வயலின் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்


இசை என்பது இசைய வைப்பது எனப் பொருள் படும்.’இசைக்கு இசையாதவன் மனிதனே அல்ல’ என அறிஞர் சோக்கிரட்டீஸ் சொன்னார். ஒருவன் இசைக்கு இசையவில்லை எனில் அவன் கொலையும் செய்யக்கூடிய பாதகனாக இருப்பான் என்பது அதன் கருத்து.

பாமரன் முதல் பல்மொழிப்பண்டிதன் வரை எவரையும் தன் வசப்படுத்துவது இசை. இந்த இசையானது தன்னையே மறக்கச் செய்வது. இது மொழி,பிரதேசம் அத்தனையையும் கடந்து உயர்ந்து நிற்பது.

இவ்வாறு மொழியைக் கடந்து நிற்பது வாத்திய இசைக்கும் பொருந்தும். அருமையான இசையைக் கேட்கும் போது எமது உள்ளம் அதில் லயிக்கிறது.சாதாரண மனிதனையே இசை இவ்வாறு கவர்ந்தால் அதில் மேதைகளாக இருப்பவர்கள் பற்றிக் கூறவும் வேண்டுமா?

இந்தியப் பெரும் கண்டத்தை ஐரோப்பியர் ஆண்டு வந்த காலத்திலே அவர்களது நாகரிகமும் இந்தியாவிற்கு வந்தது.அவர்களது Band வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.இசைப்பிரியர்களான மன்னர்களின் சமஸ்தானங்களிலே மேலைத்தேயக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். வயலின் அல்லது பிடில் என அழைக்கப்படும் வாத்தியம் இவ்வாறே இந்தியாவை வந்தடைந்தது.

இன்று கர்நாடக இசைக்கச்சேரிகள் எதுவுமே வயலின் பக்கவாத்தியம் இல்லாமல் நடைபெறுவது கிடையாது. இசை மேதை முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுச்சாமி தீட்சிதர் ஓர் ஆங்கிலேயரிடம் இருந்து வயலினைக் கற்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அதே காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் வடிவேலுப்பிள்ள. அவரும் வயலினைக் கற்றுக் கொண்டார்.

நாட்டியப் பரம்பரையில் வந்த வடிவேலு தான் இந்த வாத்தியத்தை முதலிலே நாட்டிய நிகழ்ச்சிகளில் பயன் படுத்தினாராம். இவை யாவும் நடந்தது இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாகும்.

இவர்களைத் தொடர்ந்து பல வித்துவான்கள் வயலினை வாசித்தது மட்டுமல்லாது கர்நாடக இசைக்கும் மேலும் மெருகூட்டினார்கள். வயலின் மனிதனின் குரலோடு இசைந்து செல்லக்கூடிய ஒரு வாத்தியமாகும்.இதனால் கர்நாடக இசைக்கச்சேரிகளில் இந்த வயலின் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டது. எங்கிருந்து வந்தாலும் எமது இசைக்கு வயலினால் மெருகூட்ட முடியும் என்னும் போது எமது கலைஞர்கள் அதனை அன்புடம் அணைத்துக் கொண்டார்கள்.

இந்த வயலின் கர்நாடக இசைக் கச்சேரிகளில் ஒத்திசையாக வாசிக்கப்படுகிறது. அது தவிர, பலர் தனியாகவே இந்த வாத்தியத்தை வாசித்துக் கச்சேரி செய்வது வழக்கம். தற்போது இந்த வாத்தியம் இருவராக அல்லது மூவராக சேர்ந்தும் வாசிக்கப்பட்டு வருகிறது.



இந்த வாத்தியத்தை வாசிப்பதில் மேதையாகத் திகழ்ந்தவர் மைசூர் செளடய்யா என்ற மேதை. இவரது வாசிப்பால் கவரப்பட்டவர்கள் பலர். செளடய்யாவின் மறைவுக்குப் பின் அவருக்கு அவரின் ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம் கட்டினார்கள். அந்த மண்டபத்தை செளடய்யா வாசித்த வயலின் உருவிலேயே அமைத்துள்ளார்கள்.






( 1943ம் ஆண்டு வெளிவந்த கன்னடத் திரைப்படமான வாணியில் ஸ்ரீ செம்பை வைத்தியநாதர் பாட, பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிக்க, செளடய்யா வயலின் இசைக்கும் கச்சேரியை கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம். இந்தப் படத்தினைத் தயாரித்தவரும் வயலின் மேதை செளடய்யா அவர்களே.)

https://www.youtube.com/watch?v=j-8eA7Fl4q4

 ஒரு தாழ்வான இடத்திலேயே இந்த மண்டபம் அமைந்துள்ளது. பக்கத்திலே அமைந்திருக்கும் மேட்டில் நின்று பார்த்தால் இந்த வயலின் உருவம் அழகாகத் தெரியும். அந்த வயலினின் தந்திக்கம்பிகளாக அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் கொடுக்கும் மின்சாரக் கம்பிகள் பாவிக்கப்பட்டிருப்பது அதனை அமைத்த  கட்டிடக் கலைஞனின் செய்திறனுக்கும் கலாவிற்பன்னத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டும் கலார்ப்பனமுமாகும். பெங்களூருக்குப் போனால் இதனைப்பார்க்கத் தவறாதீர்கள். ஆமாம், ஒரு வயலின் மேதைக்கு ஒரு கட்டடக் கலைஞன் செலுத்திய காலாஞ்சலி அதுவாகும்.

இனிமேலும் நாம் வயலின் மேற்கத்திய வாத்தியம் எனக்கூறுவதா? கர்நாடக சங்கீதம் தத்தெடுத்துக் கொண்ட குழந்தையன்றோ இது! இந்த வயலினை வாசிப்பதில் மேற்கத்தியவர்கள் வியக்கும் வண்ணம் கர்நாடக இசைக்கலைஞர்கள் வாசித்து வருகிறார்கள்.மார்கழியில் சென்னையில் நடக்கும் இசை விழாக்களுக்கு மேற்கத்திய வயலின் இசைக்கலைஞர்கள் பார்வையாளர்களாக வருவதுடன் நில்லாது எம்மவரிடம் வயலின் வாசிக்கும் முறைகளையும் கற்று வருகிறார்கள்.

எமது கர்நாடக சங்கீத வித்துவான்கள் வயலினைத் தம்வசப்படுத்தியதுடன் நின்றுவிடவில்லை. 1927ல் ஓர் அதிசயம் நடந்தது. மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத மேதை Beethoven க்கு சென்னையிலே ஓர் அஞ்சலி நடந்தது. நம் நாட்டிலே தியாராஜருக்கும் கொடுக்கும் மரியாதையைப் போல் மேற்கத்தய நாட்டவர்கள் Beethoven ஐ மதிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இந்தியா சாஸ்திரிய இசையைப் பயின்ற இசைக்குழு ஒன்று தமக்கு முற்றிலும் பயிற்சியற்ற Beethoven இன் சிம்பொனியை துல்லியமாக இசைத்து அந்த அஞ்சலியைச் செலுத்தினார்கள்.இது ஒரு விசேஷ சாதனையாகும். அத்துடன் அவர்கள் நின்று விடவில்லை. Beethoven மறைந்த நூறாண்டு நிறைவையொட்டி மைசூரில்  Beethoven நினைவு வாரமே கொண்டாடினார்கள்.

இந்திய இசைக்குழு ஒன்றிற்கு German இசைக்கலைஞர் ஒருவர் ஒரு மாத இசைப்பயிற்சி அளித்தார். அவரின் பெயர் ஓடோ ஸ்மித். அதனை நடத்தி வைத்தவர் அன்றய மைசூர் மகாராஜா.

திருவையாறு தியாகராஜ ஆராதனையில் தியாகராஜர் திருவுருவத்தின் முன் ஆராதனை நடைபெறுவது போல் Beethoven விழாவிலும் மேடையில் அவரின் சிலை ஒன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பியானோ முன் நிறுத்தப்பட்டதாம்.

ஆமாம், இசை நுணுக்கங்களை இரசிக்கும் மனோபாவம் இருந்தால் தியாகப்பிரம்மத்திற்கு கொடுக்கும் அதே அஞ்சலியை Beethoven ற்கும் கொடுப்பார்கள். சங்கீத அனுபவம் என்பது நுண் உணர்வுகளை வசப்படுத்துவது.அதற்கு மொழி, தேசியம் என்ற வரையறை கிடையாது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இசைக்கும் தமிழுக்கும் செய்த சேவை அளப்பரியது. இவர்களால் உருவாக்கப்பட்டதே தஞ்சை சரஸ்வதி மகால் என்னும் நூல் நிலையம். இந்த அரசின் கனக்கு வழக்கு ஆவணங்களிலே பியானோ என்னும் வாத்தியத்தைச் செப்பனிட்ட இமானுவல் நேபராயி என்பவருக்கு கொடுத்த பண விபரம் உண்டு. அதே போல் அரண்மனை இசைக்கலைஞர் பட்டியலிலே எலிசபெத். மக்கரின் என்ற பெயர் காணப்படுகிறது. இதன் மூலம் அன்றய மராட்டிய மன்னர்கள் இந்திய சாஸ்திரிய இசையைப் போல மேற்கத்திய சாஸ்திரிய இசையையும் போற்றி வந்துள்ளமையை அறிகிறோம்.

கடந்த 60 வருடங்களுக்கு முன் மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜா கிருஷ்னராஜ உடையாருக்கு பியானோ கற்ருக்கொள்ள ஆசை ஏற்பட்டதாம். அதற்காக இங்கிலாந்தில் இருந்து 6 மாத ஒப்பந்தத்தின் பேரில் ஒரு தேர்ந்த பியானோ வித்துவான் வரவழைக்கப்பட்டார். அவர் வந்த சமயத்தில் மகாராஜாவுக்குக் கற்றுக் கொள்ள நேரமில்லாமல் இராஜாங்கக் காரியங்கள் அதிகரித்து விட்டது. அப்போது சமஸ்தானத்தின் வீணை வித்துவானாக இருந்த ஷேஷண்ணாவை பியானோவைக் கற்றுக் கொள்ளச் செய்தனராம்.

பெரும் மேதையான ஷேஷண்ணா முதல் மாதத்திலேயே இந்த வாத்தியத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டு விட்டார் என்றும்; இரண்டு மாதத்தில் பியானோ ஆசிரியருக்குத் தெரிந்த அத்தனை மேற்கத்திய சாகித்தியங்களையும் கற்றுக் கொண்டு தன் ஆசிரியரையே வியப்பில் ஆழ்த்தினாராம்.

ஆமாம், நாதம் என்பது மொழி, பிரதேசம் என்ற கட்டுப்பாட்டை கடந்த ஒரே மொழி. இசை இசைய  விரும்பியவனை தன் வசப்படுத்துவது. தன் நாட்டின் இசையை அறிந்தவன் பிற நாட்டின் இசையையும் உள்ளம் திறந்து இரசிப்பான்.

( ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் 27.4.2005இல் ஒலிபரப்பானது)

No comments: