திகடசக்கரம் -அ. முத்துலிங்கம்

.
எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்'. முந்திய பிறவியில் நான் செய் வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது. நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்.

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்து வந்தான். ஆள் உயரமாகவும், வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்து பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்கமாக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.


அவன் வடதுருவம் என்றால், நான் தென்துருவம். அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத் தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை, குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டு விட்டார்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாக பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான். அப்படி அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.

* * *

எங்கள் இருவருக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி; எங்கள் பணியின் நிமித்தம் நாங்கள் இப்படி அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். ஆபிரிக்காவின் கடற்கரையோரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருக்கிறோம். ஒரு விசேஷ கூட்டத்திற்காக நாங்கள் வரவழைக்கப் பட்டிருந்தோம்.

விஷயம் இதுதான். ஸ்வீடன் நாடு பன்னிரெண்டு மில்லியன் டொலர் ஒரு அணைக்கட்டு விஷயமாகக் கொடுப்பதாக இருந்தது. இந்த அணைக்கட்டினால் மின்சக்தியும், விவசாயமும் பெருகி நாடு பெரு ம சுபிட்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சில குழுக்கள் இந்த அணைக்கட்டு சம்பந்தமாக ஆராய்ந்ததில் பல அனர்த்தங்கள் விளையும் என்பதைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோளின்படி நாங்கள் ஆராய்ச்சி செய்து 96 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார் செய்திருந்தோம்.

மறுநாள் ஒன்பது பேர் கொண்ட குழுவின் முன் எங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்து அணைக்கட்டினால் ஏற்படக்கூடிய பாதகங்களைக் கூறி அணைக்கட்டு பிளானை முற்றிலும் முறியடிக்க வேண்டும்.

எரிக்ஸன் நெருப்புக்கு மேலே நின்றான். எங்களுடைய அறிக்கையை எப்படியும் வெற்றிகரமாக ஒப்பேற்றி விட வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. ஆனால் ஆர்வம் இருந்தால் காணுமா? எங்களுக்கு சில வில்லங்கங்களும் இருந்தன.

குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. அனாவசியப் பேச்சு அவருக்குப் பிடிக்காது. ஆனால் 'சரி' என்று பட்டதை நேரே பயமின்றி சொல்லக் கூடியவர். மற்றது ஒரு பாதிரியார். அவராலும் எங்களுக்கு இடைஞ்சல் இல்லை.

'சாயத்' தான் எங்கள் முதல் எதிரி. மிகப்பெரிய பணக்காரன். முக்கால் வாசி மந்திரிமாரைக் கைக்குள்ளேயும், மீதியுள்ளோரை பைக்குள்ளேயும் வைத்துக்கொண்டு திரிபவன். பணத்தின் பலத்தினால் ஆடம்பரமாகப் பேசப்பழகிக் கொண்டவன். குழுவிலே இருந்த மற்ற ஆறுபேரையும் அவன் 'வாங்கி விட்டான்' என்று தான் கதை. இந்த அணைக்கட்டு திட்டம் அங்கீகாரம் பெற்றால் அதனால் வரும் ஒப்பந்தங்கள் எல்லாம் இவனிடம் தான் போய்ச் சேரும்; நிராகரிக்கப்பட்டாலோ அவனுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம்.

எரிக்ஸன், நாங்கள் தயாரித்த அறிக்கையை கர்மசிரத்தையாக படித்துக் கொண்டிருந்தான். சிவப்புக்கோடு, மஞ்சள்கோடு, நீலக்கோடு என்று எங்கும் மூவர்ணக்கொடி போல் கீறி வைத்திருந்தான்.

அறை முழுக்க சிகரட் புகையும், பீர் போத்தலும்,'பைல்' கட்டுகளும் தான். என்மேல் அவனுக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். காரணம் நான் அன்றைய தினசரியை சாவதானமாகப் புரட்டிக் கொண்டிருந்ததுதான்.

எரிக்ஸனுக்கு 'குட்நைட்' சொல்லி விட்டுப் படுப்பதற்கு விரைந்தேன். அவன் "YD, என்ன? எட்டு மணிக்கே படுக்கப்போறாயா? நாளைக்கு ஒன்பது மணிக்கல்லவா கூட்டம்? இன்னும் எவ்வளவோ குறிப்புகள் தயார் பண்ண வேண்டியிருக்கிறதே?" என்றான். ('வைத்தியநாதன்' என்று என் பெற்றோர் சூட்டிய அழகிய பேரை இவனுக்காகச் சருக்கி 'வைத்தி' என்று மாற்றினேன்; இவன் அதையும் குறுக்கத்தறித்து "Y.D" என்று என்னைச் செல்லமாகக் கூப்பிடத் தொடங்கி விட்டான், கொலை பாதகன்).

நான் "எரிக்ஸன், நாளை காலை எட்டு மணிக்க இங்கே சந்திப்போம். எங்கள் அணுகுமுறையை இன்னொரு தரம் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றேன்.

எரிக்ஸனுக்கு ஆத்திரமான ஆத்திரம். "சாயத்தோடு சேர்ந்து ஏழு பேர் ஒரு பக்கம். பாதிரியார் ஒருவரைத் தான் நாங்கள் நம்பலாம். இது எங்களுக்கு முழுத் தோல்வி. சந்தேகமே இல்லை. நீ போய் ஆனந்தமாக சயனி" என்றான் கோபத்துடன்.

இப்படி எத்தனை எரிமலைகளைக் கண்டவன் நான். விர்ரென்று என் படுக்கையறைக்கு போனேன்; படுத்ததும் தூங்கியும் விட்டேன்.

* * *

அடுத்த நாள் விடிகாலை ஆறு மணிக்கே கதவைப் படப வென்று தட்டினான், எரிக்ஸன். நான் அந்த நேரம் வழக்கம் போல ஸ்நானம் செய்து ஸ்தோத்திரங்களை முடித்துவிட்டு இடது கை விரலால் எண்ணிக் கொண்டே காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன். அவனும் விடாமல் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான்.

இறுதியில் நான் ஜபங்களை முற்றாக முடித்த பின் கதவைத் திறந்தேன்.

எரிக்ஸன் முற்றிலும் உடுத்தித் தயாராகிக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு ஒரு மூலையில் இருந்து எங்கள் அணுகுமறையைச் சரிபார்த்துக் கொண்டோம்.

நான் சொன்னேன்:

"எரிக்ஸன், இன்று நடக்கும் கூட்டமோ மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நீடிக்க முடியாது. தலைவர் முடிவை இன்றே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். எங்களுடைய அறிக்கையிலே இன்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே மூன்று தாக்கமான கேள்விகள் வரும். நீ அயர்ந்து விடாதே. உன் வித்தை எல்லாத்தையும் காட்டி பதிலை அவசரமின்றி எடுத்துக் கூறு. எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கடத்து. உன் பதில் முடியும் தறுவாயில் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வேன்"

" என்ன Y.D? அவ்வளவுதானா?" என்றான்.

"அவ்வளவுதான்."

தலையிலே இரு கைகளையிம் வைத்து மேலே ஆண்டவனைப் பார்த்தான், எரிக்ஸன்.

* * *

ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. எரிக்ஸன் இரண்டு கைகளிலும் மலை போல குவித்து, கட்டுக்கட்டாகப் புத்தகங்களும், அறிக்கைகளும், 'கோப்பு'களுமாகக் (files) கொண்டு போய் மேசை மேல் கண்காட்சிக்கு அடுக்கி வைப்பது போல் அடுக்கி வைக்கிறான். நான் நாலு தாள்களை மாத்திரம் ஒரு வெறும் 'கோப்பில்' மறைத்து வைத்துக் கொண்டு வருகிறேன்.

சாயத் ஆடம்பரமாக உரத்துப் பேசிக் கொண்டு நுழைகிறார். அவருக்கு பின்னால் நாலு பேர் ஓடாத குறையாக வருகிறார்கள். சபைத்தலைவர் கூட எழுந்து அவருக்கு மரியாதை செய்கிறார். நாங்களும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம்.

தலைவருடைய சிறு உரைக்குப் பிறகு எரிக்ஸன் தன் கட்சி வாதத்தை ஆரம்பித்து வைக்கிறான்.

எடுத்த வீச்சிலேயே எரிக்ஸன் அறிக்கையில் கண்டுள்ளபடி இந்த அணைக்கட்டினால் 47,000 ஏக்கர்? காடுகள் தண்­ரில் மூழ்கி விடும் என்கிறான்.

சாயத் உடனேயே எதிர்ப்புக் குரல் தெரிவிக்கிறார்.

"இது என்ன குப்பை? எங்கே இதற்கான ஆதாரம்?" என்று கேட்கிறார்.

எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப் போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பி தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன. அவனோ களைப்படையாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். இதற்கிடையில் சபையிலுள்ள மற்றைய உறுப்பினர்களும் தங்கள் தங்களுக்க தெரிந்ததைக் கூற வாதம் சூடு பிடித்தது. இப்படியாக முதல் கேள்வியிலேயே முக்கால் மணி நேரம் செலவழிந்து விட்டது.

அப்போது நான் எரிக்ஸனுக்கு சாடை காட்டி விட்டு சொன்னேன்:

"பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரசு அமைத்த ஒரு விசாரணைக் குழுவில் தலைவர் அவர்களே ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். அந்த அறிக்கையில் 47,000 ஏக்கர் என்று பிரஸ்தாபித்து ஞாபகமிருக்கிறது" என்று கூறி விட்டு எரிக்ஸன் கொண்டு வந்த பைல் கட்டுக்களையும், புத்தகத்தையும் சிதற அடித்து தேடுவது போலத் தேடி சறிது நேரம் கடத்தி விட்டு "ஆஹா, இதோ அதற்கான படிவம்" என்று நான் தயாராக கொண்டு போன ஏட்டில் இருந்து தாளை உருவிக் கொடுத்தேன். தலைவர் அதை வாங்கிப் படித்து விட்டு தலையை ஆட்டினார்.

சாயத் தாளைப் பிடுங்கி உற்று உற்றுப் பார்த்தார். பார்த்து விட்டு மேசை மேலே போட்டார். மற்றவர்களம் எடுத்து காயிதத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்தார்கள்.

எரிக்ஸன் மீண்டும் பேசத் தொடங்கினான். ஆனால் மூன்றாவது நிமிடமே இன்னுமொரு இடைஞ்சல் வந்தது. சாயத் சொன்னார்.

"116,000 பேர் குடிபெயர்வதாகச் சொல்கிறீரே? அரசாங்கம் அவ்வளவு பேருக்கும் புது வீடுகள் கட்டித் தருவதாகக் கூறியிருக்கிறதே! இதில் என்ன நஷ்டம்?" என்றார்.

எரிக்ஸன் இதற்கும் பதில் அளிக்கத் தொடங்கினான். சொல்லி வைத்தபடி பதிலும் நீண்டு கொண்டே போனது தலைவர் தண்­ர் குடித்தார். பாதிரியார் கொட்டாவி விட்டார். சாயத் தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக் கொண்டே இருந்தார்.

அப்போது, சமயம் பார்த்து நான் குறுக்கிட்டு "தலைவரே, மதிப்பிற்குரிய எமது முதல் மந்திரியாரும், திரு சாயத் அவர்களம் இன்னும் சிலரும் கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி ஸ்வீடன் போன போது மேற்படி விஷயம் மிகவும் விஸ்தாரமாகப் பேசப்பட்டது. குடி பெயர்வால் ஏற்படும் சமுதாய இன்னல்கள் புது வீடுகள் கட்டுவதனால் மட்டுமே தீரக்கூடிய காரியமல்ல. இதை ஸ்வீடன் அரசாங்கமே ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறது" என்று கூறிஅவர்கள் எழுதிய கடிதத்தின் நகலை சபையின் முன் வைத்தேன். எல்லோரும் பாய்ந்து எடுத்து அந்தக் கடிதத்தைப் படித்தார்கள்.

தலைவருடைய நம்பிக்கை இப்போது பரிபூரணமாக எரிக்ஸனுடைய பக்கம் திரும்பி விட்டது. இதற்கிடையில் இரண்டு மணி நேரம் ஓடி விட மீதி நேரத்தில் எரிக்ஸன் சொல்ல வேண்டியதெல்லாவற்றையும் நேர்த்தியாகச் சொல்லி முடித்தான். இம்முறை அவனுக்கு தடங்கலே இல்லை.

அவன் பேசி ஓய்ந்ததும் தலைவர் இன்னும் யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்டார்.

என் மடியில் இன்னுமொரு ஆணி இருந்தது. கடைசி ஆனி. நான் சொன்னேன்:

"தலைவரே, எல்லோரும் களைப்பாகி இருக்கும் இந்தச் சமயத்தில் நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வருகிறேன். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் நல்ல விளைவுகளும் கெட்ட விளைவுகளும் கலந்தே இருக்கும். நல்ல விளைவுகள் கூட இருப்பின் நாங்கள் அந்தக் காரியத்தைச் செய்கிறோம்; இல்லாவிடில் அதைத் தவிர்த்து விடுகிறோம்."

"இந்த அணைக்கட்டினால் எங்களுக்கு அதிகப்படியான மின்சக்தியும், நீர்பாசன வசதிகளும், கிராமங்களுக்கு குடி தண்­ரும் கிடைக்கிறது. அத்துடன், அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குகளையும் இது தடுக்கிறது. இது எல்லாம் நல்ல விளைவுகள் தான்"

"ஆனால் இதனால் எற்படும் பாதகங்களையும் நாங்கள் கணக்கு பார்க்க வேணும். சுற்றுச் சூழல் முற்றிலும் அழிந்து விடுகிறது; 116,000 பேர் குடிபெயர்வதினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், காடுகளின் அழிவு; மீன் முதலிய உரியரினங்களின் புலம்பெயர்வு (migration) தடை; ஆற்றிலே வண்டல் தன்மை குறைந்து விடுவதால் நசிந்து விடும் விவசாயம்; இவையெல்லாம் பாதகமான விளைவுகள்"

"இந்த அறிக்கையின் 46ம் பக்கத்திலே கொடுத்திருக்கம் விபரங்களின் படி, நன்மைகளக்கு 370 புள்ளிகள் என்றால் தீமைகளக்கு 520 புள்ளிகள் விழுகின்றன."

"ஆனால் இந்தக் கணக்கிலே நாங்கள் ஒரு மிகப் பெரிய தப்பு செய்து விட்டோம்"

"இந்த இடத்திலே வாழும் 16 வகையான உயிரினங்கள் இந்தப் பிராந்தியத்திலேயே பிரத்தியேகமாக வாழும் தன்மைபெற்றவை. இந்த உலகின் வேறெந்த மூலை முடுக்கிலும் இந்த உயிரினங்களைக் காண ஏலாது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடும்; பூண்டோடு போய் விடும்"

"இந்த உயிரினங்களின் அழிவுக்கு மதிப்புப் புள்ளிகள் போட முடியுமா? கோடி புள்ளிகள் போட்டாலும் அவை ஈடாகுமா?"

"கடவுள் இந்த உயிரினங்களைச் சிருஷ்டித்தார். இவை எத்தனையோ கோடி ஆண்டுகள் இதே இடத்தில் உயிர் வாழ்ந்தன. ஆனால், இனிமேலும் அவைகள் உயிர் வாழும் பொறுப்பு கடவுள் கையில் இல்லை; உங்கள் ஒன்பது பேருடைய கைகளில்தான் இருக்கிறது" என்றேன்.

கூட்டத்தில் சிறிது நேரம் சலனமில்லை. சாயத்தின் முகம் பேயறைந்தது போலிருந்தது. பாதிரியாரின் முகத்தில் புன்சிரிப்பு.

தலைவர் ஐந்து நிமிடங்களில் தன் முடிவுரையைக் கூறினார். அதன் கடைசி வாசகம்:

"தகுந்த ஆதாரங்களினாலும், ஆணித்தரமான வாதங்களாலும் இந்த அணைக்கட்டு மனித மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது தீர்மானமாகி விட்டது. ஆகவே இதைக் கைவிடும் ஆலோசனையை இன்றே அரசாங்கத்து ககு அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

* * *

வெளியே வந்ததும் எரிக்ஸன் என்னைக் கட்டிப் பிடித்து மேலே தூக்கினான்.

"எப்படி செய்தாய்?, எப்படிச் செய்தாய்?" என்று துளைத்து எடுத்தான். நான் "கச்சியப்பருக்கு நன்றி" (Thanks to Kachiyapar) என்று கூறினேன். "யாரிந்தக் கச்சியப்பர்?" என்று நச்சரித்தான். நான் "பிறகு சொல்கிறேன்" என்று கூறி அவனிடமிருந்து மெள்ளக் கழன்று கொண்டேன்.

அன்று பின்னேரம் எரிக்ஸன் மறுபடியும் என் அறைக்கதவை விடாமல் தட்டியபடியே இருந்தான். நான் சாயங்கால பூசையை முடித்துக் கொண்டு கதவைத் திறந்ததும் என் கையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தன் ரூமு கக அழைத்துப் போனான்.

அங்கே இருந்த வசதியான கதிரையில் அவன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னையும் இருக்கச் சொன்னான்.

பணிப்பெண்ணிடம் பீர் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவள் அசைந்து அசைந்து பீரைக் கொண்டு வந்து வைத்தாள்; கண்களைச் சுழட்டி ஒரு வீசு வீசிவிட்டு போய்விட்டாள். எரிக்ஸனுடைய கண்கள் அவளைத் தடவி கொண்டே கொஞ்ச தூரம் பின்சென்று மீண்டும் திரும்பியது.

பீரை ஊற்றி சுவைத்துக் குடித்தான். பிறகு என்னைப் பார்த்து "யார், அந்தக் 'கசியபா', சொல்" என்றான். அவனுடைய ஆவலும் பீருடைய நுரை போல பொங்கிக் கொண்டு நின்றது.

நான் சொன்னேன்:

"எரிக்ஸன், 'கசியபா' இல்லை; 'கச்சியப்பர்' உனக்கு இது விளங்காது. எங்கள் பழக்க வழக்கங்கள், சமயக் கோட்பாடுகள் இவற்றை அறிந்த ஒருவரால்தான் நான் சொல்லப் போவதை உண்மையில் புரிய முடியும்; இது வீண் நேரம்."

அதற்கு எரிக்ஸன் "எந்த ஒரு விஷயமும் அதைச் சொல்லும் விதத்தில் இருக்கிறது. சொல்கிறவர் கெட்டிக்காரர் என்றால், புரிகிறவர் புரிந்து கொள்வார். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு, நான் புரியும் வரை புரிந்து கொள்கிறேன்" என்றான்.

காலைத் தூக்கி மேலே போட்டுக் கொண்டு, பீர் குடித்தபடி கந்தபுராணம் கேட்கம் முதல் மனிதன் இவனாகத்தானிருக்கம் என்று நான் என் மனதிற்குள் நினைத்துக் கொண்ட சொன்னேன்:

"கச்சியப்பர் என்பவர் கந்தப்புராணம் என்ற பெருங்காப்பியத்தை தமிழிலே பாடினார். அதை அரங்கேற்றும் போது, ஒரு இலட்சம் கிரந்தங்கள் கொண்ட அந்த நூலில் முதல் செய்யுளில், முதல் வரியில், முதல் வார்த்தையிலேயே ஒரு சிக்கல் வந்து விட்டது. சிக்கலோ பெரிய சிக்கல். ஆனால் கச்சியப்பர் ஆணித்தரமான ஆதாரத்தோடு அந்த சிக்கலை அவிழ்க்கிறார். சபையோருக்கு அவருடைய ஆழ்ந்த புலமையிலே அளவற்ற மதிப்பும், நம்பிக்கையும் பிறக்கிறது (the credibility is established)."

"அதற்கு பிறக கச்சியப்பர் மீதி செய்யுள்களையெல்லாம் தங்கு தடையின்றி படித்து, பொருள் கூறி வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார்."

"என்னுடைய அபிப்பிராயம், அந்த முடிச்சை கச்சியப்பர் வேண்டுமென்றே வைத்தார் என்பது தான். அல்லாவிட்டால், ஒரு லட்சம் பாடல்களில் முதல் செய்யுளில், முதல் வரியில் ஒரு எக்கச்சக்கமான வார்த்தையை முதல் வார்த்தையாக முதல் வார்த்தையாக யாராவது வைத்திருப்பார்களா?"

"Y.D. இது நல்லாயிருக்கு; விபரமாய்ச் சொல்" என்றான் எரிக்ஸன்.

* * *

தொண்டை மண்டலத்திலே சிறந்து விளங்கும் காஞ்சி புரத்தில் காளத்தியப்பசிவாசாரியாருக்கு புத்திரராக பிறந்தார் கச்சியப்பர். அவர் தன் ஐந்தாவது வயதிலேயே வித்தியாரம்பம் செய்யப்பெற்று தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்து வல்லுனரானார்.

ஒரு நாள் குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் இவர் கனவிலே தோன்றி "அன்பனே, நீ நமது சரித்திரத்தை கந்தப்புராணம் எனப்பெயரிட்டு தமிழிலே பெருங்காப்பியமாகச் செய். அதற்கு முதல் அடியாக 'திகடசக்கரச் செம்முக மைந்துளான்' என்று தொடங்குவாயாக" என்று கூறி மறைந்தார்.

இவரும் அப்படியே கந்தப்புராணத்தைப் பாட ஆரம்பித்து நாளொன்றுக்கு நூறு பாடல்கள் பாடி அந்தக் காப்பியத்தை குறைவற முடித்தார்.

இந்த நூலை அரங்கேற்றும் பொருட்டு தமிழ் புலவர்களுக்கும், வேதவேதாங்க பண்டிதர்களுக்கும், சிவாகம விற்பன்னர்களுக்கும் தேவார திருவாசக வல்லுனர்களக்கும் ஓலை விடுத்து சபையைக் கூட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சுபதினத்தில் கந்தப்புராணத் திருமுறையை குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் முன்வைத்து துதித்து பின்னர் முதற் செய்யுளை உரைக்கலானார்:

'திகரசக்கரச் செம்முகமைந்துளான்' என்று வாசித்து, அதாவது 'திகழ்+தசம்+கரம்', விளங்குகின்ற பத்து திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களுமாகவுள்ள சிவவெருமான்' என்று பொருள் கூறித் தொடங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த புலவர்களிலே மூத்த புலவர் ஒருத்தர் எழுந்து "நில்லும், நில்லும்; திகழ் தசம் கரம் 'திகடசக்கரம்' என்று புணர்வதற்கு விதி தொல்காப்பியம் முதல் இலக்கண நூல்களில் இல்லையே? இது எப்படிப் பொருந்தும்" என்று கூறினார்.

அதற்குக் கச்சியப்பர் திகைத்து நின்று "இது முருகனே எடுத்துக் கொடுத்த அடியல்லவா? இதற்குக் கூட இலக்கண விதிகள் உண்டா?" என்று கேட்டார்.

அப்போது அந்தப் புலவரானவர் புன்முறுவல் பூத்து "உமக்கு அடியெடுத்துக் கொடுத்த முருகன் இவ்விடம் வந்து சாட்சி சொல்வாரானால் நாங்கள் அக்கணமே இதனை அங்கீகரிப்போம்; அன்றேல் இதற்கு யாதேனும் ஒரு பிற இலக்கண நூலில் விதி காட்டினும் அங்கீகரிப்போம்; அல்லாவிடில் அரங்கேற்ற ஒப்புக் கொள்ள மாட்டோம்" என்றார்.

இத்தருணத்தில் ஏனைய புலவர்களும் இரு கூறாகப் பிரிந்து தந்தமக்குத் தோன்றிய படி விவாதம் செய்ய அன்றைய போதில் முக்காப் போதும் கழிந்தது; கச்சியப்பரும் 'இதற்கு முடிவு நாளை தெரியும்' என்று கூறி சபையைக் கலைத்தார்.

கச்சியப்பர் முருகனின் நேரே போய் "அப்பனே, உன்னாலன்றோ நான் கந்தப்புராணம் பாட முற்பட்டது. அதற்கு நீ எடுத்துக் கொடுத்த அடியிலேயே இழுக்கு வந்துவிட்டதே? இது தகுமா?" என்று குறையிரந்தார்.

அன்றிரவு முருகன் அவன் கனவிலே தோன்றி "கச்சியப்பரே, பயப்பட வேண்டாம். சோழ தேசத்திலிருந்து ஒரு புலவர் நாளை வருவார். அவரால் சபையோருடைய ஐயம் தெளிவுறும்" என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் சபை கூடியது. அப்போது சோழ தேசத்திலிருந்து வந்த புலவர் ஒருத்த வீரசோழியம் என்ற இலக்கணநூலை சபையினரின் முன் சமர்ப்பித்து, சந்திப்படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் திகழ் தசம் என்பது திகடசம் என்று புணர்வதற்க விதியிருக்கிறதைக் காட்டினார். முன்னாளில் ஆட்சேபித்த புலவரும் அதனை வாங்கிப் படித்து 'திகடசக்கரம்' என்னும் புணர்ச்சிக்கு விதி சரியாயிருக்கக் கண்டு விம்மிதமும், மகிழ்ச்சியுமுற்றார்; மற்றைய புலவர்களம் ஒருவர் பின் ஒருவராக நூலை வாங்கிப் படித்து தங்கள் சந்தேகம் தெளிவுபெற்றனர்.

தடை பெற்ற அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. சபையோருக்க கச்சியப்பரிடத்தில் நம்பிக்கையும் மரியாதையும் பக்தியும் பெருகியது.

அதன் பிறகு தங்குதடை எதுவுமின்றி கச்சியப்பசிவாசாரியார் கந்தப்புராணத்தை வாசித்து பொருளும் கூறி அரங்கேற்றி முடித்தார்.

* * *

எரிக்ஸன் கதையை நன்றாக அனுபவித்துக் கேட்டான். விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு "உன்னுடைய கச்சியப்பர் பெரிய ஆள்தான்" என்றான்.

"இதை இனிமேல் 'கச்சியப்பரின் யுக்தி' (The Kachiyappar's strategy) என்று நாங்கள் எங்களுக்குள்ளே கூறிக் கொள்வோம்" என்றான்.

சிரித்துக் கொண்டே "சரி" என்றேன் நான்.

"ஏ! Y.D. அவுஸ்திரேலியாவில் நடக்கப் போகும் சம்மேளனத்துக்கு நீயும் வருகிறாயல்லவா? அங்கேயும் இதே யுக்தியை கையாளுவோம். அசந்து விடுவார்கள்" என்றான்.

நான் "ஒரு யுக்தியை ஒரு முறை கையாளலாம். இரண்டாவது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால் மூன்றாவது முறை எதிராளி உசாராகிவிடுவான். அடுத்த முறைக்கு புதிதாக ஏதாவது யுக்தி தயார் பண்ண வேண்டியது தான். கந்தப்புராணம் போனால் என்ன? சிவ புராணம் இருக்கிறதே! ஏதாவது தோன்றாமலா போய்விடும்! என்றேன்.

"அதுவும் சரிதான்" என்றான் எரிக்ஸன்.

Nantri -ilakiyam.com

No comments: