நேர்படப் பேசு - தி வினோதினி

.

நேர்படப் பேசு

இங்கேதான்
நான் இங்கேதான் நின்றுகொண்டிருக்கிறேன்
நீங்கள் என் முதுகிற்கு பின்னால் அல்ல
முகத்திற்கு முன்னால் உமிழுங்கள் உங்கள் வார்த்தைகளை
என் புன்னகையை பரிசாக்குவேன்

என் இரு செவிகளும் திறந்தேயிருக்கின்றன
ஒன்று உள்வாங்குவதற்கும்
மற்றொன்றால் வெளியிடுவதற்குமாக
என் நெஞ்சுக்கூட்டில் அதி வெளிகளில்லை
உங்கள் சாக்கடை சிந்தனைகளை தேக்கிவைப்பதற்கு
என் செவிகள் திறந்தேயிருக்கின்றன

திட்டுவதானாலும் திட்டிவிடுங்கள்
உங்கள் வார்த்தைகளின் விகாரங்களை தாங்குமளவிற்கு
தைரியமாகவே வளர்ந்திருக்கிறேன்
எனினும் என் தைரியத்தை பார்த்து நீங்கள்
பயம் கொள்ளத் தேவையில்லை
வீண் விவாதங்களில் உங்களை சந்திக்க
என் நாட்காட்டியில் இடைவெளிகள் ஏதுமில்லை.

தி வினோதினி

nantri /eluthu.com

No comments: