ஊர்வதுவே, பறப்பதுவே, நடப்பதுவே (நடைக்குறிப்பு) – யோகன்

கறுப்பு நிற பெரிய பல்லிகள் கோடை காலத்தில் வெளிவந்து வெயில் குளிப்பது போல பற்றைகளுக்கருகிலும் , பாதையோரத்திலும் படுத்துக் கிடக்கின்றன.   தற்செயலாகப் பார்க்கையில் பாம்பின் தலை போலத்  தோற்றங் காட்டிப் பயமுறுத்தும் இவைகளால் பெரும்பாலும்  ஆபத்தில்லை.
அன்று இந்த வகைக் கறுப்பு பல்லி யொன்று மெதுவாக தெருவை ஊர்ந்து கடக்கையில் ஒரு காரின் சக்கரங்களில் நசிபடாது தப்பியது.   தொடர்ந்து ஊர்ந்தது  பல்லி . ஆனால் பாவம் பின்னல்  வந்த காரின் சக்கரம் சரியாக பல்லியின் கதையை  முடித்தது. அதன் வெண்புற அடி வயிறு தெரிய பரிதாபமாக இறந்து விட்டதை  தெருக்கரையில் நின்று பார்த்திருந்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது?  
சில செக்கன்களில் கூட்டமாக வந்திறங்கின சில குக்குபாரோக்கள். சரிதான் அவைக்கு ஒரு டேக் எவே   கிடைத்து விட்டது என்ற திருப்தியில் நான் நடையைத் தொடர்ந்தேன். திரும்பி அந்த வழியாகப் போகையில் பல்லி  அங்கு கிடக்கவில்லை.
கொக்கட்டூ  என்ற வகைப்படும் கிளி  இனங்கள் இங்கு பல நூறு வட்டமடித்துப் பறக்கின்றன.  சாம்பல் நிற செட்டைகளும், மென் சிவப்பு கழுத்துமாக இருக்கும் இவை தெருவிலும்  திடீரென்று கூட்டமாக தரை இறங்கும்.
இன்னொருநாள் இப்படி இரைகளை தேடுவதற்காக கொக்கட்டூ கிளிகள் சாலையில் இறங்கின. இரைகள் பொறுக்கின.  வந்தது கரிய கார் ஒன்று. இமைப்பதற்குள் கிளிகள் யாவும் மேலே எழுந்தன ஒன்றைத்தவிர. அது இரையில் கொண்ட கவனம் கலையுமுன் காரின் முகப்பு அதனை அறைந்து மோதியது.  பாவம் தெருக்கரையில் காயப்பட்டு அரை உயிரில்  கிடந்தது கிளி.

பின்னால்   இன்னொரு கார் வந்தது. இளம் பெண்ணொருத்தி காரை விட்டு இறங்கி கிளியை கையில் எடுத்தாள். இன்னும் உயிர் இருந்தது கிளிக்கு.  காயத்திற்கு மருந்து இட்டுக் கட்டுவதற்காக காரில் அதனை எடுத்துச் சென்றாள்.  அப்படித்தான் நினைத்து மனதை உற்சாகப்  படுத்தினேன்.   
பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றது மனம். அவர் ஒரு பாடசாலை ஆசிரியர். காரில் பாடசாலைக்கு வருவார். பிள்ளைகளையும் காரில் ஏற்றி வருவார். மாலை வேளையில் வீடு திரும்புகையில் தெருவில்  இவர் காருக்குள் குறுக்கே ஓடியது ஒரு கோழி. காரை ஏற்றிவிட்டார். கோழி பெருங் குரலெடுத்துக் கத்தியபடி உயிரை விட்டது.
கோழியின் கூக்குரல் கேட்டு வீட்டுக்காரன் தன் கொட்டிலிருந்து கார்க்காரரை திட்டியபடி  ஓடி வந்தான். அவருக்கு சிந்திக்க சில வினாடிகளே இருந்தன. காரை விட்டு இறங்கினார். விழுந்து கிடந்த கோழியைத் தூக்கிக் கார் பூட்டுக்குள் போட்டார். ஜெட் வேகத்தில் விரைந்து காரைச் செலுத்தினார். பாவம் வெளியே வந்த வீட்டுக்காரன் காரையும் காணவில்லை, கோழியையும் காணவில்லை.  அவன் முட்டை இடும் கோழியை இழந்தான். அவருக்கு கோழிக்கறி வாய்த்தது. 
-->
"கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்பது இவருக்காகத்தான் எழுதப்பட்டதோ?




No comments: