" பங்குனியின்
கடைக்கூறு, வெய்யில் மணலை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அந்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல்,
அவள் - அந்தச்சிறுமி, சொர்ணம் மகள் பெரியபுலம் வெளிமுழுவதும் பம்பரமாய் சுழன்று வந்தாள்.
அவளது தலையில் ஒரு பெரிய நார்க்கடகம். கடகம் நிறைந்துவரும் எரு. அவள் இப்போது செல்லமுத்தாச்சிக்கு
எருப்பொறுக்கிறாள்."
இந்த வரிகளுடன்
தொடங்கும் அந்தக்கிராமத்துச் சிறுமியும் ஒரு
சிட்டுக்குருவியும் என்ற சிறுகதையை 1972 ஆம்
ஆண்டு டிசம்பரில் கொழும்பிலிருந்து வெளிவந்த பூரணி
காலாண்டிதழில் படித்தேன்.
நாற்பத்தியாறு
வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டு நவம்பரில், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும்
ஜீவநதியில், உயிரில் கலந்த வாசம் தொடர்நாவலில்,
"
எரு எடுப்பதற்கு ஒரு நாற்கடகத்தை நான் கையில் எடுத்துக்கொண்டேன். எல்லாம் அம்மாவை ஏமாற்றுவதற்குத்தான்." எனத்தொடங்கும் ஒரு அங்கத்தை படித்துக்கொண்டிருக்கின்றேன்.
இந்த வரிகளை
எழுதியிருக்கும் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமான படைப்பிலக்கிய ஆளுமை க. சட்டநாதனின் ஆயிரக்கணக்கான வரிகளை கடந்துள்ள
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் படித்துவருகின்றேன்.
பூரணியில் 1972 இல் நான் முதலில் படித்த சட்டநாதனின் சிறுகதை,
அந்தக்
கிராமத்துச்சிறுமி என்ற பெயரில் 1980 இல் வெளியான சட்டநாதனின் முதல் கதைத்தொகுப்பான
மாற்றம் நூலில் இடம்பெற்றுள்ளது.
அவரது கதை பூரணியில் வெளியான காலம் நினைவுத்தடத்தில் பசுமையாக பதிந்திருக்கிறது. எனது படைப்பிலக்கிய வாழ்க்கையும் அந்த ஆண்டில்தான்
மல்லிகையில் தொடங்கியது. பூரணியின் இணை ஆசிரியர்கள் என்.கே. மகாலிங்கம் - க. சட்டநாதன்.
ஆசிரியர் குழுவிலிருந்தவர்கள் இரா . சிவச்சந்திரன், தங்கவேல், கே.எஸ். பாலச்சந்திரன்
ஆகியோர்.
1972 ஜூலை மாதம் பூரணி முதல் இதழ், கொழும்பு கொட்டாஞ்சேனையில் சப்பாத்துவீதியில் என்.
கே. மகாலிங்கம் தம்பதியர் வசித்த இல்லத்தின் முகவரியிலிருந்து வெளிவருகிறது. அதன் வெளியீட்டு
அரங்கு கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கார்த்திகேசு
சிவத்தம்பி தலைமையில் ஒரு மாலைப்பொழுதில் நடக்கிறது.
நீர்கொழும்பிலிருந்து
செல்கின்றேன். அங்குதான் சிவத்தம்பி, மு. தளையசிங்கம், மு.பொன்னம்பலம், எஸ்.பொன்னுத்துரை,
கே. எஸ். சிவகுமாரன், மு. நித்தியானந்தன், சில்லையூர் செல்வராசன், க. சட்டநாதன், கே.
எஸ். பாலச்சந்திரன், தங்கவேல், இ. ஜீவகாருண்யன், வாமதேவன் உட்பட பல இலக்கியவாதிகளை
முதல் தடவையாக சந்திக்கின்றேன். ஆனால், அவர்கள் எவருடனும் என்னை அறிமுகப்படுத்தி பேசுவதற்கு
என்னிடத்தில் இலக்கியரீதியாக எதுவும் இருக்கவில்லை.
அன்று பூரணி வெளியீட்டையடுத்து , " ஈழத்து
இலக்கிய வளர்ச்சி" என்ற தலைப்பில் நடந்த கருத்தாடலில் பலரும் பேசினார்கள்.
மு. நித்தியானந்தன், மு. தளையசிங்கத்தின் கருத்துக்களுக்கு
தர்மாவேசத்துடன் எதிர்வினையாற்றினார்.
அந்தச் சந்திப்பில்
எனக்கு நன்கு தெரிந்தவராக இருந்தவர் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா மாத்திரமே! அவரும் அன்றைய நிகழ்வில் மு. தளையசிங்கத்தின் உரையினால்
கடுப்பாகியிருந்தார்.
மு.த.வை வெளியே
அழைத்து கடுமையாகப்பேசினார். எஸ்.பொ. சிகரட்டை
புகைத்துக்கொண்டு, கொடுப்பிற்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.
இந்த அமளிகளினால்
எவருடனும் அன்று பேசமுடியவில்லை. இரவு ஊருக்குத்திரும்பிவிட்டேன். பின்னர் நானும் ஒரு
சிறுகதை எழுதி பூரணிக்கு அனுப்பியிருந்தேன். அது எனது இரண்டாவது சிறுகதை. அதனை டிசம்பர்
இதழில் பிரசுரித்திருந்த பூரணி ஆசிரியர் என். கே. மகாலிங்கம், எனக்கு ஒரு அஞ்சலட்டையில் கடிதம் எழுதி தங்கள் இல்லத்திற்கு
அழைத்திருந்தார். அங்கு சென்றபோதுதான் சட்டநாதன், சு. வில்வரத்தினம், மு. பொன்னம்பலம்
ஆகியோரையும் பார்த்து நீண்டபொழுதுகள் உரையாடமுடிந்தது.
பூரணி சில
வருடங்களில் நின்றுவிட்டாலும், பூரணி இலக்கிய
குழுவினருடன் அன்று தொடங்கிய இலக்கிய நட்புறவு இற்றைவரையில் எந்தவிக்கினமுமின்றி தொடருகின்றது.
எனது கதை ' அந்தப்பிறவிகள்' வெளிவந்த பூரணி
டிசம்பர் இதழிலேயே சட்டநாதனின் அந்த கிராமத்துச்சிறுமியும் சிட்டுக்குருவியும் கதையும்
வெளிவந்தது.
சட்டநாதனும்
நானும் ஒரே காலப்பகுதியில் இலக்கிய இதழ்களில் எழுதத்தொடங்கியிருந்தாலும் சட்டநாதன்
தொடர்ச்சியாக சிறுகதைகளையே எழுதிவந்தவர். தற்போதுதான் அவர் நாவல் இலக்கிய முயற்சியில்
ஈடுபடத்தொடங்கியிருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக இருப்பதுதான் ஜீவநதியில் அவர் எழுதிவரும்
உயிரில் கலந்த வாசம் தொடர் நாவல்.
அவ்வப்போது
சிறிய சிறிய இலக்கியக்கட்டுரைகள் எழுதியிருந்தாலும், அவர் ஒரு முழுமையான சிறுகதைப்படைப்பாளிதான்.
இவ்வாறு இருப்பதும் தனித்துவமானது . சிறப்பானது. ஏனைய இலக்கியத்துறைகளில் கவனத்தைச்
செலுத்தி, முதலில் தொடங்கிய சிறுகதை இலக்கியவடிவத்திலிருந்து படிப்படியாக அகன்று, தங்கள் கவனத்தை சிதறச்செய்த பல எழுத்தாளர்களை அறிவேன்.
அதில் நானும் ஒருவன் என்பதையும் ஒப்புக்கொண்டே, எமது அருமை நண்பர் சட்டநாதன் பற்றிய
குறிப்புகளை எழுதுகின்றேன்.
1972 இல்
இலக்கிய நண்பர்களாக இணைந்திருந்த நாம் எதிர்பாராதவகையில், 1980 களில் வீரகேசரியில்
இணைந்தும் பணியாற்றியிருக்கின்றோம்.
விஞ்ஞான பட்டதாரி
ஆசிரியரான சட்டநாதன், 1977 களில் நான் பகுதி நேரத்தொழில் சார்ந்து இணைந்திருந்த இலங்கை
ஆசிரியர் சங்கத்திலும் அங்கம் வகித்தவர். மூவினத்தவர்களுக்குமான அந்த ஆசிரியர் தொழிற்சங்கம்
பலமுடன் இயங்கியது. அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்தான் எச். என். பெர்ணான்டோ. இவரது
தங்கையைத்தான் மக்கள் விடுதலை முன்னணி ஸ்தாபகர் ரோஹண விஜேவீரா மணம்முடித்தார். இவர்கள்
இருவருமே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
1976 இல்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற அறப்போராட்டத்தை நாடுதழுவிய ரீதியில் நடத்திய
இலங்கை ஆசிரியர் சங்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து
பெரும் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தியபோது நண்பர் சட்டநாதனும் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டு, அன்றைய அரசின் கொடும் சட்டங்களினால்
தனது வேலையை இழந்திருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில்
வீரகேசரி விளம்பரப் பிரிவில் அவர் இணைந்தார்.
நானும் அதே காலப்பகுதியில் வீரகேசரியில் உள்ளக
இடமாற்றத்தினால் அந்தப்பிரிவிற்கு செல்லநேர்ந்தது.
இருவரும்
தினமும் சந்தித்தமையால், வேலை நேரங்கள் தவிர்ந்த வேளைகளில் இலக்கியம், சமூகம், திரைப்படம்,
நாடகம் பற்றியெல்லாம் பேச முடிந்திருக்கிறது. மதிய உணவு இடைவேளையில் அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டிருப்போம். எவருடனும் இன்முகத்துடன்
உறவாடும் இயல்புள்ள சட்டநாதனுக்கு அதிர்ந்துபேசத்தெரியாது. சக ஆண் ஊழியர்களை "அப்பு - அப்பு" என வாய்மணக்க அன்பூதுர அழைப்பார். அங்கு தமிழ்,
முஸ்லிம், சிங்கள ஊழியர்களும் பணியாற்றியமையால் அனைவருடனும் சகோதர வாஞ்சையுடன் பழகுவார்.
விளம்பரப்பிரிவில்
ஒரு முதிய முஸ்லிம் அன்பர் அச்சுக்கோப்பாளராக பணியாற்றினார். அவரது பெயர் முகம்மது பாஸி. அவரை நாமெல்லோரும் "பாஸி
நானா" என்றுதான் அழைப்போம். அவர் சொல்லுவார்,
" சட்டநாதன் சேர் ஊருக்குள்ள நடந்தா நிலத்தில்
இருக்கும் புல்லும் சாகாது. அவ்வளவு மெதுமையான மனுசர்"
பாஸிநானா
மறைந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் சட்டநாதர் வீதியில் வசிக்கும் சட்டநாதனோ, அவுஸ்திரேலியா
மெல்பனில் வதியும் நானோ அந்த பாஸி நானாவை மறக்கமாட்டோம்.
ஒருதடவை ஒரு
சிறுவிளம்பரம் வந்துவிட்டது. அதனை வாங்கி அச்சுக்கோப்பாளர்
பிரிவுக்கு ஒரு ஊழியர் கொடுத்துவிட்டார். அதனை அச்சுக்கோத்தவர் பாஸிநானா.
அந்த விளம்பரத்தின்
தலைப்பு இவ்வாறு அமைந்துவிட்டது:-
"பொடியன் வேலைக்கு ஆள் தேவை"
இது அச்சுக்குப்போயிருந்தால்
விபரீதமாகியிருக்கும். உரியநேரத்தில் அதனை கண்டுபிடித்தவர் சட்டநாதன். " பாஸி
நானா, ஏன் இப்படி அச்சுக்கோர்த்தீர்கள். அதன் அர்த்தம் வேறு அல்லவா?" எனக்கேட்டார்.
" ஏன்
சேர்...? பொடியன்மாரை வேலைக்கு கேட்கிறார்கள்.
அதுதானே....!" என்றார் பாஸிநானா.
" பாஸி
நானா, பொடியன் விளையாட்டுக்காரன்கள் என்றும் சிலரை சமூகத்தில் சொல்வார்கள் இல்லையா...?
அந்தவேலைக்குத்தான் ஆட்களை தேடுகிறார்கள்"
என்றும் அர்த்தப்படும் அல்லவா ?" என்று சிரிக்காமலேயே சொல்லி சிந்திக்கவைத்தவர்
சட்டநாதன்.
அதன்பின்னர், "வீட்டு வேலைக்கு ஆள் தேவை" எனத்திருத்தினார்
சட்டநாதன். இந்தக்கதை சிறிதுகாலம் எங்கள் அலுவலகத்தில் பேசுபொருளாகவே இருந்தது.
படைப்பிலக்கியவாதிகளுக்கு
கிடைக்கும் சமூக அங்கீகாரம் முதலில் யாரோ ஒருவரிடமிருந்துதான்
மேற்கிளம்பும். பின்னர் அதனையடியொற்றி மற்றவர்களும் பேசவும் எழுதவும் தொடங்குவர். முதலில்
அந்த அங்கீகார வார்த்தைகளை முன்மொழிபவர்களை வசிட்டர்
என்பார்கள். அதனால்தான் அத்தகையோரின் அங்கீகாரத்தை "வசிட்டர் வாயால் மகரிஷிப்பட்டம்" என்பார்கள்.
பேராதனைப்
பல்கலைக்கழகத்தில் ஒரு இலக்கிய வசிட்டர் இருந்தார். அவர் இன்றும் வசிட்டர்தான்! எளிதில்
எவரையும் அங்கீகரித்துவிடமாட்டார். அவரும் நான் வதியும் மெல்பன் நகரில்தான் இருக்கிறார்.
அவர்தான்
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர்.
இவர், என்.கே.
மகாலிங்கம், மு. பொன்னம்பலம், மு. நித்தியானந்தன், ஆழியாள் உட்பட பல இலக்கியவாதிகளின்
ஆசிரியர். வீரகேசரி ஆசிரியபீடத்தில் செ. கதிர்காமநாதன், ஸ்ரெனிஸ்லஸ் என்ற அன்டன் பாலசிங்கம்
ஆகியோருடன் பணியாற்றியவர்.
பல வருடங்களுக்கு
முன்னரே சட்டநாதனின் சில சிறுகதைகளை படித்துவிட்டு, " சட்டநாதன் சிறந்த சிறுகதை ஆசிரியர். இவர் எதிர்காலத்தில் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறுகதைத்துறையில் பிரகாசிப்பார்.
இருந்து பாருங்கள்." என்று அன்றே தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு இந்த
வசிட்டர் சொன்ன வாசகங்களுடன் சட்டநாதனை 1991 மார்ச் மல்லிகை இதழில் அறிமுகப்படுத்தி
எழுதியிருந்தார் இரா. சிவச்சந்திரன். அந்த இதழில் சட்டநாதன்தான் அட்டைப்பட அதிதி.
வட இலங்கையில்
வேலணையில் பிறந்திருக்கும் சட்டநாதன் அந்த தீவுப்பகுதியைச்சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்களுடனும்
நெருக்கமான உறவை பேணி வளர்த்தவர். இவரை நண்பராகப் பெறுபவர்கள் எளிதில் இவரை மறந்துவிடமாட்டார்கள்.
இழக்கத் தயாராகமாட்டார்கள்!
வேலணையில்
மறுமலர்ச்சிக்கழகம், தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் முதலானவற்றிலும் அறுபதுகளில் சட்டநாதன்
இணைந்திருந்த காலத்திலேயே தரமான இலக்கிய ரசனை மிக்கவராகவே திகழ்ந்திருந்திருப்பதாக
சிவச்சந்திரன் பதிவுசெய்துள்ளார்.
" எனது
கதைகள் பற்றி நானே ஏதாவது சொல்லவேண்டும் போலிருக்கிறது. விஸ்தாரமாக அல்ல, சுருக்கமாக.
எந்தப்புற நிகழ்வுகளுமே என்னைப்பாதிக்கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது. சில சமயங்களில்
காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனம்தான் எனது கதைகள். இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின்
அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப்பிணைந்து கிடக்கும் தளைகளைத்தகர்த்து, விட்டு
விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது. ஆண் - பெண் உறவு உணர்வு விவகாரங்களைக்கடந்து
சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான் பிச்சைப்பெட்டிகளும் அந்தக்கிராமத்துச்
சிறுமியும். இக்கதைகளிலும் ஏனைய கதைகளிலும் வருபவர்கள் நமது சிநேகத்திற்கும் நேசத்திற்கும்
உரியவர்கள். மனிதநேசம் சாஸ்வதமானது."
இவ்வாறு தனது
முதலாவது கதைத்தொகுப்பான மாற்றம் நூலில் சொல்லும் சட்டநாதன், இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்துக்கதைகளிலும்
மனிதநேசம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பெண்களின் விட்டு விடுதலையாகும் இயல்பு சித்திரிப்பாகின்றது.
இவருடைய படைப்புமொழி
எந்தச்சிக்கல்களும் அற்ற எளிமையானது. அதனால் எத்தகைய வாசகர்களுக்கும் இலகுவில் நெருக்கமாகிவிடும். இலக்கியவட்டாரத்தில்
சிறுகதை இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால், அங்கு சட்டநாதனின் பெயர் தவிர்க்கமுடியாததாயிருக்கும்.
நான் இலக்கிய
உலகில் பிரவேசித்த காலப்பகுதியில், இலங்கையின்
மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்,
" தானும் கே. டானியலும், தெணியானும்,
என். கே. ரகுநாதனும், டொமினிக் ஜீவாவும் வட மாகாணத்தில் நீடித்திருந்த சாதிப்பிரச்சினை
பற்றி பல கதைகளும் நாவல்களும் எழுதியிருந்தாலும், சட்டநாதன் எழுதிய மாற்றம் என்ற ஒரு கதையே போதும் சட்டநாதனை
தொடர்ந்தும் நினைவில் இருத்திவைப்பதற்கு " என்று சொன்னார்.
சட்டநாதனின்
படைப்பாளுமைப்பண்பு பற்றி தமிழகத்தில் ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் உட்பட, அருண்மொழிவர்மன், தி. செல்வமனோகரன், ஜீவநதி
பரணீதரன், இரா. சிவச்சந்திரன், குப்பிழான் ஐ. சண்முகன், கலாநிதி நா. சுப்பிரமணியன்,
ஏ.ஜே. கனகரத்தினா, பேராசிரியர் சிவசேகரம், கருணாகரன், ஏ.ஜே. கனகரத்னா, மதுசூதனன் முதலானோர் விதந்து எழுதியுள்ளனர்.
எனினும், பெண்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்காகவும் எழுதிவரும் சட்டநாதனின் படைப்புலகம் பற்றி நானறிந்தவரையில்
பெண்ணியவாதம் பேசும் பெண்கள் இதுவரையில் எழுதவில்லை
என்பது எனது நெருடலான அவதானம்!
தமிழ் கதைஞர்
வட்டத்தின் (தகவம்) பரிசில்களை சட்டநாதனின் பல கதைகள் பெற்றுள்ளன. சட்டநாதனின் இரண்டாவது
சிறுகதைத்தொகுப்பு உலா, (1992) யாழ். இலக்கியவட்டம், அகில இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு
ஆகியனவற்றின் விருதுகளையும் வட - கிழக்கு மாகாண
சாகித்திய விருது, இலங்கை தேசிய சாகித்திய விருது முதலானவற்றையும் பெற்றுள்ளது.
1970 இல்
இவரது முதல் சிறுகதை நாணயம் வீரகேசரி வாரவெளியீட்டில்
வந்திருப்பதாக அறியப்பட்டாலும், நான் முதலில்
படித்த அவரது கதை பூரணியில் 1972 இல் வெளியானது. இவரது சில கதைகள் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு
வெளிநாட்டு இதழ்கள் - நூல்களிலும் ( Journal of South Asian Literature - The
Penguin New writing in Srilanka) வந்துள்ளன.
மல்லிகையில்
சட்டநாதன் எழுதியிருந்த உறவுகள் கதை, அது வெளிவந்த காலப்பகுதியில் இலக்கிய உலகில்
அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
சட்டநாதனின்
கதைகளை படித்திருக்கும் வெங்கட் சாமிநாதன் தனது பாணியில் இவ்வாறு எழுதியிருந்தார்.
" சட்டநாதன், தனது மனமடிப்புகளில் என்ற கதையில் சில நினைவுகளை அசை போடுகிறார். சாதாரணமாகவே ஆங்காங்கே தம் வாசிப்புகளைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியுமான குறிப்புகள் வரும். அவர் நினைவு கொள்ளும் எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன், செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம், ராமாமிருதம், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், ஜெயகாந்தன் இப்படி பலர் உண்டு. இதுவே ஒரு அசாதாரண கலவை தான். ஏனோ இவர்களில் எஸ் பொன்னுத்துரையோ, அ. முத்துலிங்கமோ, சேரனோ தென்படுவதில்லை. இந்த பழம் நினைவுகளின் மனமடிப்புகளில் அன்று சிவராமூவாகவும் பின்னர் பிரமீளாகவும் தெரிய வந்தவர் மைலாப்பூரில் சட்டநாதன் இருந்த காலத்தில், நான் திருமலை, பலத்தார் தான். உங்கள் விலாசம் தந்தவர், மைலாப்பூரிலை, தெற்கு மாடவீதியில் இருக்கினம், போய்ப் பாருங்க என்றவர்..." என்று அறிமுகம் செய்து கொண்டவர், இன்னும் , " அம்மா வழியில எனது பூர்வீகம் வேலணை தான். நான் பலத்தாருடைய மச்சாளின் மகன் சிவராம் " என்று அறிமுகம் தொடங்கியது. " முன்பின் பார்த்திராத, பழகியிராத ரத்த பந்தம் " என்று சட்டநாதன் தனக்குள் சொல்லிக்கொள்கிறார். பின் சிவராமூ அழைக்க, செல்லப்பாவைப் போய்ப் பார்க்கிறார்கள். " தமிழ் நாட்டில் தீவிர எழுத்தாளர் நடுவே பெயர் சொல்ல வந்த ஒரு கிறுக்கன் அவர் " என்று பிரமிக்கும் சட்ட நாதன், அவர் 58 வயதில் கரடிக்குடி கிராமத்தில் மறைந்ததை துயருடன் நினைவு கொண்டு , "தமிழ் உள்ளவரை அவருக்கு சாவில்லை" என்று முடிக்கிறார். ஒரு நல்ல தீர்க்கமான, பாராட்டும், நினைவுகொள்ளலும் தான். இதுவும் சட்டநாதன் தான்."
இவ்வாறு மற்றும் ஒரு வசிட்டரின் வார்த்தைகளினால் பிரம்மரிஷி அங்கீகாரம் பெற்றவர்தான்
எங்கள் சட்டநாதன்.
சட்டநாதன், ஆண் - பெண் உறவுகளை துல்லியமாக
இனம் கண்டு எழுதிவரும் அதேசமயம், உளவியல் பாங்கிலும் பாத்திரங்களை படைப்பவர். ஒரு பாடசாலை
மாணவனின் எண்ணச்சுழற்சியையும் அதன் அடிப்படையில்
வரும் மன அழுத்தத்தையும் (Obsessive
Compulsive disorder) அழகாக சித்திரித்து அழுத்தம் என்ற கதையை எழுதியவர்.
சட்டநாதன், சிறுகதைகளை எழுதத் தொடங்கிய காலம் முதல்,
இன்று ஜீவநதியில் தொடர்நாவல் எழுதும் காலம் வரையில் சித்திரித்த பாத்திரங்களும்
அவர்களை நடமாடவிட்டு வாசகரை அழைத்துச்செல்லும் ஊர்களும் மனதை விட்டு அகலாது.
முக்கியமாக பெண்களும் , குழந்தைகளும்,
அவரது கதைகளில் வரும் ஊர்களும் வீதிகளும் ஏன், மரம் செடி கொடிகளும் காய் , கனிகளும்
பறவையினங்களும் எமது வாசிப்பு அனுபவத்தில் உடன் வந்துகொண்டிருக்கும்.
அவரே, அவர் படைக்கும் அந்தப் பாத்திரங்களுக்குள் தன்னையும் அறியாமல் அமர்ந்திருக்கிறாரோ!?
என்றும் எம்மை யோசிக்கத் தூண்டும். இலக்கிய உலகில் கடந்த நான்கு
தசாப்த காலங்களுக்கும் மேலாக உடன் பயணித்துவரும் நண்பர் சட்டநாதனை இலங்கை செல்லும்
சந்தர்ப்பங்களிலெல்லாம் யாழ்ப்பாணத்தில் நான் சந்திப்பது வழக்கம்.
2011 ஜனவரியில் கொழும்பில் நாம்
முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோது அந்த நான்கு நாட்களும் தவறாமல்
வந்து அனைவருடனும் கலந்துரையாடினார். அரங்கொன்றில் பேசுமாறு கேட்டபோதும், "எழுத்தாளர்கள்,
கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வாசகர்களைப் பார்த்துப்பேசுவதே பரவசமானது. அதற்காகவே வந்தேன்."
என்றார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 31 வருடகாலமாக
நாம் இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்
என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியை பெறும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வேளைகளில், நண்பர்
சட்டநாதனையும் தவறாமல் அழைப்பது எனது வழக்கம். அங்கு வரும் அவரை எமது தொடர்பாளர்களுக்கும்
மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துவேன்.
அவர்கள் மத்தியில் உரையாற்றுமாறும்
கேட்பேன். இன்முகத்துடன் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை அவதானிப்பார். மாணவர்களுக்காக
நமது நிதியம் தரும் நிதிக்கொடுப்பனவுகளை வழங்குவார்.
ஆசிரியப்பணியிலும் ஈடுபட்டிருந்த அவருக்கு அவ்வாறு வழங்கும் தகைமையும் இருக்கிறது. மதிய விருந்தோம்பலிலும் கலந்துகொண்டு
விடைபெற்றுச்செல்வார்.
அவரை மார்போடு அணைத்து விடைகொடுத்து
அனுப்புவேன். அவரது அன்புத்துணைவியார் மறைந்த செய்தியறிந்ததும் தொலைபேசியில் தொடர்புகொண்டு
ஆறுதல் சொன்னேன்.
அவருக்கு குழந்தைகள் இல்லை. இன்று
மனைவியும் இல்லை. எனினும், அவர் சிருஷ்டித்த
குழந்தைகளும் மனைவிமாரும் அநேகம்! அவர் உளமாற
நேசித்த மனைவியும் சமூகத்தின் குழந்தைகளும் சகோதர சகோதரிகளும் நண்பர்களும் அவரது கதைகளில் ஏதோ
ஒரு உருவத்தில் வந்துகொண்டிருக்கிறார்கள்! வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!
அவர் தனது நூல்களை குடும்ப அங்கத்தவர்களுக்கே
சமர்ப்பணம் செய்தவர்.
இலங்கையில் மல்லிகை, ஞானம், ஜீவநதி ஆகியன சட்டநாதனை அட்டைப்பட
அதிதியாக பாராட்டி கௌரவித்துள்ளன. ஜீவநதி சிறப்பிதழே வெளியிட்டுள்ளது.
இலக்கிய உலகில் கொண்டாடப்படவேண்டியவரான
சட்டநாதனின் படைப்புலகம், பாத்திர வார்ப்புகள், கதைசொல்லும் உத்தி பற்றியெல்லாம் வாசகர் மட்டத்தில் அனுபவப்பகிர்வுகளை எதிர்காலத்தில்
நடத்தவேண்டும், அவர் குறித்து ஆவணப்படம் தயாரிக்கவேண்டும்
முதலான வேண்டுகோள்களையும் இந்தப்பதிவின் ஊடாக
முன்வைக்கின்றேன்.
( நன்றி: " நடு" இணைய இதழ் - பிரான்ஸ்)
---0---
No comments:
Post a Comment