21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018







டென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியில்லை

21/06/2018 சமாரா விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற டென்மார்க்குடனான சி குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை அவுஸ்திரேலியா 1 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் .வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இந்தப் போட்டி முடிவானது இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக முடியும் என்ற சொற்ப நம்பிக்கையை அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்துள்ளது. ஆனால் பிரான்ஸும் டென்மார்க்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் அல்லது அப் போட்டிகளை சமப்படுத்திக் கொண்டால் அவுஸ்திரேலியாவின் வாய்ப்பு அற்றுப் போகும்.
தற்போது இக் குழுவில் 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்திலும் இரண்டாவது போட்டியில் விளையாடிவரும் பிரான்ஸ் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு 2 போட்டிகளில் ஒரு புள்ளி மாத்திரமே கிடைத்துள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய டென்மார்க், அதற்கமைய போட்டியின் 7ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டது. 
அவுஸ்திரேலிய வீரர் ஆரொன் மூய் தனது எல்லையிலிருந்து பந்தை முன்னோக்கி நகர்த்தியபோதிலும் நிக்கலாய் ஜோர்ஜென்சென் பந்தை தன்பாதத்தால் கட்டுப்படுத்தி க்றிஸ்டியன் எரிக்செனுக்கு மிக நேர்த்தியாக பரிமாறினார்.
தன்னை நோக்கி வந்து பந்து நிலத்தில் பட்டு சற்று மேலெழுந்தபோது எரிக்சன் ‘ஹாவ் வொலி’ முறையில் பந்தை உதைத்து அலாதியான கொல் ஒன்றைப் போட்டார். 
இதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு டென்மார்க்குக்கு கிடைத்த வாய்ப்பு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் டென்மார்க்கினால் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் போனது.
இந் நிலையில் பிரான்ஸுடனான போட்டியில் போன்றே இப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி ஒன்று கிடைத்தது.
போட்டியின் 36ஆவது நிமிடத்தில் மெத்யூ லெக்கி தலையால் தட்டிய பந்து டென்மார்க் பின்கள வீரர் யுசுவ் பௌல்செனின் கையில் பட்டதை மத்தியஸ்தர் அன்டோனியோ மத்தேயு லொஹொஸ் கவனிக்கத் தவறிவிட்டார்.
ஆனால் வீடியோ உதவி மத்தியஸ்தர் சுட்டிக்காட்டியதை அடுத்து அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. 37ஆவது நிமிடத்தில் பெனல்டியை உதைத்த மய்ல் ஜெடிநாக் அதை கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.
அதுவரை 57 நிமிடங்களுக்கு ஒரு கோலைத் தானும் விட்டுக்கொடுக்காமலிருந்த டென்மார்க் கோல்காப்பாளர் கஸ்பர் ஷுமைக்கலால் பெனல்டியைத் தடுக்க முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. ஆனால் கோல் போடுவதற்கான சரியான வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவினால் உருவாக்க முடியவில்லை.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் டெனியல் அர்ஸானி, மெத்யூ லெக்கி ஆகியோரின் முயற்சிகளை டென்மார்க் கோல்காப்பாளர் சாமர்த்தியமாக செயற்பட்டு தடுத்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. நன்றி வீரகேசரி 






இளம் வீரரின் அதிரடி கோல் மூலம்  2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்

22/06/2018 இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களில் வயதில் குறைந்த இரண்டாவது வீரரான எம்பாப்பே போட்ட கோல் மூலம் 1 க்கு 0 என பெருவை வெற்றிகொண்ட பிரான்ஸ் சி குழுவிலிருந்து உலகக் கிண்ண முன்னோடி கால் இறுதிச் (இரண்டாவது) சுற்றுக்கு முன்னேறிய முதலாவது அணியானது.
மேலும் ரஷ்யா, உருகுவே ஆகிய நாடுகளுடன் மூன்றாவது அணியாக பிரான்ஸ் இரண்டாம் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.
எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின் 34ஆவது நிமிடத்தில் அன்டொய்ன் க்றீஸ்மான் பரிமாறிய பந்தை ஒலிவியர் கிரூட் ஓங்கி உதைக்க அப் பந்து க்றிஸ்டியன் ரமோஸ் மீது பட்டு பெரு கோல்காப்பாளர் பெட்ரோ கொலெசிக்கு மேலாக சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் துரிதமாக நகர்ந்த கிலியான் எம்பாப்பே வெறுமனே இருந்த கோலுக்குள் பந்தை தட்டிவிட்டார்.
இதன் மூலம் பிரான்ஸ் சார்பாக உலகக் கிண்ணப் போட்டியில் மிக இளவயதில் கோல் போட்டவர் என்ற பெருமைக்குரியவரானார். 
அவஸ்திரேலிய வீரர் டெனியல் அர்ஸானி என்பவரே உலகக் கிண்ணப் போட்டிககளில் இம்முறை விளையாடும் மிகக் குறைந்த வயதுடைய வீரராவார். அர்ஸானிக்கும் எம்பாபேக்கும் 19 வயதானபோதிலும் எம்பாபேயை விட அர்ஸானி 15 தினங்கள் இளையவராவார்.
பிரான்ஸுடனான நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்தால் மாத்திரமே இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதை மனத்தில் நிறுத்தி பெரு விளையாடியது.
மறுபுறத்தில் முன்னாள் சம்பியனான பிரான்ஸும் வெற்றியைக் குறிவைத்தே விளையாடியது. இதன் காரணமாக போட்டியில் விறுவிறுப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. 
ஒவ்வொரு அணியும் எதிரணியின் கோல் அருகே பந்தை நகர்த்திச் செல்லும் போதெல்லாம் இருபக்க வீரர்கள் மத்தியிலும் படபடப்பு காணப்பட்டது.
போட்டியின் 30ஆவது நிமிடத்தில் பெருவுக்கு கோல் போடுவதற்கான அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எடிசன் ப்ளோரெஸ் பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள்ளிருந்து கோலாக்க பாவலோ குரேரோ முயற்சித்தார். ஆனால் அவர் உதைத்த பந்து நேராக பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகொ லோரிஸின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
நான்கு நிமிடங்கள் கழித்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் போட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் கோல் போட எடுத்த முயற்சிகள் ஒன்றில் முறியடிக்கப்பட்டன அல்லது கைகூடாமல் போயின.
இடைவேளையின் பின்னரும் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர். ஆனால் முயற்சிகள் அனைத்தும் இலக்கு தவறியவண்ணம் இருந்தன.
65ஆவது நிமிடத்திலிருந்து பெரு தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய போதிலும் கோல் போடும் அதிர்ஷ்டம் கிட்டவில்லை. 
போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எடிசன் ப்ளோரெஸுக்கு மத்தியஸ்தரினால் மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது. ஆனால் அந்த மஞ்சள் அட்டை தனக்கு ஏன் காட்டப்பட்டது என ப்ளோரெஸ் குழம்பியபோதிலும் மத்தியஸ்தர் மொஹமத் அப்துல்லாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. எனினும் வீடியோ உதவி மத்தியஸ்தரினால் சரியான தகவல் கொடுக்கப்பட்டதும் ப்ளோரெஸுக்கு காட்டிய மஞ்சள் அட்டையை வாபஸ் பெற்ற மத்தியஸ்தர், மஞ்சள் அட்டைக்கு உரியவரான அக்கினோவுக்கு காட்டினார்.
இப் போட்டியில் தோல்வி அடைந்த பெரு, நான்காவது நாடாக முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியானது.  நன்றி வீரகேசரி 








ஜேர்மனிக்கு உயிர்கொடுத்தது க்ரூஸின் கடைசி கோல்

24/06/2018 சுவீடனுக்கு எதிராக சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜீ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் டோனி க்ரூஸ் போட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜெர்மனி மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
அதுவும் கடைசி எட்டு நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளயைாடி ஜெர்மனி இந்த வெற்றியை ஈட்டியமை பெரிய விடயமாகும்.
நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியின் இந்த வெற்றியை அடுத்து ஜீ குழுவிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மெக்சிகோ, ஜேர்மனி, சுவீடன் ஆகிய மூன்று அணிகளுக்கும் தோன்றியுள்ளது.
போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ஜேர்மன் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஒலா டொல்வோனென் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சுவீடனை முன்னிலையில் இட்டார். 
டோனி க்ரூஸ் பந்து பரிமாற்றத்தில் இழைத்த தவறின் காரணமாக சுவீடன் வீரர்கள் இருவர் வெகமாக பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு இறுதியில் ஒலா டொல்வொனென் கோலாக்கினார். தனது தவறை கடைசி நிமிட கோல் மூலம் க்ரூஸ் நிவர்த்தி செய்தார்.
இந்த கோல் ஜெர்மனிக்கு எல்லாம் அஸ்மித்துவிட்டது போன்ற அதிர்ச்சியுடன் அழுத்தத்தையும் கொடுத்தது. ஆனால் அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது. எனினும் முதலாவது பகுதியில் ஜேர்மனி கோல் போடவில்லை.
இதன் பிரகாரம் இடைவேளையின்போது 0 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஜேர்மனி பின்னிலையில் இருந்தது.
இடைவேளைக்கு பின்னர் சுவீடன் எல்லையை ஆக்கிரமித்த ஜேர்மனி 48ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தியது. 
டிமோ வோர்னர் தாழ்வாகப் பரிமாறிய பந்தை மாற்று வீரர் மரியோ கோமஸ் தனது பாதங்களிடையே விட்டுக்கொடுக்க, மார்க்கோ ரேயஸ் துரிதமாக செயற்பட்டு பந்தை கோலின் வலது மூலை ஊடாக உள்ளே புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து முழு ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி, எதிரணியின் கோல் எல்லையை தொடர்ச்சியாக ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. இதனிடையே குறைந்தது நான்கு கோல்போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.
இந்தப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு அதிகரிக்கும் எனக் கருதிய சுவீடன் தடுத்தாடுவதைக் குறியாகக் கொண்டு இரண்டாவது பகுதியில் விளையாடியது. 
இதனிடையே போட்டியின் 82ஆவது நிமிடத்தில் போலந்து மத்திஸ்தர் சீமன் மார்சினியக்கின் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான ஜெரோம் போயெடெங் சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார்.
இதனை சாதகமாக்கிக்கொண்ட சுவீடன் போட்டியின் கடைசிக் கட்டத்தில் மூன்று தடவைகள் ஜெர்மனி எல்லையை அடைந்து கோல் போட கடுமையாக முயற்சித்தது. ஆனால் சுவீடனினால் வெற்றிக் கோலை போட முடியாமல் போனது.
போட்டி 90 நிமிட முழு நேரத்தைக் கடந்து உபாதை ஈடு நேரத்துக்குள் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் சுவிடன் பெனல்டி எல்லைக் கோட்டின் வலது புறத்தில் ஜெர்மனிக்கு ப்றீ கிக் ஒன்று கிடைத்தது.
டோனி க்ரூஸ் பந்தை ஒரு யார் முன்னால் நகர்த்த, மார்க்கோ ரேயஸ் பந்தை நிறுத்திக்கொடுத்து பின்னால் நகர்ந்தார். அடுத்த கணம் க்ரூஸ் முழு பலத்துடன் உதைத்த பந்து வளைவாக சென்று சுவீடன் கோலின் இடது மேல் மூலை ஊடாக உள்ளே சென்றது. பந்து கோலினுள் சென்றதும் ஜெர்மனி வீரர்களும் இரசிகர்களும் பேரானந்தத்தில் மூழ்க, சுவீடன் வீரர்களையும் இரசிகர்களையும் சோகம் சூழ்ந்துகொண்டது.
மூன்று அணிகளுக்கு வாய்ப்பு
ஜேர்மனியின் இந்த வெற்றியை அடுத்து இக் குழுவிலிருந்து மூன்று அணிகள் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவும் ஜேர்மனியும் வெற்றிபெற்றால் சுவீடனின் இரண்டாம் சுற்று வாய்ப்பு அற்றுப் போகும். சுவீடன் அதிக கோல் வித்தியாசத்தில் மெக்சிகோவை வெற்றிகொள்ளும் அதேவேளை தென் கொரியாவிடம் ஜேர்மன் தோற்றால் அல்லது அப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் மெக்சிகோவும் சுவீடனும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும். இது சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது.
அத்துடன் சுவீடனும் ஜேர்மனியும் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மெக்சிகோவின் இரண்டாம் சுற்று கனவு கலைந்துபோகும்.
எனவே ஜீ குழுவில் கடைசி இரண்டு போட்டிகளும் மிகுந்த பரபரப்பை தோற்றுவதாக அமையும். நன்றி வீரகேசரி 



No comments: