நூல் நயப்புரை: முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் வாழ்வின் அபூர்வமான தருணங்களையும் கவனத்திற்குள்ளான மனிதர்களையும் சித்திரிக்கும் புனைவுசாராத இலக்கியம் - நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்


லெ. முருகபூபதி சிறுகதைக்காகவும், நாவலுக்காகவும், பயண இலக்கியத்திற்காகவும், பத்தி எழுத்துக்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவர் ஆவார். நீர்கொழும்பைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் இரண்டு முறை தேசிய சாகித்திய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். அவரது  புனைவு சாராத பத்தி எழுத்துக்களின் தொகுப்பு அண்மையில் படிக்கக் கிடைத்தது.
   சொல்ல மறந்த கதைகள் என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும்  இந்த நூல் முருகபூபதியின் மனதிற்குள் கொட்டிக் குவிந்திருக்கும் மகத்தான அனுபவங்களைப் பேசுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏராளமான சொல்ல மறந்த கதைகள், சொல்லப் பயந்த கதைகள், சொல்ல மறுத்த கதைகள், சொல்ல வேண்டிய கதைகள் நெருடிக்கொண்டுதான் இருக்குமென்று கூறுகிறார் முருகபூபதி.
தமிழ் நாட்டில் யுகமாயினி இதழிலும், அவுஸ்திரேலியாவில் உதயம் இதழிலும், தேனீ இணையத்தளத்திலும், அவுஸ்திரேலியாவில் தமிழ்முரசு இணையத்தளத்திலும், கனடா பதிவுகள் இணையத்தளத்திலும், நடேசனின் வலைப்பதிவிலும் பதிவேற்றிய தன் எழுத்துக்களை முருகபூபதி இந்த நூலிலே தொகுத்துத் தருகிறார்.
சாதாரணமாக நமக்குத் தெரியவந்திருக்கும் முருகபூபதியின் வாழ்வில் அவர் சந்தித்த அபூர்வமான மனிதர்கள், சுவாரசியம் மிகுந்த நிகழ்வுகள், அவர் எதிர்கொண்ட சோதனையான  தருணங்கள் என்பன நூலை எடுத்ததும் முழுவதையும் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவை குன்றாத வகையில் எழுதிச் சென்றிருக்கிறார் முருகபூபதி.
   21 தலைப்புக்களில் முருகபூபதி விதம் விதமான அனுபவங்களை நெஞ்சிலே நிலைக்கும் வகையில் எழுதியிருப்பதை பாராட்டியாகவேண்டும்.
மகாலிங்கம் என்ற ஒரு தாடிவளர்த்த சோதிடர் வத்தளை என்னும் ஊரில் சிறிய வாடகை வீட்டில் குடி இருந்துகொண்டு நந்திவாக்கியம் என்ற பனையோலை ஏட்டுச் சுவடிகளின் பதிவுகளில் இருந்து சாதகங்கள் கூறி வந்திருக்கிறார். சிங்களமொழி தெரிந்த முருகபூபதி இந்த சாதக மொழிபெயர்ப்பில் உதவி செய்து வந்திருக்கிறார். ஒரு முறை ஒரு காரில் வந்திறங்கிய ஒரு பிரமுகர் 172 பக்கமுள்ள பெரிய அப்பியாசக் கொப்பியை எடுத்து வைத்து , அதில் சில முன் பக்கங்களை மறைத்து குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த நந்திவாக்கியப் பாடலின் மொழியைச் சிங்களத்தில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டிருக்கிறார். முருகபூபதி மொழிபெயர்த்து திருப்பிக் கொடுக்கும்போது தற்செயலாக அந்த நந்தி வாக்கியத்துக்குரிய சாதகரின் பெயரைப் பார்த்து விடுகிறார். யார் என்று நினைக்கிறீர்கள் அந்தச் சாதகர், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆவார்.
இப்படி சுவாரசியமான நம்பிக்கை என்ற கதையோடு ஆரம்பமாகும் இந்த நூலில் முழுவதும் ருசிகரமான புதிர் நிறைந்த வியப்பூட்டும் அனுபவங்கள் பரவிக்கிடக்கின்றன.
  காவி உடைக்குள் ஒரு காவியம் என்ற தலைப்பில் வணக்கத்திற்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோ என்ற தமிழ்ப்புலமை மிகுந்த பௌத்த பிக்குவை அறிமுகம் செய்கிறார்.
   தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1975 இல் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டில் அந்த பிக்கு  உரை நிகழ்த்தியதை  முருகபூபதி எடுத்துக் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
 தென் இலங்கையில் இனக்கலவரங்கள் தலைதூக்கிய போதெல்லாம் தமது தமிழ் இலக்கிய நண்பர்கள் பாதுகாப்போடு இருக்கிறார்களா?  என்று தேடி அலைந்த கருணைமிக்க பிக்குவின் கரிசனையை முருகபூபதி நேர்த்தியாக நினைவு கூருகிறார்.
செங்கையாழியானின்  வாடைக்காற்று நாவலை  அவர்  சிங்களத்தில் மொழிபெயர்த்த  தகவலையும் சொல்லி, அந்த மொழிபெயர்ப்பின் மூலப்பிரதி தொலைந்துபோன சோகத்தையும் முருகபூபதி எழுதிச் செல்கிறார்.

   கண்ணுக்குள் சகோதரி என்ற தலைப்பில் - சுவரொட்டிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக சிவப்பு மைத்துளி கண்ணில் விழுந்து கண் எரிவைத் தந்தபோது, ஒரு சிங்களச்சோதரி தனது அக்காவிடமிருந்து தாய்ப்பால் கொணர்ந்து தனது கண்ணில்விட்டு சுகமாக்கியதை நெஞ்சை நெகிழ வைக்கும் முறையில் பதிவிட்டிருக்கிறார்.
நீர்கொழும்பில் 1984 ஆம் ஆண்டு ஒரு பேக்கறி நடத்திய சிங்கள வர்த்தகர் ஒருவர்,  புதிய ஹைஏஸ் வான் ஒன்றினை புதிதாக வாங்கியிருக்கிறார். நீர்கொழும்பில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க தேவாலயங்கள் இருந்த போதிலும் மடுமாதா கோயிலுக்குச் சென்று தனது வாகனத்திற்கு ஆசிகள் பெறுவதற்குச் சென்றிருக்கிறார். அவரும் நண்பர்களும் மடுத்திருப்பதி சென்று பிராத்தனை செய்தவர்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பவில்லை. அவர்களை இயக்கம் கடத்திவிட்டது என்ற செய்தி நீர்கொழும்பில் தீயாகப் பரவியது.
 குடும்பத் தலைவனை இழந்துவிட்ட அயல்வீட்டு விதவைத்தாயும் அந்தக் குழந்தைகளும் முருகபூபதியின் ஆழ்மனதில் பதிந்துபோய்க்கிடப்பதை  துயரத்தோடு முருகபூபதி வர்ணிக்கிறார்.
ஜே.வி.பி.யின் தலைவர் விஜேவீராவுடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்த முருகபூபதி,  கட்சிப் பிரசாரக் கூட்டங்களில் தரக்குறைவாகப் பேசவேண்டாம் என்று விஜேவீராவுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நெருங்கிப் பழகியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இயக்கத்தை வளர்க்கத் தவறியவர்கள் வரிசையில் விஜேவீராவும் இணைந்துகொண்டது வரலாற்றுச் சோகம் என்கிறார் முருகபூபதி.
சோவியத்தின் தமிழ் - ரஷ்ய  மொழி பெயர்ப்பாளரும் தமிழ் அபிமானியுமான கலாநிதி விதாலி  ஃபூர்ணிக்காவுடன் அந்நியோன்ய  உறவு கொண்டிருக்கிறார் என்பதை இந்த நூலில் முருகபூபதி பதிவு செய்கிறார்.
மரணதண்டனைத் தீர்ப்பு என்ற தலைப்பில் தென்னிலங்கை ஹக்மண என்ற ஊரில் இடம்பெற்ற படுகொலை பற்றிய கதையை ஆர்வத்தைக் கிளறும் வகையில் எழுதிச் செல்கிறார். ஹக்மண என்ற ஊரில் சரத் ஹாமு என்ற பரோபகாரியும் பாடசாலை ஆசிரியையான அவரது மனைவியும் ஊர் மக்களின் அபிமானத்துக்குரியவர்களாக வாழ்கிறார்கள். இந்நிலையில் அந்த ஊர் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றலாகி வரும் கே.டி. சமரநாயக்க என்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியம், ஆசிரியையான  அவரது மனைவியும் சரத்ஹாமுவின் நண்பர்கள் ஆகிறார்கள். சமரநாயக்காவிற்கு  ஹாமுவின் மனைவியுடன் தொடர்பு உருவாகிறது. இந்நிலையில் ஜே.வி.பி. கிளர்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த அக்காலத்தில் சரத் ஹாமுவை கொலை செய்துவிட்டு பழியை ஜே.வி.பி. மீது போட்டுவிடத் திட்டம் தீட்டுகிறார்.  அவர்  திட்டமிட்டபடி சரத்ஹாமு கொல்லப்பட்டதுடன் அவரது தம்பியும் கொல்லப்பட்டுவிடுகின்றனர்.
 திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் சமரநாயக்க இந்தக் கொலையின் பின்னணியில் இருந்திருக்கிறார் என்பது விசாரணைகளில் தெரியவருகிறது. இந்த ஹக்மண இரட்டைக் கொலை வழக்கில் எதிரிகள் அனைவருக்கும் மரணதண்டனை தீர்ப்பு தரப்படுகிறது. ஆனால் மேல்முறையீட்டில் அந்த எதிரிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.  
முதலாம் எதிரியான சமரநாயக்காவிற்கு மீண்டும் பொலிஸ் அதிகாரி நியமனமும் கிடைக்கிறது. ஆனால் சுமார் 16 ஆண்டுகளின் பின்னர் தனது சொந்த இச்சைக்காக இரண்டு படுகொலைகளைச் செய்துவிட்டு இயக்கத்திற்கு களங்கம் கற்பித்தார் என்று ஜே.வி.பி யினர் அவரைச் சுட்டுக் கொல்லும் நிகழ்ச்சியும் நடந்தேறுவதை முருகபூபதி சுவைகுன்றாமல் எழுதி, தனது எழுத்தின் திறனை நிரூபிக்கின்றார்.
முருகபூபதி தன் வாழ்வில் சந்தித்த அபூர்வமானவர்களைப்பற்றிய விபரங்கள்  நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியன.  1972 ஆம் ஆண்டு யூன் 12ஆம் திகதி வியட்நாமின்டிராங்பேங்கிராமத்தின் மீது அமெரிக்கா நேபாம் குண்டுகளை வீசி அழித்தபோது தனது இரண்டு சகோதரர்களைப் பறிகொடுத்துவிட்டு எரிந்துபோன ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக வீதியில்  ஓடிவரும் ஒரு சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவின் மனச்சாட்சியை உலுக்கியது. அந்தச் சிறுமி பதினைந்து சத்திர சிகிச்சைகளின் பின் தேறி ஒரு தேவதையாக இளம் கத்தரிப்பூநிற ஆடை அணிந்து மொஸ்கோவில் மேடையில் தோன்றிய அபூர்வமான கதையை முருகபூபதி அன்பு மீதுறச் சித்தரிக்கின்றார்.
கிம்புக் எனப்படும் அந்தப் பெண் அமெரிக்காவில் போர் அழிவுகளைப்பற்றி  கண்ணீர் மல்க உரையாற்றியபோது, அந்த விமானக் குண்டுவீச்சில் பணியாற்றிய முன்னாள் விமான ஓட்டி ஒருவர் " என்னை மன்னித்துவிடுங்கள்"  என்று கேட்பதும், " உங்களை எப்போதோ மன்னித்துவிட்டோம்"  என்று கிம்புக் பதில் கூறுவதும் மனதை நெகிழப் பண்ணுகின்றன.
சமூக நல்லிணக்கம் என்பது பரஸ்பரம் இரு சாராருமே நல்லிணக்கம் என்ற புள்ளியில் சந்தித்துக் கொள்வதுதான். வெறும் நினைவுக் குறிப்புகளாக இல்லாமல் பல சமூகப் படிப்பினைகளையும், உயர்ந்த சிந்தனைகளையும், வலுவூட்டும் கருத்துக்களையும் கொண்டு இந்நூல் கனதியாகத் திகழ்கின்றது.
 சமூக முன்னேற்றம், விடுதலை,  எழுச்சி என்றெல்லாம் கோஷம் போட்டுக்கொண்டிருப்பவர்களைவிட எழுத்து அளவில் மட்டும்நில்லாமல்,  இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்கள் கல்வியைத் தொடரும் முகமாக  இலங்கை மாணவர் கல்வி நிதியம்என்ற அமைப்பை தான் வாழும் அவுஸ்திரேலியாவில் அன்பர்கள் பலரைத்திரட்டி  பல ஆண்டு காலமாக தொண்டு நிறுவனமாக செயல்படுத்திவரும் முருகபூபதியின்  சமூகப் பணி அவரை ஒரு மகத்துவம் மிக்க மனிதனாகவும்  காட்டுகிறது.
navajothybaylon@hotmail.co.uk
---0--- 
  
-->















No comments: