3 புதிய ஆளுநர்கள் நியமனம் : வடக்குக்கு சுரேஷ் ராகவன் நியமனம்
மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவர் - பிரதி சபாநாயகர் அறிவிப்பு
லசந்த கொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் கொலை - சகோதரர் லால்
பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்
யாழில் போதை மாத்திரைகளை உட்கொண்ட 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தாக்க முயன்ற மாணவர்களால் யாழில் பதற்றம்
ஜனாதிபதி சிறிசேனவிடம் பாராளுமன்றம் கேட்க வேண்டிய கேள்வி
ஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை?
3 புதிய ஆளுநர்கள் நியமனம் : வடக்குக்கு சுரேஷ் ராகவன் நியமனம்
07/01/2019 வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவர் - பிரதி சபாநாயகர் அறிவிப்பு
08/01/2019 மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சற்றுமுன்னர் பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலமையில் ஆரம்பமாகியது.
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க முடியாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவரெனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
லசந்த கொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் கொலை - சகோதரர் லால்
08/01/2019 சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவரின் சகோதரர் லால் விக்கிரமதுங்க நீதிக்கான தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்
லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில்; பொரளை கனத்தையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் லசந்தவின் சகோதரர் லால் விக்கிரமதுங்கவின் செய்தியை அவரது மகள் வாசித்துள்ளார்
அந்தசெய்தியிலேயே லால் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஒரு தசாப்தகாலம் என்பது துயரமடைவதற்கான நீண்ட காலம்,கொலை குறித்த விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கான நீண்டகாலம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது கவலைக்குரிய விடயமாகயிருந்தாலும் இதுவே யதார்த்தமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த நிச்சயமாக அர்த்தமற்ற விதத்தில் மரணிக்கவில்லை. அவர் உருவாக்கிய தளம் இலங்கை அரசியலில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று காணப்படும் சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஏனைய சுதந்திரமான ஆணைக்குழுக்கள் இதனை புலப்படுத்துகின்றன
காட்டுமிராண்டித்தனமான தேசத்தை நாகரீகசமூகமாக மாற்றுவதற்கு மனித நெறிமுறைகள் அனைத்தையும் மீறியவர்களை நீதியின் முன் நிறுத்தும் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களின் உறுதிப்பாடு மாத்திரமே ஒரேயொரு நடவடிக்கையாக அமைய முடியும் எனவும் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவளை தனது கருத்தின் மீது உள்ள உறுதிகாரணமாக தனது உயிரை பறிகொடுத்தது லசந்த விக்கிரமதுங்க மாத்திரமில்லைஎன லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்
இலங்;கையின் இருள்சூழ்ந்த வரலாற்றின் போது லசந்தவுடன் வடக்கை சேர்ந்த பலர் பத்திரிகையாளர்களும் கொலை செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
நாங்கள் இன்று அவர்களிற்காக துயருகின்றோம்,லசந்தவும் அதனையே வலியுறுத்தியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை மூடிமறைப்பதற்காக நால்வர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர் நான்கு அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆதாரங்களை சேதப்படுத்தியுள்ளனர் என்ற சந்தேகம் காணப்படுகின்றது இதுவே எங்கள் தேசத்தின் நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் என்பது நீதிமன்ற விசாரணைகள் இன்றி சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
லசந்த யார் என கேட்பதில் அர்த்தமில்லை,உலகிற்கு லசந்த யார் என்பது தெரியும்,அவரது எழுத்து அதனை நிருபித்துவிட்டது அவர் காலத்தை கடந்து வாழ்வார் என லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது
09/01/2019 பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
அதன்படி இந்தக் குழுவானது இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்
11/01/2019 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவீதத்தால் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்க ப்பட்டுள்ள நினைவு தூபியில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நன்றி வீரகேசரி
யாழில் போதை மாத்திரைகளை உட்கொண்ட 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
11/01/2019 வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,
நல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்றுக் காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர்.
அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.
அதில் ஒருவர் 5 மாத்திரைகளையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவிட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தாக்க முயன்ற மாணவர்களால் யாழில் பதற்றம்
11/01/2019 யாழ்ப்பாணம் - தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள நாவற்குழி மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை அப்பாடசாலையின் மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் இன்று காலை அப்பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர்.
இவர்கள் பாடசாலைக்கு வெளியிலும் சமூகச் சீர்கேடான விடயங்களிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் இம்மாணவர்களை ஏற்கனவே கண்டித்த ஆசிரியர்களை இவர்கள் அச்சுறுத்தியதால் அவர்களில் சிலர் குறித்த பாடசாலையில் இருந்து மாற்றமாகியும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையிலும் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்லாத வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது பாடசாலையின் ஏனைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இச் சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும் அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.
இதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதி சிறிசேனவிடம் பாராளுமன்றம் கேட்க வேண்டிய கேள்வி
12/01/2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க அனுமதித்திருக்கும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக அவர் இருக்கின்றாரா இல்லையா என்ற பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளப்படவேண்டியதாகும்
என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் கேள்வியொன்றைக் கேட்கவேண்டியிருப்பதாக முனனாள் நீதியமைச்சின் செயலாளரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது ;
அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியே அரசாங்கத்தின் தலைவர். தனது விருப்பத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையிலான கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவரானார். சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற மகிந்த ராஜபக்ச இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றிருக்கிறார்.
எனவே ஜனாதிபதி சிறிசேன எவ்வாறு ஏககாலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கூட்டணியின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கமுடியும் என்று அவரிடம் கேட்பதற்கான தகுதி பாராளுமன்றத்துக்கு இருக்கிறது.
அவ்வாறு இரு பதவிகளையும் வகிப்பது அரசியலமைப்பின் அடிப்படை ஜனநாயக ஆதாரத்தை அப்பட்டமாக மீறுகின்ற செயல் என்பதை விளங்கிக்கொள்ளவில்லையா என்று பாராளுமன்றம் அவரிடம் கேட்கவேண்டும். என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை?
13/01/2019 ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
மார்ச் மாதம் ஐநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே சிறிசேன இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது
இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவேண்டாம் என அவ்வேளை ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசின்ஹ கேட்டுக்கொண்டதாகவும் எனினும் அவ்வேளை வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர இந்த ஆலோசனையை புறக்கணித்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
இதனை உறுதிசெய்வதற்காக மங்கள சமரவீரவை தொடர்புகொள்ளமுயன்றவேளை அது பலனளிக்கவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment