உலகச் செய்திகள்


உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது   

அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

உக்ரைன் விமான விபத்து: கறுப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்குவதை நிராகரித்தது ஈரான்

இங்கிலாந்து அரச குடும்ப நிலையில் இருந்து ஹரி தம்பதி திடீர் விலகல்


உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது   

Saturday, January 11, 2020 - 11:10am


"உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது"-Iran admits they shot down Ukrainian plane unintentionally

- IRGC இராணுவ மையத்தை நோக்கி விமானம் வந்ததால் அச்சம்

- சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
ஈரான் இராணுவ தலைமையகம் அறிவிப்பு

உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்ற இவ்விபத்தில் அதில் (Boeing 737-800 PS752) பயணித்த 176 பேரும் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இன்று (11) காலை ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் புரட்சிகர இராணுவ படைத்  தளத்தை (IRGC military center) நோக்கியதாக உக்ரைன் விமானம் பறந்தபோது, மனித தவறின் (Humad error) காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விபத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பில்லை என, ஈரான் அரசு ஆரம்பத்தில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கொமைனி விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ் ஊடாக கனடாவின் டொரோன்டோவை நோக்கி பயணிக்கவிருந்த குறித்த பயணிகள் விமானம், புறப்பட்டு ஓரு சில நிமிடங்களில் வீழ்ந்து நொறுங்கியது. இவ்விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.
கடந்த ஜனவரி 03ஆம் திகதி, ஈராக்கின் தலைநகர் பக்தாத்திலுள்ள விமான நிலயத்திற்கு அருகில் வைத்து, அமெரிக்க ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ஜெனரல் காசிம் சுலைமானி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் பக்தாத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இத்தாக்குதல் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் புறப்பட்ட உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டிருந்தது.
ஈரானின் தாக்குதலை அடுத்து, ஈரான் எல்லையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அதிகரித்ததை அவதானிக்க முடிந்தாதாகவும். அவை தமது மூலோபாய  மையங்களை நோக்கியதாக காணப்பட்டதாகவும் ஈரான் இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
தமது ராடார் செயற்பாட்டில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டதால், பாதுகாப்பை அதிகரித்ததாகவும், இவ்வாறு நிலைமைகள் காணப்பட்ட நிலையில், உக்ரைன் விமானம் புறப்பட்டுள்ளதாகவும் அது ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு  மையத்தை நோக்கியதாக பறந்ததைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு இலக்கானதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
இவ்விபத்தில் 82 ஈரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள், 10 சுவீடன் நாட்டவர்கள், 04 ஆப்கானியர்கள், 03 பிரித்தானியர்கள், 03 ஜேர்மன் நாட்டவர்கள் உள்ளிட்ட 176 பேர் மரணமடைந்தனர்.
குறித்த விமானம் ஏவுகணை தாக்குதலுக்குட்படுத்துவது தொடர்பில் நியூயோர்க டைம்ஸ் இணையத்தளம் நேற்று முன்தினம் (09)காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்



ஈராக் தலைநகர் பக்தாதின் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மீண்டும் இரு ரொக்கெட் குண்டுகள் விழுந்துள்ளன.  
அதிக பாதுகாப்புக் கொண்ட பசுமை வலயப் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு கட்யூசா ரொக்கெட்டுகள் விழுந்ததாக ஈராக் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சுமார் 10கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட இந்த வலகத்தின் மீது கடந்த ஒருசில தினங்களில் ரொக்கெட் மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  
இந்த தாக்குதல் தொடர்பில் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அமெரிக்க வான் தாக்குதலில் ஈரானிய போராட்டக்குழு தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதாக ஈரான் ஆதரவு அசைப் அஹ்ல் அல் ஹக், ஷியா போராட்டக் குழு தலைவர் கைஸ் அல் கஸ்ஸாலி அறிவித்து சில மணி நேரத்திலேயே இந்த புதிய ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 











உக்ரைன் விமான விபத்து: கறுப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்குவதை நிராகரித்தது ஈரான்





ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு தகவல் பதிவு கறுப்புப் பெட்டிகளையும் அமெரிக்காவிடமோ விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடமோ ஒப்படைக்கப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. 
ஈரானிய விமான நிலையத்திலிருந்து கடந்த புதன்கிழமை விடியற்காலையில் புறப்பட்ட போயிங் 737–800ரக விமானம், விமான நிலையத்துக்கு 45கிலோமீற்றர் அப்பால் ஒரு புல்வெளியில் விபத்துக்குள்ளானது. 
அதில் பயணம் செய்த 176பேரும் உயிரிழந்தனர். 
சர்வதேச விமானத்துறை விதிமுறைகளின்படி விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஈரானுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. 
ஆனால், விமானம் ஒன்று விபத்துக்குள்ளானால் அதைத் தயாரித்த நிறுவனம் விசாரணையில் ஈடுபடுவது வழக்கம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தினர். 
அத்துடன் ஒரு சிலரால் மட்டுமே தகவல் பதிவுப் பெட்டிகளில் பதிவான தகவல்களை ஆராய முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். 
“இந்த விபத்துக் குறித்து உக்ரைனி யர்களின் பங்கேற்புடன் ஈரான் விமானப் போக்குவரத்து நிறுவனம் விசாரணை நடத்தும்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் அல் அபெத்சாதா குறிப்பிட்டுள்ளார்.  
இந்நிலையில் எந்த ஒரு உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விசாரணை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமது நாடு தயாரா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு தெரிவித்துள்ளார்.  
இந்த விபத்தில் ஈரான் மற்றும் கனடா நட்டவர்களே அதிகம் பேர் உயிரிழந்தனர். 
ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்தில் விபத்து நேர்ந்தது. எனினும், தாக்குதலுக்கும் விபத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.   நன்றி தினகரன் 














இங்கிலாந்து அரச குடும்ப நிலையில் இருந்து ஹரி தம்பதி திடீர் விலகல்





இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பொருளாதார ரீதியில் தாங்கள் சுயமாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 
அதே நேரம் இங்கிலாந்து ராணிக்கான தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிப்போம் என்றும் கூறியுள்ள ஹரி தம்பதியினர், தங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 
அரசக் குடும்பத்தினருடன் சில கருத்து வேறுபாடு உள்ளது என்று ஊடகங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவு அரண்மனை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இளவரசன் ஹரியின் இந்தத் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், இவர்கள் இங்கிலாந்து ராணியிடம் கூட ஆலோசனை நடத்தாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
ஹரியின் முடிவு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பக்கிங்ஹாம் அரச குடும்பம், “ஹரி மற்றும் மேகனுடனான எங்கள் பேச்சுவார்த்தை முதல்கட்டத்திலேயே உள்ளது. மாறுபட்ட சூழலில் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது நிறைய சிக்கலைத் தரும்.
இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய காலம் எடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்கிலாந்து அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள். இளவரசர் ஹரி இங்கிலாந்து முடிக்குரிய இளவரசர்கள் வரிசையில் இளவரசர் சார்ல்ஸ், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் உள்ளார்.  நன்றி தினகரன் 




No comments: