யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்
நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது - நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
14 தமிழர்களுக்கு இலங்கை வரத் தடை
ஆலையடிவேம்பு நில அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்
யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
17/06/2018 யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மரண விசாரணையொன்றுக்காக பொலிஸார் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் இரு இளைஞர் குழுவினருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த மோதல் தொடர்பில் அவ்வழியால் சென்ற பொலிஸார் பொலிஸார் தலையிட்டு விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து மோதல் முற்றிய நிலையில் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிப்பிரயோகத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் எழாலை பகுதியைச் சேர்ந்த 28 பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்
18/06/2018 சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று காலை இடம்பெற்றது.
கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் வந்திறங்கி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு வந்த ஜனாதிபதியை, சிறுவர்கள் வெற்றிலை கொடுத்தும் தமிழர் பண்பாட்டை எடுத்தோம்பும் வகையில் இன்னியத்துடன் அழைத்துவரப்பட்டு சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம் மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், முப்படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்
20/06/2018 நோர்வேயின் இராஜாங்க அமைச்சர் ஜுன்ஸ் புரோலிட்ச் ஹொல்டே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இவர் இலங்கை, நோர்வே தொடர்பான இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் சவால்கள், சமுத்திரம்சார் ஊக்குவிப்பு அம்சங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் இலங்கை மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு, நோர்வே வர்த்தக கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "எஸ்.டி.ஜி - 14 நீருக்கு அடியிலான வாழ்க்கை" எனும் கருத்தரங்கிலும் கலந்து கொண்டும் உரையாற்றவுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள நோர்வே இராஜாங்க அமைச்சர், மீள் குடியமர்ந்த மக்களிடையே நோர்வே திட்டங்களின் முன்னெடுப்பு குறித்து தனது பார்வையை செலுத்தவுள்ளதுடன் பலாலி கிழக்கில் காய்கறி பொதியிடும் மையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
நன்றி வீரகேசரிபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு
20/06/2018 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் மீள்குடியேற்ற அமைச்சர் என்றவகையில் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் பொது இடங்களை புனருத்தாபனம் செய்வதற்காகவும் அமைச்சரவைக்கு அனுமதிப்பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார்.
குறித்த அமைச்சரவை பத்திரத்தில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார். நன்றி வீரகேசரி
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது - நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
22/06/2018 முழு இலங்கையினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தற்போது வட மாகாணத்தின் நிலைமை என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு கடல்வள பாதுகாப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் தெரிவித்தார்.
முதற்தடவையாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் யாழ். விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்விஜயத்தின் போது இலங்கை பிரதிநிதிகளுடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வட மாகாணத்தின் தற்போதைய நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கடல்வளம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு, சுத்திகரிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
கடல்வளம் என்பது இன்றியமையாததாகும். அதன்மூலமாக எரிபொருள் பெறப்படுகின்றது. அது மட்டுமன்றி சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே கடல்வளத்தை பாதுகாத்தல், அதனை தூய்மையாகப் பேணுதல் என்பன தொடர்பில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
கடல்வளத்தை பாதுகாப்பதற்கான நோர்வேயின் சர்வதேச அளவிலான பங்களிப்பாக 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை நோர்வே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதன்மூலம் கடல் மற்றும் சுற்றாடல் மாசுபாடு என்பவற்றைக் குறைக்க முடியும்.
மேலும் இங்கு புதிதாக பழங்களைப் பொதி செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளேன். இதன்மூலம் 200 குடும்பங்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் என்பதுடன், இது இலங்கையின் பொருளாதார வலுப்படுத்தலுக்கும் பங்களிப்புச் செய்யும் என்றார். நன்றி வீரகேசரி
14 தமிழர்களுக்கு இலங்கை வரத் தடை
22/06/2018 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 86 தனிநபர்கள் பட்டியலுடன், இந்த 14 பேரும் இணைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு;
நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாறன், கமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல், அன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் அல்லது பரதன், சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது கணேஸ் அல்லது சாம்ராஜ், பொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன், வேலாயுதம் பிரதீப்குமார் அல்லது கலீபன், சிவராசா சுரேந்திரன் அல்லது வரதன், சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன், திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன், மகேஸ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மென்டிஸ் அல்லது திருக்குமரன், சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர், டோனி ஜியான் முருகேசபிள்ளை. நன்றி வீரகேசரி
ஆலையடிவேம்பு நில அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்
21/06/2018 அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்ட நில அபகரிப்பு மற்றும் தவிசாளர் பேரின்பராஜா கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலரால் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி அபகரிப்பு செய்ய முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைலப்பினால் ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜா அவர்கள் கைது செய்யப்பட்டமையினால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு காணப்படுகின்றது.
இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைந்தளவே காணப்படுகின்றது. அரச அலுவலர்களின் வருகையும் வழமையை விட சற்று குறைந்த வீதமே தென்படுகின்றது. இந்த கொந்தளிப்பு நிலையானது தவிசாளரின் விடுதலையை நோக்கியதாகவே அமைகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை தவிசாளர் பேரின்பராஜாவை விசாரணைக்கென அழைத்து அக்கரைபற்று பொலிஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இதன் பின்புலத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியகளப்பு நிலத்தை அத்துமீறி வேலியிட சென்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த சென்ற பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
குறித்த பெரியகளப்பு பகுதியில் தமது காணி என முஸ்லிம் நபர் ஒருவர் களப்பு நிலத்தை கடந்த திங்கட்கிழமை அத்துமீறி வேலி அடைத்து ஆக்கிரமிக்க முற்பட்ட போது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பெரியகளப்பில் நாட்டப்பட்ட வேலிகளை பிடுங்கி எறிந்தனர், இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து நில ஆக்கிரமிப்பாளர் தனது காணியை எல்லையிட்டு வேலியடைக்க முற்பட்டபோது தம்மை தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், உதவி அரசாங்க அதிபர் விமலநாதன், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அரச உயர் அதிகாரிகளும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment