 வேண்டியவர்க்கு வேண்டியன
       கிடைக்கப் பொங்கலமையட்டும்
 வீண்வம்பு வேதனைகள்
        விலகப் பொங்கலமையட்டும் !

 ஆனந்தம் அகநிறைவு
     அமைய பொங்கலமையட்டும்
அறம்நீதி அத்தனையும்
       நிலைக்கப் பொங்கலமையட்டும் 
 வேற்றுமைகள் வில்லங்கம்
        விலகப் பொங்கலமையட்டும்
 விரோதமனம் விட்டோட
         பொங்கலெமக் கமையட்டும் ! 
-->


No comments: