நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 06 பிரேமதாஸாவுக்கு மகாத்மா காந்தியின் கொழும்பு சொற்பொழிவைத் தேடித்தந்த நவசோதி! - ரஸஞானி



முகத்தில் துவாரம் வந்தால் அவலட்சணமாயிருக்கும்! ஓடும் கங்கையில்  துவாரம் வந்தால் எழிலாயிருக்கும். அந்த இயற்கை எழிலைத்தான் இலங்கையில் கொழும்பு முகத்துவாரத்திலும் மட்டக்களப்பு முகத்துவாரத்திலும் நாம்  காண்கின்றோம்.

 நதி எங்கே போகிறது? கடலைத் தேடி ! நாளெங்கே போகிறது?  இரவைத் தேடி!

நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!
நினைவெங்கே போகிறது?  உறவைத் தேடி!  என்று கவியரசர் இயற்றினார்.

காதலி கேள்வி கேட்க, காதலன் பதில் சொல்லும் பாடல். இதில் நதியா, கடலா? காதலன்! அல்லது கடலா நதியா? காதலி! திரைப்படத்தில் பெண்தான் முதலில் நதி எங்கே போகிறது? எனக்கேட்பாள்! அப்படியாயின் அவள்தான் நதியா? அல்லது காதலன் யாரைத்தேடிப்போகிறான் என்பதை அறிவதற்கு அவனைத்தான்  நதி என்று அவள் உவமிக்கிறாளா?
வாசகர்களே என்ன தலைசுற்றுகிறதா? விளக்கம் கேட்பதற்கும் கவியரசர் இல்லை.

கடலை சமுத்திரத்தாய் என்றும் வர்ணிப்பர். நதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் பெண்களுக்குரியவை! கங்கை, காவிரி, சரஸ்வதி, நர்மதா, யமுனை, தாமிரவருணி. இவை இந்தியாவில் ஓடும் நதிகள். இலங்கையில் மாவலி, களனி, ஜின் கங்கை, மாணிக்க கங்கை, கலு கங்கை, தெதுறு ஓயா, மதுறு ஓயா, மகா ஓயா. இவை ஆண்களின் பெயர்களையா சுட்டுகிறது?
முதலில் சொன்ன இந்திய நதிகளின் பெயர்களில் பெண்குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகிறார்கள். மாவலி என்ற பெயரிலும் இலங்கையில் ஒரு புகழ்பெற்ற மனிதர் தனது மகனுக்கு பெயர் சூட்டியிருக்கிறார்!

வடக்கின் இடதுசாரித்  தோழர் அமரர் வி.பொன்னம்பலம் அவர்கள் தனது மகனுக்கு மாவலி என்றுதான் பெயர் சூட்டினார்! இலங்கையில் மாவலி என்ற பெயரிலும் களனி என்ற பெயரிலும் இலக்கிய சிற்றிதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
மலையிலிருந்து ஊற்றெடுத்து  ஓடும் கங்கை அனைத்தையும் அள்ளிக்கொண்டு வரும். காடு, குன்று, சோலை, புல்வெளி, கிராமம், நகரம் எங்கும் சுற்றிச் சுழன்று வளைந்து நெளிந்து, குப்பை கூழங்களையும் அழுக்குகளையும் சில வேளைகளில் சடலங்களையும் சுமந்துகொண்டு கடலில் வந்து சங்கமிக்கும்.  அதன் பயணம் அத்துடன் முடிவுறும்.
அவ்வாறு முடிவுறும் இடத்திற்கு முகத்துவாரம் என்றும் கழிமுகம் என்றும் பெயர் வைத்தார்கள் எமது முன்னோர்கள்.  
களனி கங்கை கொழும்பின் வடமேற்கு பிரதேசத்தில் இந்துசமுத்திரத்தாயுடன் சங்கமிக்கும் பிரதேசத்திற்கு முகத்துவாரம் என அழைப்பர். கிழக்கில் மட்டக்களப்பு வாவி கடலை சங்கமிக்கும் இடத்திற்கும் முகத்துவாரம்தான் பெயர்.

சைவ சமயத்தவர்களுக்கு இந்த முகத்துவாரங்கள் புனிதமானவை. வடக்கில் கீரிமலை எப்படியோ, அவ்வாறே ஒருவர் மரணித்துவிட்டால் அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டு, மறுநாள் மயானத்தில் சேகரிக்கப்படும் அஸ்தி உறவினர்கள் வசதிப்பிரகாரம் 16 நாட்களில் அல்லது 31 நாட்களில் அந்தியேஷ்டி கிரியைக்காக கொழும்பு முகத்துவாரத்தில் கரைக்கப்படும்.
பல வருடங்களுக்கு முன்னர் எனது உறவினர் ஒருவரின் அஸ்தி கரைப்பதற்கு கொழும்பு முகத்துவாரம் சென்றிருந்தேன். அங்கு எதிர்பாராத வகையில் நண்பர் க. நவசோதியை சந்தித்தேன். எனது மறைந்த உறவினரின் குடும்ப நண்பர்தான் நவசோதி. அந்த மரணச்சடங்கிற்கு அவரால் வரமுடியாது போய்விட்டது எனச்சொல்லிவிட்டு, அந்தக்கடற்கரையில் என்னோடு  காலாற நடந்தவாறு சில புதினங்களைச்சொல்லத் தொடங்கினார்.
அவரே அந்தப்புதினங்களை ஒரு கேள்வி வடிவில் தொடங்கினார்.
கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பற்றித் தெரியுமா? எனக்கேட்டார்.


"ஓ!  தெரியுமே!  ஐந்துலாம்புச் சந்தி – நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான செட்டியார் தெரு -  சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் – விவேகானந்தா மண்டபம் -  கமலாமோடி மண்டபம் – விவேகானந்தா மகா வித்தியாலயம், மைலன், முருகன் தியேட்டர்கள்- இப்படி பிரசித்தமானவைகள் அமைந்த பிரதேசம்." என்றேன்.



"அவ்வளவுதானா..? இந்த ஜிந்துபிட்டிக்கென தனியாக ஒரு வரலாறு இருப்பது தெரியுமா?" எனக்கேட்டார்.



"தெரியாதே...?" என்றேன்.



                   "மகாத்மா காந்தி – ஜவஹர்லால் நேரு – தியாகராஜ பாகவதர் – பி.யு.சின்னப்பா –கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தம்பதியர் , கே.பி. சுந்தராம்பாள் முதலானோரை முதல் முதலில் வரவேற்ற இடமும் ஜிந்துப்பிட்டிதான். பல கலைஞர்கள் – பேச்சாளர்கள் – எழுத்தாளர்கள் – உருவாகியதும் இங்குதான்." என்றார் நவசோதி.



" அப்படியா...? எமது தலைமுறைக்கு இந்த வரலாறு தெரியாது! தெரிந்த நீங்கள்தான் எழுதவேண்டும்." என்றேன்.


யார் இந்த நவசோதி..?

                        கதைப்பூங்கா,  ஓடிப்போனவன்,  நாட்டுப் பாடலில் மலையக வரலாறு ,இலக்கிய மகளிர் இதய வேட்கை,  பல்லவர் காலமும் பக்திக் கோலமும் முதலான நூல்களின் ஆசிரியர். ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இலங்கை – இந்திய பத்திரிகைகளில் எழுதியவர். தமிழராய்ச்சி மாநாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்.


கொழும்பில் தமிழ் நிகழ்ச்சிகள் யாவற்றிலும் இவரைச் சந்திக்கலாம். நண்பர்களுடன் நன்றாகப் பேசுவார். கோபப்படுவார். வாதம் செய்வார். சண்டை பிடிப்பார். எனினும் நீடித்து நிலைக்காத கோபம் அவருடையது. Passing Gluts போன்று மறைந்து விடும்.


 இதனால் இவரது கோபத்தை எவரும் சீரியஸாக எடுப்பதில்லை. "எங்கட நவசோதி "என்ற மனப்பண்புடன் அவரது முன்கோபத்தை மன்னித்தவர்களையும் அறிவேன்.


நவசோதி,  கொழும்பில் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக பணிபுரிந்தது பலருக்கும் உதவியாக அமைந்தது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,  ஆராய்ச்சி மாணவர்கள், முதலானோருக்கு தேவைப்படும் சான்று ஆதாரங்களுக்காக பழமையான அரிய பத்திரிகைக் குறிப்புகளைத்  தேடும் படலத்திற்கு பெரிதும் உதவியவர் நவசோதி.



ஒரு சமயம் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான பிரேமதாஸாவுக்கும் நவசோதியின் உதவி தேவைப்பட்டது.



மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்த சமயம் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் நிகழ்த்திய முக்கியமான சொற்பொழிவு வெளியான பத்திரிகையை பிரேமதாஸாவுக்கு தேடி எடுத்துக் கொடுத்தவர் நவசோதி.



"குடியிருப்புகள் இன்றி அவதியுறும் மக்களுக்கு வசதி படைத்தோர் தம்மாலியன்றவாறு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்ற வேண்டுகோளை விடுத்திருந்த காந்தியின் சொற்பொழிவே பிரேமதாஸாவுக்கு காலத்தின் தேவைகருதி  அன்று அவசியமானது.



ஒருதடவை அவரது காலத்தில் காந்தி ஜெயந்தி தினம் ஜிந்துப்பிட்டி முருகன் தியேட்டரில் அனுட்டிக்கப்பட்டது. பிரேமதாஸா , ஜிந்துப்பிட்டியின் புராதன மகிமையை எடுத்துக்கூறி காந்தியடிகளின் செய்திகளைப் படித்துக் காண்பித்து  அப்பகுதி வர்த்தகப் பிரமுகர்களிடம் வறிய மக்களுக்காக உதவிக்கரம் நீட்டினார்.



இந்த நிகழ்ச்சியில் பிரேமதாஸாவின் உரையையடுத்து முருகன் தியேட்டரில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படமும் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நவசோதி மற்றும் வீரகேசரி அலுவலக நிருபர் சனூன் ஆகியோருடன் சென்றேன்.


அன்று பலவருடங்களுக்கு முன்னர் கொழும்பில் களனி கங்கையும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் என்னைச்சந்தித்து ஜிந்துப்பிட்டியின் புராதனம் - மகிமை பற்றி நீண்ட விளக்கம் தந்தார். அவர் சாதாரணமாகப்பேசினாலும் அதில் கம்பீரம் துலங்கும். 


திராவிட கழக பாரம்பரியத்தின் பாதிப்பில் கலை  இலக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். எழுதியவர்.  பேசியவர். கலைஞர் கருணாநிதி பொதுப்பணி மன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். இலங்கை இனப்பிரச்சினையில் கலைஞரின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் ஒரு சிறிய நூலை எழுதியவர்.



முகத்துவாரம் சந்திப்பில், " பேச்சோடு நின்று விடாமல் ஜிந்துப்பிட்டியின் புராதனத்தை எழுதி வெளியிடுங்கள்.  அப்படியொரு நூலுக்கு நல்ல வரவேற்பு கிட்டும்." என்றேன்.


அதன்பின்னர் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.  ஜிந்துப்பிட்டியில் வாழ்ந்த முதியவர்கள் , மூதாட்டிகளையெல்லாம் சந்தித்து தகவல்களைத் திரட்டினார்.


1983 இல் வன்செயல் தலை தூக்கியதையடுத்து மேற்கொண்ட ஆராய்ச்சியை முடிக்க வழியற்று அந்நியம் புறப்பட்டார்.

 மொழி உணர்வும்  அறிவும் இலக்கியப் பிரக்ஞையும் மிக்க படைப்பாளி,  தான் எங்கு வாழ நேரிட்டாலும் தனது பணியை இடை நிறுத்தமாட்டான். அத்தகைய மனிதனுக்கு உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல் வற்றிப் போகாது என்பதற்கு நவசோதியும் ஒரு உதாரணம்.

1983 அமளியுடன் இலங்கையின் வரலாறு திசை திரும்ப, நவசோதியும் திசைதிரும்பி அவுஸ்திரேலியா வந்து சில காலத்தில் லண்டன் சென்று தமது பணி தொடர்ந்தார்.


லண்டனில் கிறின்ஃபார்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் – அனைத்துலகத் தமிழர் கல்வி பண்பாட்டுப் பாரம்பரியப் பேரவையின் பணிப்பாளர் – சிந்து  இலக்கிய இதழின் ஆசிரியர். இவ்வாறு பணிகளைத் தொடர்ந்த நவசோதி 04.01.1990 ஆம் திகதி லண்டனில் ஒரு வாகன விபத்தில் இறந்தார்.



கொழும்பிலும் அவர் முன்பொருசமயம் விபத்துக்குள்ளாகி கைமுறிந்த நிலையில் சிறிதுகாலம் கட்டுப்போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு வருவார். என்னை எங்கே கண்டாலும் ஓடிவந்து உரையாடும் இயல்புதான் என்னை அவரிடம் நெருங்கிச்செல்லவைத்தது.



இலங்கை வானொலியில் பணியாற்றிய படைப்பாளி அங்கையன் கைலாசநாதன் கொழும்பில் வாகன விபத்தில் கொல்லப்பட்டு இரண்டு நாட்களாக அவரது உடல் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை சவஅறையில் இருந்தது. இதுபற்றிய செய்தியை வீரகேசரியில் எழுதியபோதும் இறந்தவர் யார் ? என்பது தெரியாமல்தான் இருந்தோம். வெளியே சென்ற அங்கையன் இரண்டு நாட்களாக வீடு திரும்பாததையடுத்து அவரது மனைவிதான் மருத்துவமனை சவ அறைக்குச்சென்று கணவரை அடையாளம் காண்பித்தார்.



அங்கையன் கைலாசநாதனின் மறைவின் பின்னர் 31 ஆம் நாளன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அவரது மனைவி இரங்கல் கூட்டமும் அங்கையனின் கவிதை நூல் வெளியீட்டையும் நடத்தினார்.
அன்றையதினம் நண்பர் நவசோதி கையில் கட்டுப்போட்டுக்கொண்டு அப்பொழுது அவரும் ஒரு விபத்தை சந்தித்திருந்தார்!



"தெருவைக்கடக்கும்பொழுது அவதானம் தேவை"  என்றார்.
லண்டனில் நவசோதியும் அந்த அவதானத்தை இழந்துவிட்டார். நவசோதியின் திடீர் மறைவுச்செய்தியை மெல்பனில் வசிக்கும் அவரது சகோதரர்  கனகேஸ்வரன் மூலம் அறிந்தவுடன் கொழும்புக்கு சகோதரி கமலினி செல்வராசன் மூலம் தகவல் அனுப்பினேன்.
நண்பரின் மறைவை கொழும்பு பத்திரிகைகள்  வானொலி மூலம் அறிவிக்க கமலினி உதவியதை இப்பொழுதும் நன்றியுடன் நினைக்கின்றேன்.


பிரேமதாசா,  ஊடகவியலாளர் சனூன், நண்பர் நவசோதி, கமலினி செல்வராசன், சில்லையூர் செல்வராசன் உட்பட பலர் இன்றில்லை. அவர்களின் நினைவுகளுடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

களனி கங்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. முகத்துவாரத்தில் கடலில் சங்கமிக்கிறது. நண்பர் நவசோதி எழுதவிருந்த ஜிந்துப்பிட்டியின் சரித்திரம் வெளிவரவேயில்லை என்பது தீராத சோகம்!

(தொடரும்)

(நன்றி: அரங்கம் - இலங்கை இதழ்)




-->












No comments: