திருமூலரால் “சிவ பூமி” என்று சிறப்பிக்கப்பட்ட ஈழ மணித் திருநாட்டில் இன்று திருவாசகத்துக்கென ஒரு அரண்மனை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுகன் அவர்கள் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி மடம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அர்ப்பணித்திருக்கும் ஆறு திருமுருகன் அவர்களின் அடுத்ததொரு முயற்சியாக எழுந்ததே இந்தத் திருவாசக அரண்மனை.
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வருகை வாயிலாக அமை நாவற்குழியின் முனையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்தத் திருவாசக அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்ட கட்டடப் பணிகள் மாதக் கணக்காக நடந்திருக்கிறது.
திருவாசகத்தின் அனைத்துப் பாடல்களையும் கருங்கல்லிலே செதுக்கி அவற்றை இங்கே இபபோது நிறுவியிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமாகப் பிழையற, அழகான எழுத்துருவோடு திருவாசகப் பாடல்கள் மின்னுகின்றன.
இங்கே விருந்தினர் அறை, திருவாசக ஆராய்ச்சிக்கான நூலகக் களஞ்சியம் இவற்றோடு அந்த முக்கோணக் கட்டடத்தின் நடு நாயகமாகப் பென்னம் பெரியதொரு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது.
சிட்னி அவுஸ்திரேலியாவில் வதியும் வைத்திய கலாநிதி மனமோகன் அவர்கள் தனது காணியை இந்தப் பெரும் பணிக்காக அன்பளிப்புச் செய்ததோடு நிர்மாணத்துக்கும் உதவியிருக்கிறார். மேலதிக தேவைகளுக்கு தன் அறப் பணிகளால் திரட்டிய நிதியையும் சேர்த்து ஆறு திருமுகன் அவர்கள் இந்தப் பணியை முழு மூச்சாக முடித்து வைத்திருக்கிறார்.
இன்று ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் இந்த அரண்மனையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கான பூர்வாங்கக் கிரியைகள், அபிஷேக ஆராதனைகள் தொடங்கி மூன்று நாட்கள் தொடரும் சடங்குகளின் நிறைவில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி “திருவாசக அரண்மனை” உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்காக
புலம் பெயர் தமிழ் அன்பர்கள், தமிழகத்து ஆன்றோர் எனக் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
ஈழத்தில் சைவ நெறிக்கான முக்கியமானதொரு மையமாக இந்த நிலையம் அமையப் போகிறது என்ற பெருமிதத்தோடு ஆறு திருமுருகனோடு தோள் கொடுத்த வைத்திய கலாநிதி மனமோகன் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களையும் மனமார வாழ்த்தி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்.
கானா பிரபா
நன்றி
புகைப்படங்கள் - கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருளானந்தம் அருள் செல்வன் பேஸ்புக் பக்கம்
திருவாசக அரண்மனை கட்டுரைப் பகிர்வு காலைக்கதிர்
No comments:
Post a Comment