பானு பத்மஸ்ரீக்கு கண்ணீர் அஞ்சலி - செ .பாஸ்கரன் ( Bhanu Pathmasri )



.

பானு இறந்து விட்டார், செய்தி கேட்டதும் ஒருகணம் அசைவு நின்றது.  ஆம் பானுவின் அசைவும் நின்றுவிட்டது . நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரம் பூட்டிய கால்கள். புன்னகை சிந்திய முகம். அன்பு ததும்ப அண்ணா அக்கா என்று உறவு சொல்லி அழைக்கும் பண்பு , இனி இல்லை என்று ஆகிவிட்டது. சிட்னியில் அவர் பணிபுரிந்த அமைப்புக்கள் எத்தனை எத்தனை. இன்முகத்தோடு கேட்டும் வேலைகளை எல்லாம் சிரமேற்கொண்டு அத்தனை அழகாக செய்துமுடிக்கும் திறமை அனைவரையும் கவர்ந்தது. சமூக அமைப்புக்கள் , பக்தி அமைப்புக்கள், வானொலி , பாடசாலை அமைப்புகள் என்று அனைத்திலும் இணைந்து கொண்டு சேவை புரிந்தவர். சேவை என்றுஅமைப்புக்களில் புகுந்துகொண்டு  பலர் தங்களை முன்னிலைப் படுத்தும் இக்காலகட்டத்தில்  பானு தான் ஆற்றும் சேவைகளை மற்றவர்கள் அறியாமலே செய்து முடிப்பார். தன்னலம் கருதாது தன்னை வெளிப்படுத்தாது செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு வெள்ளை உள்ளம் கொண்ட பெண்மணி தான் புரிந்த சேவை போதுமென்று கருதிநிறுத்திக் கொண்டுவிட் டார்.  

அவர்பணிபுரிந்த அமைப்புக்கள் அத்தனையும் அதிர்ச்சி அடைந்து நிற்க, தன் சிரிப்பினாலே அனைவரையும் கவர்ந்து கொண்டவர் சிரிக்கமறந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். Macquarie  Chappal  இரண்டு நாட்களாய்  மக்கள் கூட் டத்தால் நிரம்பி வழிகிறது, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எல்லோரது கண்களிலும்  கண்ணீர் வழிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல் அவர் அன்பு பாராட்டிய அத்தனை மக்களும் வயது வித்தியாசமின்றி திரண்டு நிக்கின்றார்கள். ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த சிட்னி வானத்தில் இருந்து கூட அவரின் இறுதிச் சடங்கு நேரத்தில் கண்ணீர்த்துளிகளாக மழைத்துளிகள் விழுகிறது. பூ அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நின்றவர்கள்  " அவர் காட்டிய அன்பு இந்த நீண்ட வரிசையை பார்க்கத் தெரிகிறது" என்று பேசுவது காதில் விழுகிறது " அத்தனை கூட்டம் அவரின் இறுதி யாத்திரைக்கு. 

Image may contain: 1 person, standing

அவர் உறங்கிக்கொண்டிருந்த  மண்டபத்தின் உள்ளே இவர் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த சுவாமிகளின் பக்தர்கள் தூய வெள்ளை ஆடைகளுடன் பஜன் பாடல்களையும் அவருக்குப் பிடித்தமான பாடல்களையும் மெல்லிய இதமான ராகத்தில் பாடிக்கொண்டிருந்தது ஒரு சன்னிதானத்தில் நிற்பதுபோல் இருந்தது. அவர் மறைத்துவிட் டார்  என்றும் அவர் நினைவுகள் மறையாது மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்
அவர் பிரிவால் வாடும் அன்பு மகள் அபிசாயினிக்கும் அன்புக் கணவர் பத்மஸ்ரீ அவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும்  சிட்னி சமூகம் சார்பாக தமிழ்முரசின் ஆழ்ந்த அனுதாபங்களும், பானு பத்மஸ்ரீக்கு எமது  கண்ணீர் அஞ்சலிகளும் . 

"மனிதன் எவ்வளவு நாட்கள் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பதையே உலகம் பார்க்கும் "


Image may contain: 1 person, smiling, child, text and outdoor

1 comment:

Pathmasri said...


7 நாட்களுக்கு முன் எமது குடும்பத்தின் வெளிச்சமும் , தலைவியுமான எங்கள் அன்பான பானுவை இழந்தோம்.

பானுவின் புற்றுநோயின் போராட்டம் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இந்த கடினமான காலத்தை எங்களால் மட்டும் தனியாக பயணித்திருக்க முடியாது. மிகவும் அன்பான குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடனே எங்களால் இந்த கஷ்டமான காலத்தை கடந்து வரக்கூடியதாக இருந்தது. உங்கள் சளைக்காத அன்பிற்கும், ஆதரவுக்கும் நாங்கள் மிகவும் குடுத்து வைத்தவர்கள்.

இந்த வேளையில் Concord மருத்துவமனையில் சகல வைத்தியர்கள், தாதிமார்கள், மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் அன்பான, ஆதரவான மற்றும் நேர்த்தியான தொழில்முறைக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும்.

பானுவின் Westpac Bank வேலைத்தள நண்பர்கள் மற்றும் மேலதிகாரிகள் அனைவருக்கும் எமது நன்றிகள். கடந்த 20+ வருட கால பானுவின் Westpac ஊழியர்களுடனான உறவினால் மட்டுமே இந்த கடினமான வருடங்களை கடந்து வருவதற்கு இலகுவாக இருந்தது. பல வழிகளில் அவரின் சக ஊழியர்களும், மற்றும் மேலதிகாரிகளும் அவருக்கு ஆதரவாக இருந்ததை எம்மால் என்றும் மறக்க முடியாது.

வெளிநாடுகளில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் எங்கள் துயர் செய்தி கேட்டு, பானுவின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு எங்கள் துயர் தீர்க்க ஓடோடி வந்த அனைத்து அன்பான உறவினர், நண்பர்களுக்கு எமது நன்றிகள்.

மலர் வளையம், மற்றும் பூங்கொத்துக்களை அனுப்பிய அனைவரின் அன்பிற்கும் எமது நன்றிகள்.

கடந்த 7 நாட்கள் மட்டும் அல்லாது 7 வருடங்களாக சற்றும் முகம் சுளிக்காது எமக்கு உணவினை தந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

பானுவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது நன்றிகள்.

உங்கள் அன்பிற்கும் அரவணைப்புக்கும் நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்கள் ஆவோம்.

அன்புடன்
பத்மஸ்ரீ குடும்பத்தினர்