அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 2 – கொம்பு
கொம்பு – ஊதுகருவி

அமைப்பு
S’ என்ற ஆங்கில எழுத்தை ஒத்த வளைவுகள் கொண்ட இந்த இசைக்கருவி ஐந்து பாகங்களால் ஆனது. சுமார் 5 கிலோ எடையுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் கொம்புகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. இதன் ஊதும் பகுதி சிறுத்தும், அடிப்பகுதி சற்றே விரிந்தும் காணப்படும். “C” என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தையுடைய கொம்புக்கருவி கேரளத்திலும் வட இந்தியாவிலும் உண்டு.

குறிப்பு
பழந்தமிழகத்தில் பகுத்தறியப்பட்ட நிலத்திணைகளில் முல்லை நிலத்துக்குரிய இசைக்கருவி இது. முருகக்கடவுள் இக்கருவியை விருப்புடன் இசைப்பதாக கந்தபுராணம் கூறுகிறது. இலக்கியங்களில் ‘கோடு’ என்ற பெயரால் குறிக்கப்படும் இக்கருவியை இசைப்பவர்கள் கோடியர் எனப்பட்டனர்.இதன் ஒசை யானையின் பிளிரலை ஒத்து இருக்கும்.
கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடிப் புசித்த மனிதன், அவற்றின் எலும்புகளில் ஓட்டையிட்டு ஊதி, சத்தம் எழுப்பிய தருணத்தில் உதித்த கருவி இது. காலப்போக்கில் எலும்புகளை விடுத்து விலங்கின் கொம்பை வைத்து ஊத, அதுவே இன்றளவுக்கும் பெயராக விளங்குகிறது.
சோழ மாமன்னன் ராஜராஜன் காலத்தில் இந்த இசைக்கருவி செல்வாக்குப் பெற்று திகழ்ந்தது. ஆலயங்கள் அனைத்திலும் கொம்பு இசைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் கொம்பை தங்கள் குலதெய்வ வழிபாட்டில் இசைக்கிறார்கள். கேரளாவில் பஞ்ச வாத்தியங்களில் ஒன்றாக செண்டை மேளத்தோடு இணைத்து கொம்பு இசைக்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம் தொலைத்த/மறந்த பல இசைக்கருவிகள் கேரளத்தில் சிறப்புடன் போற்றப்பட்டு வருகின்றது. நேபாள நாட்டில் நர்சிங்கா என்றும் வடஇந்திய மாநிலங்கள் சிலவற்றில் சிருங்கா என்ற பெயரிலும் இக்கருவி இசைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கம்பளர் இனத்தவர் இக்கருவியை புனிதமாக கருதி இசைக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் இக்கருவி மாநில அரசின் சின்னமாக உள்ளது. துத்தாரி என்று அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் இதன்நிலை சோகமானது. தற்போது சுவாமிமலையில் மட்டுமே விரும்பிக் கேட்பவர்களுக்கு செய்து தரப்படுகிறது. மேற்கு தமிழக பகுதிகளில் பெரிய சலங்கையாட்டம், கடவு மத்தாட்டம்  ஆகிய கலைகளில் மண் மேளத்துடன் சேர்த்து கொம்பும் இசைக்கப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
திருவையாற்றை அடுத்துள்ள திருப்பழனம் (பிரகாசம், ரத்தினசாமி, துரைராஜ், மதிப்புராஜன் ஆகிய கலைஞர்கள் ஐந்தாம் தலைமுறையாக இக்கருவியை வாசிக்கிறார்கள்)
தஞ்சையின் தெற்கே உள்ள வாழைமரக்கோட்டை
குறும்பர் இன பழங்குடி மக்களின் விழாக்கள்
தென் தமிழக சுடலைமாடன் கோவில்களில் தப்புடன் சேர்த்து  கொம்பு இசைக்கிறார்கள்
வள்ளியூர், சமுகரெங்கபுரம் திருநெல்வேலி மாவட்டம்
மேற்கு தமிழகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமம்
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றங்கரை கிராமங்கள்

பாடல்
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. திருமுறை 1.10.11
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் - திருமுறை 12.0654

கோடி யம்பியும் வேய்ங்குழல் ஊதியுங் குரலால்
நீடு தந்திரி இயக்கியும் ஏழிசை நிறுத்துப்
பாடி யுஞ்சிறு பல்லியத் தின்னிசை படுத்தும்
ஆடு தும்விளை யாடுதும் இவ்வரை அதன்கண் - க பு - வள்ளியம்மை திருமணப் படலம்

காணொளி
தமிழகம்

கர்நாடகம்

கேரளம்

மகாராஷ்டிரம்

நேபாளம்

-சரவண பிரபு ராமமூர்த்தி

-->
 (P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai & வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்)No comments: