இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகினார் ரெஜினோல்ட் குரே?

சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

வவுனியாவில் ஆயுத சுற்றிவளைப்பில் இராணுவத்தினர் ; பதற்றத்தில் மக்கள்

மலையத்தில் பிறந்த நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் தனது கடமைகளை யாழில் பெறுப்பேற்றார்

8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார் - தினேஷ்

மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்



ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகினார் ரெஜினோல்ட் குரே?

31/12/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆளுநரின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறிசேனவிடம் குரே தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
இன்றைய தினத்திற்குள் பல ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது
பல ஆளுநர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். ஜனாதிபதி ஆளுநர் பதவியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரி 





சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
01/01/2019 இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்கள் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த மக்கள் மேற்கொண்டு வந்த தொடர் போராட்டமானது இரண்டு வருடங்களை அண்மித்துள்ள நிலையில் தமது சொந்த நிலங்களும் பாடசாலையையும் ஜனாதிபதியின் உத்தரவான டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விட்டுவைக்கப்டும் என்று எதிர்பார்ப்புடன் போரடடத்தை தொடர்ந்துவந்தனர்.
ஆனால் இன்றையதினம் குறித்த ஜனாதிபதியின் கட்டளையின் படி தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து தமது சொந்த காணிகள் அனைத்தும் உடனடியாக தமக்கு விடுவித்துத் தருமாறும் இராணுவத்தை தமது காணிகளை  விட்டு வெளியேறுமாறும் தெரிவித்து திடீரென கேப்பாபுலவு பிரதான பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் காரணமாக கேப்பாபுலவு பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது .இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிஸார் மக்கள் அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கேப்பாபுலவு இராணுவ முகாமைச் சூழ நிறுத்தப்பட்டனர். 
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கான பணிகள் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நடைபெற்றுவருகின்றதாகவும் விரைவில் கேப்பாபுலவு மக்களுடைய காணிகள் தொடர்பிலும் ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும் எனவும் 2019 ஜனவரி 25 ஆம் திகதிவரை ஒரு அவகாசத்தை வழங்கி இந்த இராணுவ முகாம் வாயிலை மறித்து மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிணங்க மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டுச் சென்றதோடு 25ஆம் திகதிக்கு முன்னர் உரியப் பதில் கிடைக்காத நிலை ஏற்பட்டால்  மீண்டும் இராணுவம் கைப்பற்றியுள்ள தமது சொந்த நிலத்தினுள் தாம்  பலவந்தமாகச் செல்லவேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துக் கலைந்து சென்றனர். 
போராட்டத்தில் ஈடுபட மக்களையும் ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 





வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி
01/01/2019 யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடக வளங்கல் பயிற்சிமைய 5 ஆம் அணி மாணவர்களால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  ஊஞ்சல்கட்டி, கோவில்புதுக்குளம் போன்ற எல்லைக்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 ஒவ்வொன்றும் சுமார் 2000 ஆம் ரூபா பெறுமதியான 200 உலர்உணவுப் பொதிகளே இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 
நெடுங்கேணி பிரதேச செயலக காணி அதிகாரி இ.ரஜீவனின் ஏற்பாட்டில்  5 ஆம் அணி ஊடக மாணவர்கள் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் பங்களிப்பில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 
இதன்போது சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.  நன்றி வீரகேசரி 








வவுனியாவில் ஆயுத சுற்றிவளைப்பில் இராணுவத்தினர் ; பதற்றத்தில் மக்கள்

02/01/2019 வவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது குறித்த நபர் தப்பியோடிய நிலையில் அவரது பையிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.
இதன்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த ஒருவரை மறித்து சேதனையிட முற்பட்ட போது குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு அப்பகுதியிலிருந்து காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரை தேடியறியும் முகமாகவும் மேலும் காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வகையிலும் புதூர் முதல் கனகராயன்களம் வரையுமான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியும் நாடப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருவதுடன் யுத்த நிறைவின் பின்னர் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளது.  நன்றி வீரகேசரி 







மலையத்தில் பிறந்த நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் தனது கடமைகளை யாழில் பெறுப்பேற்றார்

02/01/2019 நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். 
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று  காலை அவர் உறுதி உரை எடுத்துக்கொண்ட நிலையில் அவர் இன்றைய தினம் தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போலை வரவேற்றனர். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.
மலையகத்தில் பிறந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். அதன் ஊடாக மலையகத்தில் பல துறைசார் விற்பன்னர்களை உருவாக்கியவர். பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையைத் தொடர்ந்த அவர், சட்டத்தரணியாக 7 வருடங்கள் சேவையாற்றினார்.
இந்த நிலையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அவர் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சுமார் 170 வருடங்கள் கொண்ட இலங்கையின் மலையக வரலாற்றில் மூன்றாவது நீதிபதியாக அந்தோனி சாமி பீற்றர் போல் நியமிக்கப்பட்டார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் அவர் 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சேவையை நிறைவேற்றிய அவர், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக இன்று கடமைகளைப் பொறுப்பெடுத்தார்.
“அக்கரைப்பற்று நீதிமன்றானது எனக்குப் பல்கலைக்கழகமாகவே தென்படுகின்றது. இதனால்தான் என்னவோ புதிதாக நியமனம் பெறும் நீதிபதிகளை முதல் கடமையினைப் பொறுப்பேற்க அக்கரைப்பற்றுக்கே அனுப்புகின்றனர்” என்று நீதிபதி போல், தனது பிரியாவிடையின் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார் - தினேஷ்

05/01/2019 சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்தராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலும் அமர்வார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 
மேலும் எதிர்கட்சி காரியாலயம் மற்றும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றையும் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 
எனவே 8 ஆம் திகதியிருந்து எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கட்சியாக எமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இதன்போது நடைபெறவேண்டிய தேர்தல்களை உரிய காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகிப்போம் என்றார்.  நன்றி வீரகேசரி 









மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்

04/01/2019 உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள  பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்திலேயே லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷ 
உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவர் எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தொடர்பில் நாம் பெருமிதமடைகின்றேன். எதிர்காலத்தில் இவர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
அண்மையில் தாய்லாந்தில் உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன்போது , 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பங்கேற்ற லூசியன் புஷ்பராஜ் உலக கட்டழகராக தெரிவாகி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







No comments: