புதியதொரு வீடு : புதியதோர் உலகம் படைக்கட்டும் -- பூபாலரட்ணம் சீவகன் ---

குளிரூட்டப்பட்ட திரையரங்கில் ரஜினியின் “காலா” திரைப்படத்தை ஓட்டுவதற்கே கஸ்டப்படும் காலத்தில், பள்ளிக்கூட மாணவர்களைக் கொண்டு நாற்பதுகளில் நடந்த கதையை வைத்து, குளிரூட்டிகள் இல்லாத மண்டபத்தில், அதுவும் சில நிமிடங்களாவது மின் விசிறி கூட இல்லாமல், நாடகம் போட வைத்ததே பேராசிரியர் மௌனகுருவின் சவால் குணத்தைக் காட்டுகின்றது.

ஆனால், எல்லோரும் நேரத்துக்கு வரவேண்டும், இல்லாவிட்டால் அரங்கின் கதவு அடைத்துவிடும் என்ற அறிவிப்பும், நேரம் தாழ்த்தி வந்து, இடம் கிடையாமல் நின்றவர்கள், ‘நிலத்தில் இருந்து பார்க்க வேண்டும் அல்லது வெளியே போய், அடுத்த காட்சிக்கு வரலாம்’ என்று மேடையில் அறிவித்தது, அவரது வித்தகச் செருக்கு.


நான் நாடகம் பார்க்கச் சென்ற வேளை காலைக்காட்சி, மாணவர்களுக்கானது. பார்வையாளர்களான மாணவர்களை ஒருநிலைப்படுத்தி நாடகத்தை பார்க்க வைப்பதே அங்கு பெரும் சவாலாகத்தான் இருந்தது.

மகாகவியின் கதை எழுதப்பட்டது 1970களில். தொடர்புகள் குறைந்த காலம். கதையும் கொஞ்சம் மாணவர்களுக்கு (தற்கால சுப்பர் ஹீரோக்களுக்கு பழக்கப்பட்ட மாணவர்களுக்கு) கனதியானது. கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடக் கூடிய கதை.
அதிலும் நடித்தவர்கள் மாணவர்கள். அவர்கள் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டது கூட தமது பள்ளிக்கூடங்களின் ஊடாகத்தான். அதுவே இப்போதைக்கு அவர்களுக்கு அடையாளம். 
ஆனால், அவர்களிடம் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. 
உறவு முறைகளுக்குள் நடந்த ஒரு விபத்தால் ஏற்பட்ட விளைவுகள், உணர்வுச் சிக்கல்கள் குறித்த கதை, எந்த இடத்திலும், விரசத்தில் சிக்கிவிடாமல் கதை கவனமாக நகர்ந்தது.  ஆனால், அங்கு தவறு ஏதும் நடக்காமல் இருந்ததற்கு கதையை எழுதிய மகாகவியோ அல்லது பேராசிரியர் மௌனகுருவோ மாத்திரந்தான் காரணம் என்று கூறிவிட்டு என்னால் சென்றுவிடவும் முடியவில்லை.
மாணவ நடிகர்கள் நல்ல முதிர்ச்சியுடன் மேடையில் வாழ்ந்தனர். 
கறுப்பு ராஜா சிவப்பு ரோஜா என்ற சீரியஸான நாடகத்தை எழுபதுகளின் இறுதியில் பார்த்ததற்குப் பிறகு சீரியஸான ஒரு நாடகத்தை, அதுவும் மாணவர்களின் நாடகத்தை நான் மட்டக்களப்பில் பார்த்தது இதுதாம் இரண்டாவது தடவை. (அது எனது தவறு. நான் ஊரில் இருக்க முடியாமல் ஓடியது காரணம்).
கதாநாயகன் மேடைக்கு ஏற்ற முகவாகைக் கொண்டவர். பளிச்சென்று அழகாகத் தெரிந்தார். (அவருக்கான ஒலிபெருக்கி இன்னும் கொஞ்சம் சீர் செய்யப்பட வேண்டும். அவரது குரலுக்கு அது கொஞ்சம் சுருதி பேதம் காட்டியது.) அவர் சிரித்த நேரம், பயந்த நேரம், அதிர்ந்த நேரம், அழுத நேரம் அனைத்தையும் பளிச்சென்று வெளிப்படுத்தினார். நாடக இயக்குனர்கள் கவனிக்கவும்.
கதாநாயகி, ஆனந்தராகம் படத்தில் வந்த ராதா மாதிரி தெரிந்தார். அழகை முகத்தினுள் அடக்கி வைத்திருந்தார். அதேபோல அழுகை மற்றும் சிரிப்பு, கொஞ்ச நேர சிருங்காரம் எல்லாவற்றையும் அடக்கியே வைத்திருந்தார்.  ஆனால் இந்த நாடகத்துக்கு இவையெல்லாம் அவருக்கு பொருந்திப் போயின. இவர்களின் மகனாக வந்த சுள்ளான் நல்ல சுட்டியாகத் தெரிந்தான்.
மைத்துனனாக வந்த நடிகர் தனது பங்கை சரியாகச் செய்தார்.  வயதான ஜோடியும் அப்படித்தான். கிழவி எவ்வளவு வெடுக்கென்று சிரிக்கிறாரோ, கிழவர் அடக்கமாக வாசிக்கிறார். இவர்கள் மாத்திரமல்ல, நாடகம் தொடங்கி முடியும் வரை மேடையிலேயே இருந்து,  சிறு நண்டு பாட்டுப் பாடி, நாயாக குரைத்து, குயிலாகக் கூவி, வானொலியாக ஒலித்த அந்த பத்துப் பேரும் நாடகத்துக்கு பெரும் பலம். நாடகக் காட்சிகளின் மாற்றத்துக்கு இவர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பு. அதுமாத்திரமல்ல, காட்சிகள் தொய்ந்துபோக எத்தனித்த போது குறுக்காக இவர்கள் வந்து அதனை தூக்கி விட்டு ஓடிய சமயங்கள் அதிகம். இவர்களை இந்த நாடகத்தில் வெறும் கருவேப்பிலையாக மாத்திரம் கொள்ள முடியாது. பல இடங்களில் நாடகத்தை தூக்கிப் பிடித்தவர்கள் இவர்கள். மேடையலங்கார யுக்திகளும் சிறப்பாகவே இருந்தன. ஒலி, ஒளி அமைப்புக்கள் இன்னும் நிறைய முன்னேற வாய்ப்பு இருக்கின்றது. நாடகத்தில் ஒலி, ஒளி அமைப்பு ஒரு தனிக்கலை. அதிக நாடகங்கள் தொடர்ச்சியாக வரும் போதுதான் அவையும் நிறைய முன்னேற முடியும். ஆனாலும் அவர்கள் சோடைபோகவில்லை. பின்னணி பாடியவர்களில் கோரஸ் பாடியவர்கள் மைக்கை நடுவில் வைத்துப் பாடவேண்டும். சில சமயங்களில் ஒருவரின் குரல் மாத்திரம் தூக்கலாக கேட்க ஏனையவர்களுடையவை தூரக் கேட்டன.

நடிகர்கள் எல்லோரும் முன்னர் சொன்னதுபோல முதிர்ச்சியுடன் காணப்பட்டனர். மௌனகுரு சேரின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.  மௌனகுரு சேர் மாத்திரந்தான் சிறு பையன் போல அங்கும் இங்கும் பதற்றத்துடன் ஓடி ஓடி ஏற்பாடுகளை கவனித்துச் சென்றார்.
 டியூஷன் வகுப்புகள் போன்ற பலவித சிக்கல்களுக்கு மத்தியில் இவர்களை ஒன்று சேர்ப்பதே சிரமமாக இருந்ததாக அவர் கூறினார். இவர்களை இப்படியாக கூட்டி பயிற்றுவிக்க ஏற்பாடு செய்த மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டுதலுக்குரியவர். எனக்கு என்னமோ நாடகம் தொடங்கி சிறிது நேரத்துக்கு பின்னர் கதை எழுதிய மகாகவியோ அல்லது பேராசிரியர் மௌனகுருவோ கண்ணில் தெரியவில்லை. அந்த மீனவக் குடும்பமும், அதன் சோகமும், கொஞ்சம் வித்தியாசமான காதலும், அதுபடுத்தும் பாடும், அவற்றில் இருந்து அவர்கள் தப்பிக்க அவர்கள் போராடுவதுந்தான் பெரிதாக மனதை பாதிக்கத் தொடங்கிவிட்டன.

நாடகம் முடிந்து வெளியே வந்தபோது 80 களில் ராஜேஸ்வரா தியேட்டரில் மெட்னி காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வுதான் இருந்தது. அந்த கதாநாயகியும், இரு கதாநாயகர்களும் அவர்களின் சோகமும்தான் இந்த குறிப்பை எழுதும் வரை நெஞ்சில் ஆடிக்கொண்டிருக்கின்றன.

இது 70களின் இறுதியில் மீனவர் காதலைச் சொல்லும் ஆனந்தராகம் படம் பார்த்துவிட்டு வந்து இரு நாட்களுக்கு இருந்த உணர்வு. வேறு சிலருக்கு இது செம்மீன்கள் பார்த்த உணர்வை தந்திருக்கலாம். அவரவர் ரசனையைப் பொறுத்தது இது. இதுதான் இந்த நாடகத்தைத் தந்த இளைஞர்களின் இப்போதைக்கான வெற்றி என்று நினைக்கிறேன்.

 புதியதொரு வீடு புதியதோர் உலகம் படைக்கட்டும். காத்திருப்போம்!
=======================================================================
அழியாச்சுடர்-- அணையாச் சுடராக ஒளிவீச ஆசிகள்

புதியதொரு வீடு மிகசிறப்பாக மேடை கண்டது

புதியதொரு வீடு நாடகம் தினமும் இரண்டு காட்சிகள் என இரு நாட்களுக்கும்  நான்கு காட்சிகள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மாணவர் வருகை அதிகரிப்பினால் இரண்டாம் நாள் மூன்று காட்சிகள் நடத்த வேண்டிவந்தது  காலை மாலைக் காட்சியாகப் புதியதொரு வீடு மேடையேறியது
750 இருக்கைகள் போடப்பட்டும் அத்தனையும் நிரம்பி மாணவர்கள் இடம் கிடைக்காது நின்று கொண்டிருந்தனர். நின்றுகொண்டிருந்தோருக்கு பின்னேரக்காட்சிக்கு வரும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன மாணவர்கள் மட்டக்களப்பின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்தார்கள் மாணவர்களுடன் ஆசிரியர்கள், வெளியார்கள் என்போர் நாடகம் கண்டு மகிழ்ந்தனர். நாடகம் முடிய மேடையில் ஏறி கைலாகு கொடுத்து வாழ்த்தி ஆசீர்வதித்துச் சென்றனர்

தம்மையொத்த மாணவர்கள் இவ்வண்ணம் நடித்தமை வந்திருந்த ஏனைய மாணவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும்  தைரியத்தையும் தந்திருக்கும் என எண்ணுகின்றேன் நாடகம் முடிய வந்திருந்த மாணவர்களுடன் உரையாடினேன் என் எண்ணம் உறுதியாயிற்று நான் எதிர்பார்த்ததும் இதனைத்தான் மொத்தமாக ஐந்து காட்ச்சிகள் அரங்கேறின

மாண்வர்களும் பொது மக்களுமாக 3000க்கு மேற்பட்டோர் கண்டு களித்தனர் முதல் நாள் காலை நாடகமுடிவில் மட்டக்களப்புக் கல்விப்பணிப்பாளர் பாஸ்கரன் உரையாற்றினார் மாலை நாடக முடிவில் சொர்ணலிங்கம் உரையாற்றினார் இரண்டாம் நாள் காலை நாடக முடிவில்  கிழக்குபல்கலைக்க்ழக உப வேந்தர் பேரா.ஜெயசிங்கம் உரையாற்றினார் மாலை மட்/அரசாங்க அதிபர், உதயகுமார் உரையாற்றினார் மொத்தமாக  21 நாட்கள் மணவர்களுக்குப் பயிற்சியளித்தேன் நான் கற்றவையே அனேகம்
மௌனகுரு
=========================================================================

No comments: