உலகச் செய்திகள்


வண்ண மையமான சிற்பங்களுடன் ஹார்பின் பனி விழா

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது -சி. வி. சண்முகம்

வடகொரியத் தலைவர் கிம் சீனாவுக்கு திடீர் பயணம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு

நான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் ஹசினா 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து பெண் வேட்பாளர்

டிரம்ப் ரஸ்யாவிற்கு ஆதரவாக செயற்படுகின்றாரா – எவ்பிஐ விசாரணைவண்ண மையமான சிற்பங்களுடன் ஹார்பின் பனி விழா

07/01/2019 2019 ஆம் ஆண்டுக்கான 35 ஆவது ஹார்பின் சர்வதேச பனி மற்றும் பனி சிற்ப விழா கடந்த 05 ஆம் திகதி சீனாவில் ஆரம்பமானது.

வட சீனாவின் ஹய்லாங்ஜியங் மாகாணத்தின் தலைநகரான குளிர்ப்பிரதேசமான ஹார்பின் நகரில், டிசம்பர், ஜனவரியில், மைனஸ் டிகிரி குளிர் நிலவும். உடலை உறைய வைக்கும் இந்த குளிரில், பனி சிற்ப திருவிழா நடக்கும். 
ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். 
இந்தாண்டுக்கான பனி சிற்ப திருவிழா, 2019 ஜனவரி 5 ஆம் ஆரம்பமாகியுள்ளது. 
சீனா ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் பனிசிற்ப போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்று உள்ளதுடன் மைனஸ் 10 டிகிரி குளிர் உள்ள நிலையில் 64 போட்டியாளர்கள் தங்களின் கைத்திறமையையும், கற்பனை வளத்தையும் காட்டி வருகின்றனர்.
பனிச்சிற்பங்களை கொண்டுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் இறுதி நாளில் சிறந்த சிற்பத்திற்கான பரிசுகளும் அளிக்கப்படும்.
ஹர்பினில் 1985 ஆம் ஆண்டில் இருந்து பனிச் சிற்பத் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது -சி. வி. சண்முகம்
10/01/2019 ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது அவரது மரணத்தை சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று வழக்கு பதிவு செய்து, சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சட்ட அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்திருககிறார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது
“ஜெயலலிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக வைத்தியசாலை வாசலில் காத்திருந்தோம். ஜெயலலிதா இட்லி , உப்புமா உட்கொண்டார் என்று 1 கோடியே 17 லட்சம் கணக்கு எழுதியுள்ளனர்.
யார் இட்லி உட்கொண்டார், மூன்று வைத்தியர்கள் ஒஞ்சியோகிராம் செய்யச்சொல்லியும் ஏன் செய்யவில்லை? ஜெயலலிதா ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார், அவருக்கு ஒஞ்சியோகிராம் செய்யவேண்டும் எனக்கூறியதை தடுத்தது யார், வைத்தியசாலையை ஆட்டிப்படைத்த சக்தி எது?.
அந்த உண்மை தெரிய வேண்டும். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
 அவருக்கு வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக எயர் அம்புலன்ஸ் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தும் அதை ஏன் மறுத்தார்கள்?. அதற்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்பினால் வைத்தியர்களின் கௌரவம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஒரு நோயாளியைக் குணப்படுத்த வேண்டுமே தவிர கௌரவம் பார்ப்பது வைத்தியர்களின் கௌர தான் முக்கியம் என்று பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை இந்த அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும். 
ராமமோகன் ராவ் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொன்னதாகவும், அதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மிகப்பெரிய பொய்யை, குற்றச்சாட்டை தமிழக அமைச்சரவை மீதும், அமைச்சர்கள் மீதும் ராம மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னும், அதன் பின்னரும் அமைச்சரவை கூடவே இல்லை அதற்கு நானே நேரடி சாட்சி. அப்படியானால் ஆணையத்தில் அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் கூறினார் என்றால் அதைச் சொன்னது யார்? அவராக சொன்னாரா? அவர் பின்னணியில் இருப்பது யார்? அப்படியென்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் நாங்கள் எல்லாம், தொண்டர்கள் எல்லாம், இந்த நாடே சந்தேகப்பட்டதுபோல் அவரது மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆணையத்தின் இறுதி விசாரணையை முடித்து அதன் அறிக்கையை அளிப்பதற்கு முன் ஒரு இடைக்கால அறிக்கையை அளிக்க வேண்டும். ஆணையம் இதை விசாரிக்கட்டும். ஆனால் தமிழக அரசு ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆகவே ஐ.பி.சி. 174இன்கீழ் சந்தேகமரணம் என வழக்குப்பதிவு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்தால்தான் இதில் உண்மைகள்  வெளிவரும்.” என்றார்.  நன்றி வீரகேசரி 


வடகொரியத் தலைவர் கிம் சீனாவுக்கு திடீர் பயணம்
09/01/2019 வடகொரியத் தலைவர் கிம் யொங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.
வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய நண்பராக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனாவுக்கு வழங்கி வருகிறது. 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வடகொரியா தலைவர் கிம் யொங் அன் சீனாவுக்கு சென்றார். ரயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் யொங் அன், சீன ஜனாதிபதி  ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பயணத்துக்கு பின்னர் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் யொங் அன் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கிம் யொங் அன் 2 முறை சீனாவுக்கு சென்று, சீன ஜனாதிபதி ஜின் பிங்கை சந்தித்தார்.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய கிம் யொங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதே போல் டிரம்பும், கிம் யொங் அன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி 2 ஆவது உச்சி மாநாட்டுக்கான திகதி மற்றும் இடம் குறித்து இருநாட்டு அதிகாரிகளிடையே தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கிம் யொங் அன் திடீர் பயணமாக நேற்று சீனா சென்றார். சீன ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அவர் சீனா சென்றிருப்பதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. தெரிவித்துள்ளது.
கிம் யொங் அன் தனது மனைவி ரீ சோல்-ஜூ, அவரது வலதுகரமாக விளங்கும் யோங்-ஜோல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ரயிலில் சீனாவுக்கு புறப்பட்டார். அந்த ரயில் நேற்று சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தது.
இதையொட்டி அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும், ரயில் நிலையத்தில் கிம் யொங் அன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 நாட்கள் சீனாவில் தங்கி இருக்கும் கிம் யொங் அன், அந்நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.
கிம் யொங் அன்னின் திடீர் சீன பயணம் டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையேயான 2 ஆவது சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் சீனாவில் முகாமிட்டு இருக்கும் நிலையில், கிம் யொங் அன் அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 

  
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழகத்தின் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக தெரிவித்து குறித்த ஆலைக்கு எதிராக பொது மக்கள் நீண்ட நாட்டகளாக போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மிகப்பெரிய அளவில் நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கி சூட்டில்.  14 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
வன்முறையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமைத் தீர்ப்பாயமும் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதை எதிர்த்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதானந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. நிபுணர் குழுவினர் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.
நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தூத்துக்குடியிலும், சென்னையிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நிபுணர் குழு தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றில்  தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தனியார் சார்பிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். நீதிபதிகள் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் ஆலை நிர்வாகம் நிறைவேற்ற முன்வர வேண்டும். நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்பு ஆலையை திறக்க விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு ஆலையை திறக்க மாநில பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து உச்ச நீதிமன்றில்  நடைபெறும்.என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை 3 வாரத்தில் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி எதுவும் வழங்கவில்லை, தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டு இருப்பதாக இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வலக்கறிஞர்  தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 


அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு

11/01/2019 அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
அதற்காக ரூபா 39,693 கோடி (5.7 பில்லியன் டொலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.
அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை.
அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக அரைவாசி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. 
சமீபத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ட்ரம்ப் ஏற்பாடு செய்தார். 
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் அங்கிருந்து வெளியேறினார் ட்ரம்ப்.
அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டிரம்ப்  தனது டுவிட்டர் செய்தியில் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி நான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் ஹசினா 

08/01/2019 பங்களாதேஷ் அவாமி லீக் கட்சித் தலைவரான 71 வயதுடைய ஷேக் ஹசினா நான்காவது முறையாகவும் அந்நாட்டுப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வங்க தேசத்தில் மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து  உடனடியாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதனிடையே வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர்.
போட்டியிட்ட 299 தொகுதிகளில் 288-ல் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த  வெற்றி மூலம் ஷேக் ஹசினா நான்காவது முறையாக பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்தார். அத்துடன் அவருடன் இணைந்து 42 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றியதுடன், இந்தத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது.  நன்றி வீரகேசரி 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து பெண் வேட்பாளர்

12/01/2019 அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர் துல்சி கபார்ட் 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
நான் இது குறித்து தீர்மானித்துள்ளேன் அடுத்த வாரம் இது குறித்து அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
37 வயதான கபார்ட் ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டவர் என்பதுடன் அமெரிக்க காங்கிரஸிற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இந்து - சமோவன் அமெரிக்க சமூக பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுத்தம் சமாதானம் என்பதே எனது பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக விளங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
ஜனநாயக கட்சியில் உள்ள தாரளவாதிகள் மத்தியில் துல்சி கபார்ட்டிற்கு ஆதரவுள்ள போதிலும் அவர் கட்சிக்குள் கடும் போட்டியை எதிர்கொள்வார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனநாயக கட்சியின் செனெட்டர் எலிசபெத் வரன் ஏற்கனவே தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துல்சி கபார்ட் சிரியா ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தவர் என்பதும் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தை பதவியிலிருந்து அகற்றுவதை எதிர்ப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


டிரம்ப் ரஸ்யாவிற்கு ஆதரவாக செயற்படுகின்றாரா – எவ்பிஐ விசாரணை

13/01/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்யாவிற்காக பணியாற்றுகின்றாரா என்ற கோணத்தில்  எவ்பிஐ விசாரணையை மேற்கொண்டது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
எவ்பிஐயின் இயக்குநராக பணியாற்றிய ஜேம்ஸ் கோமேயை டிரம்ப பதவியிலிருந்து நீக்கிய பின்னர் டிரம்ப் ரஸ்யாவிற்காக இரகசியமாக செயற்படுகின்றாரா என எவ்பிஐக்கு சந்தேகம் எழுந்தது  இதன் பின்னர்அவாகள் விசாரணைகளை ஆரம்பித்தனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்பினால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்துள்ளதா எனவும் எவ்பிஐ விசாரணைகளை மேற்கொண்டது என நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எவ்பிஐ புலனாய்வு விசாரணையையும் குற்றவிசாரணையையும் மேற்கொண்டது, என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் டிரம்ப் வேண்டுமென்றே ரஸ்யாவின் நலன்களிற்கு உகந்தவிதத்தில் செயற்படுகின்றாரா என புலனாய்வு விசாரணை இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ளை மாளிகை நியுயோர்க் டைம்சின் இந்த செய்தியை நிராகரித்துள்ளது.
இது அபத்தாமான செயல் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 


No comments: