சிறையினின்றும், அடிமைத்
தளையிலிருந்தும் விடுபட்டோர் விடுதலையானதும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தோம் என்று சொல்வது வழக்கம். ஆனால் சிறையோ, அடக்குமுறையோ இல்லாமலே கடந்த பல நாட்களாக கன்பராவில் சுதந்திரமாகக் காற்றை சுவாசிக்கமுடியாதுள்ளது.
அவுஸ்திரேலியா எங்கும் எரிந்த, எரிந்து
கொண்டிருக்கும் தீயின் புகை, இந்நாட்டின் பல
மாநிலங்களின் வளி மண்டலத்தையும் மாசு படுத்தியது. அதை விடவும் இம்முறை தீயின் புகை கடல் கடந்து நியூசிலாந்து
வரை சென்றது பலருக்கும் ஆச்சரியம்தான்.
வளி மண்டலத்தில் புகையினால் ஏற்பட்ட இந்த அசுத்தக் காற்றை வடிகட்டிச் சுவாசிப்பதற்காக விசேடமான P2 வகை மாஸ்க்குகளை மூக்கையும், வாயையும் மறைத்து அணிய வேண்டியுள்ளது. புகையினால் காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரோ மீட்டருக்கும் அதிகமான பருமனுள்ள நச்சுச் தன்மை கொண்ட மாசுத் துணிக்கைகளை வடிகட்டுவதற்கே இவற்றைப் பயன்படுத்துவது வழக்கம்.
2.5 மைக்ரோ மீட்டர் என்பது தலை மயிரின் தடிப்பின் 0.03 அளவுடையது.
இந்த விசேடமான வகை மாஸ்க்குகள் உடனடியாக இங்கே கிடைக்கவில்லை. தற்போது இதன் விநியோகம் ஓரளவு சீரடைந்து தற்போது
மூத்த பிரசைகளுக்கு இலவசமாகவும் வழங்கப் படுகிறது.
வளிமண்டல மாசுச் சுட்டெண் அளவிடும்
கருவிகள் கன்பெராவில் மூன்று வெவ்வேறு இடங்களில் அளவிடப்பட்டு ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் இணையத் தளத்தில் பதிவிடப்படுகின்றன. இதை அடிக்கடி பார்த்து அதற்கேற்றாற் போல வீட்டை
விட்டு வெளியேறாமல் புகைச் சுவாசத்தைத் தவிர்க்க முடியும், அல்லது மாஸ்குகளை அணிந்து கொண்டு வெளியே செல்ல முடியும்.
காட்டுத்தீயின் புகை சூழ்ந்த கடந்த
டிசம்பரின் பிற் பகுதியிலிருந்தே வளிமண்டல மாசுச் சுட்டெண் (Air quality index - AQI) உச்சத்தையடைந்த நகரங்களில் எங்கள் கன்பெரா முதலிடத்தைப் பெறத் தொடக்கி
விட்டது.
இத்தகவலை ஒரு நண்பருக்கு நான் குறுஞ்செய்தியாக
அனுப்ப அவர் எனக்கு வாழ்த்து சொல்லி பதிலிட்டிருந்தார். குறுஞ்செய்திகளை வாசிக்காமலே பதிலனுப்புதல் இக்காலத்தில்
சகஜம். அந்தளவுக்கு
குறுஞ் செய்திகள் புகையை காட்டிலும்
அதிகமாய்த் திக்கு முக்காடவைக்கிறது. இதற்குப் பரிசேதும் வழங்க விரும்பினால் P2 மாஸ்க்குகள் ஏதாவது இருந்தால்
எனக்கு அனுப்பி விடுங்கள் என்று பதிலனுப்பினேன்.
மென்னீல வானத்தில் நிரந்தரமாக சாம்பல்
சாயம் பூசி விட்டது புகை. நீண்ட நாட்களாகவே தெளிந்த நீல வானத்தை காண முடியவில்லை. சாம்பல்
வானத்தில் சூரியன் ஓரஞ்சுப் பழ நிறத்தில் தெரிகிறான். தெருவில் பகலிலும் கார் விளக்குகளை போட்டு விட்டு
ஓட்டுமளவுக்கு 500 மீற்றருக்கப்பால் எல்லாம் மூடி மறைத்து விட்டது புகை.
புது வருட பிறப்பு இரவு ஆராதனைக்காக
சேர்ச்சுக்கு போயிருந்த போது வாசலிலிருந்த தானியங்கிக் கதவின் வழியே புகை சென்றதால்
அபாய அறிவிப்பு அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. பொது கட்டடங்களின் இந்த அலாரங்கள் தீயணைப்புப்
படையினர் வந்த பின்னரே அவர்களால் சரி செய்யப்படுவது வழக்கம். பல இடங்களிலும் இது ஒரே
நேரத்தில் நிகழ்ந்ததால் தீயணைப்புப் படையினரால் வந்து கொள்ள முடியவில்லை. வழமையாக வெடிசத்தங்களுடன் புலரும் புத்தாண்டு ஒருபோதுமில்லாதவாறு
இவ்வருடம் அலார சத்தத்துடன் புலர்ந்தது.
தீயின் பேரழிவினால் எரி காயங்களுடன்
நிற்கிறது அவுஸ்திரேலியா
இம்முறை வழமையாக நடைபெறும் புத்தாண்டு
வாண வேடிக்கைகளும் கன்பராவில் ரத்து செய்யப்பட்டன. கன்பரா தமிழ்ச் சங்கம் இம்முறை பொங்கல் விழாவை ரத்து
செய்தது. காட்டுத்தீ நிவாரண நடவடிக்கைகளுக்கு பல பொது, சமய அமைப்புகளும் பண, பொருள் உதவி வழங்கும் நடவடிக்கைகளை இங்கே ஆரம்பித்து
விட்டன.
."கோடை அழிய வேணும் கொள்ளை மழை
பெய்ய வேணும்" என்று ஒரு நாட்டார் பாடல்
உண்டு. மழை ஒன்றே இப்போதைக்கு எல்லோரினதும் ஏக்கமுமாகும்.
No comments:
Post a Comment